TNPSC Thervupettagam

பிரிக்ஸ் நாடுகள்

November 20 , 2019 1689 days 8205 0

பிரிக்ஸ்

  • பிரிக்ஸ் என்பது உலகின் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (Brazil, Russia, India, China, and South Africa - BRICS) ஆகியவற்றின்   சுருக்கமாகும்.
  • 2001 ஆம் ஆண்டில், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை விவரிக்க கோல்ட்மேன் சாக்ஸ் என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் என்பவர் “BRIC” (Brazil, Russia, India, and China) என்ற வார்த்தையை உருவாக்கினார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு

  • 2006 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற BRIC வெளியுறவு அமைச்சர்களின் முதல் மாநாட்டின் போது இந்தக் குழு முறைப்படுத்தப் பட்டது.
  • தென்னாப்பிரிக்க நாட்டை 2010 ஆம் ஆண்டில் BRIC அமைப்பில் சேர அழைப்பு விடுத்த பின்னர் இந்த அமைப்பு BRICS என்று உருமாறியது.
  • ஐந்து BRICS நாடுகளும் ஜி -20 என்ற அமைப்பின் உறுப்பினர்களாகவும் உள்ளன.
  • இந்த அமைப்பானது உலக மக்கள் தொகையில் 42%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23% மற்றும் உலக வர்த்தகத்தில் 17% ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • B-R-I-C-S என்ற சுருக்கெழுத்திற்கு ஏற்ப, அந்த அமைப்பின் தலைவர் பதவியானது ஆண்டுதோறும் உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் வகிக்கப் படுகிறது.
  • இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் நாடு பிரேசில் ஆகும்.
  • ஆண்டுதோறும் BRICS தலைவர்களின் உச்சி மாநாடு கூட்டப் படுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு ஃபோர்டலிஸாவில் நடைபெற்ற ஆறாவது BRICS உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் புதிய வளர்ச்சி வங்கியை (New Development Bank - NDB) நிறுவுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்கள் BRICS அவசரகால நிதி ஒதுக்கீட்டு (Contingent Reserve Arrangement - CRA) அமைப்பிலும் கையெழுத்திட்டனர்.

பிரிக்ஸ் மாநாடுகளின் பட்டியல்

மாநாட்டினை நடத்தும்  நாடு

 ஆண்டு

1. எகாடெரின்பர்க், ரஷ்யா

2009

2. பிரேசிலியா, பிரேசில்

2010

3. சான்யா, சீனா

2011

4. புது தில்லி, இந்தியா

2012

5. டர்பன், தென்னாப்பிரிக்கா

2013

6. ஃபோர்டலிஸா, பிரேசில்

2014

7. உஃபா, ரஷ்யா

2015

8. பெனௌலிம், (கோவா) இந்தியா

2016

9. ஜியாமென், சீனா

2017

10.ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா

2018

11. பிரேசிலியா, பிரேசில்

2019

12. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

2020

 

சமீபத்தியச் செய்திகள்

  • 11வது BRICS உச்சி மாநாடு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் நடந்தது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான BRICS உச்சி மாநாட்டின் கருப்பொருள் "ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி" என்பதாகும்.
    • BRICS நாடுகள் பிரேசிலியா பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
    • முக்கியக் குறிக்கோள்: பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு.

பிரேசிலியா பிரகடனம்

  • இது சர்வதேச விவகாரங்களில் பன்னாட்டு அமைப்புகளின் பங்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கியப் பங்கு, சர்வதேசச் சட்டத்தை மதிக்கும் வாதம் ஆகியவற்றை ஆதரிக்கின்றது.
  • பன்னாட்டு அமைப்புகள் சீர்திருத்தம்: வளரும் நாடுகள் கொண்டுள்ள குறிப்பிடத் தக்க சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வர்த்தக அமைப்பு & சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற பன்னாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவதும் சீர்திருத்துவதும் தற்போதைய தேவையாக உள்ளது.

