TNPSC Thervupettagam

பாடம் சொல்லும் பர்மா தமிழர்கள்!

May 22 , 2019 2014 days 1206 0
  • கண்டங்கள் பல கடந்து, புலம் பெயர்ந்து வரும் பறவைகளுக்காக வேடந்தாங்கலையும், கூந்தன்குளத்தையும் ஆயத்தமாக்கி வைத்திருக்கும் வாழ்க்கை மரபு, தமிழகத்துக்குச் சொந்தமானது.  பறவைகளுக்கு நீதி வழங்கும் இந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் செல்லும் தமிழர்களுக்கு இந்த வரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது நம் முன் நிற்கும் பெரும் கேள்வி. ஆண்டுக்கணக்காகத் தகித்துக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கிடையே, கடும்பாறைக்கு ஊடாக மலர்ந்திருக்கும் அழகிய பூங்கொடியைப் போல நம்மை வியப்பூட்டுகிறது பர்மா தமிழர்கள் வடிவமைத்திருக்கும் பண்பான வாழ்க்கை.
பர்மா
  • மியான்மர்  என இன்று குறிப்பிடப்படும் பர்மாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுச் சங்கிலி இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது. சங்கத் தமிழனும், பிற்காலச் சோழர்களும் தடம் பதித்த மண் பர்மா. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இந்நாட்டிற்கு உரிமையுடன் தமிழர்கள் சென்று வந்தனர். பர்மாவில் ஈட்டிய செல்வத்தில் அரண்மனைகள் போல தமிழகத்தில் பல வீடுகள் எழுந்தன. இந்த வரலாற்றின் சாட்சியங்களாய், ஆயிரம் ஜன்னல்கள் வைத்த செட்டிநாட்டு வீடுகள் இன்றும் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.
  • ஏழைத் தமிழர்களின் ஈடில்லா உழைப்பில் உருப்பெற்ற  இந்நாட்டின் வயல்கள், ஆசியாவின் அரிசிக்கிண்ணமாக மாறிய அற்புதம் நிகழ்ந்தது. காலங்காலமாகத் தொடர்ந்த இந்த உறவுச் சங்கிலி, இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறுந்தாடியது.  உலகப் போருக்குப் பின் எழுந்த புதிய சூழலாலும் அறுபதுகளில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியாலும் தமிழர்களின் வாழ்க்கை துன்பக் கடலில் திசை மாறிப் பயணித்தது. பர்மாவின்  பக்கங்களிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் கிழித்தெறியப்பட்டனர்.
  • வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கும் மண்ணிலிருந்து, வேரோடுப் பிடுங்கி எறியப்படுவது தமிழர்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயமன்று. அது வழக்கமான  வரலாறுதான். ஆனால், எந்த நாடு வாழ்வைப் பறித்து விரட்டியதோ, அந்த நாட்டையும், அந்நாட்டின் பூமி புத்திரர்களையும் தமிழனை நேசிக்கும் மனிதர்களாக மாற்றிக் காட்டியதுதான் பர்மா தமிழர்களின் மகத்தான சாதனை. அரை நூற்றாண்டுக்கால இடைவெளியில் மெளனமாக நிகழ்ந்துள்ள இந்த அற்புத மாற்றத்தை அனைத்துலகத் தமிழர்களும் அறிவது அவசியமாகும். ஆங்கிலேயர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்த இரண்டாம் உலகப் போரின் முடிவில், பல மாற்றங்களை பர்மா கண்டது. அதுவரை பர்மிய வயல்களையும், செல்வங்களையும்  பேரரசர்களைப் போல ஆண்டுவந்த செட்டிநாட்டு வணிகர்கள் பலர், உயிரை மட்டும்  சுமந்து நடைப்பயணமாகவே தமிழகம் வந்து சேர்ந்தனர். அவர்களின் கணக்கில்லாச் சொத்துகள் அரசாங்க வசமாயின.  அதுவரை சகோதரர்களைப் போல ஒன்றி வாழ்ந்த பர்மியர்களும் தமிழர்களும் கிழக்கும் மேற்குமாகத் திசைமாறி நின்றனர்.
