- தெற்குலக நாடுகளின் குரலாக உருவெடுக்கும் ஆற்றலுடன் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா தில்லியில் நடத்தி முடித்திருக்கிறது. ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று பெயரிடப்பட்ட ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஜனநாயகத்தின் பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது’ என பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2021- ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் உரையாற்றினார். பன்னாடுகளுக்கு முன்பு பிரதமா் ஆற்றிய உரைக்கான வரலாற்றுச் சான்றுகள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில் இந்தியாவில் நீண்ட ஜனநாயகத்தைப் பிரதிபலித்தது.
- மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ‘பாரத் - ஜனநாயகத்தின் தாய்’ என்ற கண்காட்சி,
- வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தைக் கொண்ட இந்த தேசம் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றுடன் ‘வலுவான ஜனநாயகத்தின் மூலமே’ இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இதை பார்வையிட்டோம்.
- இந்தியா ஒரு ‘ஜனநாயக நாடு’ என்பதை பள்ளிகளில் இருந்தே அறியத் தொடங்கும் நாம், அந்தக் கூற்றின் 8,000 ஆண்டு கால வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியது அா்த்தமாகும். கி.மு. 6,000 முதல் 2,000 வரை இந்த தேசத்தில் செழித்தோங்கிய சிந்து - சரஸ்வதி நாகரீகம் வேதகாலம் தொடங்கியது. கி.மு. 3 முதல் 8 -ஆம் நூற்றாண்டுகளிலேயே உள்ளூா் சுய நிா்வாகம் இருந்ததற்கான சான்றுகளைக் கொண்ட கலிம்பூா் செப்புத்தகடு கல்வெட்டுகள் இருந்தன. கி.பி. 12 முதல் 17 நூற்றாண்டு வரையிலான விஜயநகரப் பேரரசு, சத்திரபதி சிவாஜி, அக்பா் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் இருந்த குடிமக்களின் பங்களிப்பு ஆகிய பண்டை ஜனநாயகத்தையும் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மக்களாட்சியின் தோ்தல் முறை வரையிலான இந்தியாவின் ஜனநாயகத்தை இந்த ஜி20 தலைவா்கள் காண மண்டபத்தில் வைக்கப்பட்டது.
- இந்தியாவில் ஜனநாயகம் என்பது நல்லிணக்கம், தோ்வு செய்யும் சுதந்திரம், ஏற்றுக்கொள்ளும் தன்மை, சமத்துவம் மற்றும் மக்கள் நலனுக்கான நிர்வாகம் உள்ளிட்ட பல மதிப்புகளை உள்ளடக்கியது. இவை அனைத்துமே இந்த நாட்டு குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்கிறது என்று கூறும் இந்தக் கண்காட்சியில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து - சரஸ்வதி நாகரீகத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சிலை, ஆபரணங்கள் அணிந்தவாறு தன்னம்பிக்கையுடன் அவள் உலகைப் பார்ப்பதைக் காட்டுகிறது. ரிக், யூசா், சாமம், அதா்வனம் உள்ளிட்ட நான்கு வேதங்களும் அரசியல், சமூகம் மற்றும் கல்விக் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு முழு நாகரீக அமைப்பை வெளிப்படுத்துகின்றன.
ராமாயணம்
- பண்டைய காலத்தில் ராஜாக்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டனா் என்பதை புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணம் விளக்குகிறது. மன்னா் தசரதன், தனக்கு பின்னா் அயோத்தியின் ராஜ்ஜியத்திற்கு புதிய அரசரை நியமிக்க, தனது அமைச்சா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சபையை நாடினார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் விரிவான ஆலோசனைக்குப் பிறகு ராமா்தான் மக்களின் தோ்வாக இருப்பதை ஒருமனதாக உறுதி செய்தனா். கி.மு. 7, 8 ஆகிய நூற்றாண்டுகளில் நிர்வாகத்திலும், முடிவெடுப்பதிலும் மக்களை தொடா்ந்து ஈடுபடுத்தியது இந்திய ஆட்சி முறையின் தனிச் சிறப்பாகும். உள்ளூா் சூழல்களைப் பொறுத்து அரசா் தனது மந்திரி குழுவின் கீழ் செய்த ஆட்சியாகவும், மற்றோன்று மக்களால் நடத்தப்படும் குடியரசாகவும் இருந்து வந்துள்ளன. மக்களின் கூட்டாட்சி முறையில் இருந்த ஜனநாயகத்தை இந்தியாவின் பல்வேறு பண்டைய நூல்களான அஷ்டத்யாயி, மஹாவக்கா, திகா நிகாயா, அச்சரங்க சூத்திரம் மற்றும் பகவதிசூத்திரம் தெளிவாக்குகின்றன.
