- கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற புதிய தேசம் பாலஸ்தீனத்து மண்ணில் தோன்றியது முதல் அடைக்கலம் கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் அகதிகளாக ஓடிக் கொண்டிருந்தவர்கள், பாலஸ்தீன முஸ்லிம்கள். தொடர்ந்து யுத்தங்கள், ஆக்கிரமிப்புகள், யூதக் குடியேற்றங்கள். எனவே, ஒரு நாள் கூட அவர்கள் விடியும் என்று நம்பி உறங்கியதில்லை. விடிந்தால் அது இறையருள். அவ்வளவுதான்.
- தமது வாழ்விடங்கள், சொத்து சுகங்கள், உத்தியோகம், கல்வி, பிள்ளைகளின் எதிர்காலம் அனைத்தையும் இழந்து எப்போதும் உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தெம்பு இருந்தவர்கள் எல்லை தாண்டி அண்டை நாடுகளுக்கு ஓடினார்கள். அது முடியாதவர்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களைத் தேடிப் போனார்கள்.
- ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள் என்று என்ன செய்து பார்த்தாலும் பலனில்லாமல் விரக்தி அடைந்திருந்தவர்களுக்கு, ஓஸ்லோ ஒப்பந்தம் நம்பிக்கை அளித்ததோ இல்லையோ, சிறிது நிம்மதியைத் தந்தது. சரி, கொஞ்ச நாள் மூச்சு விட்டுக் கொள்ள முடியும். பி.எல்.ஓ.வை அங்கீகரிக்கிறார்கள். நாமே நம்மை ஆண்டு கொள்ளலாம் என்கிறார்கள். இதை ஒரு நல்ல சகுனமாக எடுத்துக் கொள்ளலாமே?
- பாலஸ்தீனர்கள் அன்றிருந்த சூழ்நிலையில் ஓஸ்லோ ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கல்ல; நிதானமாகப் புரிந்து கொண்டு அலசி ஆராயக் கூடத் தயாராக இல்லை. தன்னாட்சி அதிகாரம் கிடைத்தது குறித்து அவர்களுக்கு மகிழ்ச்சிதான்.
- ஆனால் யூதத் தரப்பு கொதித்துப் போனது. எந்த முஸ்லிம்களை அந்நாள் வரை அடக்கி ஆண்டார்களோ, இப்போது அவர்களுக்கு நிலத்தை விட்டுக் கொடுப்பது, தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்பதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. மேற்குக் கரையில் யாசிர் அர்ஃபாத் பதவி ஏற்றுக் கொண்டுவிட்டார். நேற்று வரை துப்பாக்கி தூக்கியவர்கள், இப்போது கையில் கோப்புகள் ஏந்தி நாடாளுமன்றம் செல்கிறார்கள். இனி என்ன? ஐ.நா. அங்கீகரிக்கும். உலக நாடுகள் அங்கீகரிக்கும். உலக வரைபடத்தில் பாலஸ்தீனம் என்றொரு தேசம் புதிதாகக் குறிக்கப்படும்.
- பிறகு இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை என்பது இரு நாடுகளின் பிரச்சினையாக உலக அரங்கில் பேசப்படும். அதுகூட ஒழியட்டும். கிழக்கு ஜெருசலேத்தை அவர்கள் தலைநகரமாக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் நடந்துவிட்டால் கதை முடிந்தது.
- அன்றைக்குத் தேதி நவம்பர் 4, 1995. இஸ்ரேலியப் பிரதமர் இட்ஸாக் ரபின், டெல் அவிவ் நகரத்தில் உள்ள கிங்ஸ் ஆஃப் இஸ்ரேல் என்ற சதுக்கத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவரது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி. ஓஸ்லோ ஒப்பந்தம் நல்லபடியாக நடந்தேறி, யாசிர் அர்ஃபாத் மற்றும் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமோன் பெரஸ் ஆகியோருடன் அவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டதை வரவேற்றுப் பாராட்டி நடத்தப்பட்ட பேரணி.
- பேரணி முடிந்து அவர் கார் ஏறச் சென்ற போது யீகால் ஆமிர் (Yigal Amir) என்கிற 25 வயது இளைஞன் அவரைப் பின்தொடர்ந்து வந்து சுட்டான். மொத்தம் 3 குண்டுகள். அவற்றுள் 2 குண்டுகள் ரபின் உயிரைக்குடித்தன. 3-வது குண்டு அவரது பாதுகாப்பு அதிகாரியின் மீது பட்டது. அவர் தப்பித்துவிட்டார். சிறிய காயம்தான்.