இராணுவப் புரட்சி
  • நீறு பூத்த நெருப்பாகப் புகைந்து கொண்டிருந்த இந்த மனவேறுபாடுகள், அறுபதுகளில் வேறு வகையாக வெடித்துச் சிதறத்தொடங்கின.  ஜெனரல் நிவின் தலைமையில் அதிரடியாக ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் விளைவாக, ஒரே நாளில் தமிழர்களின் வாழ்க்கை வரைபடம் சரிந்து பாதாளத்தில் வீழ்ந்தது.  எளிய தமிழர்கள் உழைத்து உருவாக்கிய அங்காடிகளும், வணிக நிறுவனங்களும் அரசுடைமையாக்கப்பட்டன. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டன. வானொலியில் மிதந்த தமிழ்ச் சேவை தன் மூச்சை நிறுத்திக்கொள்ள,  தேமதுரத் தமிழோசையைப் பரப்பிய தமிழ் நாளிதழ்களும் ஒரே இரவில் தலைமறைவாயின.
  • அச்சுறுத்தல்களும், கெடுபிடிகளும் சுழன்றாடிய வேதனைச் சூழலில்  இருந்து மீள நினைத்த லட்சக்கணக்கான தமிழர்கள், தங்கள் மூதாதையர்களின் தேசத்திற்கே சென்றுவிட முடிவெடுத்தனர்.  பர்மாவோடு பின்னிப் பிணைந்துவிட்ட மிச்சத்தமிழர்களோ அந்த மண்ணிலேயே வாழ்ந்துவிடத் தீர்மானித்தனர். இப்படி பர்மாவில் பாதியும், தமிழகத்தில் மீதியுமாய்  பல தமிழ்க் குடும்பங்கள் பிளந்து நின்றன. இந்தக் காலகட்டத்தில்தான்,  தமிழர் வாழாத நாடில்லை;  ஆனால், தமிழர் வாழ்ந்திட தான் ஒரு நாடில்லை என்ற முழக்கம் ஓங்கி எழுந்தது. சொந்தங்களைத் தொலைத்த துயரத்தை மனத்தில் அடக்கிய பர்மா தமிழர்கள் உள்ளுக்குள் அழுதாலும், உழுவதை நிறுத்தவில்லை.  பன்மடங்கு வலிமையுடன் ஓய்வறியாது வயல்களில் உழைத்தனர்.
  • பர்மிய மண்ணைப் பொன்னாக்கிய உழைப்பாளிகள் தாங்கள் என்பதை ராணுவ ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் தம் வியர்வைத் துளிகளால் பதிவு செய்தனர். அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்காமல்,  பொருளாதாரப் பாதையில் முழுமையாகப் பயணிக்க முடிவெடுத்ததுதான் பர்மியத் தமிழர்களின் தொடர் வெற்றிகளின் மூல காரணம். ஏனென்றால், எத்தகைய அரசியல் விசுவரூபமாக இருந்தாலும், அவர்கள் வளைந்து நிற்கும் பீடம் பொருளாதாரம் என்பதுதானே நிதர்சனம்.
பண்பாட்டுத் தளம்
  • தமிழர்களைப் பர்மியர்கள் உயர்வாக மதிப்பதற்கான மற்றொரு காரணம்,  பண்பாட்டுத் தளத்தில் தமிழர்கள் ஏற்படுத்திய அமைதிப் புரட்சி. முருகன், மாரியம்மன், முனீஸ்வரன் என்று தமிழ்த் தெய்வங்களுக்கான கோயில்களில், பர்மியர்களின் கண்கண்ட தெய்வமான புத்த பகவானுக்கும் தனி சந்நிதியை அமைத்தனர். ஆவேசக் கோலத்தில் அம்மனும், அமைதி மலராய் புத்தரும் ஒரே ஆலயத்தில் காட்சி தரும் வித்தியாசமான ஆன்மிகத்தை வரலாற்றில் முதன்முறையாக பர்மா தரிசித்தது.
  • முருகன் சந்நிதியில் விளக்கேற்றிய தமிழ்ப் பெண்கள், புத்தருக்கும் நெய் விளக்கிட்டனர்.  புத்தரைத் தரிசிக்க வந்த பர்மியப் பெண்கள், மாரியம்மனுக்கும் மலர் வைத்து வணங்கிச் சென்றனர்.
  • பார்வையாலேயே பசியாற்றும் தமிழர்களின் இணையில்லா விருந்தோம்பல் பண்பினைப் பர்மிய இனத்தவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டனர். தாங்கள் தோற்கடிக்க நினைத்த தமிழர்களிடமிருந்தே கலைகள் பலவற்றைக் கற்றுக் கொண்டது பர்மிய மக்களினம். பதிலுக்கு பர்மியர்களைக் காட்டிலும் வெகுஅழகாய் பர்மிய மொழியைப் பேசும்ஆற்றலைத் தமிழர்கள் வளர்த்துக் கொண்டனர்.
