TNPSC Thervupettagam

பாடல் வரிகளால் வந்த வினை... கவிஞர் எல் - பெஹைரி!

December 22 , 2024 2 days 19 0

பாடல் வரிகளால் வந்த வினை... கவிஞர் எல் - பெஹைரி!

  • ‘’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்......’’ எனப் பெருமிதமாக முழங்கினான் பாரதி. ‘யாமறிந்ந மொழிகளிலே...’ எனச் சொல்லுந்தரமும் தகுநிலையுங் கொண்டு, பன்மொழியறி பாவலனாக நின்றவன் அவன். இருப்பினும், ‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன்’ பாரதி, ‘அரபி’ மொழி அறிந்திருந்தானா என அறிந்துகொள்ள வாய்க்கவில்லை எனக்கு. ‘அரபி’ என்ற சொல்லே (அரபா= தெளிவாக உரைத்தல்) ‘தெளிவுடன் பேசத் தெரிந்தவர்கள் மொழி‘ எனப் பொருள் தருவெதனச் சொல்லப்படுகிறது.
  • உலகின் பெரும்பாலான மொழிகள், இடமிருந்து வலமாக எழுதப்படும் நிலையில் - ‘அரபி’க்கு முந்தைய அராமிக், ஹீப்ரு போன்ற பிற செமிடிக் மொழிகளின் செல்வாக்கால் - வலமிருந்து இடமாக எழுதப்படும் வெகுசில மொழிகளில் அரபி ஒன்றாகும். இருபத்தெட்டு மெய்யொலிகளே உடையதானாலும், எழுத்துகளின் மேலும் கீழும் சில குறியீடுகளைப் பயன்படுத்திக் கூடுதலாகப் பல உயிரொலிகளை அமைத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் மொழியியற் கூறு கொண்டதாகும் அரபி மொழி. ‘காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு’ என வழங்குமொழிக்கொப்ப, அரபுமொழி பேசுபவர்கள், தமது மொழியைப் பற்றிப் ‘பாலை மணலளவு’ பரந்த பெருமிதங் கொண்டிருக்கின்றனர்.

