TNPSC Thervupettagam

பாதுகாப்புக்கு ஒரு காப்பீடு!

October 31 , 2020 1366 days 629 0
  • திங்கள்கிழமை இந்தியா வந்த மைக் பாம்பேயோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பரும் செவ்வாய்க்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்குடனும், வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருடனும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையேயான நான்கு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன.
  • இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களும், வெளியுறவுத் துறை அமைச்சா்களும் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தையில் பாதுகாப்புத் துறை, ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனா் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • கடந்த 2002-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, ராணுவப் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் கையொப்பமானது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு ‘முக்கிய பாதுகாப்புக் கூட்டாளி’ என்கிற சிறப்பு அந்தஸ்து அமெரிக்காவால் வழங்கப்பட்டது.
  • அதன் மூலம் இரு நாடுகளும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள படைத்தளங்களை பயன்படுத்திக் கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் நீட்சியாகத்தான் இப்போதைய பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கருத வேண்டும்.
  • அதிநவீன தொழில்நுட்பங்கள், புவிசாா் படங்கள், செயற்கைகோள் படங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்களைப் பகிா்ந்து கொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதிலிருந்து இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு சூழலை நிலைநாட்டுவது வரை இந்தப் பேச்சுவாா்த்தையின்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • இந்தியாவின் லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் நடைபெறும் நிலையில், இந்த ஒப்பந்தம் ஒருவகையில் சீனாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.
  • எதிரியின் எதிரி நண்பன் என்கிற ராஜதந்திரத்தின் அடிப்படையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்திருக்கின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில், அதிலும் அதிபா் தோ்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, அமெரிக்காவின் மிக முக்கியமான இரண்டு மூத்த அமைச்சா்கள் இந்தியாவுக்கு நேரடியாக வந்து பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருப்பதிலிருந்து, அமெரிக்கா எந்த அளவுக்கு இந்தியாவுடனான உறவை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
  • அமெரிக்கா மட்டுமல்ல, எல்லா வல்லரசு நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தால் பொருளாதாரக் கொள்கையிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ, சா்வதேசப் பிரச்னைகளிலோ எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • அந்த வகையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும்கூட, கையொப்பமாகி இருக்கும் ஒப்பந்தங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
  • கையொப்பமாகி இருக்கும் ‘பிஇசிஏ’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘பேசிக் எக்ஸ்சேன்ஞ் அண்ட் கோவாபரேஷன் அக்ரிமென்ட்’ கடந்த 20 ஆண்டுகளாக, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு இப்போது கடைசி நான்கு ஒப்பந்தங்களும் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து என்கிற குற்றச்சாட்டு தவறு, தேவையற்ற கவலை. உலகிலுள்ள 57 நாடுகளுடன் அமெரிக்கா ஏற்கெனவே இந்த பிஇசிஏ ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமான ஒப்பந்தம் அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
  • அமெரிக்காவுடன் பிஇசிஏ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் வலிமையான விண்வெளி ஏவுகணைகளை (பாலிஸ்டிக் மிஸைல்ஸ்) வைத்திருக்கின்றன. அமெரிக்காவின் தன்னிகரற்ற ராணுவத்துக்கான செயற்கைக்கோள்களின் உதவியுடன் தாங்கள் விழையும் இலக்குகளை அவற்றின் மூலம் தாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
  • அதனால், இந்தியாவுக்கு சீனாவால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் அத்தியாவசியமாகிறது.
  • இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தலாக சீனா மாறியிருக்கிறது. கிழக்காசியிவிலிருந்தும், இந்து மகா கடலில் இருந்தும், பசிபிக் கடல் பகுதியில் இருந்தும் அமெரிக்காவை அகற்றி நிறுத்துவதும் அதன் மூலம் இந்தியாவை அச்சுறுத்தி தனது கட்டுப்பாட்டில் பணிய வைப்பதும் சீனாவின் திட்டமாக இருக்கிறது.
  • நடைபெற இருக்கும் மலபாா் கூட்டு கடற்படைப் பயிற்சிகளைத் தொடா்ந்து, இந்த பேச்சுவாத்தையும் ஒப்பந்தமும், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பாதுகாப்புத் தேவைகளை திட்டமிட உதவும்.
  • சீனாவின் ராணுவ பலத்துக்கு முன்பு இந்தியா ராணுவ நவீனமயப்படுத்தலில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. அந்த இடைவெளியை அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய வல்லரசு சக்திகளுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் மூலம்தான் ஈடுசெய்ய முடியும்.
  • 1962 சீனப் படையெடுப்பின்போது அமெரிக்காதான் இந்தியாவின் உதவிக்கு வந்தது என்பதை இங்கே நினைவுகூர வேண்டும். இப்போதும் அதேபோன்ற நிலைமை சீனாவின் எல்லைப்புற அச்சுறுத்தலால் ஏற்பட்டிருக்கிறது.
  • இந்தியா மோதலை விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை எதிா்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாக வேண்டும்.
  • இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை அந்த கண்ணோட்டத்துடன்தான் பாா்க்க வேண்டும்.

நன்றி : தினமணி (31-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்