- இந்தச் சிறிய மக்கள் கூட்டத்துக்குதான், தோன்றிய நாளாக சிக்கல். இருபதாம் நூற்றாண்டில் இஸ்ரேல் உருவானது முதல் அந்த சிக்கலின் கணம் கூடி கொண்டே வந்து, 2010-க்குப் பிறகு புதிய பரிமாணம் எடுத்தது.
- இந்தப் பக்கம் ஃபத்தா.அந்தப் பக்கம் ஹமாஸ். இரண்டு தரப்புகள். மேற்சொன்ன ஐந்தரை லட்சம்பேரின் சுதந்திரமும் அமைதியான வாழ்க்கையும்தான் இந்த இரு தரப்புக்குமே லட்சியம்.
- அந்த லட்சியத்தில் கலப்படம் கிடையாது. அதில் சந்தேகம் கொள்ள அவசியமேயில்லை. ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவதுஒரு காரணம் சொல்லி, பாலஸ்தீனர்களின் நிம்மதி உருக்குலைக்கப்பட்டு விடுகிறது. அதைச் செய்வது இஸ்ரேல்தான் என்றாலும் பின்னணியில் அவர்களுக்கு இருக்கும் அமெரிக்க ஆதரவு,செய்வதைத் திருந்தச் செய்ய வைக்கிறது. இந்த வரிசையில் பாலஸ்தீனர்களின் இன்றைய பிரச்சினையாக முன்வைக்கப்படுவது, ஹமாஸ்.
- ஃபத்தா உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கங்களையும் இஸ்ரேல் அரசு தீவிரவாத இயக்கங்களாகத்தான் சித்தரித்து வந்திருக்கிறது. ஆனால், இப்போது அப்படிசொல்கிறார்களா என்று பாருங்கள். நிச்சயமாகக் கிடையாது. பொருட்படுத்திப் பேசத்தக்க பிரதிநிதி ஆக்கிக் கொண்டு விட்டார்கள். ஹமாஸ், போர் நிறுத்தம் அறிவித்து, தேர்தலில் நின்று வெற்றியே பெற்றாலும் தீவிரவாத இயக்கம்தான் அவர்களுக்கு.
இது ஏன் இப்படி இருக்கிறது
- சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டிய சங்கதி இது. இஸ்ரேலை அவர்கள் ஏற்பது, இஸ்ரேல் என்கிற தேசத்தை அங்கீகரிப்பது அவ்வளவு முக்கியமானதா என்றொரு கேள்வியை முன்வைத்தால், அதற்குப் பளிச்சென்று ஒருபதில் இராது. உலகின் சக்தி மிக்கவல்லரசின் வலக்கரமாக இருக்கும்தேசம் இஸ்ரேல். எண்ணெய் வளம்மிக்க இதர மத்தியக் கிழக்குதேசங்களைக் காட்டிலும் இஸ்ரேலியமக்கள் வளமாகவே வாழ்கிறார்கள். வலுவான ஜனநாயகப் பின்னணி, வளமான பொருளாதார பலம், உலகையே திகைப்பூட்டச் செய்யும் தொழில்நுட்ப சாகசங்கள், இதர அனைத்துத் துறைகளிலும் கட்டற்ற வளர்ச்சி என்று எங்கோ சென்று கொண்டிருக்கும் தேசம். வெறும் 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களை (அதிலும் பெரும்பான்மையானோர் அகதி முகாம்களில் இருப்பவர்கள்) ஆளும் ஹமாஸின் அங்கீகாரம் அவர்களுக்கு ஏன் அவசியமாகிறது?
- அல்லது இதனை வேறு விதமாகவும் பார்க்கலாம். பாலஸ்தீன நிலப்பரப்பின் பெரும்பான்மை என்பது மேற்குக் கரைப் பகுதி. அதனை ஆளும் பாலஸ்தீன அத்தாரிட்டி இக்கணம் வரை இஸ்ரேல் அரசுடன் சமரசமாகச் செல்லத்தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்தி, ஏதாவது நல்லது நடக்க வழியுண்டா என்று பார்ப்பதில் முனைப்பாக இருக்கிறது. மம்மூத் அப்பாஸின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தால் போதாதா?
- மூன்றாவதாகவும் ஒரு வழியுண்டு. அது மக்கள் வழி. ஹமாஸை அடிபணியவைக்க முடியாது. அவர்கள் அடிப்பதிலும் அழிப்பதிலுமே கவனமாக இருப்பார்கள். சரி. அவர்களை ஆதரிக்கும் மக்களை வளைத்துவிட முடியாதா?ஓர் அரசாங்கம் சரியாக இருந்தால் மக்கள் ஏன் ஓர் இயக்கத்தை ஆதரிக்கப் போகிறார்கள்?
- போர் தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்துவிட்ட நிலையில் இப்போது ஐ.நா. பகிரங்கமாக இஸ்ரேலைக் கண்டிக்க ஆரம்பித்திருக்கிறது. காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பேசுபொருளாகின்றன. அமெரிக்காவுமே நீ அடிப்பது போலஅடி; நான் அதட்டுவது போல ஏதாவது சொல்கிறேன், கண்டுகொள்ளாதே’ என்றொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் இஸ்ரேலின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் கவனியுங்கள்.
- காஸாவில் வசிக்கும் அத்தனை பேருமே ஹமாஸ்தான் என்று கண்மூடித்தனமாகப் பேசுகிறார்கள் என்றால் அதன் பின்னணியில் வேறென்ன இருக்க வாய்ப்புண்டு? எதுவும் இல்லாமல் இஸ்ரேல் இப்படி இருக்காது, இயங்காது.
நன்றி: இந்து தமிழ் திசை (23 - 11 – 2023)