மொழிவளம் நிறை அரபி

  • இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே அரேபிய தீபகற்பத்தில் செழித்தோங்கிய வாய்வழி மற்றும் கவிதைப் பாரம்பரியத்தின் (Oral and Poetic Tradition) வழி வளர்ந்த செம்மொழியாக; பல நூற்றாண்டுகளாகவே இம்மொழி வழங்கப்படும் மக்களிடையே, பயிற்று மொழியாக, கலாசார மொழியாக, முற்போக்குக் கருத்துகளை முன்னிறுத்திவந்த மொழியாக; வளமிகு ஹீப்ரு, அராமிக், உகாரிடிக் மொழிகளுடன் உறவும் இலக்கிய - இலக்கண நெருக்கமும் கொண்ட மொழியாக; நிலையான புகழுடைய பண்டைப் பாரம்பரிய இலக்கியங்கள் பலவற்றை இருப்பில் வைத்திருக்கும் மொழியாக; தத்துவம், மருத்துவம், வானியல், புவியியல், கணிதவியல் போன்ற பற்பல துறைகளில் சிறப்பான படைப்புகளைப் பிறப்பித்திருக்கும் மொழியாக; வேறு மொழிகளில் இல்லாத - தமிழின், ‘ழ’ போல – சிறப்பு ஒலிகள் உள்ள ‘ஸாமிய’ மொழியாக வழங்கிவரும் மொழியாகும் அரபி மொழி.
  • மேலும், தனித்துவ வரிவடிவங் கொண்டிருக்கும் மொழியாக; அழகியல் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தில் முதன்மைகொண்டு, பரவலாகப் பயன்படுத்தப்படும் கையெழுத்துக் கலையில் - ‘காலிகிராபி’ - சிறப்புரையும் மொழியாக; பயன்படுத்தப்படும் சூழலைப் பொருத்து வெவ்வேறு வடிவங்கள் ஏற்றாலும், வற்றிடாத அர்த்தத்தோடு இயங்கவல்லதொரு ‘மத்திய செமிடிக்’ மொழியாக; மற்ற செமிட்டிக் மொழிகளைப் போலவே, ஓர் அடிப்படை வேரிலிருந்து பல சொற்களை உருவாக்குவதற்கான சிக்கலான, அசாதாரண மொழியியற் கூறு அமைந்திருக்கும் மொழியாக; செம்மொழி, தமிழ் மொழி போலவே - ‘ஒரு பொருள் சுட்டப் பல சொற்கள்’ கொண்ட ( எடுத்துக்காட்டாகக், 'காதல்' குறித்துக் குறைந்தது 11 சொற்களும்; ‘ஒளி’க்கு 21 சொற்களும்; ‘இருள்’ சுட்ட 52 சொற்களும்; ‘நீர்’ குறிக்க 170 சொற்களும்; ஒட்டகம், வாள் போன்றவற்றுக்கு பலநூற்றுக்கணக்கான சொற்களும் உள்ள) – சொல் வளநிறை மொழியாக இருக்கும் பெருமை, அரபி மொழி பேசுபவர்களின் பெருமிதமாகப் பரந்துள்ளது.
  • மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் நீண்டுள்ள புவிப் பகுதிகளில் வாழ்கின்ற 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பேசுமொழியாக; உலகில் 22 நாடுகளின் ஆட்சிமொழியாக; ஐக்கிய நாடுகள் அவையின் (ஐ.நா.) ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக; அந்நாள் அதிகார-ஆங்கிலேயர்களின், இங்கிலாந்திலும் இந்நாளில் குறிப்பிட்ட சதவீத மக்களின் சர்வகளப் பயன்பாட்டு மொழியாக; தற்போது, வழக்கத்திலுள்ள தமிழுக்கு நிறையச் சொற்கொடை (ஜில்லா, ஜப்தி, ஜாமின், தாலுகா, தாசில்தார், தாக்கல், அமல், நகல், மகஜர், மசோதா, மராமத்து, மாமூல்) வழங்கியிருக்கும் மொழியாகச் செம்மொழி அரபி சிறந்து நிற்கிறது.
  • ஆங்கிலத்திலும், அரபு மொழியிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ - அரபுச் சொற்களிலிருந்து பெறப்பட்ட (அம்பர், ஆர்சனல், அல்ஜீப்ரா, அல்காரிதம், ஆல்கஹால், சோபா) போன்ற பல சொற்கள் உள்ளன. இன்று பயன்படுத்தப்படும் எண் முறை (1, 2, 3, ...) கூட அரேபிய வணிகர்களால், ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுதானே? தற்போது, உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில், சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி எனப் பெருமை கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலருங்கூட, அரபு மொழியின் உலகளாவிய பயன்பாடு கருதி, அரபியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிட உரியது.
  • தன் மொழியைத், தமிழ் மொழியை - உலகில் எந்த மொழியினப் புலவனும் கொண்டாடாத உயர்நிலையில் வைத்து - ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று நெஞ்சுயர்த்தி முழக்கமிட்டார் பாவேந்தர். அதற்கிணையாகச் சுட்டும் அளவில், அரபி மொழி – ‘திருக்குரான் மொழி’யாகையால் - அம்மொழி இசுலாமியர்களின் புனித மொழி எனும் நிலையடைந்திருப்பதும் இம்மொழி மரபினரின் பெருமையாகியுள்ளது.
  • கவிதை மொழி, அரபி, அரபுக் கலாசாரத்தில், தொடக்கம் முதலே சொற்களுக்கு எப்போதும் குறிப்பிடத்தக்க முதன்மை இருந்து வந்திருக்கிறது. அதிலுங் குறிப்பாகச் சொற்கள், கவிஞர்களின் வார்த்தைகளாக வலம் வரும்போது, மணங்கூடிய மலர்போலப் பெருஞ் சிறப்புப் பெறுவது வழக்கம். இஸ்லாமின் தோற்றத்திற்கு முந்தைய காலங்களில்கூட இந்தச் சமூகங்களில் கவிஞர்கள் எப்போதும் ஒரு சிறப்பு அந்தஸ்தை அனுபவித்து வந்துள்ளனர். இஸ்லாமிய அரசர்களது அவைகளில் கவிஞர்களது சொற்சமர்கள், வாள்போர்கள் போலவே உக்கிரங்கொண்டதாக, ஆனால், உவகை சேர்ப்பதாக ரசிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தன.
  • இஸ்லாத்தின் வருகைக்குப் பிறகு அரபுக் கவிதைகள் பல புதிய வடிவங்களைப் பெறத் தொடங்கின. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய இஸ்லாமியக் கவிதை அந்நூற்றாண்டின் இடைக்காலத்திலேயே உச்சத்தை எட்டியது. அக்கால அரபுக் கவிதைகளில் பெரும்பாலானவை அரசவை வாழ்க்கையை, அதற்கு அடுத்தபடியாகக் காதல் மற்றும் ‘கள்ள விவகாரங்களை’ப் பாடுபவையாக இருந்தன. இஸ்லாமிய சகாப்தம் எனப்படும் காலத்துக் கவிதைகளின் பிற முக்கிய அம்சங்களாக, நையாண்டி,(Satire), காதல் குறித்த படிமங்களின் அழுத்தமான பயன்பாடு நிறைந்திருப்பதைக் குறிப்பிடலாம்.
  • இஸ்லாத்தின் பொற்காலத்தில், மத நூல்கள், அவற்றின் மீதான விவாதங்கள், மதம் சார்ந்த பிற இலக்கியங்கள், கலைப் படைப்புகள் என்பவற்றோடு இப்படைப்புகளை மையமாகக் கொண்டெழுந்த திடமான விமர்சன இலக்கியக் கட்டமைப்பையும் உருவாக்கியது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் அரபுக் கவிதைகள், முதலாம் உலகப் போர், ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சி போன்ற தேசியவாதப் பொருண்மைகளை மையம் கொண்டிருந்தன. முதலாம் உலகப் போரின் முடிவில் வளர்ந்த ‘அரபு தேசியவாதம்’, நவீன அரபுக் கவிதைகளின் ஆரம்பகாலத்தில் தெளிவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
  • அரபிக் கவிதை, இருபத்தொன்றாவது நூற்றாண்டில் அரபுக் கவிதையின் புதிய வளர்ச்சி நிலைகளைக் கண்டதெனலாம். நடைமுறை அரசியல், நாட்டு நிலவரங்கள், மக்கள் விழைவுகளுக்கான மையக்களமாகக் கவிதைக் கருப்பொருள்கள் திரண்டதை புதிய வளர்ச்சிகளில் குறிப்பிட உரியதாகச் சொல்ல வேண்டும். ஒன்றை அடியோடு விட்டுவிட்டு மற்றொன்றை நாடியது என்றில்லாமல், இக்காலத்தில், காதல் (ரொமாண்டிசிசத்தின் கருத்துக்களைப்) பேசும் கவிதைகளுடன், புரட்சிகரக் கவிதைகளும் இணையாகவே மலரத் தொடங்கின.

‘அரபு வசந்தம்’ (Arab Spring)

  • மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், பிராந்தியத்தில் வேரூன்றியிருந்த பல சர்வாதிகார ஆட்சிகளுக்குப் பெருஞ்சவால் விடுத்து எழுந்த ஜனநாயகத்திற்கான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், எழுச்சிகளின் பேரலைகள் ஒட்டுமொத்தமாக, ‘அரபு வசந்தம்’ (Arab Spring) எனக் குறிப்பிடப்படுகிறது.
  • துனிசியா மற்றும் எகிப்தில் நடந்த போராட்டங்கள் அடுத்தடுத்து அந்நாட்டு ஆட்சிகளைக் கவிழ்த்தபோது அரபு வசந்த அலை தொடங்கியதாகக் கருதப்படுகிறது. மற்ற அரபு நாடுகளிலும் இதேபோன்ற முயற்சிகளுக்கு அரபு வசந்த அலை ஊக்கமளித்தது. அலையடித்த எல்லா நாடுகளிலும் போராட்டங்கள் வெற்றிக்கனிகளைக் கொய்ததாகச் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் (துனிசியா, எகிப்து, யேமன், லிபியா, சிரியா) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மூலம், தத்தமது நாடுகளிலுள்ள அரசியல், பொருளாதாரக் குறைபாடுகள், எதேச்சாதிகாரச் செயல்பாடுகளுக்கான கண்டனங்கள் வலுவான முழக்கங்களால், உணர்வூட்டும் கவிதைகளால் உரக்க, ஓங்கி வெளிப்படுத்தப்பட்டன.
  • அவ்வாறு பொது உணர்வுகளை, மக்களது கூட்டு விழைவுகளை, ஆட்சிகளின் செயல்பாடுகளால் விளைந்து நிற்கும் நீங்காக் கசப்புணர்வை, தீரா எதிர்ப்பை வெளிப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆர்ப்பாட்ட முழக்கங்கள், கவிதைகளின் படைப்பாளிகள், அவரவர் நாடுகளின் பாதுகாப்புப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைகள், விதவிதமான ஒடுக்குமுறைகள் முதலியவற்றை அஞ்சாது எதிர்கொண்டனர்.
  • ‘அரபு வசந்தம்’ (2010 -11) காலத்தில் எதேச்சாதிகாரத்தைச் சமரசமேதுமின்றி, எதிர்த்துநின்ற இளங்கவிஞர்களால் கையாளப்பட்ட அரசியல் முழக்கங்களே, தொடர்ந்து அணிவகுப்பான அரசியல் கவிதைகள், யூடியூப் விடியோக்கள், தொலைக்காட்சிக் கவிதைகள், மற்றும் பிற கலை வெளிப்பாட்டு வழிகள், வடிவங்களுக்கு முன்னோடியாக நின்றன. அதிருப்தியாளர்கள் எழுப்பிய "அல் - ஷாப் யூரித் இஸ்கத் அல் - நிஜாம்" என்ற, புரட்சியின் முழக்கம் உயிர்பெற்று, எல்லைகளைக் கடந்து, அரபு உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது, "மக்கள் விரும்புவது ஆட்சியின் வீழ்ச்சியை" என்பதே இந்தப் புரட்சி முழக்கத்தின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு. அரபு உலகின் பகுதிகள் யாவிலும் - மொராக்கோவிலிருந்து பஹ்ரைன் வரை, அரபு மொழி எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் - பயன்படுத்தப்படும் முதல், ஒருங்கிணைந்த எதிர்ப்பின் மொழியாக உருக்கொண்டது இம்முழக்கம், இதுவே போராட்டத்திற்கான அழைப்பாகவும் விளங்கியது.
  • ‘அரபு வசந்தம்’, அரபு இளைஞர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது போலவே, பொதுவாக அரபுக் கவிதைகள் மீதும், குறிப்பாகச் சமகாலக் கவிஞர்கள் மீதும் பெரும் தூண்டுதலைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபு உலகின் பெரும்பகுதியிலுள்ள இளைஞர்களிடையே ஆழமாகப் பின்னிப் பிணைந்து கிடந்த சிந்தனைகளைத் தூண்டி, ஒருமுகப்படுத்தி, உணர்வுகளை அணிசேர்க்கும் சக்திவாய்ந்த, புரட்சிகர அரபுக் கவிதையின், புதிய வடிவ எழுச்சிக்கு அரபு வசந்தத்தின் வருகை வழிவகுத்தது. அரபுக் கவிதையின் இந்த புதிய அலை, அரபு உலகு முழுவதும் ஆழமாக வேரூன்றியுள்ள அரசியல், மதம் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் புதிய, தற்கால, விஷயங்களைத் தொடும் உற்சாகமான மொழியில் தனது வளர்ச்சிகளை வெளிப்படுத்தியது.
  • அரபு வசந்தத்தின்போது எழுதப்பட்ட பல அரபிக் கவிதைகளை ஆராய்ந்தால், அரபு அரசியல் கவிதையின் இயல்பு வியத்தகு முறையில் மாறியுள்ளதும், மாற்றங்கள் தொடர்ந்து வருவதும் தெரியவரும். அரபு இளைஞர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த சாதகமான முடிவுகளை முழுவதுமாக அரபு வசந்தம் உருவாக்கவில்லை என்பது உண்மை. அவ்வுண்மையின் இயல்பான பிரதிபலிப்பாகச், சோகமும், இழப்பும், மகிழ்ச்சியின் தருணங்களும், வருங்கால சந்ததியினருக்கான நம்பிக்கையுடனும், தற்கால அரபிக் கவிதைகள் பிறக்கின்றன. பெரும்பாலும், மதம், அரசியல், பிராந்திய மோதல்கள், வலிமையான ஆதிக்க விரோதம், தீவிர எதிர்ப்புணர்வு, அஞ்சாத குற்றச்சாட்டுகள் இணைந்து அணிவகுத்து வரும் கவிதா வாகனங்களாகத் தற்கால அரபி மொழிக் கவிதைகள் வலம் வருகின்றன.
  • மூன்று ஆண்டுகள், மூன்று அரசுகள், இரண்டு பொதுத்தேர்தல்கள் எகிப்தில்.
