TNPSC Thervupettagam

பிறமொழி கலப்பின்றிப் பேசுவோம்

March 2 , 2023 529 days 673 0
  • தமிழ்மொழி இனிமையான மொழி. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்பதுதான் பொருள். தமிழ்மொழி இலக்கிய அளவிலும் இனிமை கொண்டது. மொழி அளவிலும் இனிமை கொண்டது. ஆகவேதான், தமிழ்மொழியை அதன் இனிமை, பெருமை, உயர்வு கருதி மொழியியல் அறிஞர்கள் "உயர்தனிச் செம்மொழி' எனப் பாராட்டுகிறார்கள். மேலும் உலக மொழிகளில் உயர்வானது தமிழ்மொழி. அதில் உள்ள இலக்கிய, இலக்கணங்கள் பிற மொழிகளைவிட எண்ணிக்கைகள் அதிகம்.
  • தமிழ்மொழியின் உயர்வுக்கு அதன் தொன்மையும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. திருவள்ளுவரின் 'திருக்குறள்', இளங்கோவடிகளின் "சிலப்பதிகாரம்', மணிவாசகரின் "திருவாசகம்' முதலான நூல்கள் உலகப் புகழ் பெற்றவையாகத் திகழ்கின்றன. மக்களின் உயர்வுக்கு வழிகாட்டுகின்ற இலக்கியங்கள் தமிழில் நிரம்ப உண்டு.
  • இந்தியாவில் இதிகாசம் என்று போற்றப்படும் நூல்கள் இரண்டு. அவை வால்மீகி இயற்றிய ராமாயணமும், வியாசர் இயற்றிய மகாபாரதமும். இந்நூல்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், இவற்றில், தமிழ்நாடு, தமிழ் மொழி பற்றி பல்வேறு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
  • வால்மீகி ராமாயணத்தில் ராமனின் மனைவி சீதையை, ராவணன் தன் இலங்கை நாட்டுக்குத் தூக்கிச் சென்று விட்டான். ராமன் சீதையைத் தேடிச் செல்கிறான். குரங்கு வீரர்கள் ராமனுக்கு உதவி செய்தனர். அவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். பல இடங்களில் தேடினர். சில குரங்கு வீரர்கள் இலங்கை நாட்டுக்கே தேடிச் சென்றனர். அப்போது இலங்கைக்குப் போக வழி தெரியவில்லை. அந்த இடத்தில் வால்மீகி வழி கூறுகிறார்.
  • "இலங்கைக்குப் போகும் குரங்கு வீரர்களே! நீங்கள் இலங்கைக்குப் போகும் வழியில் ஒரு நாட்டைப் பார்ப்பீர்கள். அந்த நாட்டின் பெயர் பாண்டிய நாடு. அந்த நாட்டின் மன்னன் பாண்டியன். அங்கு பெரிய கோட்டை இருக்கும். அந்தக் கோட்டைக்குப் பெரிய வாயில் இருக்கும். அந்த வாயிலில் பெரிய கதவுகள் இருக்கும். அந்தக் கதவுகள் தங்கத்தால் அமைந்திருக்கும்.
  • கதவுகளில் முத்துகள், மணிகள் பதிக்கப்பட்டிருக்கும். அவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அந்த நாட்டில் இனிமையான மொழி ஒன்று பேசப்படும்' என்று கூறுகிறார் வால்மீகி. அதாவது தமிழ்மொழியின் இனிமையை அன்றே உணர்ந்துள்ளார் வால்மீகி என்பதற்கான சான்று இது.
  • அதைப்போன்றே, மகாபாரதத்தில், "அர்ஜுனன் பாரத நாட்டைச் சுற்றி வருகிறான். அப்போது பாண்டிய நாட்டுக்கும் வருகிறான். அங்குள்ள குளங்களில் நீராடுகிறான்; கோயில்களில் வணங்குகிறான்' என்று தமிழ்நாட்டைப் பற்றி உயர்வாகக் குறிப்பிடுகிறார் வியாசர்.
