TNPSC Thervupettagam

பாரம்பரியம் காப்போம்

August 19 , 2019 1966 days 1225 0
  • நாட்டின் பாரம்பரியத்தை பேணிக் காப்பது மக்களின் தலையாய கடமையாகும். இந்தியா மிகவும் தொன்மையானது; பல மொழிகள், பல மதங்கள், பல ஜாதிகள் என்ற அடிப்படையில் பல மாநிலங்களாகப் பிரிந்திருந்தாலும், அவை அனைத்தையும் இணைப்பது பாரம்பரியமும், தொன்றுதொட்டு வழங்கிவரும் நமது கலாசாரமுமே. நம் நாட்டில் உள்ள எண்ணற்ற பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கிறோமா, அவை குறித்துப் பெருமிதம் கொள்கிறோமா என்று சிந்திப்பது அவசியம்.

பாரம்பரியச் சின்னங்கள்

  • தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சேர சோழ, பாண்டிய, பல்லவ, மராட்டிய, நாயக்க மன்னர்கள் மாறி மாறி ஆட்சி புரிந்ததால், தமிழகம் ஒவ்வொரு ஆட்சிக்கும் உரித்தான பாரம்பரியச் சின்னங்களோடு ஓர் அரும்பெரும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. உலகமே போற்றி வியக்கும் கட்டடக் கலையில் சிறந்த தஞ்சைப் பெரிய கோயில், பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில், மாமல்லபுரத்துப் பாறைக் கோயில்கள், வேலூர் ரத்தினகிரிக் கோட்டை, தரங்கம்பாடிக் கோட்டை, பூம்புகார், திருமலை நாயக்கர் மகால், கங்கை கொண்ட சோழபுரம், தொண்டி, அதியமான் கோட்டை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய பாரம்பரியச் சின்னங்களை இன்று நம்மிடம் உள்ள தொழில்நுட்பங்களால் உருவாக்க முடியுமா? முடியாது. இருப்பதையாவது பாதுகாக்க வேண்டாமா?
  • வெளிநாடுகளில் இத்தகைய பாரம்பரியச் சின்னங்களை மக்களும் அரசும் பெருமிதத்தோடும், அக்கறையோடும் பாதுகாக்கிறார்கள். பல சின்னங்கள் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டு கடும் நிபந்தனைகளோடு பயணிகளுக்குத் திறந்து விடப்படுகின்றன. மக்களும் அவற்றைச் சேதப்படுத்தாமல் கண்டுகளிக்கிறார்கள். அவற்றின் சுற்றுப்புறங்களில் எந்தவித பொருந்தாத ஆக்கிரமிப்புகளுக்கும் இடம் கொடாத வண்ணம் அந்த அரசுகள் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துகின்றன.
  • மக்களும் எந்த விதிமீறலுமின்றிப் பொறுப்புணர்வோடு அந்தச் சின்னங்களைப் பாதுகாக்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் லூவர் மாளிகை, எகிப்தின் பிரமிடுகள், தென் அமெரிக்காவின் மாச்சுபிச்சு -இங்கெல்லாம் சுற்றுலாப்பயணிகள் மிக அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இருந்தாலும் அவை தூய்மையாகவும், எந்தவிதச் சேதமுமில்லாமல் இருக்கின்றன. பாரம்பரியக் கட்டடங்கள், கோட்டைகள் ஆகியவற்றைப் புனரமைக்கும்போது அவற்றின் பழைமை சிறிதும் கெடாத வண்ணம் வல்லுநர்களின் உதவியோடு செய்கின்றனர். "புதுமை' என்ற பெயரில் அவற்றுக்குப் பொருந்தாத அலங்காரங்களைச் செய்வதில்லை.

