TNPSC Thervupettagam

பித்தப்பைக் கற்கள் ஏன் தோன்றுகின்றன?

November 16 , 2024 61 days 67 0

பித்தப்பைக் கற்கள் ஏன் தோன்றுகின்றன?

  • என்னைச் சந்தித்த 60 வயது முதியவருக்குச் சாப்பிட்ட பின் உப்புசம், வயிற்றுக் குத்தல், வயிற்று வலி, பின் முதுகுப் பகுதி வரை வலி பரவுதல் ஆகிய பிரச்சினைகள் இருப்பதாகக் கூறினார். அவருக்குப் பரிசோதனை செய்த பின், வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்ததில், பித்தப்பையில் கற்கள் இருந்தது தெரியவந்தது. மேற்கத்திய நாடுகளிலேயே அதிகமாகக் கண்டறியப்பட்டு வந்தபித்தப்பைக் கற்கள் பிரச்சினை தற்போது இந்தியாவில் அதிகரித்துவருகிறது.
  • இந்தியாவைப் பொறுத்த வரை தென்னிந்தியர்களைவிட வட இந்தியர்களுக்குப் பித்தப்பைக் கற்கள் கண்டறியப்படுவது இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. பித்தப்பைக் கற்கள் பிரச்சினைக்கு மாறிவரும் உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தராத வாழ்க்கை முறை ஆகியவை முக்கியக் காரணங்கள்.
  • இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 6 முதல் 9 சதவீதத்தினருக்குப் பித்தப்பைக் கல் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டு கின்றன. இதில் பெண்களிடையே 10%, ஆண்களுக்கு 3% பாதிப்பு உள்ளது. இளை யோரைவிட முதியவர்களிடத்தில் பித்தப்பைக் கல் பிரச்சினை அதிகம் காணப்படுகிறது.

சிறிய சுருக்குப்பை:

  • பித்தப்பை என்பது கல்லீரலுக்கு அடியில் இருக்கும் சிறு சுருக்குப்பை போன்ற உறுப்பாகும். கல்லீரல் என்பது தொழிற்சாலை என்றால் நமது பித்தப்பைதான் அதன் சேமிப்புக் கிடங்கு. கல்லீரலில் இருந்து உற்பத்தியாகும் பித்த நீர், ‘காமன் ஹெபாடிக் டக்ட்’ எனும் பொதுக் கல்லீரல் குழாய் வழியாக வந்து பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து ஆகிய மூன்று முக்கியச் சத்துகள் அடங்கியுள்ளன. இதில் கொழுப்புச் சத்தைச் செரிமானம் செய்வதற்குக் கல்லீரல் சுரக்கும் பித்த நீர் இன்றியமையாததாக இருக்கிறது.

பித்தப்பையின் பணி:

  • கொழுப்பு நிரம்பிய உணவான மாமிசம், முட்டை, தேங்காய், நெய், வெண்ணெய், பால், பாதாம், நிலக்கடலை போன்றவற்றை உண்ணும்போதெல்லாம் பித்தப்பை சுருங்கித் தன்னகத்தே சேமித்து வைத்துள்ள பித்த நீரைக் குடலுக்குள் அனுப்பும். நாம் சாப்பிட்ட உணவில் உள்ள கொழுப்பை இந்தப் பித்த நீர், செரிமானம் செய்யும். இந்தப் பித்த நீரில், 97% நீரும் கொஞ் சம் பித்த உப்புகளும் கொலஸ்ட்ராலும் கலந்துள்ளன. பித்தப்பையில் பித்த நீரானது தொடர்ந்து சேகரிக்கப்பட்டு அடர்த்தி நிலையை அடைகிறது. இதன் காரணமாகச் சிலருக்குக் கற்கள் தோன்றுகின்றன.

பிற காரணங்களும் வகைகளும்:

  • கல்லீரலில் உள்ள ஏபிசிஜி8 எனும் மரபணுவில் ஏற்படும் அங்கமாற்றம் காரணமாகக் அதிகமான கொலஸ்ட்ரால் மூலம் பித்த நீரை கல்லீரல் உருவாக்குகிறது. இதன் காரணமாக இந்தியர்களுக்கு பித்தப்பைக் கற்கள் அதிகமாகத் தோன்று கின்றன என்கின்றன ஆய்வுகள். பித்தப்பைக் கற்களுள் கொலஸ்ட்ரால் கற்கள், பித்த நிறமிக் கற்கள் ஆகிய இரண்டு வகை உள்ளன.
  • வட இந்தியர்களிடையே கொலஸ்ட்ரால் கற்களும் தென்னிந்தி யர்களிடையே பித்த நிறமிக் கற்களும் பெரும்பான்மையாகக் கண்டறியப்படுகின்றன. 40 வயதைத் தாண்டியவர்கள், பெண்கள், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையில் இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டோர், அதிவிரைவாக உடல் எடையைக் குறைப்பவர்கள், தொடர்ந்து கருத்தடை மாத்திரை உபயோகிப்பவர்கள், உடல் எடை குறைய பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆகியோருக்குப் பித்தப்பைக் கற்கள் ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன?

