- பெருகிவரும் கரோனா அலையைக் கருத்தில் கொண்டு வங்கத்தில் காங்கிரஸ் திட்டமிட்டிருந்த தன்னுடைய பேரணிகள் அனைத்தையும் ராகுல் காந்தி ரத்துசெய்திருப்பது முக்கியமான ஒரு நடவடிக்கை.
- முன்னதாக, மார்க்ஸிஸ்ட் கட்சி இந்த விஷயத்தைப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. எல்லாக் கட்சிகளுமே பேரணிகளையும் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதையும் தடைசெய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத் தலைமைக்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியும் எழுதியிருக்கிறார்.
- மக்களின் அல்லலைப் பின்னுக்குத் தள்ளி வங்கத் தேர்தலை ஒரு போர்போல பாவித்துச் செயலாற்றிவரும், மத்தியில் ஆளும் பாஜக – மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே மேற்கண்ட நடவடிக்கைகள் ஓர் அழுத்தத்தை உருவாக்கியிருக்கின்றன.
- வங்கத்திலும் நிலைமை சரியில்லை. கரோனா எதிர்ப்பு மருந்துகள் கிடைப்பதில் நிலவும் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா எழுதியிருக்கும் கடிதம் இதைப் பட்டவர்த்தனம் ஆக்குகிறது. ‘ஒவ்வொரு நாளும் 6,000 ரெம்டிசிவர் டோஸ்கள் தேவைப்படும் இடத்தில் 1,000 டோஸ்கள் மட்டுமே கிடைக்கின்றன’ என்று சொல்லும் அந்தக் கடிதம் பல பற்றாக்குறைகளைப் பட்டியலிடுகிறது.
- ஒன்றிய அரசு - மாநில அரசு இரண்டின் பொறுப்பற்றத்தனமும் இதில் இருக்கிறது. ஆனால், தேர்தலின் பெயரால் தொடர் பிரச்சார மேளாக்களை இரு கட்சிகளும் நடத்திக்கொண்டிருந்தன.
- பாஜக 20 மோடி பேரணிகள், 50 அமித் ஷா பேரணிகள் என்று திட்டமிட, பதிலுக்கு திரிணமூல் காங்கிரஸும் மம்தா பங்கேற்கும் பேரணிகளை மாநிலம் முழுவதும் திட்டமிட்டு இறங்கியது. எல்லாம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணிகள்.
- இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் இந்தப் பொறுப்பற்றத்தனத்தில் முக்கியமான பங்கு உண்டு.
- இப்படி ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேர்தலை விரித்து நடத்தும் முரட்டுத் துணிச்சல் வேறு எங்குள்ள அமைப்புக்கும் இருக்குமா என்று தெரியவில்லை.
- தேர்தலின் பெயரால், ஒரு நாட்டின் பிரதமரே லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணிகளில் தொடர்ந்து பங்கேற்றுக்கொண்டிருக்கும் சூழல் நிலவும்போது நாட்டில் வேறு எந்தக் கூடுகையையும் தடுக்கக் கூடிய தார்மிகத்தை அரசின் அமைப்புகள் இழந்துபோயின. கும்பமேளாவுக்கு லட்சங்களில் கூட்டம் கூடியது ஓர் உதாரணம்.
- தேர்தல் பிரதான கவனம் பெற்றதில் மக்களின் உயிர்ப் பாதுகாப்பு பின்தள்ளப்பட்டது. கடைசியாகத் தன்னுடைய கட்சியின் பிரச்சாரத் திட்டங்களிலும் கட்டுப்பாட்டை அறிவித்திருக்கும் முதல்வர் மம்தா, ‘கரோனாவைக் கருத்தில் கொண்டு மிச்சமிருக்கும் மூன்று கட்ட வாக்குப்பதிவை ஏற்கெனவே திட்டமிட்டபடி இழுத்தடிக்காமல் முன்கூட்டியதாக ஓரிரு நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கான சாத்தியப்பாட்டை நோக்கித் தேர்தல் ஆணையம் நகரட்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (20 - 04 - 2021)