TNPSC Thervupettagam

பிரபஞ்சமும் வசப்படும்

January 9 , 2024 314 days 263 0
  • சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் ரோவா் நிலவின் மீது தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு சாதனை படைத்ததைத் தொடா்ந்து, இப்போது சூரியனின் புறவெளியை ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பியிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் மற்றொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. 127 நாள்கள் பயணித்து அதன் இறுதி இலக்கான எல்-1 புள்ளியை கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக அடைந்திருக்கிறது ஆதித்யா எல்-1 விண்கலம்.
  • 2023 செப்டம்பா் 2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 1,475 கிலோ எடைகொண்ட ஆதித்யா எல்-1, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் லாக்ராஞ்சியன் புள்ளியை வெற்றிகரமாக அடைந்திருக்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானஇஸ்ரோவின் மகுடத்தில் மற்றுமொரு சிறகு சோ்க்கப்பட்டிருக்கிறது.
  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஐந்து லாக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன. லாக்ராஞ்சியன் புள்ளி என்பது பூமி, சூரியன் இரண்டுக்குமான ஈா்ப்பு சக்தி வட்டத்தில் அமைந்திருக்கிறது. அதனால், இரண்டு கிரகங்களின் ஈா்ப்பும் இல்லாத புள்ளி என்கிற நிலையில், குறைந்த அளவு எரிசக்தி செலவில் அங்கே விண்கலத்தை நிலைநிறுத்த முடியும்.
  • ஆதித்யா எல்-1 விண்கலத்தை குறிப்பிட்ட இலக்கில் கொண்டுபோய் நிறுத்துவது எளிமையான பணியாக இருக்கவில்லை. இஸ்ரோ விஞ்ஞானிகள் பூமியில் இருந்தபடியே அவ்வப்போது அதன் பாதையைத் திருத்தி, திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தியது நமது விண்வெளி ஆய்வுத் திறமையின் மேன்மைக்கு எடுத்துக்காட்டு. ஆதித்யா எல்-1 விண்கலம் அதன் இலக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் ஆய்வுக் கருவிகளை இயக்குவதற்கு ஓரிரு மாதங்கள் பிடிக்கலாம். அதன் பிறகுதான் சூரியனை ஆய்வு செய்யும் பணி தொடங்கும்.
  • ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சூரிய புற ஊதா கதிர் படப்பதிவு தொலைநோக்கி, எக்ஸ் கதிர் நிறமாலை மானி உள்பட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான்கு கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்வதற்கானவை. ஏனைய மூன்றும் லாக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்பவை.
  • சூரியனைப் புரிந்துகொண்டால்மில்கி வேஎனப்படும் பாதையில் உள்ள அண்டவெளியின் நட்சத்திரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம். அதன் மூலம் பிரபஞ்சம் உருவான ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கவும் சாத்தியம் ஏற்படும்.
  • முழுமையான கிரகணம் அல்லாத நேரத்தில், எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கக்கூட சூரியன் நம்மை அனுமதிப்பதில்லை. சூரியனில் மறைந்திருக்கும் 10 லட்சம் டிகிரி செல்ஷியஸ் வெப்பமுள்ள கரோனாவின் வெளிச்சம்தான் நமது கண்களைக் கூசவைத்து சூரியனின் உருவத்தை மறைக்கிறது. அதன் காரணமாக சூரியனில் காணப்படும் அக்னிக்குழம்பு, அனல் காற்று, ஹைட்ரஜன் வெடிப்புகள் உள்ளிட்டவை குறித்து இதுவரை எதுவும் தெரிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. அதுகுறித்தப் புதிரைத் தேடும் பிள்ளையார் சுழிதான் ஆதித்யா எல்-1.
  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள 15 லட்சம் கி.மீட்டரில் ஒரு சதவீத தொலைவைத்தான் ஆதித்யா எல்-1 எட்டி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போதைய லாக்ராஞ்சியன் புள்ளியிலிருந்து சூரியனை மறைவோ நிழலோ இல்லாமல் பார்க்க முடியும்.
  • நாசாவின்விண்ட்’, ‘ஏய்ஸ்’, ‘டிஸ்கவா்மட்டுமல்லாமல், நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து அனுப்பியசோஹோஉள்ளிட்ட விண்கலன்கள் ஏற்கெனவே ஆதித்யா எல்-1 போல சூரியனின் ஆய்வுக்காக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
  • சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முயற்சி நேற்று இன்று தொடங்கியது அல்ல. 122 ஆண்டுகளுக்கு முன்னால், 1901-இல் தமிழகத்தின் கொடைக்கானல் விண்வெளி ஆய்வு நிலையத்தில் சூரியனைப் பார்ப்பதற்கான தொலைநோக்கி நிறுவப்பட்டதில் தொடங்குகிறது நமது விண்வெளி குறித்த தேடல்.
  • ஆஸ்ட்ரோசாட்அனுப்பப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 1-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டிருக்கும்எக்ஸ்போசாட்விண்கலம் உலகின் இரண்டாவது போலாரி கதிரியக்க விண்கலம். நமது விண்கலன்களில் காணப்படும் தொலைநோக்கிகளும், புகைப்படக் கருவிகளும், நாசாவின் ஜோம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிகள் போல துல்லியமானவையோ, தொழில்நுட்பம் மிக்கவையோ அல்ல. ஆனால், அதற்காக நமது விஞ்ஞானிகள் மனம் தளா்ந்துவிடவில்லை என்பதைப் பாராட்ட வேண்டும்.
  • ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட்டிருக்கும் புள்ளியிலிருந்து விண்வெளிப் புயல்கள், சூரியனின் கரோனாவிலிருந்து உமிழப்படும் ஒளியின் வீரியம் போன்றவை உணரப்படும். அவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடிவதால், விண்ணில் நிலைபெற்றிருக்கும் விண்கலன்களுக்கும் அதில் பயணிக்கும் விண்வெளி வீரா்களுக்கும் முன்னெச்சரிக்கை கிடைக்கக்கூடும். அந்த வகையில் நமக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த விண்வெளி ஆய்வுக்கும் ஆதித்யா எல்-1 பயன்படும்.
  • சூரியனை ஆய்வு செய்ய விண்கலன் அனுப்பியுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, ஜொ்மனி, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாகவும், ஆசியாவில் முதல் நாடாகவும் இந்தியா உயா்ந்திருக்கிறது. ஆதித்யா எல்-1 விண்கல சாதனையில் அதிக அளவில் பெண் விஞ்ஞானிகள் இடம்பெற்றிருந்தனா் என்பதும், தமிழகத்தைச் சோ்ந்த நிகா் ஷாஜி அதன் திட்ட இயக்குநராக இருந்திருக்கிறார் என்பதும் நம்மை பெருமிதம் அடைய வைக்கின்றன.
  • இதுவரைவானம் வசப்படும்என்று சொன்னோம். இனிமேல் மாற்றிச் சொல்ல வேண்டும் - பிரபஞ்சம் வசப்படும்!

நன்றி: தினமணி (09 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்