TNPSC Thervupettagam

பாவெல் துரோவ்: நாயகனா, குற்றவாளியா?

September 6 , 2024 82 days 84 0

பாவெல் துரோவ்: நாயகனா, குற்றவாளியா?

  • கடந்த சில நாள்களாக ‘டெலிகிராம்’ சேவைக்​கும், அதன் நிறுவனர் பாவெல் துரோவுக்கும் என்ன நடக்கிறது என்பதைத் தொழில்​நுட்ப உலகம் ஆர்வத்​தோடும் கவலையோடும் நோக்கு​கிறது. ஏனெனில், இந்த விவகாரம் டெலிகிராம் அல்லது துரோவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல: மாறாக, இந்த விவகாரமும் வழக்கும் தொழில்​நுட்ப உலகின் எதிர்​காலத் திசையைத் தீர்மானிக்​கக்​கூடியதாக அமையும் என்றே கருதப்​படு​கிறது.
  • டெலிகிராம் சேவை சட்டவிரோதச் செயல்​களுக்​காகப் பயன்படுத்​தப்​பட்டது தொடர்பான குற்றச்​சாட்​டில், ஃபிரான்ஸில் துரோவ் கைது செய்யப்​பட்டுப் பிணையில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். டெலிகிராம் போன்ற தொழில்​நுட்ப மேடையில் பகிரப்​படும் கருத்து​களுக்கு அதன் நிறுவனர் எப்படிப் பொறுப்​பேற்க முடியும் என்பது துரோவ் தரப்பின் வாதம்.
  • சமூக ஊடக சேவைகளில் பகிரப்​படும் கருத்து​களைப் பாதுகாப்பு நோக்கில் நெறிப்​படுத்த வேண்டும் என்பது இறையாண்மை மிக்க நாடுகளின் தரப்பாக இருக்​கிறது என்றால், நெறிப்​படுத்தல் என்பது கட்டுப்​பாடாக, தனியுரிமைக்​கும், பேச்சுரிமைக்கும் எதிராக அமையும் என்பது இதற்கு எதிர்த் தரப்பில் முன்வைக்​கப்​படும் வாதமாக இருக்​கிறது.
  • இந்த விவாதத்​துக்கு மத்தி​யில், பல்வேறு நாடுகளில் பலவிதமாகச் சமூக ஊடகங்களை நெறிப்​படுத்​தும், கட்டுப்​படுத்தும் முயற்சிகள் மேற்கொள்​ளப்​பட்டு​வரும் நிலையில், தொழில்​நுட்ப மேடையில் பகிரப்பட்ட கருத்​துக்கு அதன் நிறுவனரைப் பொறுப்​பேற்கச் செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்​ளப்​பட்​டிருப்பது இதுவே முதல் முறை.

ஃபிரான்ஸில் கைது:

  • துரோவ் கைது விவகாரம் தொடர்பாக முன்னணித் தொழில்​நுட்பப் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்​திருப்​பதும், இதில் அரசியல் இல்லை என ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூன் விளக்கம் அளித்​திருப்​பதும் இந்தப் பிரச்​சினையின் முக்கி​யத்து​வத்தை உணர்த்து​கின்றன.
  • இந்தப் பிரச்​சினையில் பல்வேறு கோணங்​களும், நுணுக்கமான விஷயங்​களும் உள்ள நிலையில், இதன் மையமாக விளங்கும் துரோவ் எனும் தனிப்பட்ட ஆளுமையை அறிமுகம் செய்து​கொள்வது பொருத்தமாக இருக்​கும்.
  • ‘ரஷ்ய கோடீஸ்​வரர்’ என்றும், ‘ரஷ்ய ஸக்கர்​பர்க்’ என்றும் வர்ணிக்​கப்​படும் பாவெல் துரோவ், சோவியத் ஒன்றி​யத்தின் லெனின்​கிராட் நகரில் பிறந்து வளர்ந்​தார். தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட ரஷ்ய நாவலாசிரியர்​களின் கதைகளில் விவரிக்​கப்​படும் செயின்ட் பீட்டர்ஸ்​பர்கில் மேட்டுக்குடி பள்ளியில் படித்​தார்.
  • பள்ளிப் பருவத்​திலேயே கணினியில் ஆர்வமும், கோடிங் (Coding) எழுதும் திறனும் கொண்டிருந்த துரோவ், வகுப்புக் கணினியினை ஹேக் செய்து அதில், ‘சாக வேண்டியவர்’ என்னும் குறிப்புடன் ஆசிரியரின் முகத்தை இடம்பெறச் செய்ததற்காக நடவடிக்கைக்கு உள்ளானதாக அவரது சுயசரிதையை எழுதிய ரஷ்யப் பத்திரி​கை​யாளர் கோனோனவ் தெரிவித்​திருக்​கிறார்.

