- ஒருவரது பிறப்பு அவரது தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்பதற்காகத்தான் சாவித்ரிபாய் புலே தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம் ஆகிய மூன்றையும் கல்வியே தரும் என்பதை உணர்ந்த அவர், ‘அனைவருக்கும் கல்வி’ என்பதில் உறுதியாக இருந்தார். 1848இல் இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி தொடங்கக் காரணமாக இருந்த அவர், 1853க்குள் மொத்தம் 18 பள்ளிகளைப் பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடங்கினார்.
- பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் நவீனக் கல்விமுறை எப்படி இந்தியாவுக்குள் நுழைந்திருக்க முடியும்? கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வணிகம் செய்ததோடு இந்தியாவை ஆளும் அதிகாரத்தையும் நிறுவிக்கொண்டிருந்த 1800களில் பிரிட்டிஷ் நிறுவனங்களில் அடிமட்ட பொறுப்பில் பணியாற்ற அவர்களுக்குக் குறைந்த கூலிக்கு ஆள்கள் தேவைப்பட்டனர். இந்தியர்களை அந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பொருட்டு கல்வி வழங்கும் வெளிநாட்டு மிஷனரிகளை இந்தியாவில் அனுமதித்தனர். பிரிட்டன் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, பிரெஞ்சு மிஷனரிகளும் அதில் அடக்கம். இந்தியச் சமூகச் சீர்த்திருத்தவாதிகள் அந்த வாய்ப்பைத் தங்கள் மக்களின் மறுமலர்ச்சிக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொண்டனர். அதுவரை அவரவர் மதநூல்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டுவந்த நிலை மாறி நவீனக் கல்வி இந்தியர்களுக்குக் கிடைத்தது. அடித்தட்டு மக்களுக்குக் கல்வியைக் கொண்டுசேர்த்ததில் மகாத்மா ஜோதிராவ் புலே – சாவித்ரிபாய் தம்பதிக்குப் பெரும் பங்கு உண்டு.
பாத்திமா என்னும் புரட்சியாளர்
- தங்கள் வயதைவிட ஐந்து மடங்கு அதிக வயதுடையோருக்குப் பெண்கள் மணம் முடிக்கப்பட்ட காலம் அது. பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய பாத்திமா ஷேக், இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர். ஒன்பது வயது ரிப்பி என்கிற சிறுமிக்கு மனைவியை இழந்த 40 வயது ஆணுடன் திருமணம் என்பது பாத்திமாவை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. ரிப்பி மிகவும் அறிவானவள். படுக்கை விரிப்பில் அவள் வரைகிற பூத்தையலில்கூட அவளது கணித அறிவு துலங்கும். அவளது வாழ்க்கை திருமணம் என்கிற பெயரால் சீரழிக்கப்படுவதை நினைத்துத்தான் பாத்திமா கண்கலங்கினார். அதைப் புரிந்துகொண்ட சாவித்ரி, “நம் பள்ளியில் ஆறு பெண்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை மாற்றத்துக்கு நாம் காரணமாக இருக்கிறோம். அதை நினைத்துப் பார்’’ என்று பாத்திமாவைத் தேற்றினார்.
- ஆனாலும் பாத்திமாவின் மனம் ஆறவில்லை. ரிப்பியின் அப்பா சலீமிடம் பேச முயன்றார். “என் மகள் படித்தால் உன்னைப் போல் திருமணம் ஆகாமல் அவளது வாழ்க்கையும் வீணாகிவிடும்” என்று திட்டினார். ஆண்களையும் இந்தச் சமூகத்தையும் நொந்துகொண்டு பயனில்லை என்பதை சாவித்ரிபாய் உணர்ந்திருந்தார். “மரக்கிளையின் கூட்டில் இருக்கும் முட்டைகளை விழுங்குவது பாம்பின் இயல்பு. ஒரு பாம்பை விரட்டினால் இன்னொரு பாம்பு அந்த வேலையைச் செய்துவிடும். ஆனால், குஞ்சுகள் பறக்கும்வரைக்கும் முட்டைகளைக் காப்பதுதான் நம் கடமை. எவ்வளவு முட்டைகளை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது” என்று பாத்திமாவிடம் சாவித்ரி சொன்னார். பாத்திமாவும் அதைப் புரிந்துகொண்டு பெண்களுக்குக் கற்பிக்கும் வேலையைத் தொடர்ந்தார்.