  • அரபு வசந்தத்தின் தொடக்கப்பொறி துனிசியாவில் கிளம்பியது. துனிசியாவில் கிடைத்த வெற்றியால் எகிப்து உற்சாகம் அடைந்தது. எகிப்தில் முப்பதாண்டுகளுக்கு மேல் சர்வாதிகாரம் செய்துவந்த ஹோஸ்னி முபாரக்கை அகற்ற மகத்தான மக்கள் எழுச்சி திரண்டது தலைநகர் கெய்ரோவில், தஹ்ரிர் சதுக்கத்திலும், நாடெங்கிலும் 25 ஜனவரி 2011 இல். வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆயுதமேந்தா அரபு குருக்ஷேத்திரம் எனக் குறிப்பிடத்தக்க தஹ்ரிர் சதுக்கத்தில் 18 நாள்கள், மக்கள் தொடர் முற்றுகையால் இராணுவம் பின்வாங்கி, 2011 பிப்ரவரியில் முபாரக் பதவி விலக நேர்ந்தது. புரட்சி வென்றது; ஆனால், எதிர்பார்த்த மக்களாட்சி மலரவில்லை எகிப்தில். இராணுவத்தின் கைப்பிடியிலேயே ஆட்சி தொடர்ந்தது, அதனை எதிர்த்து மீண்டும் மக்கள் எழுச்சி கிளம்பி, 2012 இல் தேர்தல் நடைபெற வழிசெய்தது. அத்தேர்தலில், "இஸ்லாம்தான் தீர்வு" என்ற முழக்கத்தோடு போட்டியிட்ட முஸ்லிம் சகோதரத்துவ (Muslim Brotherhood) அமைப்பு பெரும்பான்மை பெற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த முகமது மோர்சி ஒரு சிறிய வித்தியாசத்தில் அதிபர் பதவியை வென்றார்.
  • ஆனாலும் மோர்சி அரசும் மோசமான அரசாகி, மக்கள் எதிர்ப்பைப் பெருமளவுக்குச் சிறிது காலத்திற்குள்ளேயே சம்பாதித்துக்கொண்டது. 30 ஆண்டு சர்வாதிகார முபாரக் ஆட்சியை வீழ்த்தியபின் அமைந்த, நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முகமது மோர்சியை, ஜூலை 3, 2013 இல் அப்போது பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் அப்தெல்-ஃபத்தா எல் - சிசி தலைமையிலான இராணுவம், அதிகாரத்தில் இருந்து அகற்றிக் கைது செய்தது (மோர்சி, 2019 இல் சிறை நீதிமன்ற அறையில் கூரை விழுந்து இறந்தார்).
  • 2014 இல், தேர்தல் அறிவிக்கப்பட்டு எல் - சிசி போட்டியிட்டார். ‘நாட்டை மோர்சியிடமிருந்து மீட்டவர்’ என்று ஒருபகுதி மக்களால் மதித்துப் பார்க்கப்பட்ட எல் - சிசி அமோக வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின் வேறுநிறம் மாறினார். தனக்கெதிரான கருத்துகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொண்டவராக வெளிப்பட்டார், எல்-சிசி. அந்நோக்கில், கருத்துக்கூறும் உரிமையை, மக்களது அடிப்படை உரிமைகளை, சுதந்திரங்களை, ஊடகங்களை, முன்னோடியில்லாத வகை ஒடுக்குமுறைகளால் அடக்க முற்பட்டார் அவர்.
  • இத்தகைய போக்குகளால், முபாரக் எதிர்ப்புப் புரட்சியில் ஈடுபட்ட பல அரசியல் பிரமுகர்கள், தனது ஆட்சிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி வந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பிற ஆர்வலர்கள் ஒவ்வொருவராகத் தேடப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். யார், யார் கைது செய்யப்பட்டுள்ளனர்; மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்; அல்லது புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்ற செய்திகளை ஊடகத்தாரும், மனித உரிமை ஆர்வலர்களும் அறிந்துகொள்வதே கடினமாகும் அளவுக்கு இம்மாதிரி நடவடிக்கைகள் நாளும் பெருகின. "10 ஆண்டுகளுக்குள், முபாரக்கின் சகாப்தத்தில் இருந்ததைவிட, எகிப்தில் காண அரிதான, சுதந்திரமே எல் - சிசி காலத்தில் இருந்தது” என்பது அரசியல் ஆய்வாளர்களின் பொதுக்கருத்தானது.
  • சுற்றிலும், சிரியா, லிபியா மற்றும் யேமனில் குழப்பங்கள் நிலவின. இராக்கிலும் அரசின் ஸ்திரத்தன்மைக்கு சவால்கள் தொடர்ந்து இருந்தன. தனிமனித சுதந்திர இழப்புகள் அரபுப் பிராந்தியம் முழுவதுமே நிதர்சனமாகியிருந்தது.
  • எகிப்தையும் பாதித்த இத்தகைய சூழலில், 2018 ஆம் ஆண்டில், எல் - சிசி, தேர்தல் முறைகேடுகள் என்பன யாவும் மொத்தமாக அரங்கேறிய, தனது இரண்டாவது அதிபர் தேர்தலில் 97% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் பங்கேற்கப் பலவகைத் தடைகள் விதிக்கப்பட்டன; பலர் சிறையிலடைக்கப்பட்டுத் தேர்தல் போட்டிக்களத்திற்கு வரவிடாமலே தடுக்கப்பட்டனர். போட்டியிட வாய்ப்பிருந்தவர்களது குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டன. அப்போது, அமலில் இருந்த எகிப்து அரசியலமைப்புச் சட்டப் பதவிக் காலத்தின் வரம்புகளின்படி, இதுவே (2018) அவரது கடைசித் தேர்தலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் மாறியது. "எகிப்தில் புரட்சி முற்றிலுமாகத் தோல்வியுற்றது’’ என்பதற்குச் சான்றாக, ஏப்ரல் 2019 இல், எல் - சிசி 2030 வரை அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கும் வகையில் எகிப்திய அரசியலமைப்பு திருத்தப்பட்டது.

