TNPSC Thervupettagam

பிரக்ஞானந்தா: இதயங்களை வென்ற இளம் வீரர்

August 28 , 2023 502 days 348 0
  • அசர்பைஜான் நாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார், 18 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும் சர்வதேசத் தரவரிசையில் முதல் நிலை வீரருமான நார்வேயைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனிடம் (32) இறுதிப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இதயங்களை வென்றிருக்கிறார் இந்திய வீரரான பிரக்ஞானந்தா.
  • உலகக் கோப்பை செஸ் போட்டித் தொடர், 2000 ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. முதல் இரண்டு தொடர்களில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் கோப்பையை வென்றார். அவருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஒருவரும் உலகக் கோப்பைத் தொடரை வென்றதில்லை. இந்த முறை இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறியபோது, 21 ஆண்டுகள் கழித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர், மிக இளைய வீரர் ஆகிய பெருமைகளை அவர் பெற்றார்.
  • கடுமையாகவும் இழுபறியாகவும் நீடித்த காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் அபாரமாக விளையாடி பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார். தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கரான காருணாவை, 29ஆவது இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா அரையிறுதியில் வீழ்த்தினார்.
  • இறுதிப் போட்டியில் கிளாசிக்முறையில் மெதுவாக விளையாடப்பட்ட முதல் இரண்டு ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தன. எனவே, விரைவாக விளையாடக் கூடிய ரேபிட்முறையில் டை-பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது.
  • இதில் முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றிபெற்றார். இரண்டாவது ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா வெற்றிவாய்ப்பை இழந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு இணையவழிப் போட்டிகளில் 3 முறை கார்ல்சனைப் பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், இந்த முறை தனது பழுத்த அனுபவத்தின் மூலம் சில அதிரடியான உத்திகளைக் கையாண்டு கார்ல்சன் வெற்றிபெற்றார்.
  • இது எதிர்பார்த்திராத ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளாக செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் கார்ல்சலுடன் தற்போதைய இறுதிப் போட்டியின் 4 சுற்றுகளில் 3 போட்டிகளில் பிரக்ஞானந்தா டிரா கண்டதுதான் அசாதாரணமான சாதனை.
  • இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்திருந்தாலும், விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தியர் ஒருவர் இறுதிப் போட்டிவரை சென்றிருப்பது பெருமைக்குரியது. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கிராண்ட்மாஸ்டர்கள் உருவெடுத்து வருகிறார்கள்.
  • இந்திய செஸ் விளையாட்டின் தலைநகராக சென்னை திகழ்ந்துவருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. உலக அளவிலான தொடர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சாதிப்பது, இளைய தலைமுறையினர் செஸ் விளையாட்டை நோக்கி வருவதற்கான உந்துதலாக அமையும்.
  • 2002இல் ஹைதராபாதில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டிக்குப் பிறகு, உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவில்லை. சென்னையில் அந்தப் போட்டியை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வது அவசியம். அது மேலும் பல பிரக்ஞானந்தாக்கள் உருவாக வழிவகுக்கும்!

நன்றி : இந்து தமிழ் திசை (28– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்