  • பித்தப்பைக் கற்கள் இருக்கும் பெரும்பான்மையினருக்கு எந்த அறிகுறிகளும் தோன்றாமல் அமைதியாகவே இருக்கும். பல நேரம் வேறு காரணங்களுக்கு வயிற்றுப் பகுதிக்கு அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யும்போது தற்செயலாகப் பித்தப்பைக் கற்கள் கண்டறியப்படுவதுண்டு. பித்தப்பைக் கற்கள் சிலருக்கு அறிகுறிகளையும் காட்டுவதுண்டு.
  • பித்தப்பைக் கற்களால் மேல் வலப்பக்க வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படும். அந்த வலியானது முதுகுப் பகுதிக்குப் பரவும். இதனுடன் வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்றவை தோன்றலாம். இத்தகைய நிலை தொடர்ந்தால் பித்தப்பை அழற்சி நிலை உண்டாக லாம். மேலும், கிருமித்தொற்றும் ஏற்படலாம். பித்தப்பைக் கற்கள் கல்லீரலின் குழாயில் பித்தம் வரும் பாதையை அடைத்துக் கொண்டால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். கணையத்தின் குழாயை அடைத்துக்கொண்டால் கணைய அழற்சி நோய் ஏற்படும்.
  • பித்தப்பையின் குழாயை அடைத்துக் கொண்டால் பித்தப்பை அழற்சியும் தொற்றும் உண்டாகலாம். இவற்றைக் கவனிக்காமல் விட்டால் கல்லீரல், கணையம், பித்தப்பை உள்ளிட்ட உறுப்புகளில் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும், தொற்றானது ரத்தம் வழியாகச் சிறுநீரகம், நுரையீரல், மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்குப் பரவி தீவிரத் தொற்று நிலையை உண்டாக்கக்கூடும். வியர்த்தல், நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் ஏற்படுதல் ஆகியவை பித்தப்பைக் கற்களின் அறிகுறிகளாக இருக்கலாம்.

பரிசோதனைகள் - சிகிச்சைகள்

  • வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்வதன் மூலம் பித்தப்பைக் கற்களைக் கண்டறிய முடியும். பொதுவாக எந்தவித அறிகுறி களையும் தோற்றுவிக்காத பித்தப் பைக் கற்களுக்கு எந்தச் சிகிச்சையும் தேவையில்லை. எனினும் மேற்கூறிய வகையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பித்தப்பைக் கற்கள், அபாயகரமான பித்தப்பாதை அடைப்பாகவோ கணைய அழற்சித் தொற்று நிலையாகவோ மாறலாம் என்பதால் லேபரோஸ்கோபிக் பித்தப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
  • இவையன்றி கொலஸ்ட்ரால் பித்தப்பைக் கற்களைக் கரைக்கும் சிகிச்சையாக, பித்த அமிலமான அர்சோ டீஆக்சி கோலிக் அமிலமானது மாத்திரைகளாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும் இந்தச் சிகிச்சை உடனடியாகப் பலன் தராது. நீண்ட நாள்கள் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மாத்திரைகளை நிறுத்தும் போது பித்தப்பைக் கற்கள் மீண்டும் தோன்றும்.

உணவும் கைகொடுக்கும்:

  • பித்தப்பைக் கற்கள் இருப்ப வர்களுக்குக் குறைவான கொழுப்புச் சத்து, அதிக நார்ச்சத்து கொண்ட உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பித்தப்பைக் கற்கள் தோன்றாத வண்ணம் தடுக்கவும் பித்தநீர் சுரப்பு தேக்கமடையாமல் முறையாகச் செயல்படுவதற்கும் தினசரி உணவில் பால், முட்டை, மாமிசம் உள்ளிட்ட ஆரோக்கியமான கொழுப்புச் சத்து நிறைந்த உணவையும் சமவிகிதத்தில் உட்கொள்வது நல்லது. அதிக இனிப்பு, குறிப்பாகச் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த பானங்கள், பேக்கரி உணவைத் தவிர்க்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உணவில் கொழுப்புச் சத்தை மிகக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளும்போதும் பித்த நீர் சுரப்புக்கு வேலையில்லாமல் பித்தப்பையில் பித்த நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனாலும் பித்தப்பைக் கற்கள் தோன்றலாம். விரைவாக உடல் எடையைக் குறைப்பவர்கள் தங்களது உணவில் தினசரி 30 கிராம் அளவிலாவது கொழுப்புச் சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்வது பித்தப்பைக் கற்கள் தோன்றாமல் தடுக்கும்.
  • நீண்ட கால விரத முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் விரதத்தை விடும்போது ஆரோக்கியமான கொழுப்புச் சத்து இருக்கும் உணவைச் சாப்பிடுவது பித்தப்பைக் கற்கள் தோன்றாமல் தடுக்கும். தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையைப் பருமனில்லாமல் சரியான அளவில் பராமரிப்பதன் மூலமும் பித்தப்பைக் கற்கள் மீண்டும் உண்டாகாமல் தவிர்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்