எல் - சிசியின் கொடுங்கை

  • பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து முழுவதும் எதிரொலித்த, எழுதப்பட்ட, அச்சிடப்பட்ட பொதுவான பல்லவிகளில் ஒன்று: "எகிப்தியர்கள் பயத்தின் சுவர்களை இடித்துத் தகர்த்தனர்" (Egyptians have demolished the wall of fear) என்பதாகும். நிலைமை தலைகீழ் இப்போது. “நோயாளி இறக்கவில்லை; ஆனால் குணமடையவில்லை” என முந்தைய போராட்டங்களில் முன் நின்றவர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்குகளை திரையிட்டு மறைக்க ஒருவருக்கொருவர் உதவிக்குறிப்புகளை வழங்கிவருகிறார்கள்!
  • தஹ்ரீர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள மக்களின் தொலைபேசிகளைப் போலிஸ் உன்னிப்பாக ஒட்டுக்கேட்கிறது. 2011-12 இல் புரட்சிப்புயல் மையங்கொண்டிருந்த கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் தற்போது மயான அமைதியில்! சதுக்கத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு மீண்டும் வர்ணங்கள் பூசப்பட்டு, ஆங்காங்கே பசுமையளிக்கும் மரங்களும் நடப்பட்டுச், சதுக்கத்தைச் சுற்றிலும் புதிய வண்ண விளக்கு அமைப்புகூட நிறுவப்பட்டுள்ளது. ஆனால், போராட்டக்காரர்கள் யாரும் இப்போது அங்கு செல்ல அனுமதியில்லை! முன்பு தகர்க்கப்பட்ட பயத்தின் சுவர், எல் - சிசியின் அடக்குமுறை அரசாங்கத்தால் மீண்டும் உறுதியாகக் கட்டப்பட்டுவிட்டதோ என்ற நிலையே தற்போது, அங்கு.

