TNPSC Thervupettagam

பிரியாத பிரிக்ஸ்

September 28 , 2017 2642 days 2084 0

பிரியாத பிரிக்ஸ்

--------

 அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்
 

போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒரு நாடு தன்னிச்சையாக தானே வளர்ந்து விட முடியாது. உலகில் உள்ள பிற நாடுகளின் உதவியும் இன்றைய உலகமயமான சூழலில் அதன் வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றது. ஒரு கை ஓசை எழுப்ப முடியாது அல்லவா ! உலகோடு இணைந்து செயல்படுவதே ஒரு நாட்டின் நலத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் கண்கூடாய் பார்த்திருக்கின்றோம். கூட்டுறவால் உயரவே பிரிக்ஸ் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பிரிக்ஸ்

முதலில் பிரிக்ஸ் அமைப்பு என்றால் என்ன என்பதனை அறிந்து கொள்வோம். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் ஆகும். பிரிக் அமைப்பானது 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை மாநாடு நடத்தப் பெற்று வருகின்றது. 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா பிரிக் கூட்டமைப்பில் இணைந்த பின் பிரிக்ஸாக மாறியது.

9-வது பிரிக்ஸ் மாநாடு: ஜியாமென் (Xiamen)
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதியிலிருந்து ஐந்தாம் தேதி வரை சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில் 9 வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் நோக்கம் “ஒளிமயமான எதிர்காலத்திற்கு வலிமையான கூட்டமைப்பு” (Theme of the summit: “BRICS: Stronger Partnership for a Brighter Future”) என்பதே ஆகும். முத்தாய்ப்பாய் இக்கூட்டத்திற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் தலைமை தாங்கினார்.இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுவான வளர்ச்சிக்காக பிரிக்ஸ் கூட்டுயர்வினை மேலும் உறுதிப்படுத்துதல், சவால்களை இணைந்து எதிர்கொள்ள உலகளவிலான ஆளுகையை விரிவுபடுத்துதல், பிரிக்ஸ் ஒத்துழைப்பிற்கு ஆதரவளிக்க மக்களிடையே பரிமாற்றங்களை ஏற்படுத்துதல், பரந்த அளவிலான கூட்டாண்மையினை ஏற்படுத்துதல் ஆகியன ஜியாமென் மாநாட்டின் நோக்கங்களாகும்.
இம்மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளில் ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்க உறுதி மேற்கொள்ளப்பட்டது. ஆம்! ஊழல்தானே ஒவ்வொரு நாட்டினையும் கரையானாய் அரித்துக் கொண்டிருக்கும் புற்று நோயாக உள்ளது. மேலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையான பணிகளில் கூட்டாக ஈடுபட முடிவு மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படும் பொருளாதாரத் தடை , ராணுவத் தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இம்மாநாடு வேதனை தெரிவித்தது. அனைத்து வகையிலான பயங்கரவாத செயல்திட்டங்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மதத் தீவிரவாதம் , பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடித்தல் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்கவிடாமல் தடுப்பது, தங்களது மண்ணில் பயங்கரவாத அமைப்புகளை செயல்படவிடாமல் தடுப்பது ஆகியவை அனைத்து நாடுகளின் பொறுப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குச் சர்வதேச அளவில் நேர்மையான கூட்டணியினை ஏற்படுத்துவது மற்றும் அது தொடர்பான ஐ.நா சபையின் நடவடிக்கைகளை ஆதரித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதம் ஒரு நாட்டின் பக்கவாதமாக மாறிப் பதம் பார்க்கின்றது. அது ஒழிக்கப்பட்டுவிட்டாலே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏதுமில்லையே.
மாநாட்டின் நிறைவில் ‘ஜியாமென் பிரகடனம்’ (Xiamen Declaration) என்ற பெயரில் பிரகடனம் வெளியிடப்பட்டது. குறிப்பாக அந்தப் பிரகடனத்தில் பாகிஸ்தானில் இருந்து கொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர்- இ- தொய்பா , ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய அமைப்புகளின் பெயர்கள் முதல் முறையாக சேர்க்கப்பட்டிருந்தன. இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டப் பின்னடைவாக கருதப்படுகின்றது. மேலும், ஐ.எஸ், அல்காய்தா, கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ஹக்கானி குழு, ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
லஷ்கர் –ஏ- தொய்பா மற்றும் ஜெய்ஷ் -இ- முகம்மது ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் இதுவரை இல்லாமல் இப்பொழுது சேர்க்கப்பட்டிருக்கின்றதே என்ன காரணமாக இருக்கும் என யோசித்தீர்களா? நமது பிரதமர் பயங்கரவாத பிரச்சனையை தீவிரமாக சாடியதே இதற்குக் காரணமாகும்.
இதற்கு முன்னர் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களைச் சேர்க்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது சீனா தடைக்கல்லாய் இருந்தமையால் நம் எண்ணம் நிறைவேறவில்லை. ஆனால், இப்போது ஒப்புதல் அளித்திருக்கின்ற சீனாவின் கண்ணோட்டத்தில் பாகிஸ்தான் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து மாற்றமாகவே இது கருதப்படுகின்றது. இதனால் சீன-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்படும் என்றும் அரசியல் வல்லுநர்களால் கணிக்கப்படுகின்றது.
43 பக்கங்களைக் கொண்ட ஜியாமென் பிரகடனத்தில் 17 முறை பயங்கரவாதம் குறித்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது நம் நாட்டின் வலியுறுத்தலுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம். அது மட்டுமில்லாமல் சீனாவுடன் டோக்லாம் பிரச்சனைக்குப் பிறகு புதிய அத்தியாயம் துவங்கப்பட்டுள்ளது. அதனை வாழ்த்தி வரவேற்கும் அதே வேளையில் பயங்கரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனில் ஜியாமென் மாநாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இருக்கும்.
 