  • பர்மிய மொழியில் உரையாடினாலும், இதயத்தின் மையத்தில் தமிழை உயிர்த்துடிப்பாக வைத்துப் போற்றுவதில் அத்தமிழர்கள் உயர்ந்து நிற்கின்றனர். பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் என்றார் மகாகவி பாரதி. ஆனால், சற்றே வித்தியாசமாக கோயில்கள் அனைத்தையும்  பள்ளித்தலமாக மாற்றி அன்னைத் தமிழைப் பர்மியத் தமிழர்கள் வாழச் செய்துள்ளனர். அந்த மண்ணில் பரவிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான ஆலயங்களில், மந்திரங்கள் ஒலிக்க மறந்தாலும், மாலை நேரப் பள்ளிகளின் மந்தகாசத் தமிழ் ஒலிக்க மறப்பதில்லை.
  • பணிவு, அடக்கமான வாழ்க்கை, கட்டொழுங்கு போன்ற அடிப்படைப் பண்புகள் பர்மா தமிழர்களிடம் ஓங்கி நிற்பதற்குக் காரணம், அந்நாட்டிலுள்ள புத்த மடங்கள். அரசியல், இனவாதம், பேதமூட்டல் ஆகியவற்றை ஆடையாகப் போர்த்திக் கொள்ளாமல், புத்தம், தர்மம், சங்கம் என்று வாழும் அன்பு வடிவமான புத்தத் துறவிகளை அந்த நாடு பெற்றுள்ளது.  இந்தத் துறவிகளிடம் இளம் வயதிலேயே  பாடம் கேட்கும் வழக்கத்தை அங்குள்ள தமிழ்க் குழந்தைகள் வழக்கமாக வைத்துள்ளனர்.
  • பண்பாட்டையும் பண்பட்ட இதயத்தையும் பகிர்ந்து வாழும் கலையைப் பர்மியர்களும் தமிழர்களும் காலப்போக்கில் முழுமையாகக் கற்றுக்கொண்டுள்ளனர். அந்த மண்ணில் வலம் வரும் ஆலயத் தேர்களின் வடக் கயிறுகளை பர்மிய அரசியல்வாதிகள்  கொடியசைத்து வழியனுப்புகின்றனர்.  ஆலயத் தீமிதி விழாக்களில், பக்திப் பெருக்குடன் நெருப்பு மிதிக்கும் பாதங்களில் பர்மியப் பெண்களின் பாதங்களையும் காணமுடிகின்றது.
பொருளாதார ஆளுமை
  • பர்மாவின் பொருளாதார ஆளுமை மிக்க மனிதர்களின் வரிசையில் தமிழர்களின் பெயர்களும் இணைந்து வருகின்றன. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக, அரசு அலுவலகங்களில் மேலதிகாரிகளாக தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தத்தில் தமிழர்களைச் சொந்த சகோதரர்களாக எண்ணும் சிந்தனை பர்மியர்களிடம் பரவலாக ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், காலத்திற்கேற்ப தமிழர்கள் மேற்கொண்ட அறிவார்ந்த முடிவுகளே. சபிக்கப்பட்ட வாழ்க்கையைக்கூட சத்தமின்றிச் சரித்திரமாகச் செதுக்கவியலுமென்பதை மெய்ப்பித்த  பர்மா தமிழர்கள் கதை,  தமிழின நெடுங்காவியத்தில் பொறிக்க வேண்டிய பாடம்.
  • புறக்கணிப்பில் இருந்துகூட,  புதிய அத்தியாயத்தை வளர்த்தெடுக்க முடியுமென்னும் செய்தியை இந்தத் தமிழர்களின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த வெற்றிக் கோட்டை பர்மா தமிழர்கள் எட்டுவதற்கு அரைநூற்றாண்டுக்காலம் ஆகியிருக்கலாம்; ஆனால், உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அமைதியின் ரகசியங்கள், அந்த அரை நூற்றாண்டுக்காலப் பாதையில் கண் சிமிட்டியபடி கம்பீரமாய் வீற்றிருக்கின்றன.

நன்றி: தினமணி (22-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்