TNPSC Thervupettagam

பிரிட்டன் ரகசிய பாணியிலிருந்து அமெரிக்க வெளிப்படை பாணிக்கு மாறட்டும் நம் பட்ஜெட் நடைமுறை!

February 11 , 2020 1798 days 701 0
  • இந்த ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நடவடிக்கைகளின்போது, ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றிக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் நடைமுறையைக் கைவிட்டால் என்ன என்ற எண்ணமே மீண்டும் மீண்டும் தோன்றியது. மிக மோசமான மந்தநிலையில் பொருளாதாரம் இருப்பதால், வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் துணிச்சலான, புதுமையான பெருந்திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
  • இப்போதுள்ள திட்டங்களும் கொள்கைகளும் அப்படியே தொடரும் என்பதுதான் நிதிநிலை அறிக்கையின் அடிநாதமாகத் தொடர்ந்திருக்கிறது. இதனால், தவிர்க்க முடியாத நிலையில் அறிக்கையானது மிக நீண்டதாகவும் அனைவருக்குமே அயர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துவிட்டது.
  • பொதுமக்களின் பெருமளவிலான எதிர்பார்ப்பு புறக்கணிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எண்ணம் அடுத்து தோன்றுவது இயற்கை. நெருக்கடியான சூழலில் மிகப் பெரிய தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்தவல்லதாக நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள், முடிவுகள் இருந்தால் அதைப் பிரதமரே அறிவித்துவிடுகிறார்.

சேமிப்பா... செலவா?

  • வரி விதிப்புகளைப் பொறுத்தவரையில் நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பல்வேறு வரிச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, அதிலும் பொது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்துவிட்ட பிறகு, மத்திய நிதியமைச்சர் தன் விருப்பத்துக்கு வரிகளை ஒரேயடியாகக் குறைப்பதோ கூட்டுவதோ இயலாது. மத்திய, மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய பொது கவுன்சில்தான் அதற்கான அதிகாரமுள்ள அமைப்பு. மத்திய அரசுக்கு இதில் ஏகபோக அதிகாரம் கிடையாது.
  • நடுத்தர வகுப்பில் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரியைக் கணிசமாகக் குறைக்க அறிக்கை விரும்புகிறது. ஆனால், அந்த வரிக் குறைப்பை நேரடியாக அமல்படுத்தாமல், இரண்டுவிதமான வரி செலுத்தும் முறையை ஏற்படுத்தி, இதில் ஒன்றை வரி செலுத்துவோரே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கிறது. சேமிப்பை ஊக்குவிக்க ஒரு முறை, செலவுகளை அனுமதிக்க இன்னொரு முறை.
  • புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறினால் சேமிப்புகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்குகளோ, வரிச் சலுகைகளோ கிடையாது. ஆனால், வரி விகிதத்தைக் குறைத்த திட்டத்தில் சேருவதாக இருந்தால் எந்தச் சலுகையையும் விதிவிலக்கையும் பெற முடியாது. இப்போது அனைவருடைய மனங்களிலும் எழும் ஒரே கேள்வி, இதில் எது எனக்கு அதிக நன்மையைத் தரும் என்பதுதான்.
  • இதைத் தீர்மானிப்பதற்கு அனுபவம் வாய்ந்த வரி ஆலோசகர்களைத்தான் நாட வேண்டும். அதுவரை புதிய வரி விதிப்பை ஏற்பதா, பழைய வரிவிதிப்பு முறையிலேயே தொடர்வதா என்ற மனப்போராட்டம் அவர்களுக்குள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
  • வருமான வரி செலுத்தும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்குக் குழப்பம் என்றால், பெரு நிறுவனங்களுக்கு நிதிநிலை அறிக்கையைக் கேட்டதும் பெருத்த ஏமாற்றம். நுகர்வோரிடம் மேலும் அதிக பணப்புழக்கம் இருக்கும் வகையில் வரி விலக்குகள், சலுகைகள் இருக்கும் என்று அவை எதிர்பார்த்தன.
  • நுகர்வோரிடம் பணம் இருந்தால்தான் தங்களுடைய தயாரிப்புகளை அதிக எண்ணிக்கையில் விற்க முடியும். நுகர்வும் தேவையும் அதிகரித்தால்தான் உற்பத்தியைப் பெருக்க முடியும். உற்பத்தியைப் பெருக்கினால்தான், வேலைவாய்ப்பும் நுகர்வும் அதிகரிக்கும். அதுதான் பொருளாதாரச் சக்கரத்தைச் சுழலவைக்கும். தங்களுடைய முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்று தொழிலதிபர்கள் காத்துக்கிடந்தார்கள்.
  • பொருட்களுக்கான தேவை அதிகமானால் கூடுதலாக புதிய உற்பத்திப் பிரிவுகளைத் திறக்கக்கூட அவர்கள் தயாராக இருந்தார்கள். விரைவாக விற்பனையாகும் நுகர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) துறையும், மோட்டார் வாகன உற்பத்தித் துறையும் இப்படி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளன. பொருளாதார மந்தநிலையால் மிகவும் பாதிப்படைந்தவை இவ்விரு துறைகள்தான்.