பிரிக்ஸ் தகவல் துளிகள்

  • பிரிக் என்னும் வார்த்தையானது ‘கோல்மேன் சேக்’ (Goldman Sachs) என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • முதல் உச்சி மாநாடு 2009 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஏகடன்பர்கில் நடந்தது.
  • 10 வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் நடைபெற இருக்கிறது.
  • பிரிக்ஸ் நாடுகள் உலகின் 43% மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.
  • உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% கொண்டுள்ளன.
  • பிரிக்ஸ் நாடுகள் உலக வணிகத்தில் 17% பங்களிப்பினை அளிக்கின்றன.
  • அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகள் மிகப்பெரிய பொருளாதார வல்லமையைப் பெறும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
  • பிரிக்ஸின் ஐந்து நாடுகளும் G 20 நாடுகளில் உள்ளடக்கம் ஆகும்.

பிரிக்ஸ் உச்சி மாநாடுகள்

 
.எண் ஆண்டு நடத்திய நாடு நடைபெற்ற இடம்
1. 2009 ரஷ்யா ஏகடன்பர்க்
2. 2010 பிரேசில் பிரசிலியா
3. 2011 சீனா சான்யா
4. 2012 இந்தியா புதுடெல்லி
5. 2013 தென் ஆப்ரிக்கா டர்பன்
6. 2014 பிரேசில் ஃபோர்டலாசா
7. 2015 ரஷ்யா உஃபா
8. 2016 இந்தியா கோவா
9. 2017 சீனா ஜியாமென்
    பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமரின் உரைச் சுருக்கம்
  • பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள பிரிக்ஸ் நாடுகளிடையே வலுவான தோழமை அவசியம்
  • பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே புத்தாக்கம் (Innovation), டிஜிட்டல் பொருளாதாரம் (Digital Economy) ஆகியவற்றின் மூலம் வலுவான தோழமை ஏற்படுவதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்
  • வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல் (Promote Transparency), நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) நிறைவேற ஆதரவளித்தல் ஆகியவற்றிற்கு உதவ வேண்டும்.
  • பிரிக்ஸ் அமைப்பின் அவசர கால தொகுப்பு நிதியத்திற்கும் (Contingent Reserve Arrangement) சர்வதேச செலாவணி (IMF) அமைப்பிற்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.
  • உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களின் திறன்களை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன்களை தரவரிசைப்படுத்தும் நோக்கில் பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
  • இந்தியாவும் பிரான்சும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படுத்திய சர்வதேச சூரியசக்தி அமைப்புடன் (ISA) பிரிக்ஸ் நாடுகள் நெருங்கிப் பணியாற்றலாம்.
  • பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளிடமும் சூரிய மின்சக்தி மேம்பாட்டைப் பயன்படுத்த ஐஎஸ்ஏவுடன் பிரிக்ஸ் அமைப்பின் வங்கியான புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank) தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
