பிரச்னையாகும் புலம்பெயர்தல்
- பிரிட்டனில் உள்ள செளத்போர்ட் என்ற இடத்தில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற நடன நிகழ்ச்சியின்போது 17 வயது இளைஞன் அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் 3 சிறுமியர் உயிரிழந்தனர். அவன் புலம் பெயர்ந்த இஸ்லாமியர் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் மூண்டது.
- 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய கலவரம் இதுதான். 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் "எங்கள் நாடு மீண்டும் எங்களுக்குத் தேவை' என்ற முழக்கத்துடன் கூடிய கும்பல்கள் கண்ணில் பட்ட கட்டடங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரம் அடங்க சில நாள்கள் ஆனது.
- பிரிட்டனில் தற்போது வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். மக்கள்தொகையில் இது 14 சதவீதம் ஆகும். ஆங்காங்கே இந்தியர்கள், கருப்பர் இனத்தவர், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு எதிராக, சிறிய அளவில் வெளிப்பட்டு வந்த வெறுப்புணர்வு இப்போது பெரிய அளவில் கலவரமாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
- வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கடுமையாக எதிர்க்கும் நைஜெல் ஃபாரஜ் என்பவரின் யு.கே. சீர்திருத்த கட்சி (ரிஃபார்ம் யு.கே.) அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 14 சதவீதம் வாக்குகள் பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரிட்டனில் கடந்த பிப்ரவரியில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகமாக உள்ளது என்று 52 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- பிரிட்டனில் மட்டுமல்ல; தங்கள் நாட்டில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிகழாண்டில் 7.17 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 2025-ஆம் ஆண்டுமுதல் 2.70 லட்சம் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- இதுதவிர மாணவர்களுக்கான விசா விண்ணப்பக் கட்டணத்தையும் கடந்த மாதம் இரண்டு மடங்காக்கியது. வெளிநாட்டு மாணவர்களால் வீட்டு வாடகை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இதேபோன்று கனடாவிலும் வெளிநாட்டுத் தற்காலிகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மக்கள்தொகையில் வெளிநாட்டினர் 6.8 சதவீதம் பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் என்றால், அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தில் வெளிநாட்டினர் குடியேற்ற விவகாரம் சூடுபிடித்துள்ளது.
- கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் மட்டும் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக 24.7 லட்சம் பேர் நுழைய முயற்சி செய்துள்ளனர். அவர்களில் நான்கில் மூன்று பங்கினர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- இதைத் தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டும் டொனால்ட் டிரம்ப், "நான் ஆட்சிக்கு வந்தால் கமலா ஹாரிஸ் கட்சிபோல வெளிநாட்டினருக்கு ஆதரவாக செயல்படாமல், 10 லட்சம் வெளிநாட்டினரை உடனடியாக வெளியேற்றுவேன்' என வாக்குறுதி அளித்திருக்கிறார். அத்துடன் அகதிகளைத் தடுக்க மெக்ஸிகோ எல்லை முழுவதும் சுவர் எழுப்பப்படும் என்றும் பிரசாரத்தில் கூறிவருகிறார்.
- அமெரிக்காவில் சில நாள்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வில், தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்வதில் சட்டவிரோத குடியேற்றம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்று 53 சதவீதம் பேரும், ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்தது என 38 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
- மேற்கத்திய நாடுகளில்தான் இதுபோன்று என்று கருத வேண்டாம். ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 3,200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்தப் பேரூராட்சியின் மக்கள்தொகையில் 50 சதவீதம் அளவுக்கு இலங்கைத் தமிழர்கள் உள்ளதால் உள்ளூர்வாசிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்துக் கட்சியினராலும் எழுந்திருக்கிறது.
- மகாராஷ்டிரத்தில் 1970-களில் பால் தாக்கரே தலைமையில் சிவசேனை தலையெடுத்தபோது, மராத்தியர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகக் கூறி தென்னிந்தியர்கள் தாக்கப்பட்டனர். தமிழகத்திலும் "வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' கோஷமும், மலையாளிகளுக்கு எதிரான தாக்குதல்களும் நடைபெற்றன.
- மக்கள் புலம்பெயர்வது புதிதொன்றுமல்ல. வேலைவாய்ப்புத் தேடி மக்கள் புலம்பெயர்வது என்பது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கம். அண்மைக்காலத்தில்கூட வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் பலரும் அந்நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்து வருகின்றனர்.
- இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை, மலேசியா, பிஜி தீவு, பர்மா (மியான்மர்) போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார்கள். அதேபோல ஆப்பிரிக்காவில் இருந்து அழைத்துவரப்பட்ட கருப்பரின மக்களின் உழைப்புதான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படை.
- புலம்பெயர்தலைத் தவிர்க்க முயல்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகத்தான் அமையும்!
நன்றி: தினமணி (30 – 08 – 2024)