தஞ்சை

  • இங்கு என்ன நிலை என்று பார்ப்போம். தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியில் புதர் மண்டிக் கழிவு நீர் ஓடுகிறது, சுற்றுலாப் பயணிகள் உணவுப் பொருள்களைச் சாப்பிட்டு விட்டுக் குப்பைகளை ஆங்காங்கு வீசிவிட்டுப் போகின்றனர். நமது கோயில்களில் காலங்காலமாக "நந்தவனம்' என்று சொல்லப்படும் பூந்தோட்டம் இருந்தது. அங்கு பூக்கும் பலவித மலர்களைக் கொண்டு தெய்வங்களுக்கு வழிபாடு செய்தனர்.
  • ஆனால், இன்று தஞ்சாவூர் உள்ளிட்ட பாரம்பரியக் கோயில்களில் அலங்காரமாகப் "புல் தரை' போடப்பட்டுள்ளது. "புல் தரை' என்பது முகலாயர்களது கட்டடக் கலையின் ஓர் வடிவமாகும். தாஜ் மஹால், ஃபதேபூர் சிக்ரி போன்ற பல முகலாய கட்டடக் கலை அதிசயங்களில் இந்தப் புல் தரைகள் அழகுக்கு அழகு சேர்ப்பதைக் காணலாம். ஆனால், பெரிய கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும், மாமல்லபுரத்திலும் இந்தப் புல் தரைகள் பொருந்தாமல் இருக்கின்றன.

திருவாரூர்

  • திருவாரூர் தியாகேசர் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் பல குட்டிக் கோயில்கள் உள்ளன. அவற்றைப் புதுப்பித்துள்ளனர். அவற்றின் அசல் வண்ணங்களை மாற்றிப் பளீரென்று பொருந்தாத புது வண்ணங்களைத் தீட்டி, அதில் உபயம் செய்தவரின் பெயரையும், செல்லிடப்பேசி எண்ணையும் எழுதி வைத்துள்ளனர். அங்கு மனுநீதிச் சோழனின் கல்தேர் சிற்பம் ஒன்றுண்டு. ஆராய்ச்சி மணியை அடிக்கும் பசு, அந்தப் பசுவுக்கு நீதி வழங்கும் மனு நீதிச் சோழன் தேர்க்காலில் தன் மகனை இட்டுக் கொல்வது போன்ற அற்புத சிற்ப வடிவங்களுடன் கூடிய கல்தேர் பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தும். இன்று அது சிதைந்து பொலிவிழந்துள்ளது. அதனைப் புதுப்பித்துள்ளனர். ஒரு பாதி பழமையான கருங்கல் தேர், மீதி வண்ணமயமான கதம்பத் தேர். உடைந்துபோன மன்னனுக்குப் புதிதாக ஒரு சிற்பத்தைச் செய்துள்ளார்கள். அவன் குதிரையோட்டியைப் போலிருக்கும் கொடுமையை என்னென்று சொல்வது?

மதுரை

  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் "ஆயிரங்கால் மண்டபம்' ஒன்று உள்ளது. அதனை ஓர் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு அங்கு சென்று அந்தக் கலைப் பொக்கிஷங்களை ரசிக்கின்றனர். ஆனால், அவற்றைப் பற்றி விளக்கிக் கூற, வரலாற்றை நன்கு அறிந்த பொறுப்பாளர் யாரும் அங்கு இல்லை. அவற்றைப் பற்றிய குறிப்பேடுகளும் அங்கில்லை.
  • இராமேசுவரம் கோயிலின் பிரகாரம் உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்று பெயர் பெற்றது. அதன் புனரமைப்பின்போது அதன் இயற்கை வண்ணத்தை மாற்றி வண்ணமயமாக்கி அதன் தனித்துவத்தை அழித்துவிட்டார்கள்.
  • தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், வேலூர் ரத்தினகிரிக் கோட்டை போன்றவை அவற்றின் பாரம்பரியம் மாறாத வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது சற்றே ஆறுதலான விஷயம். ஆனால், இங்கும் கூட விதிமுறைகளை மீறி அருகில் கடைகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள் இயங்குகின்றன. இவற்றால் கடும் ஒலிமாசு ஏற்படுவதுடன், மக்கள் அங்கு வாங்கிப் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் குப்பைகளினால் தூய்மை கெடுகிறது.