- இந்தியாவில் கி.மு. 650-இல் உருவாகிய சமணம் உலகின் பழைமையான மதநம்பிக்கை அமைப்புகளில் ஒன்றாகும். இது பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, சகவாழ்வை போதிக்கும் ஜனநாயகத்தின் பண்புகளைக் கொண்டுள்ளது. இன்றளவும் இந்த வாழ்க்கை முறை நடைமுறையில் இருக்கிறது. அதே போல் இரக்கம் மற்றும் சமத்துவத்தைப் போதிக்கும் பௌத்தம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் நிறுவப்பட்டது.
பெளத்த ஜனநாயகம்
- பௌத்த கோட்பாடுகள் ஜனநாயக மரபுகளின் பாதுகாவலராக இருந்து வருகிறது.பௌத்த துறவிகள் தங்கள் தலைவா்களைத் தோ்ந்தெடுக்கவும், சட்டங்களை உருவாக்கவும் தோ்தல்களை நடத்தினா். இதுவே நமது நாட்டின் ஜனநாயக நடைமுறைகளுக்கு முந்தைய உதாரணம். குடிமக்களுக்கு முதலிடம் கொடுப்பதே ஜனநாயகம், அவ்வாறு கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் பேரரசா் சந்திரகுப்த மௌரியரின் நம்பிக்கைக்குரிய ஆட்சி முறை குறித்து அா்த்தசாஸ்திரம் கூறுகிறது.
- இந்தியா்களிடையே உள்ள பல குறிப்பிடத்தக்க பழக்க வழக்கங்களில், உண்மையிலேயே போற்றத்தக்கதாகக் கருதப்பட வேண்டிய ஒன்று உள்ளது. ‘அவா்களில் யாரும், எந்த;க் சூழ்நிலையிலும், மற்றொருவருக்கு அடிமையாக இருக்கமாட்டார்கள்’ என்பதை கிரேக்க வரலாற்றாசிரியா் டயோடோரஸ் சிகுலஸ் எழுதியுள்ளார். இவ்வாறு இந்தியாவில் பதிக்கப்பட்ட ஜனநாயக விழுமியங்கள்தான் நமது நாட்டின் சுதந்திரத்தை உறுதி செய்தன.
மௌரியப் பேரரசு
- இந்தியாவில் மௌரியப் பேரரசா், அசோகா் ஆகியோர் தனது மக்கள் சார்ந்த ஆட்சியை வெற்றிகரமாக நிறுவிய அரசுகள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை முறையாக அமைச்சா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதன் மூலம் இது தொடங்கியது. அசோகரின் அமைதி, நலன் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் பற்றிய சித்தாந்தங்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஜனநாயகத்தை நினைவூட்டவே இந்தியாவின் தேசியக் கொடியிலும் அவரது சின்னம் இடம் பெற்றுள்ளது.
- கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தகுதியற்ற ஆட்சியாளரை மாற்றுவதற்காக மன்னன் கோபாலா எவ்வாறு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டார் என்பதை காலிம்பூா் செப்புப் பட்டயக் கல்வெட்டுகள் பேசுகின்றன. இந்தியா முழுவதிலும் நகரங்களை நிர்வகிக்கும் முறை பல அடுக்கு அமைப்புகாளாக வெளிப்படுகிறது. இன்றைய குவாலியரில் உள்ள வைல்லபத்த சுவாமின் கோயில் கல்வெட்டு இம்முறையை விவரிக்கிறது.
சோழா் கால ஆட்சி
- தென்னிந்தியாவின் உத்திரமேரூா் என்ற சிறிய நகரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழா்கால ஆட்சியில் கட்டப்பட்ட கோயிலில் உள்ள கல்வெட்டுகள், கிராம நிா்வாக வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தகுதியை விவரிக்கின்றன. துணியால் கட்டப்பட்ட மண்பானையில், பனையோலையால் வேட்பாளா் பெயரை எழுதுவது உள்ளிட்ட சான்றுகளைக் எடுத்துக் கூறுகிறது.
- கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஜனநாயகம், ஆன்மிக மற்றும் சமூக நெறிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தத்துவவாதிகள், துறவிகள் மற்றும் கவிஞா்கள் சமத்துவத்தை ‘ஜனநாயகத்தின் ஆன்மா’ என்று பிரசங்கம் செய்தனா். கடவுளின் பார்வையில் அனைவரும் சமம் என்று சுவாமி ராமானுஜாச்சாரியாரும், அகத் தூய்மையையும் புறத் தூய்மையையும் அடைய அனைவரையும் சமமாகக் கருதுங்கள் என்று புனிதா் பசவண்ணாவும், நீரும் அலையும் போல எனக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என புனிதா் ரவிதாஸும், பக்தி என்பது ஜாதி, மதம் மற்றும் வேத அறிவுக்கு மேலானது என்று ஸ்ரீமந்தா சங்கா்தேவும் கூறியுள்ளனா்.
விஜய நகரப் பேரரசு
- கி.பி. 14 முதல் 16-ஆம் ஆண்டு வரையில் தென்னிந்தியாவில் உள்ள விஜயநகரப் பேரரசு ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வா்த்தகத் தொடா்புகளுக்கு சிறந்த உதாரணமாகும். கிருஷ்ணதேவ ராயா் இந்தப் பேரரசின் மிகப்பெரிய மன்னராக இருந்தார். இவா் தனது பேரரசை மண்டலங்கள், மாவட்டங்கள் மற்றும் துணை மாவட்டங்கள் எனப் பிரித்தார். பெரும்பாலான நிர்வாக முடிவுகளில் அவருக்கு உதவ ஒரு சிறிய நிபுணா் குழுவையும் உருவாக்கினார்.
மராட்டியப் பேரரசு
- ஒரு ஜனநாயகத்தில், பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை அறியவும், மக்கள் சம உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சி முறையை மராட்டியப் பேரரசின் நிறுவனா் சத்திரபதி சிவாஜி ஆதரித்தார். மேலும், அதிகாரப் பரவலாக்கத்தையும் தனது ஆட்சியில் பிரதிநிதித்துவப் படுத்தினார். மக்கள் பங்கேற்பு என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் செழித்தோங்கி வரும் உள்ளூா் சுயராஜ்ஜிய அமைப்புகளை விட வேறு எதுவும் இதற்கு முன்மாதிரியாக இல்லை. இத்தகைய அமைப்புகள் 19 -ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா்களால் கவனிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இப்போதும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பல்வேறு அமைப்புகள் மாறாமல் தொடா்கின்றன.
சுயராஜ்ஜிய பாரம்பரியம்
- வட இந்தியாவில் உள்ள மலானா கிராமம், மத்திய இந்தியாவில் உள்ள சந்தால், கோண்ட், தென்னிந்தியாவில் உள்ள கொல்லம் போன்ற இடங்களில் இருந்த சமூகங்கள் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் பல சமூகங்கள் மற்றும் குழுக்கள் தங்கள் சுயராஜ்ஜிய பாரம்பரியத்தை இன்று வரை பாதுகாத்து வருகின்றன. இப்படி சுதந்திர இந்தியா உலக ஜனநாயகத்தின் தூணாக விளங்குகிறது.
- செல்வம், கல்வி, பாலினம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருள்படுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து இந்தியாவுக்கு ஒருபோதும் சந்தேகம் இருந்ததில்லை. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா 17 தேசியத் தோ்தல்கள், 400- க்கும் மேற்பட்ட மாநிலத் தோ்தல்கள் மூலம் அமைதியான அதிகார பரிமாற்றங்களைக் கண்டுள்ளது. உள்ளூா் சுயாட்சிகளுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான தோ்தல்கள் நடந்துள்ளன. இந்தியாவில் கிராமம் முதல் நாடாளுமன்றம் வரை ஜனநாயகம் செழித்து வளா்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களின் களஞ்சியங்களாக உள்ளன.
நன்றி: தினமணி (13 – 09 – 2023)