- ரீட்டா ராமமூர்த்தி குப்தா எழுதிய ‘Savirthribai phule: Her life, Her relationships, Her legacy’ என்கிற புத்தகம், வரலாற்றில் மறைக்கப்பட்ட பாத்திமாவின் சாதனைகளைச் சாவித்ரிபாயின் வாழ்க்கைக் கதையின் வழியே சொல்கிறது. ரிப்பிகளின் வாழ்க்கை சீர்பட வேண்டுமென்றால் சலீம்களைத் திருத்த வேண்டும். அதற்கு சலீம்களின் மனைவிகளுக்குக் கற்பிக்க வேண்டும். இதைத்தான் சாவித்ரிபாய் தன் நண்பர்களின் உதவியோடு சாதித்துக் காட்டினார். அந்தக் காலத்தில் பெண்களுக்குப் பத்து வயதில் திருமணம் என்பது மிகத் தாமதமான திருமணமாகக் கருதப்பட்டது. அந்நாளில் பாத்திமா ஷேக் 25 வயதில் திருமணம் புரிந்துகொண்டது மிகப்பெரிய புரட்சி. சாவித்ரிபாய் உடல்நலம் குன்றித் தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நாள்களில் பள்ளியைச் சிறப்பாக நடத்தியவர் பாத்திமா. 1856இல் சாவித்ரிபாய் புலே எழுதிய கடிதத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளி மாணவர்களுடன் பாத்திமா ஷேக், சாவித்ரிபாய் புலே
இரவுப் பள்ளிகள்
- கூலி வேலை செய்யும் மக்கள் பகல் முழுக்க வயல்களில் வதைபடுகிறபோது அவர்களுக்குக் கல்வி கற்க நேரம் ஏது? அவர்களுடைய குழந்தைகளின் நலனுக்காகவே இரவுப் பள்ளிகளை 1855இல் சாவித்ரிபாய் தம்பதி தொடங்கினர். அனைவருக்கும் சம உரிமை என்பது மறுக்கப்பட்ட காலத்தில் பெண்ணுரிமை குறித்துப் பேசியவர் சாவித்ரிபாய். பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பெண்களுக்குப் புரியவைப்பதே சாவித்ரிபாய்க்குப் பெரும் சவாலாக இருந்தது. பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1852இல் ‘மகிளா சேவா மண்டல்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார். பெண்களுக்கான பெரும் மாநாட்டையும் அவர் நடத்தினார். சாதிய, சமூக அடுக்குகளின் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் அதில் பங்கேற்க அழைப்புவிடுத்தார். அனைவரும் எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒன்றாக அமர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கைம்பெண்களுக்கு ஆதரவு
- பெண்களின் கண்ணியக் குலைவுக்குக் காரணமான சம்பிரதாயங்களுக்கு எதிரான பரப்புரையை சாவித்ரிபாய் மேற்கொண்டார். இள வயதுப் பெண்களும் சிறுமியரும் முதிய ஆண்களுக்கு மணம் முடிக்கப்பட்டதால் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கணவனை இழந்த சிறுமியர்கூடத் தலை மழிக்கப்பட்டு வலுக்கட்டாயமாகக் ‘கைம்பெண்’ என்கிற அடையாளச் சிறைக்குள் தள்ளப்பட்டனர். முடி மழிக்கப்படுவதன் மூலம் கைம்பெண்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதால் இந்த நடைமுறை. இந்தக் கொடுமைக்கு எதிராக சாவித்ரிபாய் குரல்கொடுத்தார். பம்பாயிலும் பூனாவிலும் இருந்த முடிதிருத்துவோரைச் சந்தித்து, முடி மழிக்கும் சடங்கில் பங்கேற்கக் கூடாது எனக் கோரிகை விடுத்தார். முடிதிருத்தும் தொழில்தான் தங்களின் வாழ்வாதாரம் என்றிருந்த நிலையிலும் சாவித்ரிபாயின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையால் அதற்கு ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து கைம்பெண்களுக்கு முடி மழிக்கும் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முடி திருத்துவோரின் பிரம்மாண்டமான வேலைநிறுத்தப் போராட்டத்தை சாவித்ரிபாய் முன்னெடுத்தார்.
- கைம்பெண்களின் இருப்பு அமங்கலமாகக் கருதப்பட்டது. தங்கள் குடும்பத்தின் நலன் கருதி தங்கள் வீட்டுப் பெண்களையே வீட்டைவிட்டுத் துரத்தியடித்த குடும்பங்கள் அந்நாளில் ஏராளம். அப்படிக் கைவிடப்பட்ட கைம்பெண்கள் எவ்விதப் பாதுகாப்பும் ஆதரவுமின்றித் தவித்தனர். ஆண்களால் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். பாலியல் வல்லுறவால் கருவுற்ற பெண்கள் பாவிகளாகக் கருதப்பட்டனர். பாவத்தைச் செய்தவர்கள் குறித்துச் சமூகத்துக்குக் கவலையே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக்கித் தூற்றினர். இதனால், பெரும்பாலான கைம்பெண்கள் குழந்தை பிறந்ததும் அதைக் கொல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இந்தச் சமூக அவலத்தைத் தடுப்பதற்காகவே 1853 ஜனவரி 28 அன்று ‘சிசுக்கொலை தடுப்பு இல்ல’த்தை சாவித்ரிபாய் தொடங்கினார்.
- இந்தியாவின் முதல் சிசுக்கொலை தடுப்பு இல்லமும் இதுதான். கருவுற்ற கைம்பெண்கள் இங்கே வந்து தங்கிக்கொள்ளலாம். பிரசவத்துக்குப் பிறகு தங்கள் குழந்தையை இங்கேயே விட்டுவிட்டுச் செல்லலாம். 1873 வரை அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த இல்லத்தில் தஞ்சமடைந்து குழந்தையைப் பெற்றெடுத்தனர். கைம்பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது தர்மத்துக்கு எதிரானது எனச் சொல்லப்பட்ட இருண்ட காலத்தில் கைம்பெண் மறுமணம் குறித்து யோசிக்கக்கூட முடியாது. ஆனால், சாவித்ரிபாய் துணிவோடு அந்த முடிவை எடுத்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 10 – 2023)