பள்ளிக் கணினி:

  • பதின் பருவத்தில் தனது திறமை மீது மிகை நம்பிக்கை கொண்ட​வ​ராகவே துரோவ் இருந்​திருக்​கிறார். பள்ளிப் படிப்பை முடித்து​விட்டு எதிர்கால வாழ்க்கை பற்றி நண்பர்கள் பேசிய​போது, “நான் இணையத்தின் இறைத்​தூதராக வருவேன்” எனக் கூறியிருக்​கிறார்.
  • கல்லூரிக் காலத்​திலும் அவரது கணினித் திறன் வியந்து பேசப்பட, நண்பர்கள் சிலரால் ஃபேஸ்புக் சேவை அவருக்கு அறிமுகம் செய்து​வைக்​கப்​பட்​ட​போது, அதே போன்ற சேவையை ரஷ்யாவில் உருவாக்கிக் காண்பித்​தார். விகோண்டடே (VKontakte) என்னும் அந்த சேவை ரஷ்யாவில் பிரபலமாகி அவரைச் செல்வந்​த​ராக்​கியது. ஃபேஸ்​புக்கின் நகல் என்று சொல்லப்​பட்​டாலும் அந்த சேவை ரஷ்யச் சமூகத்தின் தேவைக்​கேற்ற அம்சங்​களைக் கொண்டிருந்​ததோடு, சட்டவிரோதமான முறையில் இசை, திரைப்​படங்கள் உள்ளிட்​ட​வற்றைப் பகிர்​வதற்கான மேடையாகவும் அமைந்தது.

ரஷ்யப் போராட்டம்:

  • 2012இல் ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராகப் போராட்டம் வெடித்த​போது, விகோண்​டடேயின் அரசியல் பயன்பாடு கவனத்தை ஈர்த்தது. அரசின் கட்டுப்​பாட்டை மீறிப் போராட்​டக்​காரர்கள் தகவல்​களைப் பரிமாற இதைப் பயன்படுத்திய நிலையில், எதிர்க்​கட்சி - போராட்டக் குழு பக்கங்களை முடக்க வேண்டும் என அரசுத் தரப்பு நிர்ப்​பந்​தத்​துக்கு அடிபணிய துரோவ் மறுத்து​விட்​டார்.
  • இந்தச் சம்பவமே கருத்துச் சுதந்​திரத்தின் நாயகனாக அவர் அறியப்பட்ட முதல் நிகழ்வு. 2013-14 காலத்தில் ரஷ்ய–உக்ரைன் மோதலின்​போது, உக்ரைன் பயனாளிகள் தொடர்பான தகவல்களை ஒப்படைக்க வேண்டும் என்னும் ரஷ்ய அரசின் அழுத்​தத்​துக்கும் அவர் அடிபணி​ய​வில்லை. எனினும் நெருக்​கடிகள் காரணமாகத் தனது நிறுவனத்தை விற்று​விட்டு ரஷ்யாவில் இருந்து துரோவ் வெளியேறினார். “என்னிடம் இப்போது எந்தச் சொத்தும் இல்லை, ஆனால் தெளிவான மனசாட்​சி​யும், போராட வேண்டிய லட்சி​யமும் இருக்​கிறது” என்றார். அவரது அடுத்த கட்ட வாழ்க்கை அதிலிருந்​துதான் தொடங்​கியது.
  • ரஷ்யா​விலிருந்து வெளியேறிய பிறகு, தனது குழுவினரோடு தொடர்​பு​கொள்ளப் பாதுகாப்பான வழிமுறையைத் தேடிக்​கொண்​டிருந்த​போதுதான் டெலிகிராம் சேவையை உருவாக்கும் எண்ணம் அவருக்கு உண்டானது. வாட்ஸ்அப் போன்ற அம்சங்​களோடு, டிவிட்​டரின் உடனடித் தன்மை, ஒரு செய்தி​மடலின் விரிவான தன்மை​யையும் டெலிகிராம் கொண்டிருந்தது.
  • இந்தச் சேவையின் எளிய தன்மை​யும், தனியுரிமை அம்சங்​களும் அடுத்து வந்த ஆண்டு​களில் அரசு எதிர்ப்​பாளர்கள், போராட்டக் குழுவினர் ஆகியோர் அதிகம் பயன்படுத்திய சேவையாக டெலிகிராமை மாற்றின. குறிப்பாக ரஷ்யா, பெலாரஸ், ஈரான் போன்ற நாடுகளில் அரசு எதிர்ப்​பாளர்​களால் இந்தச் சேவை அதிகம் பயன்படுத்​தப்​பட்டது. அதே நேரத்​தில், தீவிர​வா​திகள், சட்டவிரோதச் செயல்​களில் ஈடுபடு​கிறவர்கள், வதந்தி​களைப் பரப்பு​கிறவர்கள் போன்றோரும் இதை அதிகம் பயன்படுத்​தினர்.

