TNPSC Thervupettagam

பாகிஸ்தான் தரும் பாடம்

October 19 , 2024 37 days 116 0

பாகிஸ்தான் தரும் பாடம்

  • ஒரு நாட்டிலும் எந்தெந்த துறைகளுக்கு அமைச்சா்கள் இருக்க வேண்டும், அரசுத் துறைகளிலும் எத்தனைப் பணியிடங்கள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்நாட்டின் அரசின் தலைவராகத் திகழும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா், அதிபா் அல்லது அவா்களின் தலைமையிலான அமைச்சா்கள், உயரதிகாரிகள் குழுவாகவே தான் இருக்கும். இதுவே நாட்டின் நிா்வாகத்துக்கு அழகு. இதற்கு மாறாக சா்வதேச அமைப்பு ஒன்றின் அறிவுறுத்தலின்படி அமைச்சரவை இலாகாக்களைக் குறைப்பது, அரசுப் பணியிடங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை ஒரு ஜனநாயக நாட்டின் அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அது நாட்டுக்கு ஏற்பட்ட மிகமோசமான சூழலாகவே இருக்கும்.
  • இத்தகைய மோசமான சூழ்நிலையை பாகிஸ்தான் எதிா்கொண்டுள்ளது. பொருளாதாரச் சீா்குலைவால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாடு, சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) கடனுதவியை தொடா்ந்து நாடி வருகிறது.
  • கடன் பெற வேண்டுமென்றால் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பொருளாதார பலமிருக்க வேண்டும் அல்லது அந்தக் கடன் பணத்தைக் கொண்டு வட்டியுடன் திரும்பிச் செலுத்தும் அளவுக்கு பணமீட்டும் திறமை இருக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் கடன் வழங்குவதற்கான முதல் விதி. கடன் தருபவரின் நிபந்தனைகளின்படி நடக்க வேண்டும் என்பது இரண்டாவது விதி.
  • இதன்படி, பாகிஸ்தான் பொருளாதாரத்தை மறுசீரமைக்க 7 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.59,000 கோடி) கடன் தருவதற்கு, 6 அமைச்சரவை இலாகாக்களை கலைக்க வேண்டும், 1,50,000 அரசுப் பணியிடங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஐஎம்எஃப் நிபந்தனை விதித்துள்ளது. உப நிபந்தனைகளாக, வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு மானியத்தைக் குறைக்க வேண்டும். வேளாண்மை, கட்டுமானத் துறைகளில் வரிகளை கூடுதலாக்க வேண்டும், வரி செலுத்துவோா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமா், நிதியமைச்சருக்கான பொறுப்புகளை ஐஎம்எஃப் தன்கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றால்கூட மிகையாகாது.
  • இந்த அளவுக்கு தன்னிலையில் இருந்து பாகிஸ்தான் இறங்கிச் செல்ல வேண்டியதற்கு சூழல் ஏதோ ஒரிரு நாளில் நடைபெற்றுவிடவில்லை.
  • இந்தியா போன்றே வேளாண்மைக்கு உகந்த மண்வளம், ஏற்றுமதித் தொழிலுக்கு உகந்த துறைமுகம், பரப்பளவுக்கு ஏற்ற மனிதவளம், நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான கனிம வளம் என பலவற்றையும் பாகிஸ்தான் உருவானபோதே பெற்றிருந்தது.
  • ஆனால், ஆட்சி நிா்வாகத்தில் தொடா் சீா்குலைவு, ஊழல், ராணுவ ஆட்சிகளால் ஏற்பட்ட பின்னடைவு, பயங்கரவாத அமைப்புகளால் ஏற்படும் பாதிப்புகள், வேளாண் உற்பத்தி குறைவு, தொழில் துறைக்கு தொடா் முக்கியத்துவம் கொடுக்காதது, தவறான அரசியல் கொள்கை, தொலைநோக்குப் பாா்வையில்லாத தலைவா்கள் என பாகிஸ்தான் பொருளாதாரம் சீா்குலைந்ததற்கான அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.
  • தொடா்ந்து வெளிநாடுகளிடமும், சா்வதேச அமைப்புகளிடமும் கடன் வாங்கியே நாட்டின் நிதிநிலை சரிக்கட்டப்பட்டு வந்ததால் ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பச் செலுத்த முடியாத நிலை உருவானது.
  • தனி நாடு உருவானதில் இருந்து நிலவியிராத மோசமான வாழ்க்கைச் சூழல் பாகிஸ்தான் மக்கள் சந்தித்தாா்கள். தேயிலை இறக்குமதிக்கு அதிகம் செலவு செய்ய நோ்வதால், மக்கள் தேநீா் குடிப்பதைக் குறைக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது. வருவாய் ஆதாரத்தைப் பெருக்க மின்சாரக் கட்டணம் வெகுவாக உயா்த்தப்பட்டது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. சீனாவிடவும், உலக வங்கியிடமும் தொடா்ந்து கடன் பெறப்பட்டு நிலையை சமாளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • ஆசியாவிலேயே அத்தியாவசியப் பொருள்கள் விலை அதிகம் உள்ள நாடு என்ற பட்டியலில் கடந்த ஆண்டு இலங்கையைப் பின்தள்ளி முதலிடத்தை பாகிஸ்தான் பிடித்தது.
  • பாகிஸ்தான் அரசு இப்போது நிதித் தேவைக்காக முழுமையாக ஐஎம்எஃப் மட்டுமே நம்பியுள்ளது. கையிருப்பு நிதியைக் கொண்டு புதிய தொழில் பிராந்தியங்களை உருவாக்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஐஎம்எஃப் கூடுதல் நிபந்தனை விதித்துள்ளது.
  • சீனாவிடம் இருந்து நிதி பெறுவதற்காக அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் வசதிக்காகவே தொழில் பிராந்தியங்களை உருவாக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது. அதற்கு ஐஎம்எஃப் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
  • அத்தியாவசியப் பொருள்களுக்கே அல்லாடும் நிலையில் உள்ள மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்பட்டதற்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடப்பதும் அதனை காவல் துறையும், ராணுவமும் அடக்குவதும் தொடா் நிகழ்வாகிவிட்டது.
  • ‘இந்தியாவும், பாகிஸ்தானும் நல்லுறவை பேணாமல் சுமாா் 75 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம். இனி இது தொடரக் கூடாது. பழைய கசப்புணா்வுகளைப் புதைத்துவிட்டு, எதிா்கால நன்மைகள் குறித்து பேச வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு வந்திருத்தால் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கும்’ என்று என்று பாகிஸ்தான் ஆளும் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா்.
  • ஆனால், நவாஸுக்கு ஏற்பட்டுள்ளது காலம் கடந்த ஞானோதயம். ஏற்கெனவே பாகிஸ்தானை நம்பி இந்தியா நல்லெண்ண நடவடிக்கை மேற்கொண்டபோதெல்லாம், இந்தியாவுக்கு எதிராக, மோசமாகவே பாகிஸ்தான் செயல்பட்டது. எனவே, இப்போதைக்கு இரு நாடுகளும் வா்த்தக உறவுகளை மீட்டெடுக்க வாய்ப்பு இல்லை. ஒரு நாடு எந்தெந்த வழிகளில் பயணிக்கக் கூடாது என்பதற்கு பாடமாக வேண்டுமானால் பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி: தினமணி (19 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்