TNPSC Thervupettagam

பாதுகாப்பாக இருப்போம்

December 5 , 2023 405 days 218 0
  • வங்கக் கடலில் உருவாகியுள்ள "மிக்ஜம்' புயலால் சென்னைதிருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  பெய்துவரும் அதிதீவிர மழை பெரும் கவலையை அளிக்கிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமைதான் புயலாக உருவெடுத்தது என்றாலும் சனிக்கிழமை இரவே பெய்யத் தொடங்கிய மழை இப்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
  • இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெறும் எனவும், பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து  திங்கள்கிழமை மாலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் நிலவும் எனவும், தொடர்ந்து வடக்கு திசையில் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து செவ்வாய்க்கிழமை முற்பகல் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தமிழகத்துக்கு புயல் பாதிப்புகள் புதிதல்ல. நிஷா, ஜல், தாணே, நீலம், வர்தா, ஒக்கி, கஜா எனப் புயலின் கோரத் தாண்டவத்தை தமிழக மக்கள் ஏற்கெனவே சந்தித்திருக்கின்றனர். அண்மைக் காலத்தில் என்றால் 2015-இல் பெருவெள்ளம், 2016-இல் சென்னையைத் தாக்கிய வர்தா புயல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
  • டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலுக்கும், சென்னையை உலுக்கிய வர்தா புயலுக்கும் சற்றும் குறைவு இல்லாமல் இப்போது மிக்ஜம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. 24 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்துகொண்டிருக்கும் பலத்த மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் விழுந்து மாநகரமே சூறையாடப்பட்டதுபோல காட்சியளிக்கிறது.
  • அனைத்துப் பிரதான சாலைகளிலும் மழைநீர் ஆறாக ஓடியது. வழக்கம்போல வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற நீர்நிலைப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
  • பெருமழையால் வீட்டைவிட்டே வெளியே வர இயலாமலும், அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமலும் மக்கள் பட்ட அவதியைச் சொல்லி மாளாது. சென்னை நகரில் பாலங்களின் கீழும், சாலையோரமும் தங்கி வாழ்க்கை நடத்தும் ஆதரவற்ற மக்களின் துயரத்தை விளக்க வார்த்தைகளே இல்லை.
  • நிகழாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு கடந்த செப்டம்பர் மாதமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. ஆனால், கடந்த மாத இறுதியில் சில நாள்கள் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தபோதே சென்னையில் தாழ்வான பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதை அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமாளித்தன. அதேவேளையில், பெருமழையை எதிர்கொள்ளவும் அரசு தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர்.
  • ஆனால், அதிதீவிர பருவமழையை எதிர்கொள்வதற்கும், புயலால் ஏற்படும் தொடர் மழையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்பதையே மிக்ஜம் புயல் பாதிப்பு உணர்த்துகிறது. பருவமழை பல மணி நேரம் தொடர்ச்சியாகப் பெய்தாலும் சிறிது ஓய்ந்த பிறகு மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். அதேவேளையில், இப்போது மிக்ஜம் புயலால் இடைவெளியின்றி சூறைக்காற்றுடன் பெருமழை பெய்யும் நிலையில் அரசுத் துறைகள் சார்பில் மீட்பு, நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்படுவது இயல்புதான்.
  • புயல் முன்னெச்சரிக்கையாக தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது, தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது என அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இதுபோன்ற பெரும் புயலை எதிர்கொள்ள இந்த நடவடிக்கைகள் போதாது.
  • புயல், மழையால் சென்னை மாநகரம் தத்தளிப்புக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து இயற்கைச் சீற்றங்களின்போது மட்டும்தான் கவலைப்படும் போக்கு நிலவுகிறது. புயலை எதிர்கொண்டு வென்றுவிட முடியும் என்பதில்லை. ஆனால், புயலால் ஏற்படும் மழை பாதிப்புகளைக் குறைக்க நிச்சயமாக முடியும். மழைநீர் வடிவதற்கான வாயில்கள் அடைபடுவது அல்லது இல்லாமல் இருப்பது, நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்வது உள்ளிட்டவைதான் இந்த மழை பாதிப்புக்கு பிரதான காரணங்கள்.
  • இந்தக் காரணிகள் தொடர்பாக தொலைநோக்கான, நிபுணத்துவம் மிக்க ஆய்வுகள் அவசியம் தேவை. அடுத்த மழைக் காலத்தின்போது பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல், அதுதொடர்பாக நிரந்தரமான ஒரு தீர்வை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். வந்த பின் அவதியுறுவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது.
  • பொதுமக்களைப் பொருத்தவரை இதுபோன்ற எதிர்பார்க்காத அளவிலான இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுதான் ஒரே வழி. புயல் பாதிப்பின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது, மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அருகே செல்லாமல் இருப்பது போன்றவை ஆபத்துகளைத் தவிர்க்க உதவும். மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை பாதுகாப்பாக இருப்போம்.

நன்றி: தினமணி (05 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்