TNPSC Thervupettagam

பால்கே போட்ட பாதையில்...

November 8 , 2024 16 days 50 0

பால்கே போட்ட பாதையில்...

  • மும்பை மாநகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது நாசிக் நகரம். இங்குள்ள பல சுற்றுலாத் தலங்களில் பயணிகளைப் பெரிதும் கவரும் ஒன்று இயற்கை எழில் சூழ்ந்த பாண்டவர் குகை. இதன் அடிவாரத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்திய சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே நினைவகம்’.
  • 1870இல் நாசிக்கில் பிறந்த பால்கேதான், இந்தியாவின் முதல் முழுநீள சலனப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’வைப் படமாக்கி 1913இல் வெளியிட்டவர். அதன் பின்னர் 1932 வரை 95 திரைப்படங்களையும் 26 ஆவணப்படங்களையும் எடுத்த இவரது பங்களிப்பே இந்திய சினிமாவின் வளர்ச்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது.
  • பேசும்படக் காலத்தில் அடியெடுத்து வைத்த அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்குப் பெரும் தாக்கத்தையும் கொடுத்தது. பால்கேவை முன்னோடியாகக் கொண்டே வி.சாந்தாராம், பாபுராவ் பெயிண்டர் உள்ளிட்ட அடுத்த கட்ட ஆளுமைகள் இந்தி சினிமாவில் தடம் பதித்தார்கள்.
  • கடந்த 2000இல் மகாராஷ்டிர மாநில அரசால் உருவாக்கப்பட்ட இந்தப்பால்கே நினைவகத்தில் அவரது சமாதி,அவர் இந்திய சினிமாவுக்குச் செய்தபங்களிப்பைக் கால வரிசைப்படி விளக்கும் கறுப்பு - வெள்ளை ஒளிப்படக்காட்சியகம், காணொளிக் காட்சியகம் ஆகியன அமைக்கப்பட்டிருக்கின்றன.
  • பால்கேயின் படங்களைத் தென்னிந்தி யாவில் திரையிட்ட சாமிக்கண்ணு வின்செண்டுவுக்கோ, பால்கேயின் பாதையில் புராண, இதிகாசப் படங்களை உருவாக்கிய தமிழ் சினிமாவின் தந்தை ஆர்.நடராஜ முதலியாருக்கோ, சென்னையில் முதல் பொதுத் திரையரங்கைக் கட்டிய ரகுபதி வெங்கையா நாயுடுவுக்கோ எந்த நினைவுச் சின்னங்களும் இங்கே அமைக்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களின் போதாமை.
  • அதைவிடக் கொடுமை, சென்னையின் கெயிட்டியும் கோவையின் வெரைட்டி ஹாலும் இடிக்கப்பட்டு அவை வணிக வளாகங்களாக மாறிவிட்ட நிலையில், அங்கே இந்தத் திரை ஆளுமைகளுக்கு ஒரு நினைவுப் பலகை கூட இல்லை என்பதுதான்.

மிதிவண்டியிலிருந்து கார்:

