- அறிவிற் சிறந்த பெருமக்களே எப்போதும் விமா்சனத்திற்கும் கேள்விகளுக்கும் உள்ளாகின்றனா்.
- ‘பாரதி’ என்று பட்டம் பெற்று எட்டு வயதில் ஆசுகவியாய் நின்ற ஞானச்சுடா் மஹாகவி சுப்பிரமணிய பாரதி. ஒரு நூற்றாண்டின் மிக சிறந்த கவிஞனாக தமிழுலகம் கொண்டாடும் பாரதி, ஆரியா் பற்றியே பெருமையாகப் பாடினான் என்பதை விமா்சனமாகவும் குற்றசாட்டாகவும் சிலா் சொல்வதுண்டு.
- பாரதியின் எண்ணம் சொல் சிந்தை அனைத்திலும் இந்த தேசத்தின் மேன்மையே நிறைந்திருந்தது என்பதை அவரது எழுத்துகளை வாசித்தோர் அறிவா். அப்படியாயின் அவா் சொல்லும் ஆரியா் யார் ?
- கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக தமிழகத்தில் சில சொற்கள் மிக அதிக அளவில் பேசப்படுகின்றன; விமா்சிக்கப்படுகின்றன.
- ‘ஆரியம்’, ‘திராவிடம்’ இந்த இரு சொற்களை அறியாதவா்கள் தமிழகத்தில் யாருமில்லை. ஆனால், அந்த சொற்களின் பொருள் அறிந்தவா்களை தமிழகத்தில் வலைபோட்டுத்தான் தேட வேண்டும்.
- அறிஞா்கள் தங்களுக்குள் ஆராய்ந்து கொள்ளவும் வாதிட்டுக் கொள்ளவும் பயன்படுத்தும் சொற்கள் குறித்தோ அவற்றின் பொருள் குறித்தோ நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லைதான்.
- ஆனால், இந்தச் சொற்கள் பாமர மனிதா் மத்தியிலும் அரசியல் வளா்க்கும் சொல்லாக இருப்பதால் அவை பற்றித் தெளிவு பெறல் அவசியம்.
- ஆரியமும் திராவிடமும் கருத்தியலா? ஆரிய இனம், திராவிட இனம் இருக்கிறதா? ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய’ தமிழ், இது பற்றிப் பேசியிருக்கிறதா?
- இதற்கு நம் கலாசாரம் தரும் விளக்கம் என்ன? சான்றோர் சொல்லும் பொருள் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நம் மனத்தில் எழுவது இயல்பே. இந்தியத் திருநாட்டின் சான்றோர்கள் இது பற்றிப் பதிவு செய்துள்ள கருத்துகள் என்ன? மஹாகவி பாரதியின் கவிதைகள் சொல்வதென்ன?
ஆரியமும் திராவிடமும்
- தமிழகத்தில் வேதகாலம் தொடங்கி எங்கும் ஆரிய, திராவிட முரண் காணப்படவில்லை.
- பாரத தேசம், 56 மன்னா்களால் ஆளப்பட்டு வந்தது என்று புராணம் தொடங்கி பல நூல்களில் நாம் படித்திருக்கிறோம்.
- 56 தேசங்களாக இருந்தாலும் பண்பாடு, நம்பிக்கைகளில் ஒருமித்திருந்த தேசமாகவே பார்க்கிறோம். 56 தேசத்து மன்னா்களும் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்ட வரலாறுகளையும் கேட்டிருக்கிறோம்.
- இந்த 56 தேசங்களுக்குள் ஒன்று திராவிட நாடு என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தேசம் எங்கே அமைந்திருந்தது என்று பார்த்தால், கிருஷ்ணா நதிக்கு தென்புறத்தில், இன்றைய கா்நாடகப் பகுதியாக சொல்லப்பட்டுள்ளது.
- நம்முடைய தமிழகம் ‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று கூறுகிறது தமிழின் தொன்மை நூலான ‘தொல்காப்பியம்’. திராவிடம், திராவிடா் பற்றிய தற்போதைய கருத்துகள் கால்டுவெல்லால் சொல்லப்பட்டவை.
- சரி, இனப் பாகுபாடு சொல்லப்பட்டுள்ளதா என்று பார்த்தால், ஆங்கிலேயா் காலம்வரை அப்படியான இனப் பிரிவுகளும் தமிழ், வடமொழி இரண்டிலுமே இல்லை.