உச்சி மாநாட்டின் போதான சில முக்கிய நிகழ்வுகள்:

  • BRICS உச்சி மாநாட்டில் இந்தியா:
    • ‘ஆரோக்கியமான இந்தியா இயக்கம்’
      • உடற் தகுதி மற்றும் ஆரோக்கியம் போன்ற துறைகளில் BRICS நாடுகளுக்கு இடையே தொடர்பு மற்றும் பரிமாற்றம் மேற்கொள்ள இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
    • பேரழிவுகளைத் தாங்கக் கூடிய  உள்கட்டமைப்பு மேம்பாடு
      • பேரழிவுகளைத் தாங்கக் கூடிய  உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கான கூட்டணியில் சேர BRICS நாடுகளையும் புதிய வளர்ச்சி வங்கியையும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்தியா - பிரேசில்
    • 2020 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத்  தின விழாவில் பங்கேற்க பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை பிரதம விருந்தினராக இந்தியா அழைத்துள்ளது.
    • இந்தியக் குடிமக்களுக்கு நுழைவு இசைவு (விசா) இல்லாத பயணத்தை வழங்க பிரேசில் முடிவு செய்துள்ளது.
  • இந்தியா - சீனா
    • சீன ஜனாதிபதி 2020 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற இருக்கும் மூன்றாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமரை அழைத்துள்ளார்.
    • முதல் முறைசாரா உச்சி மாநாடு - வுஹான் (சீனா - 2018) & இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு - மாமல்லபுரம் (இந்தியா - 2019).
    • 2020 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகளை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர்.
  • இந்தியா - ரஷ்யா
    • ரஷ்ய மாகாணங்கள் மற்றும் இந்திய மாநிலங்கள் அளவிலான முதலாவது இருதரப்புப் பிராந்திய மன்றம் 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
    • ஆர்க்டிக் பிராந்தியத்தில் முதலீடு செய்ய இந்தியா அழைக்கப் பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் இருதரப்பு வர்த்தகத்தின் அளவாக 25 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கு ஏற்கனவே அடையப் பட்டுள்ளது.
    • மே மாதம்  நடைபெற இருக்கும் வெற்றி நாள் அனுசரிப்பு நிகழ்வுகளுக்காக ரஷ்யாவிற்கு வருகை தர இந்தியப் பிரதமரை ரஷ்யா அழைத்துள்ளது.

              

ஒத்துழைப்புப் பகுதிகள்

  1. பொருளாதார ஒத்துழைப்பு
    • BRICS நாடுகளுக்கு இடையில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகம் & முதலீடுகள் மற்றும் பல்வேறு துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உள்ளன.
    • பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் அமலாக்கப் பட்டுள்ளன; புத்தாக்க ஒத்துழைப்பு, சுங்க ஒத்துழைப்பு; BRICS அமைப்பின் வர்த்தக மன்றம், அவசரகால நிதி ஒதுக்கீட்டு அமைப்பு (Contingent Reserve Agreement - CRA) மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான மூலோபாய ஒத்துழைப்பு முதலிய ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
  2. மக்களுக்கிடையேயான பரிமாற்றம்
    • இந்த அமைப்பின் நாடுகளில் உள்ள மக்களுக்கிடையேயான பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கும் கலாச்சாரம், விளையாட்டு, கல்வி, திரைப்படம் மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகிய துறைகளில் நெருக்கமான ஒரு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் வேண்டிய தேவையை BRICS உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
  3. அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு
    • BRICS உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பானது மிகவும் சமமான மற்றும் நியாயமான முறையில் உலகத்திற்கான அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி போன்றவற்றில் ஒத்துழைப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • உள்நாட்டு மற்றும் பிராந்திய சவால்களின் அடிப்படையில் கொள்கை ஆலோசனைகளையும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை BRICS அமைப்பு வழங்குகிறது.
  4. ஒத்துழைப்பு நடைமுறை
    • இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு பின்வருமாறு அறியப் படுகிறது:
    • படி I: அரசாங்கங்களுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள்.
    • படி II: அரசு அங்கீகாரம் கொண்ட நிறுவனங்கள் மூலம் உறவுகள். எ.கா. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள்.
    • படி III: உள்நாட்டு மக்களுக்கு இடையேயான மற்றும் சிவில் சமூகத்திற்கு இடையேயான உறவுகள்.