  • புதிய வளர்ச்சி வங்கியிடமிருந்து குறிப்பாக தூய்மையான எரிசக்திக்கு (Clean Energy) அதிக அளவில் நிதி பெறப்படவேண்டியது அவசியம் ஆகும்.
  • திறன் மேம்பாடு (Skill Development), சுகாதாரம் (Health), உள் கட்டமைப்பு (Infrastructure), உற்பத்தி மற்றும் பயணத் தொடர்பு (Connectivity) ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேம்படுவதற்கு இந்தியா உதவிடத் தயாராக இருக்கிறது.
  • பொலிவுறு நகரங்கள் திட்டம் (Smart Cities), நகரமயமாக்கல், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் அவசியம்.
  • பிரிக்ஸ் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றிற்காக புதிய வளர்ச்சி வங்கி கடன்களை அளிக்கத் தொடங்கியுள்ளது.
  • பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரிக்ஸ் அமைப்பானது ஒத்துழைப்பிற்கான சிறப்பான செயல்திட்டத்தினை உருவாக்கியுள்ளது.
  • நிலைத்தன்மைக்கும் (Stability) வளர்ச்சிக்கும் (Development) நாம் பங்களிப்பை ஆற்றி வருகின்றோம்.
  • நமது ஒத்துழைப்பின் அடிப்படை அம்சங்களாக வர்த்தகமும் பொருளாதாரமும் இருந்து வரும் அதே வேளையில் பாரம்பரியம், கலாச்சாரம், வேளாண்மை, சுற்றுச்சூழல், எரிசக்தி, விளையாட்டு, தகவல் தொழில் நுட்பம் ஆகிய வேறுபட்ட துறைகளிலும் நம்மிடையிலான ஒத்துழைப்பை நாம் எட்டியுள்ளோம்
  • இந்தியா தற்போது ஏழ்மையை ஒழிப்பதற்கும், மக்களுக்கு சுகாதாரம், துப்புரவு , உணவுப் பாதுகாப்பு, திறன்கள், பாலினச் சமத்துவம், எரிசக்தி, கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்குமான லட்சியப்பாதையில் பயணித்து வருகின்றது.
  • பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்கள் உற்பத்தித் திறனைப் பெருக்குவதோடு மட்டுமல்லாது தேச நிர்மாணத்தில் பெண்களை பங்கேற்கச் செய்வதற்காகவும் உள்ளன.
  • இந்தியா தற்போது கருப்புப் பணம் மற்றும் ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தினை தீவிரப்படுத்தி உள்ளது.
  • பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவின் அனுபவத்தினைப் பயன்படுத்தி தோழமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
  • உலகிலேயே சந்தை வாய்ப்புள்ள பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா மாறி வருகின்றது.
  • சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மூலம் நாடு ஒரே சமச்சீரான சந்தையாக உருவெடுத்துள்ளது.
  • நிலைத்தன்மை (Stability), நீடித்த வளர்ச்சி (Sustainable Development), செழுமை (Prosperity) ஆகியவற்றை நாம் நாடுவதற்கு அடுத்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானவை ஆக கருதப்படுகிறது. இந்த மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பிரிக்ஸ் நாடுகளின் தலைமையானது மிகவும் அவசியமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்