TNPSC Thervupettagam

பிரணாப் முகர்ஜி: ஒரு நெடும் பயணம்

September 2 , 2020 1424 days 641 0
  • எனக்கு நீண்ட நடைகள் பிடிக்கும்! 2012-ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையின் பரந்த புல்வெளிகளை சுட்டிக்காட்டி பிரணாப் முகர்ஜி சொன்னது இது.
  • நாட்டின் தலைநகரில் உள்ள தலைமை மாளிகையின் மீது தனக்கிருக்கும் ஆசையைப் பற்றி தனது கட்சிக்கு அவர் பொதுவெளியில் விடுத்த எச்சரிக்கையும் அது.
  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரு ஆட்சிக் காலகட்டங்களிலும் அதுவரை பிரச்சினைகளைத் தீர்ப்பவராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஒருகட்டத்தில் 50 அமைச்சர்கள் கொண்ட குழுவின் தலைவராக இருந்தார்.
  • அதாவது, ‘இன்னொரு பிரதமர்ஆக இருந்தார். எனினும், உண்மையான பிரதமர் நாற்காலி அவருக்குச் சிக்காமலேயே போய்விட்டது; ஓரிரு முறை வெகு அருகில் அந்த வாய்ப்பு வந்தபோதும்கூட.
  • புதுடெல்லி எனும் புதிர்வழிப் பாதையில் 1969-லிருந்து குறுக்கும் நெடுக்குமாக வலம்வந்த பிரணாபுக்கு அதிகாரம் எங்கிருந்து உருவாகிறது என்பது நன்றாகவே தெரியும்.
  • 2012-ல் இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக அவர் ஆனார். அவருடைய நீண்ட நடைகள் அவரது பதவிக்காலம் முடிவடைந்த 2017, ஆகஸ்ட் 9-க்குப் பிறகும் தொடர்ந்தன.
  • அவர் குடியரசுத் தலைவராக இருந்த கடைசி நாளில் காலை 4 கிமீ, மாலை 4 கிமீ நடைப்பயிற்சி மேற்கொண்டார். பல தசாப்தங்களாகச் செய்துவந்ததுபோல் அன்றும் தனது நாட்குறிப்பேட்டில் எழுதினார்.

