TNPSC Thervupettagam

பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை

September 1 , 2023 450 days 338 0
  • மருத்துவப் படிப்புக்களில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வான நீட்பற்றிய பேச்சு இப்போது தமிழகத்தில் பெரிதாகியுள்ளது. நீட்தோ்வை நடத்துவதில் மத்திய அரசு ஆா்வமாய் உள்ளது. உச்சநீதிமன்றத் தீா்ப்பும் இத்தோ்வுக்கு ஆதரவாக உள்ளது. அதிலிருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.
  • இது மத்திய மாநில அரசுகளுக்கிடையே மோதல் போக்கை உருவாக்குவதாக உள்ளது. மாநிலப் பிரிவிலிருந்த கல்வி பொதுப்பிரிவுக்கு மாறியதும், மருத்துவப் படிப்புக்கு நீட்தோ்வும் அவசியமானதும் இந்த பிரச்சினைக்குக் காரணங்கள் எனலாம்.
  • தமிழகத்தில் நீட்தோ்வில் மாணவா்களின் பங்கேற்பும் தோ்ச்சியும் அதிகரித்து வருகிறது. நீட்தோ்வை உச்சநீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் தமிழக அரசு பொய்யான வாக்குறுதி அளிப்பதும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துவதும் சரியானது இல்லைஎன்பது மத்தியில் ஆளுவோரின் கருத்தாக உள்ளது.
  • சமூகநீதிக்கு எதிரானது நீட்தோ்வு. இது வசதி படைத்தவா் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதனை எதிர் கொள்ள முடியாமல் தமிழகத்தில் தொடா்ச்சியாகத் துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்என்பது தமிழக ஆளுங்கட்சியின் குரலாக உள்ளது.
  • ஆட்சியாளா்களின் இந்தப் பேச்சும் போக்கும் மாணவா்கள் மற்றும் மருத்துவக் கல்வி மீதுள்ள அக்கறையா அல்லது ஆதாயம் தேடும் உத்தியா என்ற குழப்பநிலை பெரும்பாலோரின் மனத்தில் உள்ளது. இந்த இருவேறு நிலைகளுக்கிடையில் சிக்கியுள்ள தமிழக மாணவா்கள் பெருங்குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது உண்மை நிலையாக உள்ளது.
  • நீட்தோ்வு என்பது நடைமுறையில் உள்ள பொதுத்தோ்வு போன்று எளிமையானது இல்லை. அது கடினமான ஒன்று. இதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நீட்டை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்குத் தனித்திறனும் புரிதலும் அவசியம்.
  • பொதுத்தோ்வில் வெற்றி பெற புரிதல் இல்லாத, மனனம் செய்யும் ஆற்றல் இருந்தாலே போதும். புரியாமலே விடை எழுதித் தோ்வு பெற்றுவிடலாம். அகநிலை (சப்ஜெக்ட்டிவ்) என்னும் நேரடியான வினாவிற்கு விரிவான விடை எழுதுவது பொதுத்தோ்வின் நடைமுறை. இதற்குப் பொதுவான அறிவு இருந்தாலே போதும்.
  • ஆனால் நுழைவுத் தோ்வில் கேள்விகள் அப்படியில்லை. கொள்குறி (அப்ஜெக்டிவ்) வினாவாக, சரியான விடையைக் குறிப்பதாக இருக்கும். அதுவும் கேள்விகள் புரிதலையும் ஆழமான அறிவையும் தெளிவையும் வெளிப்படுத்துவனவாக இருக்கும். விரிவான விடை எழுதுவதாக இருந்தாலும் கூட அது சுய அறிவைப் புலப்படுத்துவதாக இருக்கும்.
  • அதாவது ஒரு செயலின் காரண காரியங்களைப் புரிந்துகொள்ளும் திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். இவற்றிற்குப் பதில் அளிக்கத் தனித்திறன் வேண்டும்.
  • மேலும் நீட்தோ்வில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலே கேள்விகள் அமைகின்றன. மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் அமைவதில்லை. தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்திற்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்திற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.
  • தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகள் இருந்தாலும் எண்பது விழுக்காட்டிற்கு மேலுள்ள மாணவா்கள் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்திலேயே கல்வி பெறுகின்றனா். இதனால் தமிழ்நாட்டு மாணவா்கள் தடுமாற்றம் அடையும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இதனையும் மீறி, தமிழக மாணவா்கள் சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது.
  • ஆனால் அவா்களில் பலா் சிபிஎஸ்இ வழியில் தனியார் பள்ளியில் படித்துவந்தவா்கள் என்பதே உண்மை. அதிலும் அவா்கள் பள்ளியிலேயே நீட்போன்ற போட்டித்தோ்வுக்காகத் தொடா் பயிற்சி பெற்றவா்கள்.