புதிய வளர்ச்சி வங்கி & CRA

  • புதிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் ஷாங்காயில் உள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த நான்காவது BRICS உச்சி மாநாட்டில், மூலதனங்களைத் திரட்ட புதிய வளர்ச்சி வங்கி அமைப்பதற்கான ஒரு சாத்தியக் கூறு காணப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு ஃபோர்டாலிஸாவில் நடந்த ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் புதிய வளர்ச்சி வங்கியை நிறுவுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • தூய்மையான எரிசக்தி, போக்குவரத்து உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், நிலையான நகர மேம்பாடு மற்றும் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை இதன் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.
  • BRICS உறுப்பினர்களிடையே சமமான உரிமைகளைக் கொண்டுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுடனும் ஒரு ஆலோசனை நடைமுறையில் புதிய வளர்ச்சி வங்கி செயல்படுகின்றது.
  • உலகளவில்  நிதி நெருக்கடி அதிகரித்து வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஆறாவது BRICS உச்சி மாநாட்டில் ஃபோர்டாலிஸா பிரகடனத்தின் ஒரு பகுதியாக BRICS நாடுகள் 2014 ஆம் ஆண்டில் BRICS அவசரகால நிதி ஒதுக்கீட்டில் (Contingent Reserve Arrangement- CRA) கையெழுத்திட்டன.
  • வரவு செலவு சமநிலையின் நெருக்கடி நிலைமையைத் தணிக்கவும் நிதி நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தவும் உதவும் வகையில் நாணயப் பரிமாற்றங்கள் மூலம் உறுப்பு நாடுகளுக்கு குறுகிய கால நிதியுதவி வழங்குவதை BRICS - CRA நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • CRAஇன் ஆரம்ப கால மொத்த மூலதன மதிப்பானது நூறு பில்லியன் டாலர்கள் (100 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

BRICS உறுப்பு நாடுகளிடையேயான பொருளாதார நெருக்கடி

  • BRICS அமைப்பின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகியவை ஏற்றுமதி வீழ்ச்சி சிக்கல்களைக் கொண்டுள்ளன.
  • அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தகப் போரின் காரணமாக, சீனா ஏற்றுமதியில் விரைவான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
  • வர்த்தக ஏற்றுமதியைத் தூண்டுவதற்கு இந்தியாவும் இதே போல் முயற்சி செய்து வருகின்றது.
  • மாஸ்கோவும், நிகழாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்றுமதியில் 4.8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
  • பிரேசில் தனியார் துறையைப் புதுப்பிக்க ஒரு விரிவான பொருளாதாரத் தொகுப்பை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
  • சர்வதேச நாணய நிதியம் ஆனது தென்னாப்பிரிக்காவின் 2019 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி மீதான முன்கணிப்பை 0.5 சதவீத புள்ளிகளாக குறைத்துள்ளது (ஏப்ரல் மாத முன்கணிப்பான 1.2 சதவீதத்திலிருந்து தற்போது அது 0.7 சதவீதமாக குறைந்துள்ளது).