கசிந்துவிடாத ரகசியங்கள்

  • தன் நினைவுக்குறிப்புகளை பிரணாப் பல்வேறு புத்தகங்களாக எழுதினார். அவற்றில் அவர் நிறைய பேசினாலும் ரகசியத் தகவல்கள் தொடர்பில் வாயைத் திறக்கவே இல்லை; அந்த ரகசியங்கள் அனேகமாக அவரோடு போய்விட்டன; அந்த ரகசியங்களை எதிர்காலத் தலைமுறைக்குத் தனது நாட்குறிப்பேடுகளில் பதிவுசெய்திருந்தாலொழிய!
  • ரகசியங்களைக் காக்கும் திறன் கொண்டிருந்ததால்தான் இந்திரா காந்தியின் அன்புக்கு பிரணாப் பாத்திரமானார்; பிரணாபை 1969-ல் மாநிலங்களவைக்கு இந்திரா காந்தி அனுப்பினார்.
  • அப்போது அவருக்கு வயது 34. அவருடைய தலைக்குள் எவ்வளவு விஷயம் போனாலும் வெறும் புகை மட்டும்தான் வெளியில் வரும் என்று பிரணாபைப் பற்றி இந்திரா காந்தி குறிப்பிட்டார்.
  • பிரணாபுக்கு சுங்கானில் புகைப்பிடிக்கும் பழக்கம் அப்போது உண்டு. காலப்போக்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டாலும் 500 சுங்கான்களை அவர் சேகரித்துவைத்திருந்தார்.
  • இந்திராவுக்கு அடுத்து அதிகாரத்துக்கு வந்த ராஜீவ் 1984-ல் தனக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து பிரணாபை விலக்கினார். தனது தாய் சோனியாவின் ஆலோசகர்களை ராகுல் தனது நெருங்கிய வட்டாரத்திலிருந்து விலக்கிவைத்திருப்பதோடு நாம் இந்த ஒற்றுமையை ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
  • சுவாரஸ்யமான துணுக்குகளைக் கூறக்கூடியவர் பிரணாப். பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பற்றி மட்டுமல்ல; ஏதாவதொரு நாளிதழை எடுத்துக்கொண்டு அதில் இடம்பெற்ற சுவாரஸ்யமான தகவலைப் பற்றியும் பேசுவார்.
  • இதுபோன்ற தகவல்களை அவர் விரல் நுனியில் வைத்திருப்பார். பேசாத வேளைகளில் அவர் படித்துக்கொண்டிருப்பார் கோப்புகளையோ புத்தகங்களையோ!
  • இந்திரா படுகொலையான 1984, அக்டோபர் 31 நாளில் ராஜீவ் கொல்கத்தாவில் இருந்தார்; டெல்லி திரும்புகையில் அவரோடு பிரணாபும் விமானத்தில் சேர்ந்து வந்தார்.
  • அதற்கு முன்பு இரண்டு பிரதமர்கள் இறந்தபோது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களே பிரதமர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று பிரணாப் கூறினார்.
  • தான் ஒருபோதும் பிரதமர் பதவியைக் கோரவில்லை என்று பின்னர் பிரணாப் சொன்னதை ராஜீவுக்கும் இந்திராவுக்கும் நெருக்கமாக இருந்த பி.சி.அலெக்ஸாண்டரும் உறுதிப்படுத்துகிறார்.
  • ஆனாலும், ராஜீவ் யுகத்தில் நீண்ட நாட்கள் அரசியல் வனவாசத்தில் இருக்க வேண்டியிருந்தது. தனது மரபார்ந்த வழிமுறைகள் ராஜீவை ஈர்க்கவில்லை என்று பிரணாப் எழுதினார்.
  • பிரணாபின் தி டர்புலென்ட் இயர்ஸ்புத்தகத்திலிருந்து சில வாக்கியங்களை இங்கே சுட்டுவது முக்கியமானது: அயோத்தியைத் திறந்துவிட்டதால் ராஜீவ் தவறிழைத்துவிட்டார்’; ‘ரிசர்வ் வங்கியிலிருந்து மன்மோகன் சிங் வெளியேற்றப்பட்டதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’; ‘இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த தினத்தின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது சுதந்திரப் போராட்ட இயக்கத்தை அவமதிக்கும் செயல்’; ‘யூனியன் கார்பைடு நிலையத்தை நாட்டுடைமையாக்கும் திட்டத்தில் மத்திய அரசு இருந்தது’.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்

