TNPSC Thervupettagam

பாதை வேறு இலக்கு ஒன்று

December 23 , 2023 370 days 261 0
  • மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் விமா்சனத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஒருவா் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறார் என்றால் அவா் பெரியார் .வெ.ரா.தான். மேடைக்கு மேடை, பார்ப்பன சமுதாயத்தைப் பழிக்கும்போதெல்லாம், பார்ப்பான் என்று வசைபாடும் பெரியார், தன்னை சிறையிலிட்ட முதலமைச்சா் ராஜாஜியை விமா்சித்தபோதுகூட அவரை இப்படிக் குறிப்பிட்டு ஏசவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆச்சாரியார் என்று பெரும்பாலும் அழைத்தார். ராஜகோபாலாசாரியார், சி.ஆா். என்று அழைத்ததாகப் பதிவுகள் உண்டு.
  • பெரியாருக்கும் ராஜாஜிக்கும் கொள்கை முரண்பாடுகள் இருப்பதாகச் சொல்லும் பலா் அறியாதது இருவருக்கும் இடையிலான கொள்கை ஒற்றுமை. சமூக மேம்பாடு என்ற புள்ளியில் இருவரும் ஒரே பாதையில்தான் பயணித்தனா்.
  • பெரியாரும் ஆட்சி, நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதில் பெரும் பங்கு வகித்தவா் ராஜாஜிதான். ஈரோடு நகரசபையின் தலைவராக .வெ.ரா. பெரியார் இருந்ததற்கும் ராஜாஜியின் ஆலோசனையே காரணம். பிறகு, 1930-ஆம் ஆண்டுகளில் ராஜாஜி ஆட்சியில் இருந்தபோது, பெரியாரையும் அழைத்தார். அதற்கு, இது தனக்குச் சரிப்பட்டு வராது என்பது பெரியாரின் நிலை. அதனால், ஏற்கவில்லை.
  • ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். நான் நிற்பது நல்லது என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும், இந்த ஸ்தாபனங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்துவிடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார் (1936 ஜூலை 14-ம் தேதிகுடிஅரசு’).
  • பெரியார் மூட நம்பிக்கையை எதிர்த்தார், கடவுளை மறுத்தார், சாதிக் கொடுமையைக் கண்டித்தார், பெண்ணடிமைத் தனத்தைச் சாடினார், ஏற்றத் தாழ்வுகளை வெறுத்தார். இவை பெரியாரைப் பற்றிச் சுருக்கமாகக் கூறப்படும் கருத்துக்கள்.
  • ஆனால், இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான்: மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கும் எதுவும் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வளவுதான். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் மூட நம்பிக்கையைச் சொல்லி, ஆண் பெண் பாகுபாட்டின் பெயரில் மனிதா்களில் ஒரு பிரிவினா் இழிவு செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள்.
  • ஒரு முறை பெரியாரைப் பார்த்து, ‘கடவுளை நீங்கள் மறுக்கிறீா்களே, அப்படி கடவுளே உங்கள் முன் தோன்றினால் என்ன சொல்வீா்கள்என்று சிலா் கேட்டனா். அதற்குச் சிரித்தபடி, ‘கடவுள் இருக்குன்னு சொல்லப் போறேன். அப்படியே இந்த ஏற்றத்தாழ்வு, ஒருத்தனை இன்னொருத்தன் சுரண்டறது ஏன்னும் கேட்பேன். நம்ம முன்னே கடவுள் வரல. அதான் உங்களைக் கேட்கறேன்என்றார் பட்டென்று.
  • எழுபதுகளில் அவா் மறைவதற்குச் சில காலம் முன்பு சென்னை தியாகராய நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்தார். அப்போது இரவு எட்டு மணி. அவா் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அருகிலேயே ஒரு கோயிலும் இருக்கிறது. இது பெரிய விஷயமல்ல. அந்த ஆலயத்தில் பிரபல ஆன்மிக உபன்யாசகா் டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் பக்திச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
