TNPSC Thervupettagam

பாரதியா, பாரதிதாசனா?

October 20 , 2024 89 days 140 0

பாரதியா, பாரதிதாசனா?

  • க​வித்து​வத்தில் பாரதி​யைவிட, பாரதி​தாசன் ஒருபடி கீழ் அல்லது மேல் என்பவர்​களின் அரசியலை ஆராய வேண்டிய​தில்லை. பொதுவாக, இலக்கி​யத்தில் அவ்வப்போது முன்வைக்​கப்​படும் இம்மா​திரியான அபிப்​ரா​யங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும். என் கவனமெல்​லாம், காலம் ஒருவரைக் கவனப்​படுத்து​கிறதா இல்லையா என்பது​தான். அந்த வகையில் பாரதி​தாசனின் இடமும் இருப்பும் தவிர்க்க முடியாதவை.
  • பார​திக்குப் பிறகு ந.பிச்​சமூர்த்தியே ஆகப்பெரும் கவிஞரென ஒருசிலர் கூறுவதுண்டு. என்றாலும், பாரதி​தாசனின் பங்களிப்பை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். இதிலுள்ள பிரச்சினை என்னவென்​றால், ஒரு சாரார் அவருடைய எழுத்துகளை வாசிக்​காமலேயே கருத்துக் கொப்பறை​களைக் கவிழ்ப்​பது​தாம். அவருடைய பல கவிதைகள் என்னை ஊக்கப்​படுத்​தி​யிருக்​கின்றன. ‘குடும்ப விளக்கு’ நூலில், ‘தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த/கலப்பென இருள் தன் கட்டுக் குலைந்தது’ என்றொரு உவமை வரும்.
  • இருள் விலகும் அதிகாலைப் பொழுதிற்கு அவர் கற்பனை செய்துள்ள அழகிய உவமை அது. வைகறைச் சூரியனை பாரதி, ‘ஞாயிறே, நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது? நீ அதனை உமிழ்​கின்​றாயா? அது நின்னைத் தின்னுகிறதா?’ என்று கேட்டிருக்​கிறார். அதன் தொடர்ச்​சி​யாகவே பாரதி​தாசன் விடியற்​பொழுதை வேறு மாதிரி பார்த்திருக்​கிறார். அதே கவிதையில் ‘கேள்​வியால் அகலும் மடமைபோல்​/நள்​ளிரவு மெதுவாய் நகர்ந்​து​கொண்​டிருந்தது’ என்றும் யோசித்திருக்​கிறார். எவர் ஒருவர் கேள்வியை முன்வைக்​கிறாரோ அவரால் மட்டுமே மடமை இருட்​டிலிருந்து வெளியேற முடியும். கேள்வியே இல்லாமல் ஒன்றை ஏற்பதும் மறுப்​பதும் இருப்​பிற்கோ இலக்கி​யத்​திற்கோ உதவுவ​தில்லை. அவரே இன்னொரு இடத்தில் ‘காக்கைக் கழுத்​துபோல் வல்லிருளும் கட்டவிழும்’ என்றிருக்​கிறார். இரவைக் காக்கையின் கழுத்து நிறத்​துடன் ஒப்பிட்டு, அது கட்டவிழும் காட்சியை வர்ணித்​திருக்​கிறார். ‘சொல் ஒரு சூது, அது இருபுறமும் ஓடும் காக்கையின் கண்’ என்ற ந.பிச்​சமூர்த்தியின் சொற்களையும் இத்துடன் இணைத்துப் பார்க்​கலாம்.
  • திரும்பிய பக்கமெங்கும் இந்திய விடுதலை நெருப்பு கொழுந்​து​விட்​டெரிந்​தா​லும், பாரதியும் பாரதி​தாசனும் சமூகநீ​திக்கே முதன்மை இடத்தைத் தந்திருக்​கிறார்கள். பாரதி​தாசனே தம்முடைய சொற்பொழி​வொன்றில் அது குறித்து விரிவாகப் பேசியிருக்​கிறார். சமகாலத்தில் தன்னை ஈர்த்​தவர்​களில் பாரதியே தகுதி​யானவர் என்று சொல்ல அவர் ஒருபோதும் தயங்கிய​தில்லை. ஏழாம் வகுப்பு படிக்​கின்​றபோது என்னுடைய தமிழாசிரியர், பாரதி​தாசன் பாடலொன்றை மனப்பாடம் செய்து, மேடையில் ஒப்பிக்​கும்படி கேட்டுக்​கொண்​டார். ‘நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா’ என்றும் ‘காடு கமழும் கற்பூரச் சொற்கோ’ என்றும் அப்போது மனனம் செய்த வரிகள் நினைவிலேயே இருக்​கின்றன. தமிழால் பாரதி தகுதி பெற்றது ஒருபுறம் இருக்க, தமிழும் பாரதியால் தகுதி பெற்றிருக்​கிறது. எந்த ஒரு மொழியும் செல்வாக்​குமிக்க பேச்சாளர்​களாலும் படைப்​பாளி​களாலும் மட்டுமே நின்று நிலைக்​கிறது.