  • 1980-களில் பிரணாப் நிதியமைச்சராக இருந்தார். அப்போது பொருளாதாரத்தின் பங்குதாரர்கள் மீது அவர் கொண்டிருந்த பிடி அவரது வாழ்க்கை முழுவதும் உதவியாக இருந்தது.
  • நான்கு முக்கியமான துறைகளில் பாதுகாப்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை ஆகிய மூன்று முக்கியமான துறைகளின் அமைச்சராக அவர் இருந்தார்.
  • அமெரிக்காவுடன் 2008-ல் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய உறுப்பினராக இருந்தார்; இந்தப் பிரச்சினை தொடர்பில் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • பிரணாபின் அறிவுத் திறனும் முன்கோபமும் அவருடன் உரையாடும் எவரையும் அச்சுறுத்தின.
  • சோனியா, மன்மோகன் இருவருடனான உறவை மதிநுட்பத்துடனும் எச்சரிக்கையுணர்வுடனும் கையாண்டார்.
  • அவர் நிதியமைச்சராக இருந்தபோது 1982-ல் மன்மோகனை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக்கும் நியமனத்தில் கையெழுத்திட்டார்.
  • மன்மோகனுடன் உறவைப் பேண முடியாமல்போன, ஒருகட்டத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துக்கொண்ட நட்வர் சிங்கைப் போல அல்லாமல் பிரணாப் தனது இரண்டாம் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு ஒருகட்டத்தில் நாட்டின் முதல் குடிமகன் ஆனார்.
  • ஆனால், ஒருவருடனான தனது உறவை அவர் மிகவும் சீர்குலைத்துக்கொண்டார் அது அவரது அமைச்சரவை சகாவான ப.சிதம்பரம்.
  • அப்போது அவரைச் சூழ்ந்திருந்த அவரது ஆலோசகர்களின் சிறைக்கைதிபோல் ஆனார் பிரணாப்.
  • மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி அவரது இறுதி நாட்களில் அவரோடு இருந்தார். எனினும், முன்னதாக பிரணாபோடு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர் செல்லவில்லை.
  • பிரணாபின் மனைவி சுவ்ரா 2015-ல் காலமானார். அவரது மகன் அபிஜித் முகர்ஜி மக்களவைக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது அரசியல் வாழ்க்கை வெற்றிகரமாக இல்லை.
  • இன்னொரு மகனான இந்திரஜித்துக்குப் பொது வாழ்க்கை சார்ந்த பிம்பம் ஏதும் இல்லை. வங்கக் கலாச்சார ஆர்வலராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் வங்கதேசத்திலும் மிகவும் பிரபலம். ஷேக் ஹஸினாவுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் அவர்.
  • குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டபோது வங்கத்தின் இடதுசாரிகளுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம் காரணமாகவும், பிற காரணங்களுக்காகவும் அவரது தேர்வை இறுதி வரை மம்தா பானர்ஜி எதிர்த்தார்.
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் அவரை ஆதரித்தனர். காங்கிரஸ் அல்லாதாருக்கும்கூட அவர் ஆலோசனைகள் வழங்கினார். நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், பிறகு பிரதமராக ஆனபோதும்கூட அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
  • காங்கிரஸ் தலைவர்கள் யாரிடமும் மோடி பரிவு காட்டியதில்லை, ‘பிரணாப் தாஒரு விதிவிலக்கு.
  • பிரணாபை மோடி அடிக்கடி சந்தித்தார்; சோனியாவும் அவ்வப்போது வந்து சந்தித்தார்.

பாரத் ரத்னா

  • 2019-ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.
  • அந்தக் காலகட்டத்தில், நாக்பூரில் நடந்த ஒரு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
  • தனது ஆழ்ந்த மதநம்பிக்கை தனது மதச்சார்பற்ற பார்வைக்குக் குறுக்கே வருவதற்கு ஒருபோதும் அனுமதித்திராத மனிதர் எடுத்த ஆச்சரியமான அவதாரம் இது.
  • அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்படி அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கேட்டுக்கொண்டார்.
  • ஆனால், தனது பதவிக்காலம் முடியும் வரை பிரணாப் காத்திருந்தார். தேசியத்தைப் பற்றி ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களிடம் அவர் ஒரு உரையை ஆற்றினார்.
  • அது அவரவருக்குப் பிடித்தமான வகையில் எடுத்துக்கொள்ளும்படி இருந்தது. ஒரே சமயத்தில் இந்துத்துவ தேசியத்தை ஆதரிக்கும் வகையிலும், அதை விமர்சிக்கும் வகையிலும் இருந்தது.
  • காங்கிரஸ் அரசியலரான மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி அவரை எச்சரித்திருந்தார்: இந்த உரை மறக்கப்படக்கூடும், ஆனால் படங்கள் நீடித்து நிலைக்கக் கூடியவை; போலியான கூற்றுக்களுடன் அவை வலம்வரக் கூடியவை.ஆர்எஸ்எஸ் மேடையில் அந்த அமைப்பின் தலைவர்கள் தங்களுக்கேயுரிய சீருடைகளுடன் அமர்ந்திருக்க பிரணாப் முகர்ஜியும் அமர்ந்திருக்கும் படம் அவரது வரலாற்றின் ஒரு பங்காகவும் இந்தியாவின் பரிணாமத்தின் வரலாறாகவும் நீடிக்கும். பிரணாப் வெகுதூரம் நடந்துவந்துவிட்டார்.

நன்றி:  தி இந்து (02-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்