TNPSC Thervupettagam

பிராந்தியக் கட்சிகளின் முதல்வர்கள் கூட்டணி

February 24 , 2022 893 days 425 0
  • அடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன.
  • ஆனால், அந்தக் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை.
  • காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி என்பது எல்லோரையும் உள்ளடக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் பிராந்தியக் கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி விட்டன.
  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உதவியுடன் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு, பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
  • அதுபோல, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்க முயன்றுவருகிறார்.
  • இந்நிலையில், காங்கிரஸுடனான கூட்டணியைத் தொடர்ந்துவரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
  • விரைவில் சென்னையில் நடக்கவிருக்கும் அவரது புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக அல்லாத மாநில முதல்வர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
  • மம்தா, கே.சி.ஆர். ஆகியோருடன் ஸ்டாலினும் இப்போது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
  • காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பிராந்தியக் கட்சிகளின் முதல்வர்களோடும் அவர் அரசியல் நட்புறவைப் பேணிவருகிறார் என்பது அவரது அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.
  • தேசியக் கட்சியான காங்கிரஸ் தலைமையில் பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால் தான் பாஜகவை வீழ்த்துவதற்கான வாய்ப்பு உண்டு, பிராந்தியக் கட்சிகள் தங்களுக்கிடையில் உருவாக்கும் கூட்டணி பலவீனமடைய நேரலாம் என்று திருமாவளவன் போன்றவர்கள் வெளிப்படையாகவே எச்சரித்துவருகிறார்கள்.
  • தங்களது அன்புக்கும் வார்த்தைக்கும் கட்டுப்பட்டவன் என்று மு.கருணாநிதி பாணியில் ஸ்டாலினும் பதில்சொல்வது திமுகவின் கூட்டணிக் கட்சிகளைப் பதற்றநிலையிலேயே வைத்திருக்கிறது.
  • காங்கிரஸ் தனது வலுவையும் செல்வாக்கையும் இழந்துநிற்கும் வேளையில், பிராந்தியக் கட்சிகள் தங்களுக்கான கூடுதல் வாய்ப்புகளைக் கேட்டுப் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பு.
  • ஆனால், பிராந்தியக் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டணி அமைத்தால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட முடியுமா என்றொரு சவாலும் அவற்றின் முன்னால் நிற்கிறது.
  • இந்தக் கட்சிகளிடம் குறைந்தபட்சச் செயல்திட்டம்கூட இன்னமும் உருவாகவில்லை. மத்திய - மாநில உறவுகளை விவாதிக்கும் இக்கட்சிகள், மாநிலங்களுக்கு இடையிலான உறவைக் குறித்துப் பேசுவதில்லை.
  • திமுகவுடன் கொள்கை உறவு பேணும் கேரள இடதுசாரிக் கூட்டணி, பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்பது ஓர் உதாரணம்.
  • பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு இடையில் நட்புறவு உருவாகிவந்தாலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அதன் போக்கு உறுதிப்படும்.
  • பஞ்சாபில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு கோவாவிலும் உத்தராகண்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே காங்கிரஸால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்க முடியும்.
  • நடைபெற்றுவரும் தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கக் கூடும்.

நன்றி: தி இந்து (24 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்