அணையாக் கவிக்கனல்

  • ஆனாலும் கனல் அணையவில்லை. அதிலும், கவிக்கனல் கொதிப்பு, ஆள்பவர்களிடையே ஐயத்தை - மக்கள் மீண்டும் முன்புபோல ஒன்றிணைந்து விடுவார்களோ என்ற ஐயத்தை; அச்சத்தை - கவிஞர்களது சொற்களின் வீரியம் என்ன நிகழ்த்துமோ என்ற அச்சத்தை- கொக்கியாகப் போட்டுத் தொங்கவிட்டிருக்கிறது என்பது உண்மை. அந்த உண்மைக்குச் சான்றாகவே ‘கவிஞர்களைக் கைதுசெய் படலம்’ நீண்டு தொடர்கிறது; ‘எழுத்தாளர்களை இழுத்துவந்து சிறைப்படுத்தல்’ திட்டமும் தீவிரச் செயல்பாட்டிலுள்ளது எகிப்தில், எல் - சிசியின் ஆட்சியில். இவ்வகையில், எல் - சிசியின் எகிப்திய அரசாங்கம் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களான அலா அப்தெல் ஃபத்தா, கலால் எல் - பெஹைரி, அஷ்ரப் ஒமர் ஆகியோரையும், எகிப்தின் எல்லைகள் கடந்தும் அறியப்பட்டுள்ள கவிஞர்களான கலால் எல்-பெஹாரி, அலா அப்த் எல் - ஃபத்தா, அஷ்ரப் ஒமர் உள்படப் பலரையும் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. எதற்காக? சட்டப்படி வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை அவர்கள் பயன்படுத்தியதற்காக!
  • இன்னும் இரண்டு வாரங்களுக்குள் (2025 ஜனவரியில்) ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் முன் எகிப்து, அதன் நான்காவது உலகளாவிய காலமுறை மதிப்பாய்வுக்கு உட்பட வேண்டியுள்ளது. அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமலே, இதுவரையிலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை முற்றிலும் புறக்கணித்து வருவதோடு, நடைமுறையிலுள்ள எகிப்துச் சட்டங்களையும் துச்சமெனக் கருதி மீறி வருகிறது எதேச்சாதிகாரமாகவும், சட்டங்களுக்குப் புறம்பாகவும் சிறைகளில் அடைத்துப் போடப்பட்டிருக்கும் அனைத்துத் தனிநபர்களையும் உடனடியாக, நிபந்தனையின்றி விடுவிக்க எகிப்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுக்கு, ‘பென் இன்டர்நேஷனல்’ அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
  • எல் - சிசியின் வழக்கமான சர்வாதிகாரப் பரிசுகளில் முதன்மையானதான ‘சிறைவாசம்’ வழங்கப்பட்டு வாட்டி வதைக்கப்படும் எகிப்தியக் கவிஞர்களில் கலால் எல்-பெஹைரி, (Galalel-Behairy, சில நாடுகளில் இப்பெயரை ஜலால் எல் - பெஹைரி என்றும் எழுதுகிறார்கள்) ஒரு பாடலாசிரியருங்கூட. 2018 மார்ச் மாதத்தில், வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து திரும்பியபோது, கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் எல்-பெஹைரி கைது செய்யப்பட்டார். எதற்காக என்றால், ஏற்கெனவே எகிப்திலிருந்து- 2011 புரட்சியை ஒட்டி - நாடு கடத்தப்பட்டுள்ள ராப் பாடகர் ராமி எசாம் (Ramy Essam) என்பவர் பாடி, யூடியூபில் வெளியிடப்பட்ட ‘பலாஹா’ (Balaha)’ என்ற பாடல் விடியோவுக்கான கவிதை வரிகளை எழுதியதற்காக. விடியோ பாடலுக்கு எழுதிய கவிதைதான் குற்றம், கைது, சிறை!
  • எல் - பெஹைரியின் கைதுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்ட பலாஹா பாடல் விடியோ பிப்ரவரி 26, 2018 இல் வெளியாகி வைரலானது. வெளியான நான்கைந்து நாட்களிலேயே பலாஹா விடியோவை 4.9 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்தார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பிய எல் - பெஹைரி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
  • விடியோவில், பாரம்பரிய இசையையும் ராக் தாள இசையையும் தடையின்றி எளிதில் இயல்பாக இணைக்கும் பாடகரான எசாம், நன்கு அறிமுகமான - அவரது தோற்ற முத்திரை – நீண்ட சுருட்டை தலைமுடியுடன் - எங்கோ ஆளரவமற்ற தெருக்களில் பாடி, நடனமாடிக்கொண்டே செல்கிறார். 2011 எகிப்திய புரட்சி காலத்தில் எசாம் கைது செய்யப்பட்டபோது, அவரை அவமானப்படுத்தும் விதமாக - அவரது அடையாளமான இந்த நீண்ட சுருட்டை முடி - வலுக்கட்டாயமாகக் குறுக வெட்டி அகற்றப்பட்டது குறிப்பிட உரியது. கவிஞர் எல் - பெஹைரி ஒரு ஆங்கிலப் பேராசிரியருமாவார். தனது அரபிக் கவிதை வரிகளை- விடியோவில் காண்பிக்க ஏதுவாக ஆங்கில வரி வசனங்களாக (Sub titles) அவரே மொழிபெயர்த்தார்.
  • கவிஞரின் பாடல், 2014 இல் ஆட்சிக்கு வந்த எல் - சிசியின் ஆட்சிபற்றி மறைமுகச் சாடல். விடியோ பாடலில் (கவிதையில்) யாருடைய பெயரும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. என்றாலும், 'பலாஹா' என்ற சொல் அடிக்கடி வருகிறது. அரபியில் 'பலாஹா என்றால் நேரடியாகப் (dates) ‘பேரீச்சம்பழம்’ எனப் பொருள். ஆனால், அது சர்வாதிகாரம் செய்துவரும் எல்-சிசியைப் போராட்டக்காரர்கள் இழிவாகக் குறிப்பிடப் பயன்படுத்தும் புனைபெயர். ஆட்சிக்கு வந்ததிலிருந்து (2014), மக்களுக்கு இனிதான எதுவுமே எல் - சிசி செய்ததே இல்லை என்பதைக் கவிதை சூசகமாகச் சொல்கிறது.
  • 'நான்கு ஆண்டுகள் நடந்துபோயின,
  • ஒரு தடயமும் காணோம்;
  • உங்கள் ‘ஆமை’ இனத்திற்காகத்தான்
  • மக்கள் காத்திருந்தனரோ.'
