பாம்பு மனிதன் உருவான கதை
- ராமுலஸ் விட்டேகர் - சென்னை பாம்புப் பண்ணை, சென்னை முதலைப் பண்ணை ஆகியவற்றுக்குச் சென்றவர்கள் அவர் உருவாக்கிய விலங்குக் காட்சியகங்களை நேரில் பார்த்து நிச்சயம் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அநேகமாக, இந்தியாவில் ஊர்வனவற்றுக்கு இருக்கும் சிறந்த காட்சியகங்களில் இந்த இரண்டும் முக்கிய இடம் பிடிக்கும்.
- அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த ராமுலஸ் விட்டேகர் இந்திய ஊர்வனவற்றைப் பாது காப்பதில் செலுத்திய பங்கு என்பது முன்னுதாரணம் இல்லாதது. பள்ளிக் காலத்தில் கொடைக்கானலில் படித்த போது பாம்புகள், ஊர்வனவற்றின் மீது காதல் கொண்ட விட்டேகர் ஒரு வேட்டையாளராக மாறினார்.
- ஆனால், சாலிம் அலியைப் போல இவரும் காட்டுயிர் பாதுகாவலராக, அறிவியல்பூர்வமாக உயிரினங்களைப் பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்துபவராக பிற்காலத்தில் மாறினார். அவரே அதைச் செயல்படுத்தியும் காட்டினார். அவருடைய இந்த நெடிய பயணத்தின் தொடக்க ஆண்டுகளைக் குறித்து ஓர் ஆங்கில சாகசத் திரைப்படம் போல விவரிக்கிறது இந்த ஆங்கில நூல். இந்த நூலை விட்டேகருடன் இணைந்து அவருடைய மனைவி ஜானகி லெனின் எழுதியுள்ளார்.
- 1950, 1960களில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மாறிமாறித் தொடர்ந்த அவருடைய தொடக்கக் கால வாழ்க்கையில் ஊர்வனவும் கூடவே வந்துள்ளன. ஃபுளோரிடாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பாம்பு நஞ்சு எடுக்கும் மையத்தில் புகழ்பெற்ற நிபுணர் பில் ஹாஸ்ட்டுடன் இளம் வயதிலேயே பணிபுரியக் கிடைத்த வாய்ப்பு தொடங்கி, விட்டேகர் பம்பாய் வந்தடைந்தது வரையிலான வாழ்க்கை இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் பாம்பு மனிதன்' உருக்கொள்ளத் தொடங்கிய இந்த நிஜக் கதை, காட்டுயிர் பாதுகாப்பில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2024)