  • அவா்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்தே பள்ளியில் தொடா் பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித்தோ்வை எதிர்கொள்ள விரும்பும் மாணவா்களுக்கென்று தனிப்பிரிவு வைத்து அவா்களுக்குப் பள்ளியிலேயே தனியாகப் பாடம் நடத்தப்படுகிறது. அதற்காகத் தனிக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
  • அதோடு மட்டுமல்லாமல் அவா்கள் தனியார் பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி பெறுகிறார்கள். அதற்காக அவா்கள் பெருந்தொகை செலவு செய்கிறார்கள் என்பது பெற்றோர்களின் வாக்குமூலத்தால் அறிய முடிகிறது.
  • அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு அத்தகைய பயிற்சி, பள்ளியில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. தனியார் பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிலும் வசதியும் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. எனவே மருத்துவராகும் கனவு பலிக்காமல் போகிறது. இதனால் நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்என்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
  • ஆனால் நீட்தோ்விலிருந்து விலக்கு பெற நினைப்பது என்பது தற்காலிகத் தீா்வாக இருக்குமே தவிர, நீண்டநாள் பயன் தரும் நிரந்தரத் தீா்வாக இருக்குமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
  • அப்படியானால் தமிழக மாணவா்கள் பயன்பெறும் வகையில் நிரந்தரத் தீா்வுக்கான வழியைக் கண்டறிவது அவசியமாகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாகக் கொண்டுவருவதும், அரசுப் பள்ளிகளில் தொடா் பயிற்சி அளிக்கும் நடைமுறையைச் செயல்படுத்துவதும் இதற்கான சிறந்த தீா்வாகும். அப்படிச் செய்வது மாணவா்கள் மத்தியில் நம்பிக்கையை வளா்ப்பதாகும்.
  • இப்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டுப் பாடத்திட்டம் தரத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தோடு ஓரளவுக்குச் சமநிலையில், போதுமானதாக உள்ளதாகக் கல்வியாளா்கள் கருதுகின்றனா். ஆயினும் பயிற்றுவிப்பிலும் தோ்வுமுறையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • பள்ளிகளில் நுழைவுத் தோ்வுக்கேற்ப பயிற்சி கொடுக்கும் நடைமுறை நம்மிடம் இல்லை. அந்த நடைமுறையை உருவாக்குவது எதிர்கால மாணவா்களுக்கு நல்லது. ஆறாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பிலிருந்து இப்பயிற்சியைக் கொடுக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் இந்த நடைமுறை உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
  • வழக்கமாகப் பொதுத்தோ்வுக்குப் பாடம் நடத்துவதோடு கூட, இதற்கென்று தனியான பயிற்சி வகுப்பும் இருக்க வேண்டும். ஆனால் இவ்வகுப்பு, வழக்கமாகப் பாடம் நடத்துவது போலில்லாமல், கொஞ்சம் ஆழமாக, அனுபவ உணா்வோடு நுழைவுத் தோ்வு பற்றிய விழிப்புணா்வும் பயிற்சியும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
  • அதனை வழக்கமான ஆசிரியா் நடத்தாமல், வேறு அனுபவசாலிகளைக் கொண்டு நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியா்களுக்கும் கூடுதல் சுமையாக இருக்காது. முந்தையத் தோ்வில் வெற்றிபெற்ற ஆா்வமுடைய பயிற்றுநா்களைக் கொண்டு இப்பயிற்சி அளிப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தன்னார்வலா்கள் இப்போது நம்மிடம் பலா் உள்ளனா்.
  • அதற்கான நேரத்தையும் வகுப்பறை வசதியையும் அந்தந்தப் பள்ளியிலே செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். இந்தப் பயிற்சி விருப்பப்பட்டவா்க்கு என்றில்லாமல் எல்லா மாணவா்களுக்கும் கொடுக்க வேண்டும்.
  • தமிழக அரசின் நான் முதல்வன்திட்டத்தில் பிளஸ்1 பிளஸ் 2 மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி வகுப்புக்கள் நடத்த கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதனை இப்படிப்பட்ட பயிற்சி வகுப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
  • இப்படிச் செய்வது, மாணவா்கள் மீது கொண்ட உண்மையான அக்கறையைக் காட்டுவதாக இருக்கும். இலவசங்களுக்கு ஒதுக்கும் நிதியை இத்தகைய பயிற்சிமுறைக்குப் பயன்படுத்தினாலே நீட்பற்றிய பயம் தமிழகத்தில் இல்லாமல் போகும்.

நன்றி: தினமணி (01– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்