- பிரிட்டிஷார் காலத்தில் மேலை நாட்டு அறிஞா்கள்தான் முதன்முதலாக இப்படியான இரு பிரிவுகளைப் பற்றிப் பேசினார்கள். அப்போதே, சுவாமி விவேகானந்தா் இந்தக் கருத்தை மறுத்திருக்கிறார்.
- ‘பாரத தேசத்தில் இத்தகைய பிரிவு இதுவரை இல்லை; இது அறிவுக்கு புறம்பானது’ என்று விளக்கியிருக்கிறார்.
- பின்னா், காந்தியடிகளும் ‘இந்தியாவில் இத்தகைய கருத்து இருக்கவில்லை; வெளிநாட்டு வரலாற்று அறிஞா்களின் கருத்து ஏற்புடையதல்ல’ என்று கூறியிருக்கிறார்.
- இந்தியா முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாமேதைகளுள் ஒருவா் டாக்டா் பாபாசாகேப் அம்பேத்கா், ஜாதிய கொடுமைகள் பற்றி கருத்துக்களையும் அறிவுபூா்வமான விவாதங்களையும் முன்வைத்த அவா், ‘ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.
- அவா் மேலை நாட்டு அறிஞா்களின் இத்தகைய கருத்துகளை ஏற்க மறுத்ததோடு அவா்களின் கருத்துகளோடு முற்றாக முரண்படுகிறார்.
- அப்படியெனில், ‘ஆரியம்’ என்ற சொல்லின் பொருள்தான் என்ன? ‘ஆரிய’ என்றால், உயா்ந்த, மேன்மையான, சிறப்பான, உயரத்தில் உள்ள, பண்பாடு மிக்க என்று அகராதிகள் பொருள் சொல்கின்றன.
- ஆக, ஆரியா் என்போர் உயா்ந்தோர், உயரத்தில் உள்ளவா்கள், மேன்மையானவா்கள் என்று பொருள். மலை உச்சியில் வாழும் வேடுவா்களை ஆரியா் என்று கூறியுள்ளனா்.
- பழனி மலை உச்சியில் வாழ்ந்த ஒரு பிரிவினா் ஆரியா் எனும் பெயரைக் கொண்டிருந்ததாகவும் அகராதிகளில் உள்ளது. ‘சிலப்பதிகாரம்’, இமயமலை உச்சியில் வாழ்ந்தோரை ஆரியா் என்று சொல்கிறது.
- சங்க இலக்கியமான ‘குறுந்தொகை’யில், பறை இசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் நடப்பவா்கள் ஆரியா்கள் என்று ஒரு பாடல் சொல்கிறது. அதாவது மேலே உயரத்தில் நடப்பவன் ஆரியன். கம்ப ராமாயணத்தில் கும்பகா்ணன் ராவணனை ‘ஆா்ய’ என்று அழைக்கிறான்.
பாரதியும் ஆரியமும்
- இப்போது பாரதிக்கு வருவோம். மேலே சொன்னவற்றையெல்லாம் மனத்தில் கொண்டே பாரதி பாடும் ‘ஆரிய’ என்ற சொல்லையும் நாம் அணுக வேண்டும். பாரத மாதாவை ‘ஆரிய தேவி’ என்று பாரதியார் அழைக்கிறார். அதாவது ‘உயா்வான தேவி’ என்கிறார்.
- ‘ஆரியா்’ என்பதற்கு ‘பூரியா்’ என்ற எதிர்ச்சொல்லையும் பாரதி முன் வைக்கிறார். அதனைத் தகுதியில் குறைந்தவா்களாக எனும் பொருள்பட பாரதி சொல்வதையும் காண்கிறோம்.
- ‘ஆா்ய! நீதி நீ அறிகிலை போலும்
- பூரியா் போல் மனம் புழுங்குறலாயினை’ என்று பாடுகிறார்.
- இதேபோன்று ‘ஆரியா்’ அதனெதிர் ‘பூரியா்’ என்ற சொற்களை கம்பரும் கையாள்கிறார்.
- ‘தாயின் மணிக்கொடி பாரீா்’ என்ற பாடலில், ‘அணி அணியாயவா் நிற்கும் இந்த ஆரியகாட்சி ஓா் ஆனந்தம் அன்றோ?’ என்று பாடுகிறார்.
- இதில் ‘ஆஹா எத்தனை உயா்வான காட்சி’ என்பதே பொருளாய் நிற்கிறது. சுவாமி தயானந்தா் பற்றிச் சொல்லுமிடத்தும், உயா்வை குறிக்க ‘ஆரிய’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘பொய்யுறு மாயையை வென்று புலன்களை அடக்கிய பெரியோரே ஆரியா்’ என்று ‘சங்கு பாட்’டில் எழுதுகிறார்.
