பின்னோக்கிப் பறக்கும் ஓசனிச்சிட்டு
- பறவைகளுக்குப் பொதுவாக இருக்கும் இறக்கை வகைகள் அல்லாமல், ஒரு சிறப்பான இறக்கை வகையும் உள்ளது. அது ஓசனிச்சிட்டுகளுக்கு மட்டும்தான் இருக்கிறது. மற்ற எல்லாப் பறவைகளும் முன்னோக்கி மட்டுமே செல்லும் ஆற்றல் கொண்டவை. ஆனால், ஓசனிச்சிட்டு தனது இறக்கை அடிக்கும் சாய் கோணத்தை மாற்றுவதன் மூலம், ஒரே இடத்தில் இருக்கவும், முன்னோக்கிச் செல்லவும், வேகமாகச் பின்னோக்கிச் செல்லவும் முடிகிறது.
- பறவை வகைகளிலேயே இவை மிகச் சிறிய பறவைகள். சில செ.மீ. நீளமும் சில கிராம் எடையும் கொண்டுள்ளன. 5 செ.மீ. நீளமும் 2 கிராம் எடையும் கொண்ட ’தேனீ ஓசனிச்சிட்டு’ உலகின் மிகச் சிறிய பறவையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஓசனிச்சிட்டுகளால் அந்தரத்தில் இருந்து கொண்டு தேன் குடிக்க முடியும். மணிக்கு 10 கி.மீ. முதல் 30 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய முடியும். நொடிக்கு 10 முதல் 80 முறை தேவைக்கு ஏற்ப சிறகடிக்கிறது.
- புறா போன்ற பறவைகள் நொடிக்கு 5 முறை மட்டும்தான் சிறகடிக்கும். பறவையின் எடைக்கு ஏற்ப சிறகடிக்கும் வேகமும் மாறுபடுகிறது. மிகச் சிறிய ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 80 முறையும் நடுத்தர எடை கொண்ட ஓசனிச்சிட்டுகள் 20 முதல் 25 முறையும், 20 கிராம் எடை கொண்ட பெரிய ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 10 முறைக்கு அதிகமாகவும் சிறகடிக்கின்றன.
- அதேபோல் இந்தப் பறவையின் இதயத்துடிப்பு மனிதனின் இதயத் துடிப்பைவிட, 10 மடங்கு அதிகம். அதிவேகமாக இறகை அசைப்பதால் இவை பறக்கும்போது ஓசையை எழுப்புகின்றன. அதனால்தான் ‘ஓசனிச்சிட்டு’ என்று பெயர். இவற்றின் நீண்ட, மெல்லிய அலகு மலர்களிலிருந்து தேனை எளிதில் உறிஞ்ச உதவுகிறது. அந்தரத்தில் இருந்துகொண்டே தேனைக் குடிக்க வேண்டியது இந்தப் பறவையின் வாழ்வாதாரத்துக்குத் தேவையாக உள்ளது.
- மலர்களிலிருந்து தேனை உறிஞ்சும்போது பூவின் முன்பாக இறக்கையடித்துக் கொண்டே நீண்ட அலகைப் பூவுக்குள் செலுத்தி, தேனைக் குடிக்கிறது. ஒரு மணி நேரம் நிற்காமல் ஓசனிச்சிட்டுகள் பறக்கும்போது,குறிப்பிடத்தக்க அளவில் உடல் எடையை இழக்கின்றன. அதனால் 10 நிமிட இடைவெளியில் உணவைத் தேடி அருந்திக் கொண்டே இருக்கின்றன.
- ஒரு நாள் முழுவதும் பறக்கும்போது தனது மொத்த எடையைப் போல் ஒன்றிலிருந்து இரண்டு மடங்கு உணவை இவை உண்ண வேண்டிய அவசியம் இந்தப் பறவைகளுக்கு இருக்கிறது. தங்கள் உணவு சேகரிப்பின்போது தேனீக்கள் போலவே மகரந்தச் சேர்க்கைக்கும் இந்தப் பறவைகள் உதவுகின்றன.
- ஓசனிச்சிட்டுகளைப் போலவே இறக்கை அடிக்கும்போது ஒரே இடத்தில் இருக்கக்கூடிய திறமையை மீன்கொத்திப் பறவை பெற்றுள்ளது. நீர்ப்பரப்பில் சற்று உயரத்தில் பறந்துகொண்டே, தனக்குத் தேவையான மீன் வருகிறதா என்பதைப் பார்க்கக்கூடியது மீன்கொத்தி. பெயருக்கு ஏற்ப நீரில் இருக்கும் மீனை வேட்டையாடி உண்ணும்.
- பறவை இனங்களிலேயே அதிக எடையுடன் சிறகடித்துக்கொண்டே ஒரே இடத்தில் இருக்கும் திறமை மீன்கொத்திக்கு மட்டும்தான் இருக்கிறது. இதன் எடை 25 - 30 கிராம். ஒரே இடத்தில் இறக்கையடித்துக் கொண்டிருக்கும்போது, நொடிக்கு 10 முறை வரை சிறகடிக்கிறது. அதிகமாகச் சிறகடிக்கும் பறவைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். அதற்கு ஏற்றாற்போல் தனது மொத்த எடையில் பகுதி எடைக்குத் தினமும் உணவாக இந்தப் பறவைகள் உண்கின்றன.
- இந்தப் பறவைகளின் தனித்துவமான இறக்கை வடிவமைப்பு, அவை ஒரே இடத்தில் இறக்கையடித்துக் கொண்டே இருப்பதற்கு உதவி செய்கிறது. அதிக வேகத்தில் இறக்கை அடிக்க வேண்டும் என்றால், அதற்கு வலுவான தசைகளும் எலும்புகளும் தேவைப்படுகின்றன.
- அதேபோன்று ஓசனிச்சிட்டுகளின் எலும்பு அமைப்பு, அவற்றின் இறக்கைகளைச் சுழற்ற அனுமதிக்கிறது. இறக்கையை மாற்றி அமைப்பதன் மூலம் மேல் நோக்கு விசையையும் முன்னோக்கு விசையையும் பின்னோக்கு விசையையும் உருவாக்குவதற்கு இதனால் முடிகிறது. அதனால் எல்லாத் திசைகளிலும் பறக்க முடிகிறது. இது போன்ற அமைப்புகள் மற்ற பறவைகளுக்கு இல்லாததால், அவற்றால் பறக்கும்போது அந்தரத்தில் நிற்கவோ அல்லது பின்னோக்கிச் செல்லவோ முடிவதில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)