- பெண்கள் இருக்கும் வரைக்கும் அவர்களது ஆடை சிக்கல் தீராதுபோல. அரசாங்கமே சிலவற்றை வலியுறுத்திப் பெண்ணுரிமையை நிலைநாட்டினால்கூட, கலாச்சாரக் காவலர்களாகத் தங்களை வரித்துக்கொள்கிறவர்கள் தங்கள் ‘கடமை’யில் இருந்து ஓய மாட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உடை குறித்த விவாதம் மீண்டும் தலைதூக்கியிருப்பது அதற்குச் சமீபத்திய சான்று.
- அரசு அலுவலர்கள் தங்கள் பணிச்சூழலுக்கு உகந்த, பணியிடத்தின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும் என்பதுதான் அரசு வகுத்திருக்கும் விதி. அதிலும் ‘கண்ணியம்’ குறித்துக் குழப்பம் வரக்கூடும் என்பதால் 2019 ஜூன் 1 அன்று மேலும் ஓர் அரசாணையை வெளியிட்டு விளக்கம் அளித்தது. அதாவது பெண் பணியாளர்கள் சேலை, சல்வார் – கமீஸ், சுடிதார் – துப்பட்டா போன்றவற்றையும் ஆண்கள் பேன்ட் – சட்டை, வேட்டி அல்லது ஏதாவது ஓர் இந்திய உடையையும் அணிந்துவரலாம் என விளக்கம் அளித்தது. அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் ‘அரசு அலுவலர்கள்’ என்கிற வகைமைக்குள் அடங்குவார்கள் என்பது புரியாத புதிரல்ல. பிறகு ஏன் மீண்டும் ‘ஆடை பூதம்’ வெளிவந்திருக்கிறது?
- ‘மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் வித்தியாசம் வேண்டாமா? அதனால்தான் அவர்களைச் சேலை அணிந்துவரச் சொல்கிறோம்’ என்பதெல்லாம் வறட்டு வாதம். ‘ஆண் ஆசிரியர்களும் மாணவர்களைப் போலவே பேன்ட் - சட்டைதானே அணிந்து வருகிறார்கள்; அவர்களுக்கு வேறுபாடு வேண்டாமா?’ எனக் கேட்டால் பதில் இருக்காது. தவிர, சுடிதார் என்பது கண்ணியக் குறைவான உடை என்று வாதிடுவோரின் பார்வையில்தான் சிக்கலே தவிர, உடையில் அல்ல. முன்பு மாணவர்களின் பார்வை சரியில்லை என்று சொல்லி சேலைக்கு மேல் சட்டை அணிந்து பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றி விவாதித்தார்கள். இதுபோல எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று சுடிதார் அணியலாம் என்று பெண்கள் சிலர் முடிவெடுத்தால் அதற்கும் சிலர் தடைபோடுகிறார்கள்.
- கண்ணியம் என்பது உடையில் அல்ல, நம் பார்வையில்தான் இருக்கிறது என இளம் தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டியவர்களே பத்தாம்பசலித்தனமாக நடந்துகொள்வது வேடிக்கையானது. ஆசிரியர்கள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வருவதற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர்களோ கல்வி அதிகாரிகளோ மறுப்புத் தெரிவித்தால் அரசு ஆணையை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி இருக்கிறபோது, சம்பந்தப்பட்ட பெண்கள் கவலைப்படத் தேவையில்லை. தனியார் பள்ளிகள் பலவற்றில் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணிந்துசெல்கிறார்கள். அரசுப் பள்ளிகள்தாம் அனைத்துக்கும் முன்னோடி என்று சொல்லிக்கொண்டு ஆடை விஷயத்தில் பிற்போக்காக நடந்துகொள்வது முறையல்ல.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 - 2023)