  • வேலூரில் ஒரு செல்வந்தர் குடும் பத்தில் 1885இல் பிறந்து, வளர்ந்தவர் நடராஜ முதலியார். இவரது தந்தை ரங்கசாமி ‘வாட்ஸன் & கம்பெனி’ என்கிற பெயரில் சென்னையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் மிதிவண்டி விற்பனைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். வேலூரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு 22வது வயதில் சென்னைக்கு வந்த நடராஜன், முதலில் அப்பாவின் தொழிலுக்கு உதவினார். சென்னைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்கிற வேட்கை அவருக்குப் பிறந்தது.
  • அதற்காகத் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரரான தர்மலிங்கத்தை தொழில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டு, அமெரிக்கக் கார்களையும் அவற்றுக்கான உதிரிப் பாகங்களையும் இறக்குமதி செய்து வந்த ‘ரோமர் டேன் & கம்பெனி’ என்கிற நிறுவனத்தை 1911இல் வாங்கினர். அப்போது, சென்னையில் ’அடிசன் & கம்பெனி’ என்கிற நிறுவனம் மட்டுமே அமெரிக்கக் கார்களை விற்று வந்தது. அந்த வகையில் சென்னை மாகாணத்தில் கார் விற்பனைச் சந்தையில் அடியெடுத்து வைத்த முதல் தமிழர்கள் என்கிற பெருமையை நடராஜனும் தர்மலிங்கமும் பெற்றனர். 1000 ரூபாய் தொடங்கி 3500 ரூபாய் வரையிலான கார்களை விற்பனை செய்து கணிசமான லாபம் ஈட்டினர்.
  • மோட்டார் வாகனத் தொழில் நன்றாகவே போய்க்கொண்டிருந்த நிலையில், சென்னையில் திரையிடப்பட்ட பால்கேயின் சலனப் படங்களைப் பார்த்த நடராஜனுக்குத் திரைப்பட உருவாக்கத்தில் இறங்க வேண்டும் என்கிற ஆவல் பிறந்தது. அன்றைக்கு சினிமா கேமராவுக்குள் படச்சுருளைப் பொருத்துவது, அதைச் சீராகக் கையால் இயக்குவது (மோட்டார் இல்லாத கேமரா), இருள் சூழ்ந்த அறையில் படச்சுருளை ரசாயனத் திரவத் தொட்டியில் நனைத்து உருத்துலக்குவது, பிறகு அதைப் பிரதியெடுத்து, படத்தொகுப்பு மேசைக்குக் கொண்டுவந்து ஒரே படமாகக் கோப்பது உள்பட அனைத்துப் பணிகளையும் படத் தயாரிப்பாளரே செய்யவேண்டும் என்பதை, தஞ்சாவூரைச் சேர்ந்த மருதமுத்து மூப்பனார் என்கிற நிலக்கிழாரிடமிருந்து தெரிந்துகொண்டார். இவர், நடராஜனிடம் கார் வாங்கிய செல்வந்தர்.
  • மருதமுத்து, இங்கிலாந்து சென்று கேமரா இயக்கவும் உருத்துலக்கவும் கற்றுக்கொண்டிருந்ததால், அங்கிருந்து, ‘வில்லியம்சன்’ நிறுவனம் தயாரித்த 35 எம்.எம். சினிமா கேமராவையும் உருத்துலக்கியப் படச்சுருள்களைப் பிரதியெடுக்கும் இயந்திரத்தையும் வாங்கி வந்திருந்தார்.

தமிழ் சினிமாவை ஈன்றெடுத்தார்!