திருமலை நாயக்கர் மஹால்

  • திருமலை நாயக்கர் மகாலின் மிகப்பெரிய தூண்களில் எல்லாம் பென்சிலாலும், பேனாவாலும், கத்தியாலும் பெயர்களைப் பொறித்துள்ளனர். பல இடங்களில் சுவர் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. மலைக் கோயில்களின் பாறைகளிலெல்லாம் மதச் சின்னங்களும், அரசியல் விளம்பரங்களும் கண்களை உறுத்துகின்றன. குற்றாலத்தில் மிக அற்புதமான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் மண்டபம் ஒன்று பெண்கள் உடை மாற்றும் அறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • சித்தன்னவாசல், தொண்டி, சமணர் படுகைகள், குடைவரைக் கோயில்கள், தனுஷ்கோடி, மருதமலையின் பாம்பாட்டிச் சித்தர் கோயில், ரத்தினகிரிக் கோட்டை, தஞ்சை சரஸ்வதி மகால் உள்ளிட்ட நமது பல பாரம்பரியப் பொக்கிஷங்கள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. சீர்குகுலைந்து விட்ட நமது பாரம்பரியச் சின்னங்களை மீட்டெடுப்பதும், எஞ்சியுள்ளவற்றைக் காப்பாற்றவும் நாம் என்ன செய்ய வேண்டும்?
  • பாரம்பரியச் சின்னங்களைப் புனரமைக்கும்போது அவற்றின் பழைமை மாறாமல், தொல்லியல் வல்லுநர்களின் உதவியோடு புதுப்பிக்க வேண்டும்;
  • பாரம்பரியச் சின்னங்கள் அனைத்தையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்;
  • அதன் கட்டுப்பாட்டில் சுற்றுலாவுக்கென்று தனிப் பிரிவு ஏற்படுத்தி, தகுந்த கட்டணங்களுடனும் கட்டுப்பாடுகளுடனும் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்;
  • இந்தத் தலங்களில் அரசே வழிகாட்டிகளை நியமிக்க வேண்டும். சரித்திரப் பாடத்தில் பட்டம் பெற்றவர்களை வழிகாட்டிகளாகவும், பொறுப்பாளர்களாவும் நியமித்துத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்;
  • இந்தச் சின்னங்களின் பாதுகாப்புக்கென்று அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டும்;
  • ஒவ்வொரு மாவட்டத்திலும், வரலாற்று நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், சரித்திரப் பேராசிரியர்கள் உள்ளிட்ட "பாரம்பரியப் பாதுகாப்புக் குழுக்களை' அரசு அமைத்துக் கண்காணிக்க வேண்டும்;
  • இந்தப் பாரம்பரியச் சின்னங்களில் எந்தவித பொது நிகழ்ச்சிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. குறிப்பாக, திரைப்படப் படப்பிடிப்புகளை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்;
  • வெளிநாடுகளில் உள்ளதுபோல் கலங்கரைவிளக்கங்கள், கோட்டைகள், பாரம்பரிய மாளிகைகள் ஆகியவற்றில் தக்க பாதுகாப்புடன் கடும் நிபந்தனைகளுடன் சுற்றுலாப் பயணிகளைத் தங்க அனுமதிக்கலாம். வெளிநாடுகளில் மாளிகைகளிலும், கோட்டைகளிலும், கோயில்களிலும் உள்ள பழைய சுரங்கப் பாதைகளைச் செப்பனிட்டு வழிகாட்டிகளின் துணையோடு சற்றுத் தொலைவு வரை உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். இங்கும் அப்படிச் செய்யலாம்;
  • பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடத்தை வெறும் பாடமாகக் கற்பிக்காமல், நமது பாரம்பரியப் பெருமை விளங்கும் வகையில் கற்பிக்க வேண்டும்; 10. நமது மனப்பான்மையும் மாற வேண்டும். நம் நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். பொறுப்போடு அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும்.
  • "நமது பாரம்பரியம் நமது பெருமை' என்ற பெருமித உணர்வு நம்மிடம் ஏற்பட்டால், நமது பாரம்பரியச் செல்வங்கள் காக்கப்படும். 

நன்றி: தினமணி (19-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்