  • இக்குறிப்புகள், தமிழ் மொழியின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன. இவை மாத்திரமல்ல, மிகப் பழைய காலத்தில் குமரிக்கண்டம் என்ற ஒரு நாடு இருந்தது. அதற்கு லெமூரியாக் கண்டம் என்ற பெயரும் இருந்தது. அது இந்திய நாட்டுக்குத் தெற்கில் இருந்தது. அந்த நாடு அழிந்து விட்டதால், அந்த நாட்டில் இருந்த மக்கள் பல இடங்களுக்குச் சென்றனர். அந்த நாட்டு மக்கள் பேசிய மொழி தமிழ் மொழி என்று புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
  • அதாவது அறிவியல் அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் தமிழ் மொழியின் தொன்மை நமக்குத் தெரிய வருகிறது. தமிழ் மொழி தனித்த மொழி என்பது அதன் மற்றுமொரு சிறப்பு. தமிழ்மொழி வாழ வளர மற்றொரு மொழியின் துணை தேவையில்லை. ஆனால், பல மொழிகள் வாழ தமிழ்மொழி உதவியாக இருந்திருக்கிறது.
  • மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாகத் தமிழே திகழ்கிறது. ஆகவேதான், மொழியியல் அறிஞர்கள் உலகில் உள்ள செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று அறிவித்துள்ளனர்.
  • செம்மொழி என்பதற்கான அடிப்படைத் தகுதி திருத்தமான மொழி, தெளிவான எழுத்து வடிவம். எழுத்து வடிவத்திற்கு ஏற்ற ஒலிப்பு முறை, எழுத்து வடிவத்திற்கும், ஒலிப்பு முறைக்கும் ஏற்ற பொருள் முடிவு. இவற்றைப் பெற்ற மொழியே திருத்தமான மொழி எனப்படும். தமிழ்மொழிக்கு தெளிவான எழுத்து வடிவம், ஒலிப்புமுறை, பொருள் முடிவு ஆகியன இயல்பாகவே அமையப்பெற்றிருக்கின்றன. ஆகவேதான், தமிழ்மொழி செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது.
  • உலகம் வளர்ந்து வருகிறது, மக்களும் வளர்ந்து வருகின்றனர். இவ்வளர்ச்சிக்கு ஏற்ப மொழியும் ஈடுகொடுத்து வளர வேண்டும். அப்படி நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் மொழியே செம்மொழி எனப்படும். தமிழ் மொழி உலக மக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து வருகிறது. ஆகவேதான், புதிய புதிய சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், இலக்கணங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
  • வளர்ந்து வரும் செம்மொழியாகவும், வாழ்ந்து வரும் செம்மொழியாகவும், பழைமைக்குப் பழைமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் விளங்குவது நமது தமிழ்மொழி ஒன்றே.
  • உலகில் இருக்கும் மொழிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 8,000 என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இவற்றில் சில மொழிகளே எழுதவும் பேசவும் பயன்படுகின்றன. மேலும் வரி வடிவத்தில் எழுதக்கூடிய மொழிகள் மிகக் குறைவாக இருக்கின்றன. இவற்றில் ஏழு மொழிகள்தான் செம்மொழித் தகுதி படைத்தவை. அவற்றில் நம் தமிழ்மொழியும் ஒன்று.
  • எழுத்தளவிலும் பேச்சளவிலும் தென்மை காத்து செம்மையோடும், சிறப்போடும், சீரோடும் நமது ஊனிலும் உதிரத்திலும் கலந்துவிட்ட மொழிதான் தமிழ்மொழி. தமிழ் மொழி, தொன்மை, எளிமை, இளமை, வளமை, செம்மை, இனிமை, பெருமை எனப் பலவகை சிறப்புகள் ஒருங்கே அமையப்பெற்றது என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வியந்து போற்றுகிறார்.
  • ஆகவேதான் மகாகவி பாரதியார், "தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்று கூறினார். "தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாவேந்தர் பாரதிதாசன் உரக்கச் சொன்னார்.
