TNPSC Thervupettagam

பிரக்ஞானந்தா: உலகம் வியக்கும் கிராண்ட்மாஸ்டர்

February 27 , 2022 890 days 990 0
  • உலக சாம்பியனை வீழ்த்திவிட்டோம் என்கிற பெருமிதமோ கொண்டாட்டமோ கொள்ளாமல் சலனமே இன்றி ‘நான் தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது’ எனக் கூறி விடைபெறுகிறார் 16 வயதே ஆகும் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. வயதுக்கு மீறிய பக்குவத்தோடு அவர் தனது வெற்றியைக் கொண்டாடாமல் இருக்கலாம்.
  • ஆனால், நாம் கொண்டாடித்தான் ஆக வேண்டும். ஏனெனில், இந்திய சதுரங்கத்துக்கு மாபெரும் பெருமையளிக்கக்கூடிய வகையில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருக்கிறார்.
  • இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அவர் தோற்கடித்த மேக்னஸ் கார்ல்சனை பற்றிப் பேசியாக வேண்டும். அப்போதுதான், பிரக்ஞானந்தாவின் வெற்றியின் வீரியத்தை முழுமையாக உணர முடியும்.
  • 31 வயதாகும் மேக்னஸ் கார்ல்சன் நார்வே நாட்டைச் சேர்ந்தவர். பிரக்ஞானந்தாவை போலவே கார்ல்சனும் சிறுவயதிலிருந்தே சதுரங்கப் போட்டிகளில் அதிக ஆர்வத்தோடு பங்கேற்றவர். தனது 13 வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.
  • அந்தச் சிறுவயதிலேயே சதுரங்க வரலாற்றின் ஆகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ரஷ்யாவின் அனடோலி கார்போவை ப்ளிட்ஸ் போட்டி ஒன்றில் தோற்கடித்து சதுரங்கக் கட்டங்களுக்குள் அழுத்தமாகக் கால்பதித்தார். 19 வயதிலேயே உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தினார்.
  • அன்றைக்கு அந்த அரியாசனத்தில் அமர்ந்தவர் இன்று வரை இறங்கவில்லை. இப்போதும் அவரே உலகின் நம்பர் 1. இடையில், 2013-ல் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராகப் போட்டியிட்டு முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • இந்தியாவின் ஆகச் சிறந்த வீரரான விஸ்வநாதன் ஆனந்தால், கார்ல்சனுக்கு எதிராக ஒரு சுற்றைக்கூட வெல்ல முடியவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக கார்ல்சன் மோதினார்.
  • ஆனந்தால் ஒரே ஒரு சுற்றை மட்டுமே வெல்ல முடிந்தது. மீண்டும் கார்ல்சன் உலக சாம்பியன் ஆனார். அடுத்தடுத்து சதுரங்கத்தில் ஆதிக்கம் புரிந்துவரும் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த வீரர்களை வீழ்த்தி, தொடர்ச்சியாக 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று ஒரு உச்சபட்ச நிலையை அடைந்திருக்கிறார். க்ளாஸிக், ரேபிட், ப்ளிட்ஸ் என அத்தனை வடிவ சதுரங்கப் போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் ஒரே வீரரும் கார்ல்சன்தான்.
  • இப்படியான ஒரு வீரரைத்தான் 16 வயதே ஆன தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இப்போது வீழ்த்தியிருக்கிறார். பிரக்ஞானந்தாவும் 12 வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று, சதுரங்க ஆட்டத்தின் வருங்கால நம்பிக்கையாகப் பார்க்கப்பட்டவர். விஸ்வநாதன் ஆனந்த் போன்ற மூத்த வீரர்களின் வழிகாட்டுதலில் தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டுவருபவர்.
  • இணையம் வழியாக நடைபெறும் ‘Airthing Masters’ எனும் ரேபிட் வடிவிலான தொடரின் எட்டாவது சுற்றில் பிரக்ஞானந்தாவும் கார்ல்சனும் மோதினார்கள். ரேபிட் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆடப்படும் சதுரங்க ஆட்டமாகும். உலகெங்கிலிருந்தும் 16 பேர் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தனர். ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் நாளில் மட்டும் பிரக்ஞானந்தா 4 வீரர்களுடன் மோதியிருந்தார்.
