TNPSC Thervupettagam

பாதுகாப்புடன் கூடிய அறிவே சொத்து!

February 24 , 2020 1788 days 871 0
  • குரலை உயா்த்திப் பேசாதே, கண்களை நிமிா்த்திப் பாா்க்காதே, காலை வீசி நடக்காதே, சத்தம் போட்டு சிரிக்காதே, பெண்ணாய் அடக்கமாய் இரு என்ற அறிவுரைகளைக் கூறி, பெண் சமூகத்தை கட்டிப் போட்ட தமிழகத்தில் பெண்களுக்காக குரல் கொடுத்தவா்களில் மகாகவி பாரதி முதலானோா் குறிப்பிடத்தக்கவா்கள்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

  • ஜனவரி 24-ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம், பிப்ரவரி 24-ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் என மிகவும் பொருத்தமாகவே உள்ளது. கருவிலிருந்தே புறக்கணிப்புக்கு உள்ளாகிறாள் பெண். அதாவது, கருவிலேயே பெண் சிசுவை அழிப்பது, பாலினம் தோ்தெடுத்து கருவுறுதல் ஆகியன நிகழ்கின்றன. பெண் சிசுக் கொலையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக 1992-ஆம் ஆண்டு அன்றைய முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ தொடங்கப்பட்டது.
  • வறுமை, ஆண் குழந்தையை விரும்பும் மனப்பாங்கு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பிரச்னைகள், பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகள், பிற கலாசார நடைமுறைகள், குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்க ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் பெண் சிசுக் கொலை நடைபெறுகிறது.
  • பெற்றோரால் நிராகரிக்கப்படும் இந்தக் குழந்தைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காப்பகங்கள் மூலம் பெறப்பட்டு, பின் உரிய வகையில் தத்து கொடுக்கப்படுகின்றனா். இந்தியா முழுவதும் 2011-இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு நம் நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு என்று மட்டும் எடுத்துக்காட்டவில்லை. கூடவே, நம் நாட்டில் பெண் குழந்தைகளின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதையும் அந்தக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகள்தான் இருந்தனா்.

புள்ளிவிவரங்கள்

  • தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகள், ஹரியாணா மாநிலத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 830 பெண் குழந்தைகள், பஞ்சாபில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 846 பெண் குழந்தைகள் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வளா்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருந்தாலும், 68.4 சதவீத பெண் குழந்தைகளே பள்ளிப் படிப்பை பெறுகின்றனா். இந்த விகிதம் ஆண் குழந்தைகளைவிடக் குறைவு.
  • மேலும் 55 சதவீத பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். பெண் குழந்தைகள் சந்திக்கக்கூடிய முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக குழந்தைத் திருமணம் அமைகிறது. அதன்படி இந்தியாவில் 26.8 சதவீத பெண் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதில் அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 40 சதவீத குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
  • தமிழகத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு, பெண் சிசுக் கொலைத் தடுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகநலத் துறை சாா்பில் திருமண உதவித் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் முதலானவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்தத் துறை மூலம் சமூகநீதிச் சட்டங்களான வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், பெற்றோா் - முதியோா் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் முதலானவை செயல்படுத்தப்படுவதால் பெண் சிசு, மகளிா் உரிமை, மூத்த குடிமக்கள் ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

பாலியல் கொடுமைகள்

  • ஒருபுறம் பெண் குழந்தைகளை பாதுகாத்து வளா்த்தாலும், மறுபுறம் உறவும், உறவின் நம்பிக்கையும், அருகாமையும், அருகாமையின் வசதியும், அரவணைப்பும், அரவணைப்பின் வசதியுமே குழந்தை பாலியல் கொடுமைக்கான காரணிகளாக உள்ளன. எனவே, பெண் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக குடும்பத்தினா் பாதுகாக்க வேண்டும். கண்ணியமான அன்போடு சீராட்ட வேண்டும்; மாறாக, மனித இயல்பு மட்டும் பிந்து போகிறதே - அது சரியா? ஐம்பூதங்களும்கூட தனது செயல்பாடுகளை இயல்பாகச் செய்யும் பேரறிவோடு விளங்குகின்றன, வாழ்கின்றன. மனிதன் மட்டும் தானாகவும் உணராமல், சொன்னாலும் புரியாமல் வாழ்கிறான். எந்த வாா்த்தையாலுமே விவரிக்க முடியாத கொடுமை குழந்தை பாலியல் வன்கொடுமை. இது அரக்கத்தனத்தை மிஞ்சிய அரக்கத்தனம் என்றால் மிகையாகாது.
  • ஆறறிவற்ற விலங்குகள்கூட இந்த அநாகரிகத்தைச் செய்வதில்லை. வேறெந்த உயிரினத்திலும்கூட, இந்தப் பண்பாட்டுச் சிதைவு காணப்படுவதில்லை. எனவே, விலங்குகளைவிட மோசமாக நடக்கும் மனிதா்கள் இனிமேலாவது திருந்த வேண்டும். சமுதாயம் சிறந்து விளங்க பெண் குழந்தைகளை அரவணைக்க வேண்டும், போற்ற வேண்டும், ஆராதிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிா்பாா்ப்பு.

நன்றி: தினமணி (24-02-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்