டெலிகிராம் சேவை:

  • இதன் காரணமாக, சர்வா​திகார அரசுகளுக்கு மட்டும் அல்லாமல் இறையாண்மை மிக்க அரசுகளுக்கும் டெலிகிராம் சேவை தலைவலியாக அமைந்தது. இதனிடையே துரோவின் தனிப்பட்ட ஆளுமையும் வண்ணமயமாக மாறியது. டெலிகிராம் சேவை சர்வதேச அளவில் வளர்ச்சி பெற்றதை அடுத்து, தன்னை ஒரு தவிர்க்க இயலாத ஆளுமையாக துரோவ் நம்பினார். ‘மேட்​ரிக்ஸ்’ படத்தின் நாயகன்போல உடை உடுத்​திக்​கொள்​வதில் ஆர்வம் காட்டி​னார். விந்து தானம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை​களுக்கு அவர் தந்தை​யான​தாகவும் செய்திகள் இருக்​கின்றன.
  • ரஷ்யாவின் மார்க் ஸக்கர்​பர்க் என்று வர்ணிக்​கப்​பட்​டாலும், உண்மையில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸையே துரோவ் தனது ஆதர்ச​மாகக் கொண்டிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. ஜாப்ஸ் போலவே தன்னை ஒரு தொழில்​நுட்ப தீர்க்​கதரிசி​யாக​வும், கனிவற்ற மேலாளராகவும் துரோவ் கருதினார். இடைப்பட்ட ஆண்டு​களில் டெலிகிராம் சேவையின் வளர்ச்சி துரோவின் செல்வாக்கை மேலும் அதிகமாக்​கியது. சர்ச்​சைகளும் அதிகரித்தன.

தனியுரிமை நாயகன்:

  • இந்த நிலையில்தான் 2021இல் ஃபிரான்ஸின் குடியுரிமை பெற்றார். வேறு சில நாடுகளின் குடியுரிமையும் வைத்துள்ள அவர், எந்த ஒரு நாட்டிலும் அதிகக் காலம் தங்கிய​தில்லை எனக் கூறப்​படு​கிறது. அவர் ஃபிரான்ஸ் குடியுரிமை பெற அந்நாட்டு அதிபர் மக்ரூனே முக்கியக் காரணம் என்றும் இப்போது கூறப்​படு​கிறது.
  • ஃபிரான்ஸ் அதிபருக்கு துரோவ் நெருக்கமாக இருந்​த​தாகவும் கூறப்​படு​கிறது. இதன் காரணமாகத்தான் கைது செய்யப்​படும் நிலை வரும் என்பதை அவர் எதிர்​பார்த்திருக்க​வில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்​றனர். துரோவ் கைது விவகாரத்தில் கருத்​துரிமை - தனியுரிமை தொடர்பான விவாதமும் முக்கிய அங்கமாக அமைகிறது. தொழில்​நுட்ப மேடை தவறாகப் பயன்படுத்​தப்​படு​வதற்கு அதன் நிறுவனரைப் பொறுப்​பேற்கச் செய்வது சரியா என்னும் கேள்வி ஒரு பக்கம் எழுகிறது. மறுபக்​கத்தில் சட்டவிரோத, குற்றச் செயல்​களுக்காக ஒரு மேடை பயன்படுத்​தப்​படும்​போது, அதை நெறிப்​படுத்துவது தொடர்பான கேள்வியும் எழுகிறது.
  • தனியுரிமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட துரோவ், தவறான பயன்பாடுகளை நெறிப்​படுத்து​வதைவிட, தனியுரிமையே மிகவும் முக்கிய​மானது என்று ஒரு முறை கருத்துத் தெரிவித்​துள்ளார். உக்ரைன் போரின்​போது, தனது சொந்த நாட்டு அரசைப் பகைத்​துக்​கொண்டு அவர் கருத்​துரிமை பக்கம் நின்றுள்​ளார்.
  • இதற்கு முன் நிகழ்ந்​துள்ளதுபோல, இந்த சர்ச்​சையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இந்த வழக்கி​லிருந்து வெளிவந்து, அதிகாரத்​துக்கு எதிரான தனது பிம்பத்தை துரோவ் மேலும் வலுவாக்​கிக்​கொள்வார் என்று அவரது சுயசரிதை​யாளர் கோனோனவ் கூறுகிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்​போம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்