  • இந்த 4 போட்டிகளில் மூன்றில் தோற்று ஒன்றில் மட்டுமே வென்றிருந்தார். முதல் நாளை விட இரண்டாம் நாளில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக சவால்கள் காத்திருந்தன. சில முன்னணி வீரர்களை இரண்டாம் நாளில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில், முக்கியமானவர்கள் கார்ல்சனும் லெவான் அரோனியனும். கார்ல்சன் உலகத் தரவரிசையில் நம்பர் 1 வீரர் என்றால், லெவான் நம்பர் 4 வீரர். பிரக்ஞானந்தாவோ 193-வது இடத்தில் இருப்பவர். கோலியாத்தை தாவீது தோற்கடித்த அதே கதைதான். ஜாம்பவான்களான கார்ல்சன், அரோனியன் இருவரையும் ஒரே நாளில் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.
  • குறிப்பாக, உலக சாம்பியனான கார்ல்சனை 39 நகர்வுகளில் ஆட்டத்திலிருந்து பின்வாங்க வைத்து அசத்தியிருந்தார். விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்குப் பிறகு கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.
  • மேலும், கார்ல்சனைத் தோற்கடித்த வீரர்களில் மிகவும் இளமையானவர் பிரக்ஞானந்தாதான். தோற்றவுடனேயே தாமதமின்றிக் கணினியை அணைத்துவிட்டு வெளியேறிய கார்ல்சனின் மனம் கார்போவை 13 வயதில் தோற்கடித்த அந்த நினைவுகளை நோக்கி நிச்சயம் அலைபாய்ந்திருக்கும்.
  • பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர், வங்கி ஊழியர். பிரக்ஞானந்தாவின் சகோதரியைத்தான் முதலில் செஸ் பயிற்சிக்காக அனுப்பியிருக்கிறார்கள். அக்காவின் மூலம் சதுரங்கத்தை அறியத் தொடங்கியவருக்கு ஒருகட்டத்தில் இந்த விளையாட்டின் மீது கொள்ளை ஆர்வம் ஏற்பட்டது. ஆறு வயதிலேயே புனேவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா பதக்கம் வென்றார்.
  • அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது. அதன் பிறகு, பிரக்ஞானந்தாவின் வீட்டு வரவேற்பறை பதக்கங்களாலும் கோப்பைகளாலும் நிறையத் தொடங்கியது. இளம் வயதிலேயே ‘இன்டர்நேஷனல்ஸ் மாஸ்டர்’ எனும் பெருமையையும் பெற்றார். 2018-ல் இத்தாலியில் நடந்த க்ரெடின் ஓப்பன் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் வென்றார். அப்போது அவருக்கு வயது 12 ஆண்டுகள் 10 மாதம் 13 நாட்கள் ஆகும்.
  • அன்றைய தேதிக்கு உலக அளவில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற இரண்டாவது இளம் வீரர் அவரே. ‘கணினியுடன் போட்டி போடுவது ஓட்டப்பந்தயத்தில் காருடன் போட்டி போடுவது போன்றது’ என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறியிருக்கிறார். ஆனால்பிரக்ஞானந்தா சூரக்கணினிகளையும் (Super Computer) திணறடித்தவர்.
  • பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி, சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் பக்கங்கள் விஸ்வநாதன் ஆனந்தோடு முடிந்துவிடப்போவதில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். இந்தியா சார்பில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் வீரர் அவர்தான். அடுத்த 22 ஆண்டுகளில் அதாவது 2010 வரைக்கும் மேலும் 22 வீரர்கள் மட்டுமே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றிருந்தனர்.
  • ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பரவலாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் இப்போதைய கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை 72. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லாதிக்க நாடுகளோடு முட்டி மோதும் அளவுக்கு இந்தியாவிலும் கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். பிரக்ஞானந்தா போன்ற இளம் வீரர்களின் வெற்றி இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் என நம்பலாம்.

நன்றி: தி இந்து (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்