- முக்கனியில் முதல் கனி மா. மாம்பழம் கோடையின் கொடை. உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் மாங்கனியின் உற்பத்தி அதிகம். மாம்பழத்தை அதன் சுவைக்கு மட்டுமே நாம் பிரதானப்படுத்துகிறோம். சுவையைத் தாண்டி மாம்பழத்தில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
ஊட்டச்சத்து:
- 200 கிராம் எடை கொண்ட ஒரு மாங்கனியில் 150 கிலோ கலோரியும் 28 கிராம் மாவுச்சத்தும் உள்ளன. புரதச் சத்து இதில் அரிதாகக் காணப்படுகிறது. கொழுப்புச் சத்து மாங்கனியில் இல்லை.
- இவை தவிர்த்து நார்ச்சத்து 3 கிராம், பொட்டாசியம் 300 மி.கி, விட்டமின் சி 60 மி.கி என்கிற அளவில் மாங்கனியில் உள்ளன. மேலும், இக்கனியில் விட்டமின் ஏ, பி, இ, கே போன்ற உயிர்ச்சத்துகள் உள்ளன. பீட்டா கரோட்டின், ஃபோலேட், லூட்டின், (Lutien), ஜீயாக்சாந்தின் (Zeaxanthne), மாஞ்சிஃபெரின் (Mangiferin) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன.
- கனிமச் சத்துகளான இரும்புச் சத்து, காப்பர், மக்னீசியம் இப்பழத்தின் சிறப்பாகும். மாம்பழத்தில் உள்ள சத்துகள் ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல் புரிந்து பார்வைத் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கும் தன்மை கொண்டவை.
மாவுச்சத்து:
- 25 கிராம் மாம்பழம் உணவாகும் பட்சத்தில், 5 கிராம் குளுக்கோஸ் உடல் பயன்பாட்டிற்கு ரத்தத்திலும் 20 கிராம் கல்லீரலிலும் சேமிக்கப்படும். இதில் மாம்பழத்தில் உள்ள ஒட்டுமொத்தச் சர்க்கரையும் ரத்தத்தில் சேர்வதில்லை. இதன் காரணமாகச் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் உயராது.
- அந்த வகையில் நீரிழிவு நோய் இருந்து, அதற்கான சிகிச்சை (மாத்திரை, இன்சுலின் ஊசி) எடுத்துக் கொள்பவராக இருந்தால் 25 கிராம் அளவு மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதில் ஆபத்தில்லை.
சர்க்கரை உயர்த்துதல் குறியீடு:
- ஓர் உணவுப் பொருளானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை எந்த அளவிற்கு உயர்த்துகிறதோ அதை வைத்துத்தான் உணவின் ‘சர்க்கரை உயர்த்துதல் குறியீடு’ (Glycemic Index) கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் உணவு வகைகள் மிகக் குறைவான, மிதமான, மிக வேகமான சர்க்கரைஉயர்த்துதல் குறியீடுகள் என மூன்று விதமாகத் தரம் பிரிக்கப்படுகின்றன.
- இந்தத் தர அளவுகோலின் படி 0 முதல் 100 என்று பிரிக்கப்பட்டுள்ளது. மாம்பழத்தின் சர்க்கரை உயர்த்துதல் குறியீடு 50 என்றும் வெள்ளை அரிசியின் சக்கரை உயர்த்துதல் குறியீடு 70 என்றும் இருக்கின்றன.
- இதுவே வெள்ளை சர்க்கரையின், சக்கரை உயர்த்துதல் குறியீடு 100 என்றும் அளவிடப்பட்டுள்ளது. இவற்றை ஒப்பிடும்போது மாம்பழம், வெள்ளை அரிசியைவிட ஆபத்தற்றது என்பதை நீரிழிவு நோய் உள்ளவர்கள் புரிந்து கொள்ள லாம். எனினும் மாம் பழத்தைச் சாப்பிடுவதில் உரிய கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம்.
நார்ச்சத்து:
- செல்லுலோஸ் என்கிற நீரில் கரையா நார்ச்சத்து மாம்பழத்தில் உள்ளது. 200 கிராம் எடை கொண்ட மாங்கனியில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. குடல் நன்றாக இயங்க நார்ச்சத்து மிக அவசியம். குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு உணவாக நார்ச் சத்து இன்றியமையாதது. புற்று நோய், பைல்ஸ் வராமல் தடுக்கவும் மலச்சிக்கலில் இருந்து விடைபெறவும் நார்ச்சத்து உதவுகிறது.
- மேலும், மாம்பழத்தில் உள்ள ‘பெக்டின்’ என்கிற நீரில் கரையும் நார்ச்சத்து உடலில் கொழுப்பு மிகுதியாகச் சேரா மல் கண்காணிக்கும். இதய ரத்தக் குழாய்களின் நலனைப் பேணுவதில் இதன் பங்கு அதிகம்.
உயிர்ச்சத்து:
- விட்டமின் ஏ, பி, இ, சி மற்றும் கே ஆகியவை மாங்கனியில் அதிகமாக உள்ளன. 200 கிராம் மாங்கனியில் விட்டமின் சி 60 மி.கி, பீட்டா கரோட்டின் 1.06 மைக்ரோ கிராம், ஃபோலேட் 71 மைக்ரோ கிராம் அளவில் உள்ளன. இவற்றுடன் லூட்டின், ஜீயாக்சாந்தின் (Zeaxanthine) இதில் உள்ளன. இவை மஞ்சள் நிறமிகள் கொண்ட வேதிப் பொருள்களாகும். மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கும்.
கல்லீரல் பாதுகாப்பு:
- பாலிஃபினால்கள், பிளாவனாய்டுகள் என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வேதிப்பொருள்கள் மற்றும் மாஞ்சிஃபெரின் என்கிற ஆக்ஸிஜன் ஏற்றி போன்றவை மாங்கனியில் அதிகம் உள்ளன.
- இதனால் முதுமையில் வரும் விழித்திரை தேய்ந்து பார்வையற்ற நிலை தடுக்கப் படும். புற்றுநோய் தடுப்பு, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுதல், கல்லீரல் பாதுகாப்பு போன்றவையும் இதில் உள்ள வேதிப்பொருள்களால் சாத்தியப்படும்.
மாங்கனியின் நன்மைகள்:
- மலச்சிக்கலை அகற்றும். இது மென்மையான உணவென்பதால் இரைப்பைப் புண் வராமல் காக்கும். தோல், தலைமுடியைச் செழுமையாக்கி இளமைத் தோற்றத்தைத் தரும். தோல், குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
- விழித்திரையில் ‘மேகுலா’ என்கிற முக்கியப் பார்வை நரம்பு முதுமையில் தேய்ந்து, பார்வை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும். பெருங்குடலில் தேவையற்ற நோய் உற்பத்திக் கிருமிகள் பெருகாமல் குடல்நலன் காக்கும். கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் இதயம் காக்கும். அனைத்து விட்டமின் குறைபாடுகளையும் கட்டுக்குள் வைக்கும். ரத்த அழுத்தம் மிகுதியாகாமல் காக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 07 – 2024)