TNPSC Thervupettagam

பாரதியார் கவிதைகளின் அக்காள்!

May 19 , 2024 236 days 246 0
  • தமிழ் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என பாரதியாரைச் சொல்லலாம். நவீனக் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய வடிவங்களை முன்மாதிரியாகத் தமிழில் உருவாக்கிக் காட்டியவர் அவர்தான். பாரதியின் கவிதைகளில் கைக்கொண்டுள்ள சொற்பிரயோகம், பொருள் ஆகியவை இன்றைக்கும் வசீகரிக்கக்கூடியவை. பாரதியின் இந்த அம்சங்களுக்கு முன்னுதாரணம் எனக் கவிஞர் செங்கோட்டை ஆவுடையக்காளைச் சொல்லலாம்.
  • பக்தி மரபில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், அக்கமகாதேவி என்கிற வரிசையில் வைத்துப் பார்க்கப்படுபவர் ஆவுடையக்காள். ஆனால், இவரது கவிதைகளில் உள்ள நவீனத்துவமும் நாட்டார் பண்பும் இவரது கவிதைகளை அந்த எல்லைகளையும் தாண்டி விசேஷம் மிக்கதாக்குகின்றன. இந்தக் கவிதைகளைப் பக்தி என்னும் ஒற்றைப் பொருளின் கீழ் அடக்கிவிட முடியாது. வாழ்க்கையின் பொய்களை, பெண்களுக்கான சமூக விழுமியங்களை, பகட்டை இந்தக் கவிதைகள் விமர்சிக்கின்றன. அதேபோல் வேதாந்தப் பொருளையும் சொல்கின்றன. இதைச் சொல்வதற்கு ஆவுடையக்காள் இயல்பான மொழியைக் கைக்கொண்டுள்ளார். சந்த மரபில் இயல்பான மொழி என்கிற அம்சத்தில் ஒருவகையில் சித்தர் பாடல்களின் மொழியுடன் ஒப்பிடத்தகுந்தது இவரது கவி மொழி.
  • ஊத்துக்காட்டார், அண்ணமலையார் ஆகியோர் பாரதியின் படைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என பாரதியை ஆழ்ந்து வாசிக்கும்போது நம்மால் மதிப்பிட முடியும். இந்த இருவரையும்விட ஆவுடையக்காள்தான் ஒருபடி அதிகம் பாரதியைப் பாதித்தவர் எனத் திடமாகச் சொல்ல முடியும். பாரதி தன் கவிதைகளில் அதிகம் பயன்படுத்தும் வழக்குச் சொற்களை ஆவுடையக்காளிடம் பார்க்க முடிகிறது. ‘வேதாந்த ஆச்சே போச்சே’ என்கிற ஆவுடையக்காளின் பிரயோகத்தை, ‘வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே’ என்கிற பாரதியின் பிரயோகத்துடன் ஒப்பிடலாம். ‘மானிடா’ என்கிற சொல்லை ஆவுடையக்காளின் கவிதைகளிலும் பார்க்க முடிகிறது. கண்ணனைச் சுட்டி ‘டா’ என்று எழுதப்பட்ட கவிதைகளிலும் பாரதியின் அம்சத்தைப் பார்க்க முடிகிறது.
  • ஞானம் அடைய முயலும் மனத்தின் விநோத சஞ்சாரங்களையும் இந்தக் கவிதைகள் சித்தரிக்கின்றன. ‘மனமென்னும் ஓர் தாய்க் கிழவியவள்/நெஞ்சில் சற்றும் இரக்கமில்லாள்/இச்சைபடி நடந்திடுவாள்/இரும் இருமென்று தடுத்திடுவாள்’ என ஒரு கவிதையில் சொல்கிறார். சயன அறைக்கு அனுப்பப்படும் பெண்ணைப் பற்றிய இன்னொரு கவிதை, எழுதப்பட்டு இரண்டு மூன்று நூற்றாண்டுகளான பிறகும் நவீனத்துவத்துடன் இருக்கிறது. ‘வித்தை சோபனம்’ என்னும் தலைப்பிலான இந்தக் கவிதையில் ஒரு கதை சொல்லும் தொனியைக் கையாண்டுள்ளார். எல்லாரும் கூடி வித்தையைக் காணப்போகும் பெண்ணை போஜனம் அளித்து அனுப்பிவைக்கின்றனர். ‘என்ன செய்வாய் பெண்ணே உன்னைப் பரன்கூடி/இந்த இரவு விடுவதில்லை’ என இந்த நீள்கவிதையில் ஒரு வரி வருகிறது. ஆண்-பெண் இருவருக்குமான தாம்பத்ய உறவைச் சொல்லும் உருவகத்தில் இந்தக் கதை உண்மையில் உரைப்பது மெய்யான தேடலைத்தான். இது விநோதமான ஒப்பீடு. பற்றற்ற நிலையின் தேடலைப் பற்றுடனான உறவைப் படிமமாகக் கொண்டு சொல்லியிருக்கிறார்.

