TNPSC Thervupettagam

பி.சி.ஓ.டி. பிரச்சினையில் இருந்து விடுபடுவது எப்படி

October 7 , 2023 462 days 488 0

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/07/xlarge/1134893.jpg உலக அளவில் பெண்கள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை சார்ந்த நோய்களில் முக்கியமாகக் கருதப்படுவது சினைப்பை நீர்க்கட்டி (PCOS / PCOD).

  • அண்மைக்காலமாக இந்த நோய்நிலையின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மட்டுமே சுமார் 7.9 கோடிப் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது வெறும் சினைப்பை, குழந்தைப்பேறு சார்ந்த நோய் மட்டுமல்ல. பெண்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய முக்கிய நோய்.

பி.சி.ஓ.எஸ். என்றால் என்ன

  • பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOS) / பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் (PCOD) என்பது இனப்பெருக்க வயதுடைய பெண்களில் ஏற்படும் ஹார்மோன் கோளாறு.
  • பொதுவாக பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. என்பது நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படும் ஒரு நோயாகும். இது தனி நோயல்ல. பல நோய் நிலைகளின் தொகுப்பு. சினைப்பையில் (ovary) நீர் நிரம்பிய சிறிய பைகள் பல உருவாகுகின்றன. இதையே நீர்க்கட்டிகள் (Cyst) என்கின்றனர். மாதவிடாய்ச் சுழற்சியில் சினைப்பையில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சினைமுட்டைகள் (ovum) முதிர்ச்சியடைந்து வெளிப்படும்.
  • ஆனால் பி.சி.ஓ.டி.-யில் சினைமுட்டைகள் பெரும்பாலும் சரிவர முதிர்ச்சியடைவதில்லை. இதனால், ஒழுங்கான மாதவிடாய்க்கும் கருவுறுதலுக்கும் தேவையான ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டீரோன், எப்.எஸ்.ஹெச். (Follicle-stimulating hormone), எல்.ஹெச். (Luteinizing Hormone) ஆகியவற்றின் அளவு மாறுகிறது. மேலும், கருப்பையில் ஆண்ட்ரோஜன்கள் (androgens) எனப்படும் ஆண் ஹார்மோன்கள் மிகுதியாகச் சுரக்கின்றன. இதனாலும் கருவுறுதலுக்குத் தடை ஏற்படுகிறது. எனவேதான் பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. என்னும் நிலை குழந்தையின்மைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. முக்கியமான நோயா

  • பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. என்பது கருவுறுதல் சம்பந்தப்பட்ட நோய்நிலை என்று மட்டும் கருத இயலாது. ஏனெனில் பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. காரணமாக ஏற்படும் சீரற்ற மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றால் பெண்களின் இயல்பான வாழ்க்கை கேள்விக்குள்ளாகிறது. மேலும் பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. உள்ள நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்புத் தன்மை (Insulin Resistance) ஏற்பட்டு நீரிழிவு நோய், இதய நோய் போன்றவையும் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆயுர்வேதப் பார்வையில்

  • ஆயுர்வேத மருத்துவமானது மனித உடலை மூன்று முக்கிய தோஷங்களாகப் பிரிக்கிறது. பொதுவாக, இனப்பெருக்க அமைப்பானது வாத தோஷத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
  • கருப்பையில் உள்ள சினைப்பாதைக் குழாய்களில் (ஃபலோபியன் டியூப்) சினைமுட்டை இயக்கத்திற்கு வாத தோஷம் பொறுப்பாகிறது. ‘அபான வாயு’ என்று அழைக்கப்படும் ஒரு துணை தோஷம் மாதவிடாய்ச் சுழற்சி சீராக ஏற்படுவதற்குக் காரணமாகும்.
  • பித்த தோஷம், உடலில் உள்ள ஹார்மோன்களை உற்பத்தி செய்வதிலும் அவற்றைச் சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. கப தோஷம், கருப்பை - கரு முட்டையின் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, ஹார்மோன்களின் சமநிலைக்கும் கருப்பை - கருமுட்டையின் ஆரோக்கியத்துக்கும் மூன்று தோஷங்களும் சமநிலையில் இருப்பது அவசியமாகும்.
  • இந்தச் சமநிலை மாறும்போது அதற்கான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதற்கு ஒரு முழுமையான சிகிச்சையை அளிப்பதே ஆயுர்வேத மருத்துவம். எனவே, ஆயுர்வேத சிகிச்சையானது ஒவ்வொரு நபருக்கும் உடல் நிலைக்கும் ஏற்ப மாறுபடலாம். சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு தகுந்த ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

பஞ்சகர்மா சிகிச்சை

  • பஞ்சகர்மா சிகிச்சையானது இனப் பெருக்க அமைப்பில் உள்ள நஞ்சுகளை நீக்கியும் கருப்பை, யோனி, சினைப் பாதை, கருமுட்டை போன்ற பல்வேறு உறுப்புகளுக்கு பலமூட்டவும் செய்கிறது. உடலின் ஹார்மோன் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.

உணவு முறை மாற்றங்கள்

  • பி.சி.ஓ.எஸ். உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் உடல்பருமன் ஏற்படும். இந்த நிலையில் உடல் எடையைக் குறைப்பது நோய்நிலையை மாற்றுவதில் முக்கியப் பங்கு அளிக்கிறது. சீரான உணவுக் கட்டுப்பாடு, சரியான உடற்பயிற்சி ஆகியவை இன்றி யமையாததாகின்றன. உணவில் மிகுதியான நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fat), அதிக உப்பு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் (மாவுப் பொருள்கள்) ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வதைக் குறைக்க வேண்டும்.
  • ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். துரித நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், வெளிப்புற விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். வாய்ப்பு இருந்தால் நீச்சல் பயிற்சி செய்தல், உடற்பயிற்சி கூடம் செல்லுதல் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.
  • மேலும், அத்திப்பழம், மாதுளம்பழம், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக் களி, நல்லெண்ணெய், கருப்பட்டி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். பி.சி.ஓ.எஸ். உடன் போராடும் பெண்கள் ஆங்கில மருத்துவம் மட்டுமன்றி பாரம்பரிய மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறைகளும் உதவும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/10/07/16966443172006.jpg

கண்டறிவது எப்படி  

  • மேற்கண்ட அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு வயிறு - கூபக (Andomen & Pelvis) பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து இந்நிலையைக் கண்டறியலாம். எனினும், ஸ்கேன் பரிசோதனையில் polycystic appearing ovaries என்று உள்ளதை மட்டும் கொண்டு ஒருவருக்கு பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. உள்ளது என்று முடிவுக்கு வந்துவிட இயலாது. இந்த அறிகுறிகளைக் கொண்டும் சில ஹார்மோன் பரிசோதனைகள், தைராய்டு பரிசோதனை, குறிப்பிட்ட சில ரத்தப் பரிசோதனைகள் போன்றவற்றைக் கொண்டும் ஒருவருக்கு பி.சி.ஓ.எஸ்./பி.சி.ஓ.டி. உள்ளதா என்பதை மருத்துவர் முடிவுசெய்வார்.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/10/07/16966443402006.jpg

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்