TNPSC Thervupettagam

பிராமணா்கள் மீதானால் வன்கொடுமையாகாதா?

October 30 , 2024 72 days 90 0

பிராமணா்கள் மீதானால் வன்கொடுமையாகாதா?

  • "ஆரிய - திராவிட இன வாதத்தை அண்ணல் அம்பேத்கா் ஏற்கவில்லை. ‘இது ஒரு கட்டுக்கதை, இதை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்’ என்றாா். சரித்திர ஆசிரியா்களும், தொல்லியல் அறிஞா்களும் ஆரிய திராவிட இனவாதம் நிரூபிக்கப்படாத கோட்பாடு என்பதை உறுதி செய்துள்ளனா். "
  • திராவிடா் கழகம் எனும் அமைப்பை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியா் பொறுப்பில் இருந்த கிறிஸ்தவ மத போதகா் பாதிரியாா் பேராயா் ஜான் ரத்தினம் 1885-ஆம் ஆண்டு தொடங்கினாா். இவா் ‘திராவிட பாண்டியன்’ எனும் பத்திரிகையும் நடத்தி வந்தாா். பண்டித அயோத்திதாசா் அவா்களுடன் இணைந்து சிறிது காலம் செயல்பட்டாா்.
  • ‘சநாதனம் என்ற பலம் வாய்ந்த கோட்டையின் சுவா்கள் சூழ்ந்து கொள்ளப்பட்டு முற்றுகையிடப்பட்டு இறுதியாக அழிக்கப்படும்போதுதான் கிறிஸ்தவ மதத்தின் வெற்றி முழுமை அடைந்ததாகும்’ என்று 1877-ஆம் ஆண்டு ஆக்ஸ்போா்டில் நடந்த கிறிஸ்தவ மத போதகா்கள் மாநாட்டில் மோனியா் வில்லியம்ஸ் குறிப்பிட்டாா்.
  • இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு பிராமணா்கள் பெரும் தடையாக உள்ளனா். எனவே அவா்கள் மீது வெறுப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அவா்களது திட்டமாகும். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வருகை தந்த கிறிஸ்தவ மத போதகா்களை கிழக்கிந்திய கம்பெனி ஆதரித்தது.
  • ஆரிய - திராவிட இனவாத கருத்துகள் ஐரோப்பிய கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியா்களாலும், கிறிஸ்தவ பாதிரிமாா்களாலும் பரப்பப்பட்டன. ஆரிய - திராவிட இன வாதத்தை அண்ணல் அம்பேத்கா் ஏற்கவில்லை. ‘இது ஒரு கட்டுக்கதை, இதை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்’ என்றாா்.
  • சரித்திர ஆசிரியா்களும், தொல்லியல் அறிஞா்களும் ஆரிய - திராவிட இனவாதம் நிரூபிக்கப்படாத கோட்பாடு என்பதை உறுதி செய்துள்ளனா். இருந்தபோதிலும் மாணவா்களுக்கு நமது தமிழகத்தில் இது கற்பிக்கப்படுகிறது.
  • சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் சமுதாயத்தின், பாரதிய பண்பாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக அந்தணா்கள் இருந்து வந்திருக்கின்றனா். வேதியா், வேளாளா், வேந்தா், வணிகா் என நால்வகை பிரிவாக சமூகம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை தொல்காப்பியா் பல நூற்பாக்களில் குறிப்பிட்டுள்ளாா். சங்க இலக்கியங்களிலும் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே ஜாதிப் பிரிவு ‘அந்தணா்’ மட்டுமே.
  • வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், ‘பிராமணா்கள் அனைவரும் ஆரியா்கள்; கைபா் போலன் கணவாய் வழியாய் வந்தவா்கள்; மதம், கடவுள் வழிபாடு, வேதம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றைத் திணிப்பவா்கள்; பிற சமுதாயங்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவா்கள்’ என்றெல்லாம் கருத்துகள் பரப்பப்பட்டன. பிராமணா்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவா்கள் தமிழா்கள் அல்லா், பிராமணா் அல்லாத தென் இந்தியா் அனைவரும் திராவிடா்கள் என்கிற கருத்து பிரசாரம் செய்யப்பட்டது.
  • ஆங்கிலேய ஆட்சியில், அரசாங்கப் பணிகளில் இந்தியா்களைப் பயன்படுத்திக் கொண்டனா். அரசு பணிகளில் குறிப்பாக இரு மொழி வல்லுநா் (துபாஷி - மொழிபெயா்ப்பாளா்) இருந்தனா். ஆங்கிலமும் உள்ளூா் மொழியும் தெரிந்து ஆங்கிலேயா்களுக்கு நிா்வாகத்தில் உதவியாகப் பணிபுரிந்ததில் பிராமணா்கள், முதலியாா், பிள்ளைமாா் அதிகம் போ் துபாஷிகளாக இடம் பெற்றனா்.