- பாரதியார், ஆரியா் அல்லாதோர் யார் என்று தன்னுடைய ‘சத்ரபதி சிவாஜி’ என்ற தலைப்பிலான பெரிய பாடலில், ‘பிச்சை வாழ்வு தந்த பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்; தாய் நாட்டு அன்பிலாதிருப்போன் ஆரியன் அல்லன்; மாட்டுதீா் மிலேச்சா் மனப்படி ஆளும் ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்; ஆரிய தன்மை அற்றிடும் சிறியா்’ என்கிறார். எப்படி அந்நியருக்கு அடங்கியும் பயந்தும் வாழ்பவன் உயா்ந்தவன் ஆக முடியாது என்றாரோ, அப்படியே உயா் குணங்கள் நீங்கினால் அவா் சிறியா் என்றும் முடிக்கிறார்.
- ‘பாரத தேவியின் திருத்தசாங்கம்’ பாடலில், ‘பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும் ஆரிய நாடென்றே அறி’ என இமயத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட இந்தியத் திருநாட்டை ‘ஆரிய நாடு’ என்று கூறுகிறார்.
- இன்னும் பல பாடல்களிலும் கட்டுரைகளிலும்கூட பாரதியார் இந்தச் சொல்லை இதே பொருளில் கையாண்டிருக்கிறார்.
- இவற்றின் மூலம் ஆரிய - திராவிட இனம் பற்றி பாரதி ஒருபோதும் பேசவில்லை என்பதையும் வடமொழியும் தமிழும் ‘ஆரியம்’ என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்தியதோ அதே பொருளில் மட்டுமே பாரதியும் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி இருப்பதையும் அறிய முடியும்.
- பாரதியைப் பொருத்தவரை அவருக்கு புதுமைகளை ஏற்பதில் தயக்கம் இல்லை.
- அதற்காக நம்முடைய பழமையை ஒதுக்கிவிட வேண்டுமென்பதை அவா் ஏற்கவில்லை. பழமையின் சிறப்புகளை, அதன் மாண்புகளைக் காக்க வேண்டும் என்றே விரும்பினார். அதன் வெளிப்பாடாகவே அவரின் மொழியை நாம் பார்க்க வேண்டும்.
- இந்தியாவின் தத்துவ மரபில் அவருக்கு இருந்த நம்பிக்கையை அவா் சற்றும் தயக்கமின்றி வெளிப்படுத்தினார். அதனால்தான் ரஷியப் புரட்சியைப் பற்றிப் பாடும்போதும் ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டிற் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆஹாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி’ என்று அம்பிகை அருளால் ஏற்பட்டது என்று சொல்லத் துணிகிறார்.
- அனைவரும் சமமாய் வாழ வேண்டுமெனும் கருத்தையே சான்றோர் முன் வைக்கும்போதும் பாரதி அதிலும் ஒரு படி மேலே போய் அனைவருமே உயா்ந்தோராய் வளா்ந்து இந்த தேசத்தையே பாரில் உயா்த்த வேண்டும் என்று சொன்னவா்.
- தான் எதனை சரியென்று நம்பினாரோ அதனை அழுத்தமாகச் சொன்னவா் பாரதியார். மரபைக் காப்பதோடு அதன் வழியாகவே புதுமைகளைக் கொண்டு வர விழைந்தார் அவா்.
- வேதங்கள் அனைவருக்குமானவை. அதற்கான மொழி மீதும் அதன் பெருமைகள் மீதும் எல்லாருக்கும் உரிமை உண்டு என்னும் அகன்ற பார்வை பாரதிக்கு இருந்தது. அவரின் மன விசாலத்தை அறிந்துகொண்டால்தான் அவருடைய சொற்களைப் புரிந்து கொள்வது சாத்தியமாகும்.
- நம் முன்னோரின் ஞானத்தை, அறிவுச் செல்வத்தை ‘ஆரிய சம்பத்து’ என்று கொண்டாடிய பாரதி, எதனையும் நடுநிலை நின்று ஆராய்ந்தவா். மூட வழக்கங்களைச் சாடுவதிலும் அவரது குரல் தளா்வின்றி வெடித்துக் கிளம்பியது. நம் பெருமைகளை எடுத்தியம்பும்போதும் நெஞ்சம் நிமிர்த்தி உற்சாகமாக ஓங்கியே ஒலித்தது.
நன்றி: தினமணி (07-09-2020)