  • என்று, எல் - சிசி அரசின் செயல் வேகம் இல்லாமையை- ‘ஆமை’யைக் குறியீடாக வைத்துச் - சாடுகிறது. பலாஹா விடியோ வெளியான சமயத்தில் எல் - சிசி, அடுத்த 2018 தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நேரம். மக்கள் நலப் பணிகளில் எல் - சிசி அரசு ஆமை வேகம்தான் என்றாலும், ஊசியாய்க் குத்தும் சாடல் கவிதையின் உக்கிரம் உடனே புரிந்துவிடுகிறதே! மறைமுகச் சாடல் கவிதையின் உள்பொருள், உள்ளுறை கருப்பொருள்! உடனே தெரிந்து அக்கணமே கைது, தாக்குதல், சிறைப்படுத்தல் என்பது மின்னல் வேகத்தில்!
  • ஒரு நேர்காணலில், எசாம், “இந்த (பலாஹா) விடியோ, எல் - சிசிக்கு, அவரது அரசுக்குப், ‘போதுமான செய்தியை வழங்கும்; போதுமான எரிச்சலையும் ஊட்டும்’ என்று எதிர்பார்த்ததுதான்’’ என்று கூறியிருக்கிறார். அது அப்படியே நடந்தது. விடியோ பாடல் வெற்றியைப் பெற்றது. யூடியூப் (4.9 மில்லியன்) பார்வைகள் தவிர, பேஸ்புக் மற்றும் பிற பார்வைத் தளங்களில் 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை விடியோ பெற்றது; ஆனால், பாடலாசிரியரைச் சிறைக்குள் தள்ளியது. உலகெங்கும் பாடலின் கோரஸ் கிண்டல் - யா பலாஹா (ஏ!) யா பலாஹா, யா பலாஹா யா பலாஹா யா பலாஹா! - காதுகளில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. கவிஞர்தான் சிறையில்; கவிதை காற்றுவெளியெல்லாம்!
  • எகிப்தில் முகநூலில் விடியோவைப் பதிவேற்றிய பலரும் எல-சிசியிடம் சிக்கலில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத் தங்கள் கணக்குகளிலிருந்து பலாஹா விடியோவை நீக்க வேண்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதே.
  • பலாஹா கவிதையின் உட்பொருள்தான் கவிஞர் எல் - பெஹைரி கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுவற்கான உடனடிக் காரணமாக இருந்தாலும், கைது செய்யப்படும்போது, கூடுதல் குற்றச்சாட்டுகளாக, "ஒரு பயங்கரவாத குழுவில் சேர்ந்தது"; "தவறான செய்திகளைப் பரப்பியது"; "அதிபரை அவமதித்தது" ஆகிய குற்றச்சாட்டுகளையும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அவர் மீது சுமத்தியது. இந்த வழக்கு இறுதியில் கைவிடப்பட்டது, ஆனாலும் எல் - பெஹைரி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
  • வெளியில் அவரை விடாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதற்கு ஒரு விநோதமான காரணமும் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அது என்னவென்றால், கவிஞர் எல் பெஹைரியின் வெளியிடப்படாத கவிதைத் தொகுப்பான ‘பூமியின் சிறந்த பெண்கள்’ (The Finest Women on Earth) எனும் நூல் மீது "பயங்கரவாதத் தொடர்பு வெளிப்பாடு, தவறான செய்திகளைப் பரப்புதல், சமூக ஊடக, இணைய வலைத்தளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், தெய்வ நிந்தனை, மதத்தை அவமதித்தல் மற்றும் இராணுவத்தை அவமதித்தல்" போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்றப்பட்டன.
  • இவற்றுள், ‘தெய்வ நிந்தனை, மதத்தை அவமதித்தல்’ என்ற குற்றச்சாட்டுகளால் மனம் புண்பட்ட எல் - பெஹைரி, மே 3, 2018 இல் சிறையிலிருந்து, மிக உருக்கமான நீண்டதொரு வாக்குமூலத்தை, ‘வெளியிலிருக்கும் நண்பர்களுக்கும் நண்பரல்லாத பொதுவான பிறருக்கும் உண்மைகளைத் தெளிவுபடுத்துவதற்காக’ வெளியிட்டார். அதில் ஒரு பகுதியாக: “உங்கள் பிள்ளைகளைப் போலவே நானும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வளர்க்கப்பட்டேன். ஒருவேளை, நான் ஐந்து தினசரி தொழுகைகளையும் செய்யாதவனாக இருக்கலாம். ஆனால், நான் கடவுளுக்குப் பயப்படுகிறேன், அவருடைய அனைத்து தீர்க்கதரிசிகளையும் நேசிக்கிறேன். நான் அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். விஷயங்கள் மோசமாக இருக்கும்போது உங்களைப் போலவே, நானும் அவரிடம் திரும்புவேன். வாழ்க்கை கடினமாகும்போது நான் மண்டியிட்டு அழுகிறேன், நான் நபியின் பிரார்த்தனைகளை ஓதுகிறேன், வேறு யாரும் இல்லாதபோது கடவுள் எப்போதும் என் பக்கத்தில் நிற்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
  • விடியோவுக்கு எழுதிய கவிதைதான் குற்றம் என்று முதலில் கைது செய்யப்பட்டு, (அந்த வழக்கு கைவிடப்பட்டாலும் கவிஞரை விடுதலை செய்யாமல்), பின்னர் வெளியிடப்படாத கவிதைத் தொகுப்புக்காக, முதற்கட்டத்தில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் அனுபவித்து வர நேர்ந்திருக்கிறது கவிஞர் எல் - பெஹைரிக்கு.
  • ஜூலை 2021 இல், அவரது சிறைத்தண்டனை முடிவுற்றபோது எல் - பெஹைரி என்னவானார் என வெளியில் யாருக்கும் தெரியாத ஒரு மூன்று வாரங்கள் - அவர் காணாமல் போனதுபோல் – வைக்கப்பட்டார். அதற்குப் பின் மாநிலத் தலைமைப் பாதுகாப்பு வழக்குத் தொடுப்பவரால் 'தவறான செய்திகளைப் பரப்பியது' மற்றும் 'ஒரு பயங்கரவாதக் குழுவில் சேர்ந்தது' என்று புதிதாகக் குற்றம்சாட்டப்பட்டார். இதுபோலவே பொய்க்குற்றம் சாற்றப்பட்டுச் சிறையிலிருந்த ஏனைய கைதிகளுடன் சேர்ந்து - எந்த முகாந்திரமும் இல்லாமல் தங்களைச் சிறைக்குள் அடைத்து வைத்திருப்பதைக் கண்டித்து- பிப்ரவரி 2022 இல் பல வாரங்கள் கூட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் எல் - பெஹைரி ஈடுபட்டார்.