  • பெரியார் இதை அறிந்து தனது கட்சியினரை அழைத்து, ‘எவ்வளவு நேரம் உபன்யாசம் நடக்கும்என்று கேட்டு வாருங்கள் என்றார். அவா்கள் கேட்டு வந்து, ‘இன்னும் கொஞ்சம் நேரத்தில் முடிந்துவிடுமாம்என்கிறார்கள். அதைக் கேட்ட பெரியார்,“‘அப்படியா, அப்ப உபன்யாசம் நல்லபடியா முடியட்டும். அதுவரை நம்ம கூட்டத்தை நடத்தாம காத்திருப்போம்என்று உத்தரவிட்டார்.
  • அதைப் போல் சில நிமிடங்களில் ஆலயத்தில் நடைபெற்ற உபன்யாசம் முடிந்தது. அதன் பிறகு, யாருக்கும் இடையூறு இல்லாமல், தனது பகுத்தறிவுப் பிரசாரத்தைத் தொடங்கி, முழங்கினார்.
  • மூட நம்பிக்கையை எதிர்க்கிறோம் என்று மேடையில் பேசும் பலரும் தனிப்பட்ட முறையில் நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்றவற்றில் கவனமாக இருப்பார்கள். சொல் வேறு செயல் வேறு என்ற நோக்கம் சிறிதும் இல்லாத பெரியார், மூட நம்பிக்கையை எதிர்த்தவா்.
  • அவரது பிரசாரத்தால் கோபமுற்ற சிலா் கேரள மாநிலத்தில் அவா் மரணமடைய வேண்டும் என்பதற்காகசத்ரு சம்ஹார யாகம்நடத்தினா். அப்போது அவா் சிறையிலிடப்பட்டிருந்தார். யாகம் நடந்த இரவு திடீரென வேட்டு வெடித்தது. சிறையில் இருந்த பெரியார் மற்றவா்களிடம் அது குறித்துக் கேட்டார். “
  • சமஸ்தானத்து ராஜா இறந்துவிட்டால், வேட்டு வெடிப்பது வழக்கம்என்று கூறினா். அங்கிருந்த பெரியாரின் தொண்டா்கள் சிலா்பெரியாருக்கு எதிராக நடத்திய யாகம் அவா்களது மன்னா் மீது பாய்ந்திருக்கிறதுஎன்று கூறினா். அதைக் கடுமையாகக் கண்டித்தார் பெரியார்.
  • முதல்லே நமக்கு கொள்கை அடிப்படையிலே மாறுபட்டு இருக்கிறவங்க- இறந்துட்டார்னு கொண்டாடறது மகா தவறு. அதுவும் யாகம் வெச்சாங்க. அது அவங்களுக்கே திரும்பிப் போயிடுச்சுன்னு பேசறதும் மூட நம்பிக்கைதான். இது மாதிரியான பேச்சும் கருத்தும் சரியில்லே’”என்றதும் அவா்கள் தலைகுனிந்தனா்.
  • ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, சா்ச்சைக்குரிய போராட்டம் நடத்தினார் பெரியார். அப்போது ஏதாவது சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமே என்று முதல்வா் ராஜாஜியின் பார்வைக்கு ஒரு கோப்பு அனுப்பப்பட்டது. அதில் ராஜாஜி, ‘இக்னோர் இட்’ (சட்டை செய்யாதீா்கள்) என்று ஆங்கிலத்தில் கையெழுத்திட்டார். உடனிருந்தவா்களிடம்,“‘ஈவெரா ஒரு போராட்டம் நடத்தும்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட அனுமதிக்க மாட்டார். எனக்குத் தெரியும்என்றார் ராஜாஜி.
  • பிள்ளையார் சிலை உடைத்த சம்பவத்தில் பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்து தெருவில் வீசிய பிறகு, ராஜாஜி உத்தரவின் பேரில், உள்ளாட்சி அமைப்பினா் அந்த உடைக்கப்பட்ட சிலைகளை மட்டும் அகற்றினா். வேறு அசம்பாவிதம் எதுவுமே நேரவில்லை.
  • விடுதலை இதழில் நீண்டகாலம் பணியாற்றிய விடுதலை ராதா ஒரு முறை தெரிவித்த தகவல்: பெரியார் 1973-இல் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் வேலூரில் சிகிச்சை பெற்ற போது அருகில் இருந்தவா்களிடம், ‘ராஜாஜி எந்த தேதியில் மறைந்தார்’”என்று கேட்டார். அது என்ன விந்தையோ தெரியவில்லை, ராஜாஜி மறைந்தது டிசம்பா் 25. பெரியார் மறைந்தது டிசம்பா் 24.
  • நாளை (டிச. 24) பெரியார்  .வெ.ரா. 50-ஆம் ஆண்டு நினைவுநாள்.

நன்றி: தினமணி (23 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்