  • இந்த இடத்தில் பாரதி​தாசனின் ‘தாழ்த்​தப்​பட்டார் சமத்துவப் பாட்டு’ நூல் குறித்துச் சில செய்தி​களைச் சொல்ல வேண்டும். 1929இல் வெளிவந்த அந்நூல் ம.நோயேல் என்பவரால் வெளியிடப்​பட்​டிருக்​கிறது. பாடலில், ‘வீரம் நம் உற்றாரடி’ என்னும் பதம், 1916இல் வெளிவந்த அம்பேத்​கரின் ‘சாதி​யினுடைய தோற்றமும் வளர்ச்​சியும் அது இயங்குகிற முறையும்’ என்கிற புத்தகத்தின் தாக்கத்தில் இருந்து பிறந்​திருக்​கலாம் என ஊகிக்​கலாம். அதேவேளை, ஆங்கிலேய அரசால் தடைசெய்​யப்பட்ட ஒரு நூலின் தாக்கத்தைப் பாரதி​தாசன் எங்கிருந்து பெற்றிருக்க முடியும் என்கிற கேள்வியும் எழக்கூடும். இந்தியாவில் தடைசெய்​யப்பட்ட நூல், ஏனைய நாடுகளில் வாசிக்​கப்​பட்​டிருக்​கிறது. ஆகவே, அந்த வகையில் அந்நூல் பிரஞ்சு ஆளுகைக்கு உட்பட்​டிருந்த புதுச்​சேரியில் கிடைத்​திருக்​கிறது.
  • பாரதி​தாசனின் சமத்துவப் பாட்டை வாசிக்கையில் அம்பேத்​கரின் அறிதல் முறைகள், அப்படியே வரிசைக்​கிரமமாக வந்திருப்பதை உணரலாம். சாதியத்தை வேரறுப்​பதில் பாரதி​தாசனுக்கு இருந்த ஆர்வமும் ஆவேசமும் கொஞ்சநஞ்​சமல்ல. தாழ்த்​தப்​பட்டார் சமத்துவப் பாட்டை ம.நோயேல் பதிப்​பித்​திருக்​கிறார். அவரே புதுச்​சேரியில் தலித் அரசியலை 30-களிலேயே முன்னெடுத்​தவர். இன்று தலித்​தியம் பேசும் பலரும் ஏனோ அவர் பெயரை விட்டு​விடு​கிறார்கள். குருசாமியை ஆசிரியராகக் கொண்டு அவர் நடத்திய ‘புதுவை முரசு’ பத்திரி​கையில் பாரதி​தாசன் தொடர்ச்​சியாக எழுதிவந்​திருக்​கிறார். அதில், ‘எம்டன் கப்பல் வரவு’ என்றொரு கட்டுரை. முதலாம் உலகப் போரில் எல்லோரையும் அச்சுறுத்திய எம்டன் கப்பலைப் பற்றிய கட்டுரை என்றுதான் நானும் முதலில் வாசிக்கத் தொடங்​கினேன். ஆனால், கட்டுரையோ கப்பலையும் தாண்டி எங்கேயோ போய் நிற்கிறது.
  • எம்டன் கப்பல் புதுவைக்கு வந்திருக்​கிறது என்கிற செய்தி பரவியதும், உள்ளூர்​வாசிகள் அத்தனை பேரும் பயந்து​கொண்டு உயிர் பிழைக்கப் பத்துப் பதினைந்து மைல் ஓடியிருக்​கிறார்கள். அங்கும் இங்குமாக ஓடியவர்​களில் சிலர், பாரதி​தாசன் ஆசிரியராகப் பணியாற்றிய கூனிச்​சம்​பட்டு கிராமத்​திற்கும் வந்திருக்​கிறார்கள். வந்தவர்கள் சாதி வித்தி​யாசமின்றிப் பழகியிருக்​கிறார்கள். உயிரச்​சத்தில் சாதியோ சடங்கோ சம்பிர​தாயமோ அவர்களுக்கு ஒரு பொருட்​டாகத் தோன்ற​வில்லை. ஒன்றாகச் சமைத்து, ஒன்றாகவே உணவு உண்டு, ஒன்றாகவே உறங்கியும் இருக்​கிறார்கள். கப்பல் போய்விடு​கிறது.