சோற்றுத் துருத்தியைச் சுமந்து சோகமேன்படுகிறாய்

சும்மா சும்மா சோகமேன்படுகிறாய் (பல்லவி)

ஆத்மவடிவு நீயல்லவோ அண்டமெல்லாம் அறிவாக நிற்கும்

அகண்ட பரிபூர்ணனான – நானறிவேனிந்த (பல்லவி)

நாற்றமலத்தினால் சேர்த்த பாண்டமிது ஆத்மாவாகுமோ

புழுநெளியும் உளுத்த சடலத்தைத் தேர்த்தினாலாகுமோ

காற்றுத்துருத்தியை மாத்த கூற்றுவன் காத்திருக்கானிதோ

வேற்றுமையாகவே பார்த்துக்கொண்டால் நல்ல சேத்திரமாகுவாய்

  • மோட்சம் அடைவதைப் பற்றிப் பல கவிதைகள் பேசுகின்றன. அதனுடன் தொடர்புடையவை வாழ்க்கையின் அபத்தங்கள். அதைப் பொய் என்று சொல்கிறார் ஆவுடையக்காள். ‘மெய், பொய் விளக்கம்’ கவிதையில் மெய் எது, பொய் எது எனச் சொல்லிச் செல்கிறார். ‘மனமும் பொய்யடியோ, குயிலே - மனக்கூடும் பொய்யடியோ/இனமும் பொய்யடியோ, குயிலே - தனமும் பொய்யடியோ’ எனக் குயில் கண்ணியில் எழுதுகிறார். இந்தச் சொல்லும் பொருளும் கவித்திறன் கொண்ட வரிகள். ‘நிற்பதுவே நடப்பதுவே’ எனத் தொடங்கும் பாரதியின் ‘உலகத்தை நோக்கி வினவுதல்’ கவிதையின் சில வரிகளில் இந்தச் சாயலைக் காண முடியும். ‘புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே/பெருமை சிறுமை பொய்யே’ என இதற்கும் ஒரு படி மேலே செல்கிறார் ஆவுடையக்காள்.
  • ஞானத்தைக் கப்பல் என உருவகப்படுத்துகிறார். அந்தக் கப்பல் கவிதைகளில் மிதந்துவந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கப்பலுக்குத் தடையாகிற வாழ்க்கையின் அம்சங்களையும் சொல்லிக்கொண்டே கப்பலைக் கவிதைக்குள் கடத்திச் செல்கிறார் ஆவுடையக்காள். இதுபோல் மறைபொருளாகப் பல கவிதைகள் தொழிற்பட்டாலும் சில கவிதைகள் பகல் வெயிலைப் போல் நேருக்கு நேர் பந்தம் உயர்த்துகின்றன. கோலாட்டப் பாட்டில் ஒரு வரி, ‘நத்தையாய் புழுவாய் நண்டாய் நரியாய் பரியாய் வண்டாய்/எத்தனை ஜென்மமோ கொண்டாய்/என்னத்தைக் கண்டாய்?’ எனக் கேட்கிறது.
  • ஆவுடையக்காள், செங்கோட்டையைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலகட்டம் 17, 18ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. வேதாந்தத்தை உட்பொருளாகக் கொண்டு கவிதைகள் எழுதியவர். இவரது கவிதைகள், ’செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு’ என்கிற பெயரில் வெளிவந்துள்ளது.
  • பெண் என்கிற நிலையிலும் ஆவுடையக்காள், கவிதைகளைத் திராணியுடன் இயற்றியுள்ளார். மாதவிடாயால் பெண்கள் விலக்கி வைக்கப்படும் சமூக விழுமியத்தைச் சொல்கிறது ஒரு கவிதை: ‘தீட்டென்று சொல்லி சில தூரம்போய் நிற்கும் மாயையாட்டி வைக்கும் சூத்திரத்தை அறியார்/தீட்டு திரண்டுருண்டு சிலைபோலே பெண்ணாகி வீட்டிலிருக்க தீட்டோடிப் போச்சோ’. இன்னொரு கவிதையிலும் தீட்டு பற்றிக் குறிப்பிடுகிறார். பராபரக் கண்ணியில் எச்சில் தீட்டு பற்றியும் கடுமையாகச் சொல்கிறார். ‘எச்சிலெச்சிலென்று புலம்புகிறாய் மானிடர்களே எச்சிலில்லாத இடமில்லை/சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ என்றைக்கும் உண்ணும் தாய்முலை எச்சிலன்றோ/மச்சமெச்சில் நீரில்வந்து முழுகும் மறையோர்கள் எச்சில் பச்சைக்கிளி கோதும் பழம் எச்சிலன்றோ/தேரை எச்சில் தேங்காய்ச் சிறுபூனை எச்சில் தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன்/நாதமெச்சில் பிந்துவெச்சில் நால்மறையோர் வேதமெச்சில் மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ’ என அங்கு சென்று கவிதையை முடித்துவைக்கிறார். இறைவனைப் போற்றும் இன்னொரு கவிதையில் அவர், ‘சண்ட மாருதங்கள் போலே பிரசண்ட மதவாதிகளை/வென்று ஜயம் பெற்று ஒரு தண்டிகை மேலேறிவரார்’ என்கிறார். மதவாதிகள் என்கிற பிரயோகம் ஆவுடையக்காளின் காலத்துடன் பொருத்திப் பார்க்கும்போது முக்கியமானதாகிறது.
  • ஆவுடையக்காளின் கவிதைகளில் உச்சாடனம் செய்யத் தூண்டும் சொல் நயம் வாசிப்பவரை ஈர்க்கக்கூடியது. அவர் கவிதைகளில் பயன்படுத்தும் ஓசை மிக்க இந்தப் பிரயோகம் கவிதைகளில் இருந்து வரிகளைத் தனியாக உருவி எடுத்தாலும் அவற்றில், வாளைப் போல் கூர்மையோடு ஒளிர்கின்றன. அதுபோல் மக்களின் புழங்குமொழியையும் உவமை களையும் ஆவுடையக்காள் தன் கவிதைகளில் மொழியாகத் தொழிற்படுத்தியுள்ளார். இதுதான் நூற்றாண்டுகள் கடந்த பிறகும் அவரது கவிதைகள் வாசகருக்கு நெருக்கமாக இருப்பதற்கான விசேஷமான காரணம் எனலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்