  • அறிவியல் அடிப்படையில் கூட, தமிழ்மொழி பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால், அம்மொழியை உச்சரிக்கும் போது சுவாசப்பையில் இருந்து குறைந்த காற்றே வெளியேறுகிறதாம். பிற மொழிகளைப் பேசும்போது, நம் சுவாசப்பையிலிருந்து அதிகக் காற்று வெளியேறுகிறதாம். அதிகமான காற்று வெளியேறிச் செல்வதால் உடல் உறுப்புகளுக்குத் தேய்மானம் ஏற்படக்கூடுமென மொழியியலாளர்கள் கூறுகின்றனர்.
  • உலக மொழிகளில் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி உண்டு. ஆனால், தமிழ்மொழியில் மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகவேதான், தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை இறையனார் அகப்பொருள் என்னும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திணை ஏழும், புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ். வீரத்தைப் பறைசாற்றும் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மனத்தை நெகிழ வைக்கும் தேவாரம் திருவாசகம், தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கண இலக்கிய நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன.
  • பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வகைகளில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. ஆனால், தமிழில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால், தமிழைக் கற்பது மிக மிக எளிதான ஒன்றாகும்.
  • பிறமொழி கலப்பில்லாத தூய தமிழில் பேசும் முறை முற்றிலும் அழிந்து விட்டதா என்று கேட்டால், ஆம் என்றும் கூறலாம், இல்லை என்றும் கூறலாம். செந்தமிழ் நாட்டின் தென்மாவட்ட கிராமங்களில் நல்ல தமிழ் இன்னும் பேசுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். கொங்கு தமிழ் பேசும் மக்களும், ஜவ்வாது மலைப்பகுதியில் வாழும் மக்களும் ஆங்கிலக் கலப்பில்லாமல்தான் இன்றும் பேசுகிறார்கள்.
  • நம்மில் பலர் கொஞ்சம் படித்து விட்டால், ஊரை விட்டே போய்விடுகிறார்கள். நிறையப் படித்து விட்டால், நாட்டை விட்டே போய்விடுகிறார்கள். படித்த தமிழர்கள்தான் பேசும் பேச்சில்தான் ஆங்கிலச் சொற்களின் கலப்பு அதிகமாக இருக்கிறது. இது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று ஒருசாரார் சொல்கிறார்கள்.
  • பலர் ஆங்கிலம் பேசுவதை கெளரவமாக நினைக்கிறார்கள். ஆங்கிலம் பேசத் தெரிந்ததால் தான் மென்பொருள் துறையில், நகர்ப்புறங்களில், தொழிற்சாலைகளில் வேலையே கிடைக்கிறது. ஆங்கிலவழிக் கல்வியிலும், இரண்டாம் பாடமாக தமிழை விடுத்து ஹிந்தி, பிரெஞ்சு, சம்ஸ்கிருதம் பயில்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி விட்டது.
  • அதற்கு காரணம், அம்மொழிகள் மீதான பற்றல்ல. அம்மொழி பாடத்திட்டங்கள் மிக எளிமயாக்கப்பட்டிருக்கின்றன என்பதே. அதனால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது. தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தமிழைப் படிக்காமலேயே பன்னிரண்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற முடியம் என்கிற நிலை உள்ளது.
  • ஆகவே, அரசு, தமிழ்ப்பாட நூல்களை எளிமையாக்க வேண்டும். ஒரு மொழி குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்றால், கற்றுக்கொடுக்கும் முறை எளிமையானதாகவும், இனிமையானதாகவும் இருக்க வேண்டும். தமிழர்கள் ஆங்கிலம் மட்டுமல்ல, எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அவசியம் ஏற்பட்டால் அந்தந்த மொழிகளில் பேசலாம்.
  • ஆனால், பொது இடங்களில், ஊடகங்களில் தமிழில்தான் பேச வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் இன்றும் தூய தமிழில்தான் பேசுகிறார்கள். நாமும் தூய தமிழ் பேசுவோம். தமிழகத்தில் தமிழர்களே தமிழ் பேசுவதில்லை என்னும் வசையை மாற்றுவோம். தாய்மொழியாம் நம் தமிழ் மொழியைப் போற்றுவோம்.

நன்றி: தினமணி (02 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்