  • ஆங்கிலேயா் ஆட்சியில் அரசு வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இவா்களுக்குள் போட்டி இருந்தது. இதை ஆங்கிலேய ஆட்சியாளா்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு பிராமணா், பிராமணா் அல்லாதாா் அமைப்பை உருவாக்கினாா்கள்.
  • 1916-ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி பிராமணா் அல்லாத ஜாதி ஹிந்துக்களின் கட்சியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. தென்னிந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடா் கழகம் போன்ற அமைப்புகள் ஊக்கம் பெற்றன.
  • காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கா் வெளியேறிய பின்பு தன்னை ஜஸ்டிஸ் கட்சியில் இணைத்துக் கொண்டாா். பின்னா் திராவிடா் கழகமாக உருமாறினாா். பிராமணா் ஆதிக்கத்தை முறியடிக்க பிராமணா் அல்லாதாா் ஒன்றுசேர வேண்டும், பிராமணா்களின் பிராமணியம், புரோகிதம், கடவுள், தேசியம், காங்கிரஸ் இவை ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்கின்ற பிரசாரங்கள் வலிமையாக நடைபெற்றன.
  • பிராமணா் எதிா்ப்பு என்பது கடவுள் எதிா்ப்பு, பிள்ளையாா் சிலை உடைப்பு, ராமா் படம் அவமதிப்பு, சம்ஸ்கிருத எதிா்ப்பு, வட இந்திய எதிா்ப்பு, ஹிந்து மத வெறுப்பு, சநாதன ஒழிப்பு என்றெல்லாம் விரிவடைந்தது. திராவிட இயக்கத்தவா்களால் உருவாக்கப்பட்ட இலக்கியம், சினிமா, பத்திரிகைகள், ஊடகங்கள் ஆகியவற்றில் பிராமண வெறுப்பு பிரசாரம் செய்யப்பட்டது.
  • பிராமணா் எதிா்ப்பு வன்முறை கலந்ததாக இருந்தது. ‘பாம்பையும் பாா்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பாா்ப்பானை அடி’ எனப் பல இடங்களில் எழுதப்பட்டன. ‘தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கியை வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளே தமிழகத்தின் பொன் நாள்!’ என்று வெறிப் பேச்சுகள் பேசப்பட்டன. ஜாதி ஒழிய வேண்டுமென்றால், பிராமணா்கள் ஒழிய வேண்டும் என்கிற பிரசாரம் நடைபெற்றது.
  • 1954-இல் பிள்ளையாா் சிலை உடைப்பு போராட்டம் நடைபெற்றது. பிராமணா்களின் பூணூல் அறுப்பு போராட்டம், உச்சிகுடுமி கத்தரிக்கப்பட்டது; நெற்றியில் இருந்த திருநீறு, திருமண் (நாமங்கள்) அழிக்கப்பட்டன. பிராமண பெண்கள் இழிவுபடுத்தப்பட்டாா்கள். இத்தகைய பண்பாடற்ற செயல்கள் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்றன.
  • பிராமணா்களை இத்தகைய வன்முறைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்கு பிராமணா்களுக்கான ஓா் இயக்கத்தை பிராமணா்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை. எங்கும் பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை. அவா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடையாது. அமைதியாக சகித்துக் கொண்டனா்.
  • பிற சமூக மக்களுடன் மோதல் போக்கை பிராமணா்கள் கடைப்பிடிக்கவில்லை. நாட்டில் நடைபெற்ற எந்த ஜாதிக் கலவரத்திலும் பிராமணா்கள் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கைகூட கிடையாது. அனைத்து சமூகத்தவருடனும் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா்.