தேள்த் தோரா

  • கவிஞர் எல் - பெஹைரி அடைக்கப்பட்டிருக்கும் ‘தோரா’ சிறை பற்றிச் சற்று அறிந்து செல்வோம், வாங்க...
  • அதிகபட்ச பாதுகாப்புள்ள சிறை வளாகமான இந்தச் சிறையில்தான் முன்னாள் அதிபர் முகமது மோர்சி அடைக்கப்பட்டிருந்து, நீதிமன்றத்தில் ஆஜராக வரும்போது சிறைக்கூரை இடிந்து விழுந்து இறந்தது. கடுமையான சிறைவிதிகளை இங்கு அமல்படுத்திவருவதால், தோரா சிறைக்கு 'ஸ்கார்பியன்' சிறைச்சாலை என்ற புனைபெயர் கிடைத்துள்ளது.
  • அதே சமயம், கைதிகளுக்குச் சாதகமான விதிகளை சிறை அலுவலர்கள் மீறுவதென்பது இங்கு வெகு தாராளம்! எப்போது என்ன நேருமோ எனக் கைதிகள், அவர்களது வழக்கறிஞர்கள், குடும்பங்களாலும், ஏன் மனித உரிமை அமைப்புகளாலும்கூட அச்சமுடனே அணுகப்படும் வளாகம் இது. இவ்வளாகத்தை அடிப்படைச் சுகாதாரம், ஆரம்பநிலைச் சிகிச்சைகள், அவற்றுக்குத் தேவையான பொருள்கள், எதுவும் எட்டிப்பார்ப்பதில்லை. மொத்தத்தில் சிறைவாசிகளின் உயிர்காக்கப்பட உத்தரவாதம் ஏதுமில்லை.
  • ஸ்கார்பியன் சிறைச்சாலையில் உள்ள ‘செல்’களில் படுக்கைகளுக்குப் பதிலாக, மிகப் பெரும்பாலும் ‘கான்கிரீட் ஸ்லாப்கள்தான்; எப்போதாவது வரும் மின்சாரம்; குழாய்களில் தண்ணீரும் அப்படியே! (எப்போதாவதுதான் நீரோடும்; பொதுவாகக் காற்று வரும், குழாய்களில்!); அறைகளில் (செல்களில்) சன்னல்களில்லையாதலால் காற்றுக்கு வழியில்லை; பயன்படுத்த உரிய கழிப்பறையைத் திரவியம்போல் தேடியடைய வேண்டும்; புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் எழுது பொருள்கள் காணப்பட்டால் தண்டனை உண்டு; பறிமுதல்தான் நடக்கும். இத்தனை கெடுபிடிகளுக்கிடையே, கவிஞர் எப்படியோ, தொடர்ந்து எழுதுகிறார்! (தோரா சிறை அலுவலர்கள் கையாளும் அவமானகரமான தந்திரங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் விரிவான 2016 அறிக்கையை அணுகலாம். அறிக்கையின் தலைப்பு; “நாங்கள் கல்லறைகளில் உள்ளோம்”).
  • கவிஞர் எழுதுகிறார்;
  • 'எப்போதும் வரிசையில் நிற்கிறோம்
  • வாழ்கிறோம் மற்றும்
  • வரிசையில் இறக்கிறோம்
  • நாங்கள் பிறந்து இறப்பவர்கள்
  • காத்திருக்கிறோம்...
  • ஏ சுதந்திரமே!'
  • மேற்கண்ட மோசமான சிறை நிலைமைகள், கலால் எல் - பெஹைரியின் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றால் அவரது உடல்நிலை கணிசமாக மோசமடைந்தது. மேலும், அவருக்குத் தனது வாயில் ஏற்பட்டுள்ள ஒரு கட்டியால், உணவு விழுங்க இயலாமல் அவதிப்படும் நிலையும் வந்தது. அவசரமாகத் தக்க மருத்துவம் அவருக்குத் தேவைப்படுகிற நிலைமை இருப்பினும், சிறை அதிகாரிகள் அவருக்கு அடிப்படையான மருத்துவ வசதிகளைக்கூட வழங்கத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
  • கலால் எல் - பெஹைரிக்குச் சிறையில் நடக்கும் சித்திரவதைகள், முறையான மருத்துவமும் அடிப்படை வசதிகளும் மறுக்கப்படுவது என்ற மனிதாபிமானமற்ற செயல்களையறிந்து ‘பென் இன்டர்நேஷனல்’ அமைப்பு உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் விடுவிக்கப்படும் வரை, அவரது உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு எகிப்திய அதிகாரிகள்தான் பொறுப்பு என்றாலும், அதுபற்றியெல்லாம் அரசு பொருட்படுத்தக் காணோம்.
  • கடந்த மாதம் (17 நவம்பர் 2024) உடல்நலங்குன்றி வரும் கவிஞரைச் சந்திக்க, அவர் அடைக்கப்பட்டுள்ள பத்ர் 1 சிறைச்சாலைக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் சென்றபோது, குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மூர்க்கத்தனமாக, அவமரியாதைப்படுத்தும் விதமாக, வேண்டுமென்றே ஆடைகளகற்றி முழு உடல் சோதனைகளுக்கு உட்படுத்தினர். இதற்கு எல் - பெஹாரி ஆட்சேபம் தெரிவித்தபோது, சிறை அதிகாரி ஒருவர், “சிறைச்சாலை, பத்ர் 3 இல் காமிராக்கள் இல்லாத சித்திரவதை அறைக்கு அழைத்துச் சென்று, அங்கு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்று (‘என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்’ என்பதை அழுத்தமாக, உரக்கச்சொல்லி) அச்சுறுத்திய செய்திகள் கசிந்துள்ளன.
  • கவிஞர் எல் - பெஹாரிக்கு அரசுப் பயங்கரவாதத்தால் தொடரும் அநீதிகளைத் தொகுத்துப் பார்த்தால், இன்றைய நாகரிக உலகில் பெரிதும் போற்றப்படும் ‘சட்டத்தின் ஆட்சி’ (Rule of Law) என்ற சொல்லே எகிப்தில் “தேய்புரிப் பழங் கயிறாகி”க் கிடக்கிறது என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது.
  • முதலில் வழக்கு எண் 2000/2021 SSSP இல் 'தவறான செய்திகளைப் பரப்பியது' மற்றும் 'ஒரு பயங்கரவாதக் குழுவில் சேர்ந்தது' என்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணைக்கு முந்தைய முறையற்ற தடுப்புக்காவலில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். தற்போதும் அமலில் உள்ள(தாகச் சொல்லப்படும்) எகிப்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, எல் - பெஹாரியின் விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல் உச்சபட்ச வரம்பான இரண்டு ஆண்டுகளுக்கு அப்பால் நீட்டிக்கப்படக்கூடாது. ஆனால், நீட்டிக்கபட்டுள்ளதே கவிஞர் எல் - பெஹாரிக்கு!
  • மேலும், மேற்படி 2021 வழக்கு, சட்டப்படி சிவில் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எல் - பெஹாரி வழக்கு, இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஜூலை 2021 இல், நியாயமற்ற 3 ஆண்டு சிறைத்தண்டனையும் 10,000 எகிப்திய பவுண்டுகள் (ரூ. 17 ஆயிரம்) அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை முழுமையாக அனுபவித்த பின்னரும், எகிப்திய அரசு வழக்கறிஞர்கள் எல் - பெஹைரிக்கு எதிராகப் புனையப்பட்ட கூடுதல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்து வருகின்றனர்.
  • அநீதியான, சட்டத்தை மீறிய, விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலை எதிர்த்து, சூலை 2023 இல் கவிஞர் தொடங்கிய சிறைக்குள் உணவு உண்ணாப் போராட்டம், அவரது உடல் நலிவுற்றதால் இடைநிறுத்தப்பட்டது. 2023 அக்டோபரில் நடைபெற இருந்த தனது அன்புத் தங்கையின் திருமணத்தில் சுதந்திர மனிதனாகக் கலந்துகொள்ள அவருக்கு விருப்பமும் எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது. அதற்காக, மீண்டும் 9 செப்டம்பர் 2023 முதல் தனது உணவு மறுப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், நான்கு நாள்களுக்குப் பிறகு, கலால் எல்-பெஹைரி தனது தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்ளப் பிணையில்கூட விடுவிக்கப்படும் வாய்ப்பேயில்லை என்பது உறுதியாகி, நம்பிக்கை தகர்ந்த நிலையில் உள்ளம் நொறுங்கி, நீரும் அருந்தாமல் தனது வாழ்க்கையை முடித்துவிட முயன்றார் எல் - பெஹைரி.
  • எகிப்தில் நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி, விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலின் அதிகபட்ச சட்டப்பூர்வ காலத்தை ஏற்கெனவே (5 செப்டம்பர் 2023 இல்) கலால் எல் - பெஹைரி கடந்துவிட்டாலும், இன்னும் விசாரணையுமில்லை; விடுதலையுமில்லை கவிஞருக்கு!
  • சிறையிலிருந்து விடுதலையாகிச் சுதந்திரக் காற்றை மீண்டும் சுவாசிக்கும் வாய்ப்பு தனக்கினி ஒருபோதும் வாராதோ எனும் கையறு மனநிலையைக் கவிதையுடுத்தி மிக அண்மையில், கெய்ரோவின் தோரா சிறையிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் கலால் எல் - பெஹைரி. " ‘நாளை’ எனும் நாளுடன் எனக்கு ஒரு சந்திப்பு உள்ளது" ( I have a date with Tomorrow) என்ற தலைப்பூச்சூடிய அக்கவிதை, சுதந்திரத்தை ஒரு பெண்ணாகக் கற்பனை செய்து, வெளியுலகை வந்தடைந்திருக்கிறது. ‘அழகி. அவளுடன் ஒரு நொடி (மட்டும்) வாழும் வாய்ப்பெனக்குக் கிட்டுமா? எனும் வரிகள் வானெட்டியுள்ளது; ஆனால், எழுதியுள்ள கவிஞர் கலால் எல் - பெஹைரி வான்காணாச் சிறையில் இன்னும்.
  • “துன்பம் விட்டுவிடுகிறது
  • அதிக துயரத்திற்கு இடமளிக்கிறது
  • நாளைய தேதிக்காக...
  • நாளை தாமதமாக வரும் என்று
  • காத்திருக்கிறேன்.”
  • – கவிஞர் எல் - பெஹைரி.

நன்றி: தினமணி (21 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்