- யீகால் ஆமிர் ஒரு யூதன். பாலஸ்தீனர்களுடன் ஓர் அமைதி ஒப்பந்தம் என்பதைப் பொறுக்க இயலாத லட்சக்கணக்கான யூதர்களின் பிரதிநிதியாக அக்காரியத்தைச் செய்தான். பிறகு சதித் திட்டத்தில் தொடர்புடையவர்கள் யார் யார் என்று தேடிக் கண்டுபிடித்து வழக்கு நடத்தினார்கள். யீகால் ஆமிருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
- அதுவல்ல முக்கியம். இந்த அமைதி வெகுநாள் நிலைக்கப் போவதில்லை என்பது அன்றே பாலஸ்தீனர்களுக்குப் புரிந்துவிட்டது. யாசிர் அர்ஃபாத் என்னென்னவோ செய்து பார்த்தார். நாளுக்கு நாள் பிரச்சினை பெரிதாகிக் கொண்டு சென்றதே தவிர, அமைதி நோபலுக்கு எல்லாம் ஓர் அர்த்தமே இல்லாமல்தான் போய் கொண்டிருந்தது.
- மேற்குக் கரையிலும் காஸாவிலும் அதன்பின் யூதக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மிக அதிகளவில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் சிறிய தெருச் சண்டை போல எதையாவது ஆரம்பித்து, பிறகு குண்டு வெடிப்பு, ஒன்றிரண்டு பேர் படுகொலை என்று நாளை நிறைவு செய்வார்கள். மறுநாள் விசாரணைக்காக இஸ்ரேலியக் காவல் துறை அங்கே வரும். பகுதிவாழ் பாலஸ்தீன முஸ்லிம்களை இழுத்துப் போட்டு உதைப்பார்கள். பதிலுக்கு அவர்கள் கல்லெறிவார்கள். டயர் கொளுத்தி எறிவார்கள். கலவரமாகும். காத்திருக்கும் இஸ்ரேலியப் படைகள் உடனே வந்திறங்கி சுடத் தொடங்கும். உடனே ஊரடங்கு. கடையடைப்பு.
- வேறு வழியே இல்லாமல் போனதால் யாசிர் அர்ஃபாத் மீண்டும் ஒரு இண்டிஃபாதாவுக்கு சம்மதிக்க வேண்டியதானது. இரண்டாவது பாலஸ்தீனர் எழுச்சி.
- அன்றைக்கு ஏரியல் ஷரோன் பிரதமர் ஆகியிருக்கவில்லை. இஸ்ரேலின் பிரபலமான அரசியல்வாதி. அதிரடி நடவடிக்கைகளின் மூலம் எப்போதும் மக்களின் கவனத்தைத் தம் பக்கம் வைத்திருக்கும் கலை அறிந்தவர். அடுத்த பிரதமராக எப்படியாவது அமர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக ஒரு காரியம் செய்தார். வெகு காலமாக எந்த அரசியல் தலைவரும் பிரச்சினைக்குரிய ஜெருசலேம் பக்கம் அப்போது போயிருக்கவில்லை. தான் அங்கே போனாலென்ன?
- அல் அக்ஸா வளாகத்துக்கு ஏரியல் ஷரோன் சென்றது, செப்டம்பர் 28, 2000. பாலஸ்தீனர்கள் பொங்கி எழுந்தார்கள். மறுபுறம் ஒட்டுமொத்த யூதகுலமும் அவரை ஒரு சரித்திர நாயகனாகத் தலைமேல்தூக்கி வைத்துக் கொண்டாடத் தொடங்கியது. ஷரோன் பிரதமரானால் பாலஸ்தீனர்களின் கொட்டத்தை மொத்தமாக அடக்கிவிடலாம் என்று பகிரங்கமாகப் பேசத் தொடங்கினார்கள்.
- இந்தப் புள்ளியில் இருந்துதான் இரண்டாவது பாலஸ்தீனர் எழுச்சி தொடங்கியது.
நன்றி: இந்து தமிழ் திசை (17 - 10 – 2023)