  • முதலில் மருதமுத்துவிடம் கேமராவை இயக்கக் கற்றுக்கொண்ட நடராஜன், அதில் இன்னமும் தேர்ச்சி பெற விரும்பினார். அதற்காக, பிரிட்டிஷ் வைசிராய் கர்சன் பிரபு பங்கேற்கும் பொது நிகழ்வுகளைப் படமாக்கும் ஸ்டூவர்ட் ஸ்மித் என்கிற ஆங்கிலேய ஒளிப்பதிவாளரிடம் புனே சென்று திறம்படக் கற்றுத் திரும்பினார். கார் வணிகத்தையும் சினிமா தயாரிப்பையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பாத நடராஜன், தனக்குத் தேவைப்படும் பெரிய முதலீட்டை முன்னிட்டும், தனது கார் விற்பனை நிறுவனத்தை சிம்ஸன் & கம்பெனிக்கு விற்பனை செய்தார்.
  • நடராஜன் மீது நம்பிக்கை வைத்த தர்மலிங்கம், மருதமுத்து ஆகிய இருவரும் புதிய தொழிலில் இணைந்து கொண்டனர். புரசைவாக்கத்தின் ‘மில்லர்ஸ்’ சாலை யில் எண்: 10இல் இருந்த ‘டவர் ஹவுஸ்’ என்கிற மாளிகையை வாடகைக்கு எடுத்து, ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்கிற பெயரில் தென்னிந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறு வனத்தையும் முதல் ஸ்டுடியோவையும் 1916இல் தொடங்கினார்.
  • அன்றைக்கு சென்னையில் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டே, சுகுண விலாச சபா என்கிற அமெச்சூர் நாடகக் குழுவை உருவாக்கி, சமூக நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கியதுடன் பல நவீன உத்திகளை மேடையில் புகுத்திப் புகழ்பெறத் தொடங்கியிருந்த பம்மல் சம்பந்த முதலியார், நடராஜனின் நண்பராக இருந்தார். அவரிடம் தனது முதல் படத்துக்கான கதையைத் தேர்வு செய்ய ஆலோசனை கேட்டபோது, அவர் பரிந்துரைத்த கதை ‘கீசக வதம்’. ஆனால், இக்கதையைப் படமாக்க வேண்டாம் என உறவினர்கள் தடுத்தனர்.
  • ஆனால் பம்மல் சம்பந்தமோ, “கீசக வதம், பாண்டவ வனவாசத்தின் போது நடந்த முக்கியமான நிகழ்வு. இது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான பகையை அதிகரித்து, குருச்சேத்திரப் போருக்குக் காரணமாக அமைந்தது. கீசகன் திரௌபதியை அவமதிப்பது, அதைக் கண்டு பீமன் சினம் கொண்டு கீசகனைக் கொல்வது ஆகிய காண்டங்களைக் காலங்காலமாகக் கண் விழித்துப் பார்ப்பது நமது மக்களின் கலாச்சாரம். இந்தக் கதையை அனைத்து பிரிட்டிஷ் மாநிலங்களிலும் திரையிடலாம். உங்கள் முதலீட்டை நீங்கள் மீட்டுக்கொள்வதுடன் லாபமும் சம்பாதிக்கலாம்” என்றார்.
  • இதை ஏற்றுக்கொண்ட நடராஜன், இதை ‘சுகுண விலாசா சபா’வில் ஸ்திரீ பார்ட் வேடங்கள் போடும் பிரபல நடிகரும் வழக்கறிஞருமான ரங்க வடிவேலுவிடம் படத்துக்கான கதைப் பகுதியை எழுதி வாங்கிய நடராஜன், தனது நடிகர்களுக்குப் பயிற்சி அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ராஜு முதலியார் என்கிற சுகுண விலாசா சபா நடிகர் கீசகனாக நடிக்க, ஜீவரத்தினம் (யூ.ஆர்.ஜீவரத்தினம் அல்ல) என்கிற நாடக நடிகை திரௌபதியாகவும் நடித்தனர். 35 நாள்களில் 35 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான தமிழின் முதல் சலன சினிமாவில் நடித்த நடிகர்கள் அனைவரும் தமிழில் பேசினார்கள்.
  • உதட்டசைவுகளுக்கு ஏற்ற வசனங்கள் விவரணை அட்டைகளாகக் காட்டப்பட்டன. அதனால் படத்தொகுப்புப் பணியே மிகவும் சவாலாக இருந்ததாக நடராஜ முதலியார் தன்னுடைய முதுமைக் காலத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலேயர்கள் மட்டும் இயங்கிய துறையில் ஒரு முழுநீளப் படத்தைத் தயாரித்து முழு அனுபவம் பெற்ற நடராஜன், தனது அடுத்தடுத்த படங்களை எடுத்த பின்பு அவற்றைத் திரையிட முடியாமலும் திரையரங்குகள் கிடைக்காமலும் கடும் நெருக்கடிக்கு ஆளானார். நெருக்கடி கொடுத்தவர்கள் யார்?

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்