- தமிழ்நாட்டில் கானமயில் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்று திருச்சி புனித வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரியில் உள்ள அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகத்தில் பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஆண் பறவையே என்பதைப் பார்த்தோம். திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் பகுதியில் வேட்டையாடிகளால் சுடப்பட்டு, பின்னர் இங்கு கொண்டு வரப்பட்டதாகவும், அது பாடம்செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் 1924இல் அந்த அருங்காட்சியகத்தின் காப்பாளர் அருள்தந்தை சார்லஸ் லீக் (Fr. Charles Leigh. S. J) பம்பாய் இயற்கை வரலாறு கழகத்தின் இதழில் பதிவுசெய்துள்ளார்.
- திருச்சியில் உள்ள இந்த அருங்காட்சியகம் மிகப் பழைமை வாய்த்தது. இது ஆரம்பிக்கப்பட்டது 1881இல். லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 1881இலும், இந்தியாவில் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் அமைந்திருக்கும் அருங்காட்சியகம் 1883இலும் தொடங்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதன் காப்பாளர்களில் ஒருவராக இருந்த அருள்தந்தை வின்சன்ட் நியூட்டனின் (1870-1949) நினைவாக, நியூட்டன் அருங்காட்சியகம் என்று இது அழைக்கப்படுகிறது.
பாதிரியாரின் ஆர்வம்
- கொடைக்கானலில் உள்ள செண்பகனூர் அருங்காட்சியகத்திலும் இங்கும் ஆரம்ப காலத்தில் பல காட்டுயிர்களும் தாவரங்களும் சேகரிக்கப்பட்டு பாடம்செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. கானமயிலை பாடம்செய்து வைத்த அருள்தந்தை சார்லஸ் லீக் 1913 முதல் 1934 வரை இங்கு காப்பாளராக இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாம்புகளின் மீது ஆர்வம் கொண்டு, கூண்டில் வைத்து வளர்த்து (serpentarium) அவற்றின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்து பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
- குறிப்பாக, மலைப்பாம்பின் இனப்பெருக்கம் குறித்த சுவாரசியமான தகவல்களைக் கொண்ட கட்டுரைகள் அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளன. இந்திய உயிரினங்கள் - நுண்ணுயிரியான புரோட்டோசோவா முதல் பாலூட்டிகள் வரை உள்ள - ஒவ்வொரு வகையான உயிரினத்துக்கும் தனித்தனியே பல அறிவியல் அறிஞர்களைக் கொண்டு எழுதப்பட்ட நூல் வரிசை ‘பிரிட்டிஷ் இந்தியாவின் உயிரினங்கள்’ (The Fauna of British India).
- இந்தியா மட்டுமன்றி அன்றைய சிலோன், பர்மா முதலிய நாடுகளில் இருந்து உயிரினங்களும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் 1881லிருந்து தொடங்கி 1953 வரை வெளிவந்தன. இன்று வரை இவை அனைத்தும் முக்கியமான நோக்கு நூல்களாக கருதப்படுகின்றன. இவற்றில் நீர்நில வாழ்விகள், ஊர்வன குறித்த நூலை எழுதிய மால்கம் ஏ. ஸ்மித் அருள்தந்தை சார்லஸ் லீக் எழுதிய பல கட்டுரைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
பாம்பு ஆராய்ச்சி
- ஆங்கிலப் பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணிபுரிந்த அவர் அறிவியல் இதழ்களில் மட்டுமல்லாமல், பல வெகுமக்கள் பத்திரிகைகளிலும் பாம்புகள் குறித்து பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். பழைமைவாய்ந்த மெட்ராஸ் மெயில் பத்திரிகையில் அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனால்,இவற்றில் எதுவும் இப்போது இல்லை என்பது வருத்தத்திற்குரியது. எனினும், புனித வளனார் கல்லூரியின் 175 ஆண்டு நிறைவு விழாவின்போது (2018இல்) இந்த அருங்காட்சியகத்தினைப் பற்றிய விரிவான நூலை தாவரவியலாலரான முனைவர். ஜான் பிரிட்டோ தொகுத்து வெளியிட்டுள்ளார்.
- இந்த நூலில் சார்லஸ் லீக் எழுதிய ஓரிரு கட்டுரைகளைக் காண முடிந்தது. அவற்றில் ஒன்றில் கண்ணாடி விரியன் (Russell’s Viper) என அழைக்கப்படும் நஞ்சுப் பாம்பிற்கு இன்னும் சில தமிழ்ப் பெயர்கள் இருப்பதைப் பதிவுசெய்துள்ளார். எட்டடி விரியன் (இந்தப் பாம்பு கடித்தவுடன் எட்டு அடி எடுத்து வைப்பதற்குள் கடிபட்டவர் இறந்துவிடுவதாகத் தவறாக நம்பப்படுவதால் இப்பெயர்), ரத்த விரியன் (இப்பாம்பு கடித்த இடத்தில் ரத்தம் வெகுவாக வெளியேறும் எனத் தவறாக நம்பப்படுவதால் இப்பெயர்), கழுதை விரியன் (மந்தமாக இருப்பதால் இப்பெயர்).
- மேலும் Wolf snake எனும் நஞ்சில்லா பாம்பிற்கு (இது நஞ்சுள்ள கட்டு விரியன் பாம்பைப் போலவே தோற்றமளிக்கும்) சுவரொட்டி பாம்பு, சுவர் பாம்பு, சுவர் வலையன், சுவர்ப்புடையான் எனப் பல பெயர்களைப் பதிவுசெய்திருக்கிறார். இவை பொதுவாக சுவரோரமாக ஊர்ந்து செல்வதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். கட்டு விரியன் (Common Krait) பாம்பிற்கு கருவழலை, அனலி, எண்ணெய் விரியன் எனும் பெயர்களையும் தந்துள்ளார்.
பாம்புப் பாதிரியார்
- பாம்புகளைப் பிடித்து கூண்டில் வளர்ப்பது, அருங்காட்சியகத்தில் பதப்படுத்தி வைப்பது மட்டுமல்லாமல், அவற்றைக் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து விரிவாக எழுதியும், பாம்புகள் குறித்து மக்களிடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்திருக்கிறார். இதனாலேயே மக்கள் அவரை ‘பாம்புப் பாதிரியார்’ (Snake Father) என்று அழைத்துள்ளனர். இவை அனைத்தும் செய்தது பாம்புகளைப் பற்றிய புரிதல் அதிகமாக இல்லாத காலத்திலேயே என்பதால், அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
- அவர் சேகரித்த உயிரினங்கள் (பெரும்பாலும் பாம்புகள்) செண்பகனூர் அருங்காட்சியகத்திலும் 1927இல் அவர் பணிபுரிந்த சென்னை லயோலா கல்லூரியிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. வளனார் கல்லூரியின் விலங்கியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அவரது நினைவாகவே அருள்தந்தை சார்லஸ் லீக் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவரது திருவுடல், இக்கல்லூரியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 09 – 2023)