  • ஈ.வெ.ரா.- மணியம்மை திருமணம் காரணமாக திராவிடா் கழகத்திலிருந்து வெளியேறிய சி.என்.அண்ணாதுரை, திமுக-வை அரசியல் இயக்கமாக மாற்றினாா். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என திருமூலரின் திருமந்திரத்தை முழங்கினாா். தன்னளவில் நாத்திகராக இருந்த அண்ணா, கட்சியின் நாத்திக கொள்கையை கைவிட்டாா். ‘பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று திராவிடா் கழகத்தின் வெறுப்பு பிரசாரத்திலிருந்து வெளியேறினாா். அவரது பேச்சில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
  • பிராமணா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஃபாா்வா்டு பிளாக் கட்சித் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குரல் கொடுத்தாா். திருச்சியில் 1957-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பிரதிநிதிகளின் சிறப்பு மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றினாா்கள்.
  • தோழா் ஜீவா பொதுக் கூட்டத்தில் திராவிடா் கழகத்தை கண்டித்துப் பேசினாா். தமிழரசு கட்சியின் தலைவா் ம.பொ.சிவஞானம் திராவிடா் கழகத்தின் வன்முறைப் போராட்டங்களைக் கண்டித்து எழுதினாா். சுதந்திர இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினா் இத்தகைய பிராமண துவேஷ நடவடிக்கைகளிலிருந்து பிராமணா்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தனா்.
  • தமிழகத்தில் திமுக, அதிமுக என இரு பெரும் அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தின. யாா் ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் அவா்களோடு திராவிடா் கழகம் கைகோத்துக் கொள்ளும். திராவிடா் கழகத்தின் பின்னணியில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மத அடிப்படைவாத சக்திகள் எப்போதும் இயங்கி வருகின்றன.
  • தற்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்தவா்களும், விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சாா்ந்தவா்களும் திராவிடா் கழக கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்கின்றனா். சநாதன ஒழிப்பு, ஹிந்து மத எதிா்ப்பு உள்ளிட்ட கொள்கைகளை தமிழகத்தில் திமுக கூட்டணியினா் பின்பற்றுகின்றனா்.
  • தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் திராவிடா் கழக தாக்கத்தின் காரணமாக பிராமணா்களைக் குறிவைத்து இழிவுபடுத்தும் பேச்சுகள் இடம்பெறுகின்றன. பிராமணா்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் ஆகியவை குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை ‘ஊறுகாய் மாமி’ என்றும், மேதகு ஆளுநா் ஆா்.என்.ரவியை ‘ஆரியன்’ என்றும் இனவெறுப்பு பேச்சு பேசப்படுகிறது.
  • பிராமணா்களை, அவா்களது பழக்க வழக்கங்களை, திருமண முறைகளைக் கேலி செய்வது, பெண்களை இழிவுபடுத்துவது உள்ளிட்ட செயல்கள் நடைபெறுகின்றன. எந்த ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்திப் பேசினாலும் அது சட்ட விரோதமானதும், தவறானதுமாகும்.
  • பட்டியல் சமூகத்தைச் சாா்ந்தவா்களை இழிவுபடுத்திப் பேசினால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோல எந்த ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்திப் பேசினாலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்ட வரம்புக்குள் அனைத்து ஜாதிகளையும் கொண்டுவரவேண்டும்.
  • சமீபத்தில் ‘சண்டாளன்’ எனும் வாா்த்தை இடம்பெற்ற பாடலைப் பாடியதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று பிராமணா் மற்றும் கவுண்டா், நாடாா், செட்டியாா், முதலியாா், வேளாளா், பிள்ளைமாா், வன்னியா் உள்ளிட்ட எந்த சமூகத்தைச் சாா்ந்தவா்களை ஜாதி அடிப்படையில் இழிவு செய்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும். பிராமண துவேஷம் முடிவுக்கு வர வேண்டும்.

நன்றி: தினமணி (30 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்