- விருந்தினர்களுக்கு ஜி20 மாநாட்டையொட்டி அனுப்பப்பட்ட அழைப்பிதழில் "பாரதக் குடியரசுத் தலைவர்' என்று அச்சிடப்பட்டிருப்பது விவாதப்பொருளாகி இருக்கிறது. "இந்தியா' என்பது "பாரதம்' என்று மாற்றப்பட்டது, பலருக்கும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட பெயர் மாற்றம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்பதுவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
- சுதந்திரம் அடைந்தபோது, "இந்தியா' என்கிற பெயர் உலகளாவிய அளவில் பரவலாகத் தெரிந்திருந்ததால் அதையே பயன்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது எனலாம். ஆனாலும்கூட, அரசியல் சாசனத்தின் முதல் வரியிலேயே "இந்தியா என்கிற பாரதம்' (இண்டியா தட் ஈஸ் பாரத்) என்றுதான் இருக்கிறது. வருங்காலத்தில், ஆங்கிலேயர்கள் வழங்கிய "இந்தியா' என்கிற பெயர் அகற்றப்படும் அல்லது அகற்றப்பட வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்ததை அது வெளிப்படுத்துகிறது.
- ஆங்கிலேயர்களுக்கு முன்னர் வந்த இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள், "பாரதம்' என்று பரவலாக அழைக்கப்பட்ட பகுதியை, "ஹிந்துஸ்தான்' என்று அழைத்தார்கள். "சிந்துஸ்தான்' என்பது "ஹிந்துஸ்தான்' என்று மருவியது என்று சொல்வோரும் உண்டு. எது எப்படியோ, "இந்தியா' என்கிற பெயர் வழக்கத்துக்கு வந்தது ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னர்தான்.
- புராண, இதிகாசங்களில் முக்கடலுக்கு இடையேயும் இமயமலையை வடக்கு எல்லையாகவும் கொண்ட பகுதி "பரதக் கண்டம்' என்று அழைக்கப்படுகிறது. பரதக் கண்டம் என்று மட்டுமல்லாமல், ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், திபெத், பர்மா, இந்தோனேசியா, மலேசியா, சுமத்ரா, பாலி, வியத்நாம், தாய்லாந்து உள்ளடக்கிய பெரிய பகுதி "பாரத வர்ஷம்' என்று வழங்கப்பட்டது.
- ஆங்கிலத்தில் "இந்திய பிரதமர்' என்று அழைத்தாலும், இந்திய மொழிகளில் எழுதும்போதும், அழைக்கும்போதும் "பாரத பிரதமர்' என்றுதான் பெரும்பாலும் அழைக்கிறோம். "இந்தியா' என்று இருந்தாலும், பண்டித ஜவாஹர்லால் நேரு காலத்திலும், இந்திரா காந்தி ஆட்சியிலும் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களுக்கு "பாரத்' என்கிற அடைமொழியுடன்தான் பெயர் சூட்டப்பட்டன.
- பெயர் மாற்றத்தால் என்ன வந்துவிடப் போகிறது என்கிற கேள்வியை எழுப்புவதில் அர்த்தமில்லை. அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்ட எல்லா நாடுகளும், தங்களது பெயரை முந்தைய பெயருக்கு மாற்றி இருக்கின்றன. சீனா கூட தனது தலைநகரான பீக்கிங்கை பெய்ஜிங் என்று மாற்றியிருக்கிறது. "மதராஸ்' மாகாணத்தை "தமிழ்நாடு' என்று பெயர் மாற்றியதற்கும், கல்கத்தா கொல்கத்தாவானதற்கும், பம்பாய் மும்பையாக மாறியதற்கும் என்ன காரணமோ, அதே காரணம் "இந்தியா' என்பது "பாரதம்' என்று மாற்றப்படுவதற்கும் பொருந்தும்.
- 1972-இல் இந்திரா காந்தியின் ஆட்சியில் சுதந்திர வெள்ளிவிழா கொண்டாடிய போதோ, 1997-இல் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் ஆட்சியில் சுதந்திரப் பொன்விழா கொண்டாடியபோதோ இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். நரேந்திர மோடி அரசு செய்கிறது என்பதாலேயே, "பாரதம்' என்கிற பெயர் மாற்ற முடிவை விமர்சிப்பது சரியல்ல.
- நரேந்திர மோடி அரசின் இந்த முடிவுக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. அப்படி இருந்தாலும் அதில் தவறு காண முடியாது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு "இந்தியா' என்று பெயரிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக அணிதிரண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலும்போது, அதை அரசியல் ரீதியாக பாஜக எதிர்கொள்ள முனைந்திருப்பதில் என்ன தவறு?
- நாடு விடுதலை பெற்றதும், எல்லாத் தரப்பினரும் இணைந்து நடத்திய போராட்டத்தின் பலனை காங்கிரஸ் கட்சி தனதாக்கிக் கொள்வது நியாயமல்ல என்கிற நோக்கில், "காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடலாம்' என்று அறிவுரை வழங்கினார் மகாத்மா காந்தி என்பது வரலாறு. கட்சி கலைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, கட்சியின் கொடியைப் போலவே தேசியக் கொடியும் வடிவமைக்கப்பட்டு, அதன் மூலம் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயமடைந்த வரலாறும் மறந்துவிடக் கூடியதல்ல.
- வெறும் இருநூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய ஐரோப்பியர்கள் வழங்கிய "இந்தியா' என்கிற பெயரை, "பாரதம்' என்று மாற்றுவதற்கு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியே பல முன்னுதாரணங்கள் படைத்திருக்கிறது. தில்லியின் பிரபல "கன்னாட் சர்க்கஸ்', "இந்திரா செளக்' என்றும், "கன்னாட் சர்க்கிள்' "ராஜீவ் செளக்' என்றும் மாற்றப்பட்டதற்குக் கூறப்பட்ட அதே காரணம், இப்போது "இந்தியா', "பாரதம்' என்று மாற்றப்படுவதற்கும் பொருந்தும்.
- இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஹிந்தியில்தான் முதலில் எழுதப்பட்டது. அதில் "பாரத்' என்கிற வார்த்தைதான் எல்லா இடத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில்தான் "இந்தியா' என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
- மகாகவி பாரதியாரின் தீர்க்க தரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தனது பாடல்களில் அவர் "பாரத தேசம்', "பாரத மாதா', "பாரத சமுதாயம்' என்று பரவலாக "பாரதம்' என்றுதான் நூறாண்டுகளுக்கு முன்பே குறிப்பிடுகிறார். பாரதியார் மட்டுமல்ல, அந்நிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறப் போராடிய அனைத்து தியாகிகளும் இந்தப் பெயர் மாற்றத்தை மனதார வரவேற்பார்கள்!
நன்றி: தினமணி (06 – 09 – 2023)