பாரிஸ் பாராலிம்பிக்: இந்தியாவின் புதிய உயரம்
- பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகளுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. பாராலிம்பிக் வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாகப் பங்களித்து, நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர்.
- பாரிஸில் நடைபெற்ற பதினேழாவது பாராலிம்பிக் போட்டியில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பாரா துப்பாக்கிச் சுடுதலில் 1, பாரா பேட்மின்டனில் 1, பாரா தடகளத்தில் 4, பாரா வில்வித்தையில் 1 என 7 தங்கப் பதக்கங்களை இந்தியர்கள் கைப்பற்றினர்.
- துப்பாக்கிச் சுடுதலில் அவனி லெகரா, ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் ஆகியோர் பாராலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும், வில்வித்தையில் ஹர்விந்தர் சிங் முதல் முறையாகவும் தங்கப் பதக்கங்கள் வென்றிருப்பது இன்னொரு சிறப்பு.
- பாரா வில்வித்தையில் இரண்டு கைகளும் இல்லாத 17 வயதான ஷீத்தல் தேவி வெண்கலம் வென்று, பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்கிற சிறப்பைப் பெற்றார். பாரா தடகளம் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்றதன் மூலம், தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்.
- பாரா பாட்மின்டனில் துளசிமதி முருகேசன் (வெள்ளி), மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் (வெண்கலம்) ஆகியோர் பதக்கம் வென்றதன் மூலம் தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். தடகளத்தில் மொத்தம் 17 பதக்கங்களை வென்றிருப்பது இந்தியர்களின் திறமையை உலக அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
- பாரிஸில் அதிக எண்ணிக்கையில் (29) இந்தியா பதக்கம் வென்று, பதக்கப் பட்டியலில் 18ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. 1960லிருந்து பாராலிம்பிக் நடைபெற்றுவரும் நிலையில் 1972 (1 பதக்கம்), 1984 (4), 2012 (1), 2016 (4) என 4 பாராலிம்பிக்கில் ஒற்றை இலக்கத்தில் இந்தியா பதக்கங்களை வென்றிருந்தது. கடைசி இரண்டு பாராலிம்பிக் தொடர்களில்தான் இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.
- அதிகபட்சமாக பாரிஸ் பாராலிம்பிக்கில்தான் 22 விளையாட்டுப் பிரிவுகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில், இந்தப் பாராலிம்பிக்கில் புதிய உயரத்தை இந்தியா அடைந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகரான பாராலிம்பிக்கில் பங்கேற்பாளர்களைக் குறுகிய கால இடைவெளியில் தயார் செய்துவிட முடியாது.
- பல ஆண்டுகளாகத் திறமையானவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்ததன் மூலமே இது சாத்தியமாகியிருக்கிறது. இதற்காக மத்திய அரசு, இந்திய பாராலிம்பிக் கமிட்டி, பல்வேறு மாநில அரசுகளைப் பாராட்ட வேண்டும்.
- பாரிஸ் பாராலிம்பிக்கில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் பதக்கம் வென்றது, மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையுடன் விளையாட்டுகளில் ஈடுபட ஊக்கமளிக்கும். அவர்களை மத்திய, மாநில அரசுகள் அரவணைத்துத் தேவையான பயிற்சிகளையும் வசதிகளையும் செய்துதர முன்வர வேண்டும்.
- குறிப்பாக, பாரா விளையாட்டுகளில் சாதிப்பவர்களின் நல்வாழ்க்கைக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும். பெரு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களும் அவர்களை அரவணைத்துக்கொள்ள முன்வர வேண்டும். இந்தியர்கள் மென்மேலும் பதக்கங்களைக் குவிக்க இவை நிச்சயம் துணைபுரியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2024)