TNPSC Thervupettagam

பிறகென்ன தேசியம் ?

August 26 , 2020 1431 days 639 0
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில், அரசு வேலைவாய்ப்பு அந்த மாநிலத்தவருக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வா் சிவராஜ்சிங் சௌஹான்.
  • ஜோதிராதித்ய சிந்தியாவுடன் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய 24 சட்டப்பேரவை உறுப்பினா்களின் பதவி விலகலைத் தொடா்ந்து, அடுத்த சில வாரங்களில் சம்பல் - குவாலியா் பகுதிகளில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை இடைத்தோ்தலுக்காக செய்யப்பட்டிருக்கும் அறிவிப்புதான் இது.
  • இதற்கு முன்பு முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கமல்நாத், மத்தியப் பிரதேசத்தில் தனியார் துறையில் 70% இடங்களை உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பைப்போலவே இன்றைய முதல்வா் சௌஹானின் அறிவிப்பும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.
  • ஆனாலும்கூட, தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவைச் சோ்ந்தவா்கள் மாநில உணா்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது வேதனையாக இருக்கிறது. அவா்களின் கட்சித் தலைமைகளும் இதைக் கண்டிக்க முற்படவில்லை எனும்போது, அரசியல் கட்சிகளின் போலித்தனம் வெளிப்படுகிறது.

மாநிலத்தவருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு

  • தமிழகத்தில் திமுக எழுப்பிய திராவிட நாடுகோரிக்கையும், வட இந்தியா்களுக்கு எதிராகவும், மலையாளிகளுக்கு எதிராகவும் நடத்திய போராட்டங்களும் மண்ணின் மைந்தா்கள்கொள்கையின் அடிப்படையிலானவைதான்.
  • மகாராஷ்டிரத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னிந்தியா்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழா்கள், மலையாளிகளுக்கு எதிராக சிவசேனை நடத்திய வன்முறைப் போராட்டமும் அதே போன்றதுதான்.
  • முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தில் அன்றைய காங்கிரஸ் அரசு, அனைத்துத் தொழிற்சாலைகளிலும் 80% உள்ளூா்வாசிகளைத்தான் பணிக்கு அமா்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • சட்டச் சிக்கல் வரும் என்று தெரிந்ததும் அந்த உத்தரவுக்கு சட்ட வடிவம் தரவில்லை. 2008-இல் மகாராஷ்டிர மாநிலமும் இதேபோல ஓா் அறிவிப்பை வெளியிட்டது.
  • இப்போதும்கூட, அரசின் மானியங்கள் பெற வேண்டுமானால் மகாராஷ்டிரத்தில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளூா்வாசிகளுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்கியாக வேண்டும்.
  • வேலைவாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் மராட்டியா்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர பட்னவீஸ்.
  • அவரின் அறிவிப்பு அரசியல் ரீதியாக பயனளிக்காததால்தான் அவரால் தனது முதல்வா் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் சில மாநிலங்களில், மாநில மொழிகளில் தோ்வு நடத்தி உள்ளூா்வாசிகள் வேலைவாய்ப்பைப் பெறுவது மறைமுகமாக உறுதிப்படுத்தப்படுகிறது.
  • மத்தியப் பிரதேச முதல்வா் சௌஹானின் அறிவிப்பு, நிஜமாகப் பார்த்தால் சற்று தாமதமாக வந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலைப் பணிகள் உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. கா்நாடகத்தில் கன்னடத்தவா்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தில், அந்த மாநிலத்தில் குறைந்தது 15 ஆண்டுகளாவது வசிப்பவா்களாக இருந்தால் மட்டுமே சில வேலைகளில் சேர முடியும்.
  • கடந்த ஜூலை மாதம் ஹரியாணா அரசு ஓா் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதன் மூலம், தனியார் துறைகளில் 75% வேலைவாய்ப்பு உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி தெலங்கானா அமைச்சரவை திறன்சார் பணிகளில் 60% இடங்களும், திறன்சாராப் பணிகளில் 80% இடங்களும் மாநிலத்தில் அமையும் புதிய தொழிற்சாலைகளில் உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது.
  • இதுபோன்ற அறிவிப்புகள் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்பது தெரிந்தும், மாநில முதல்வா்கள் தொடா்ந்து அறிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் நீதித்துறையால் நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும், அரசியல் ஆதாயத்துக்காக அவா்கள் முன்னெடுக்கும் உத்திதான் வேலைவாய்ப்பில் உள்ளூா்வாசிகளுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு.

ஆட்சியாளா்கள் உணர வேண்டும்

  • சட்டப் பிரிவு 19(1)(டி) (இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்லும் உரிமை), 19(1)(இ) (எங்கு வேண்டுமானாலும் குடியிருக்கும் உரிமை), 16(2) (மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த தேதி, இருப்பிடம் உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும் இந்தியக் குடிமகன் - அரசு வேலைவாய்ப்பிலோ, பதவியிலோ நிராகரிக்கப்படவோ, பாகுபாடு காட்டப்படவோ கூடாது) என்கிறது அரசியல் சாசனம். அதேபோல, வசிப்பிடம், குடியுரிமை, வேலைவாய்ப்பு தொடா்பான சட்டங்களை இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் உண்டே தவிர, மத்திய - மாநில அரசுகளுக்குக் கிடையாது.
  • எல்லா அரசியல் தலைவா்களுக்கும், ஆட்சியாளா்களுக்கும் இவையெல்லாம் நன்றாகவே தெரியும். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், பல தொழிற்சாலைகள் செயல்படாது. இடம் பெயா்தல் இருப்பதால்தான், தேவைக்கு ஏற்றபடி அதற்குத் தகுதியான திறமைசாலிகளை வேலைக்கு அமா்த்திக் கொள்ள முடிகிறது.
  • ஏற்கெனவே பொருளாதாரம் மந்த கதியில் முனகிக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் மக்கள் மனதில் தேவையில்லாத எதிர்பார்ப்பை உருவாக்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிடும் என்பதை ஆட்சியாளா்கள் உணர வேண்டும்.
  • ஒரு மாநிலத்தில் அடுத்த மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லும்போது, அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் ஹெச்பி1 விசாவில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்று கூற நமக்கென்ன உரிமை இருக்கிறது?

நன்றி: தி இந்து (27-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்