சவால்கள்

  • மூன்று பெரிய நாடுகளான  ரஷ்யா-சீனா-இந்தியா ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க ஆதிக்கமானது BRICS அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறிட ஒரு சவாலாக உள்ளது.
  • ஒருங்கிணைந்த தேசிய அரசுகளை ஒரு பரந்த அரசியல் ஏற்பாட்டில் இணைக்கும் சீனாவின் முயற்சிகள் (கடல்வழிப் பட்டுப் பாதை முன்னெடுப்பு போன்றவை) BRICS உறுப்பு நாடுகளிடையே குறிப்பாக சீனா மற்றும் இந்தியா இடையே மோதலை ஏற்படுத்தும்.
  • ஒருபுறம் ரஷ்யா-சீனா ஆகிய நாடுகளுக்கும் மறுபுறம் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒரு சமநிலைப் படுத்தும் செயலை இந்தியா தொடர வேண்டும்.
  • BRICS அமைப்பானது அதன் ஆரம்ப இலக்குகளை அடைவதற்கு இன்னும் முயற்சிகள் எடுக்க வேண்டும்:
    • உலகளாவிய நிதி நிர்வாகத்தின் சீர்திருத்தம், ஐக்கிய நாடுகள் சபையின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு மன்றத்தின் விரிவாக்கம் போன்ற இலக்குகள்.
  • குழுவின் தெளிவற்ற தன்மை: BRICS அமைப்பு என்பது பிராந்தியம் அல்லாத குழுவாகும்.
  • அமெரிக்காவிற்கு எதிரான நிலை:
    • அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக அரசியல் செல்வாக்கை உருவாக்கும் ஒரு வழியாக மாஸ்கோவானது (ரஷ்யா) BRICS அமைப்பைப் பார்க்கின்றது.
    • சீனா தனது சொந்த உலகளாவியப் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக இந்த அமைப்பைக் கருதுகின்றது.
  • நான்கு நாடுகள் அமைப்புடனான QUAD (Quadrilateral Security Dialogue - பாதுகாப்பு உரையாடலிற்கான நான்கு நாடுகள் – அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா) மூலோபாயக் கூட்டாட்சியை விரிவுபடுத்தும் அதே வேளையில், BRICS அமைப்புடனும் இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது.
  • அரசியல் ரீதியாக, இந்த நாடுகள் அனைத்தும் ஒரே தரப்பில் இல்லை:
    • இந்தியாவும் ரஷ்யாவும் வரலாற்று ரீதியாக நெருக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொண்டாலும் பிராந்திய அளவில் அருகருகே அமையவில்லை.
    • இந்தியா-சீனா உறவுகள் ஒரு ஊசல் போல ஊசலாடுகிறது.
    • பிரேசில் தற்போது அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ளது.
  • புதிய வளர்ச்சி வங்கியின் மோசமான செயல்திறன்:
    • எந்த ஒரு பெரிய திட்டத்திற்கும் இந்த அமைப்பால் கடன் கொடுக்க முடியவில்லை. வெளிப்படைத் தன்மை மற்றும் திறமையான நிர்வாகம் இல்லாமை, உறுப்பு நாடுகளிடையே உள்ள உறவுகள் போன்ற காரணங்களால் இந்நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது.

செல்ல வேண்டியப் பாதை

  • BRICS நாடுகள் தங்கள் அணுகுமுறைகளையும் ஆரம்ப கால நெறிமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  • காலநிலை மாற்றம் மற்றும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட BRICS தலைமையிலான முயற்சிகளை BRICS அமைப்பு கருத்தில் கொள்ள வேண்டும்.
  • BRICS உறுப்பு நாடுகளிடையேயான நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னெடுப்புக்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக, புதிய வளர்ச்சி வங்கியானது மற்ற வளர்ச்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்.
  • ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ், மூடிஸ் போன்ற மேற்கத்திய நிறுவனங்களுக்கு எதிராக, இந்தியாவால் முன்மொழியப்பட்ட படி BRICS  தர மதீப்பீட்டு ஆணையம் (BRICS Credit Rating Agency - BCRA) என்ற ஒன்றை அமைப்பதற்கான யோசனை BRICS அமைப்பின் எதிர்கால நிகழ்ச்சி நிரலில் இருக்கலாம்.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்