நிதிப் பற்றாக்குறை மீது கவனம்

  • எந்தவித சாகசத்திலும் ஈடுபட விரும்பாத இந்த நிதிநிலை அறிக்கை, அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான பற்றாக்குறையைக் கட்டுப்படுத்திவிட வேண்டும் என்கிற லட்சியத்தில் விடாப்பிடியாக இருக்கிறது. பொருளாதார மந்தநிலையிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய அவசியம் இருப்பதால் அரசு இந்தப் பற்றாக்குறை வரம்புக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தனது செலவுகளை அதிகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும், அப்படிச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்தன. ஆனால், இந்த எதிர்பார்ப்புகூட நிறைவேறவில்லை.
  • 2019-20 நிதியாண்டுக்கே இந்தப் பற்றாக்குறை 3.8%-க்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் நிதிநிலை அறிக்கை, 2020-21-ல் இது 3.5% ஆக இருக்க வேண்டும் என்று வரம்பை மேலும் கடுமையாக்கிக்கொண்டுள்ளது. இந்த முடிவால் பெரிய நன்மை ஏதும் ஏற்படப்போவதில்லை. அதேசமயம் நுகர்வு, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற அனைத்து நம்பிக்கைகளும் வற்றிவிட்டன.
  • இந்த நிதிப் பற்றாக்குறை தொடர்பாக இன்னொரு கருத்தும் உண்டு. அரசு கூறுகிறார்போல இது முடிந்த முடிவான அளவு அல்ல. நிதிநிலை அறிக்கை நடவடிக்கைக்குப் பிறகு கடன் பத்திரங்கள் மூலம் கடனைத் திரட்டுகிறது அரசு. இது அரசின் செலவுக்காக என்றாலும், பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நிலையைச் சமாளிக்கக் கையாளும் மறைமுக உத்தி என்பது அனைவருக்கும் தெரியும்.
  • இந்தக் கடன் திரட்டல் எந்த அளவுக்கு வரம்புள்ளது, திருப்பிச் செலுத்தக்கூடியது என்பதெல்லாம் விவாதத்துக்குரியவை. பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்குவதை ஒரு தொடர் அம்சமாகவே அரசு கருதினால், ‘அரசுத் துறைகளுக்கான கடன் தேவைக்கு’ என்று சொல்லியே தனியாக நிதி திரட்ட முற்படலாம். ஆனால், அப்படியும் இந்த நிதிநிலை அறிக்கையில் செய்யவில்லை.

இன்னும் தொடரும் பிரிட்டிஷ் முறை

  • நிதிநிலை அறிக்கையில் - அதிலும் வரிவிதிப்புகளில் - இந்த அளவுக்கு ரகசியம் காப்பது அவசியமா என்ற கேள்வி எழுகிறது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கால நடைமுறை விட்டுச் சென்ற பாரம்பரியம். நாம் இதைக் கைவிட்டு அமெரிக்க முறை நிதிநிலை தயாரிப்புக்கு மாற வேண்டும். அமெரிக்காவில் நிதிநிலை அறிக்கை தொடர்பான தனது உத்தேச யோசனைகளை அதிபர், அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரி மாதத்தில் அனுப்புவார்.
  • பிறகு அங்கே அது பரிசீலிக்கப்படும். அக்டோபர் 1-ல் நிதியாண்டு தொடங்கும். நிதி ஒதுக்கீடு சட்டத்தில் அதிபர் கையெழுத்திட்ட பிறகு அந்த நடைமுறைகள் முடிவுக்கு வந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுமக்களும் பல்வேறு துறையினரும் அவரவருக்குச் சாதகமான முடிவுகளைப் பெற பேரம் பேசுவார்கள், விவாதிப்பார்கள். இதனால், நிதிநிலை அறிக்கை தொடர்பான அனைத்துமே வெளிப்படையாகவே நடக்கும்.
  • நம் நாட்டிலும் இந்த முறையைப் பின்பற்றினால் நிதிநிலை எப்படி இருக்கும், வருமான வரிச் சலுகை எவ்வளவு, தொழில் துறைக்குச் சலுகைகள் என்ன என்றெல்லாம் ஊடகங்கள் ஊகித்து அவரவர் நோக்கங்களுக்கேற்ப எழுதுவதற்கான வாய்ப்புகள் குறையும். நிதிநிலை வெளிவராத நிலையில், அது எப்படி இருக்கும் என்று எழுதுவதும், அப்படி எழுதப்பட்டவற்றின் மீது விவாதங்களும் கருத்து மோதல்களும் நடப்பது போன்ற பயனற்ற வேலைகளும் முடிவுக்கு வரும்.
  • அரசின் நிதி, பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே புரட்டிப்போடும் அறிவிப்புகள் இருந்தால் அதைப் பிரதமரே நாட்டுக்கு சிறப்பு அறிவிப்பாகத் தெரிவித்துவிடுவார். எனவே, நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான அனைத்தும் வெளிப்படையாகவும், மக்கள் பங்கேற்கும் விதத்திலும் நடப்பதே நல்லது. அதன் மூலம் நமக்கு சிறப்பான நிதிநிலை அறிக்கைகூடக் கிடைக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (11-02-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்