  • அந்த அளவுகோலுக்கு உதாரணமாக, ‘கோடையிலே இளைப்​பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே’ என்னும் வள்ளலாரின் வரிகளை பாரதி​தாசன் காட்டி​யிருக்​கிறார். ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே’ என்கிற கவிதையையே எடுத்​துக்​கொள்​வோம். அது, அவர் எழுதிய ‘புரட்​சிக்கவி’ என்னும் காப்பி​யத்தில் வரக்கூடியது. வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்​கணீயம்’ நூலை அடிப்​படையாக வைத்து எழுதியது. அதிலே ஒரு வரி, ‘காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் /கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்​பிழம்போ’ என்றும் எழுதி​யிருப்​பார். அதிகாலையைத் தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பாகப் பார்த்த அவர்தான், ‘குளிர் அடைந்த ஒளிப் பிழம்​பை’யும் யோசித்திருக்​கிறார். பாரதி​தாசன் மேலும் மேலும் வாசிக்​கப்பட வேண்டும் என்பதே என் அவா. ‘பெருங்​சிங்கம் அறைந்த யானைபோல் வெள்ளம்’ என்றொரு சொற்றொடரை அவருடைய ‘ஆறு’ கவிதையில் காணலாம். ‘அழகின் சிரிப்பு’ நூலில் இடம்பெற்றுள்ளது.
  • ஒருமுறை பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் பாரதி​தாசனின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் துணிந்​திருக்​கிறார். ‘குடும்ப விளக்கு’ நூலைப் பெயர்த்து​கொண்டே வந்தவர், ஓரிடத்தில் மேற்கொண்டு நகர முடியாமல் நின்று​விடு​கிறார். ‘கட்டில் அழகு’ என்னும் தலைப்​பிலுள்ள அக்கவிதை, ‘சரக்​கொன்றைத் தொங்கலிட்ட பந்தலின் கீழ் / தனிச் சிங்கக் கால் நான்கு தாங்கும் கட்டில்’ எனத் தொடங்​குவது. இதை எப்படி மொழிபெயர்ப்பது என்று பன்மொழிப் புலவர் அப்பாதுரை​யாருக்குப் புரிய​வில்லை. சரக்கொன்றை என்பது தமிழ் நிலத்தில் அதுவும் முல்லைத் திணையில் பூக்கும் பூ. அந்தச் சொல்லை அப்படியே பயன்படுத்​தினால் அத்திணையின் பண்பையும் சேர்த்தே எழுத வேண்டும். அத்துடன், கொன்றை சரஞ்சர​மாகப் பூப்பது என்பதை​யும், அது படுக்கையறைக் கட்டிலில் மலர்ப் பந்தலாகப் போடப் பயன்படுவது எனவும் சொல்ல வேண்டும்.
  • அதைவிட, ‘தனிச் சிங்கக் கால் நான்கு தாங்கும் கட்டில்’ என்பது இன்னும் சிக்கலுக்​குரிய விவரணை. கட்டில் மெத்தைகளை எல்லாம் அலங்கரித்து வைத்து​விட்டுக் கணவனின் வருகைக்காக அவள் காத்திருக்​கிறாள் என்பதுதான் பாடலின் சாராம்சம். ஆனால், அதை அவர் சரக்கொன்​றையி​லிருந்து தொடங்​கு​வதால் சட்டென்று பெயர்க்க இயலாமல் போயிருக்​கிறது. இந்தத் தனித்து​வத்தையே தமிழின் அழகாக நான் கருதுகிறேன். தத்துவம் என்பது பொதுமை​யிலும், தனித்துவம் என்பது புதுமையில் மிளிர வேண்டும். எந்த வார்த்​தையைப் போட்டாலும் அது தமிழ்க் கவிதை என்று ஆகிவிடாது. தமிழுக்​கென்றே சில விசேஷத்​தன்​மைகள் கட்டமைந்​துள்ளன. பாரதி​யைவிட, பாரதி​தாசன் ஒருபடி கீழ் அல்லது மேல் என்று விவாதிப்பதை விட்டு​விட்டு, எவரையும் எல்லா​வற்​றையும் சமமாகப் பாவிப்பதே சரியென்று எனக்குத் தோன்றுகிறது. அவரே ஒருமுறை கேட்டிருக்​கிறார், காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்