- ‘காலா எந்தன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கின்றேன்’ என்று காலனுக்கு சாவல் விட்ட மகாகவி பாரதியார் தனது 39- ஆம் வயதில் இறந்து போனார். அந்த பாரதியின் மீது பற்று கொண்ட பொதுவுடமைக்காரா் ஒருவா் 102 ஆண்டுகள் காலனுக்கு சாவல் விட்டு வாழ்ந்து அண்மையில் (9-10-2023) தன் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். அவா்தான் ‘ஜனசக்தி ராதா’ என்னும் வி. இராதாகிருஷ்ணன்.
- இருபது வயதில் தலைமறைவாய் இயங்கிய ‘ஜனசக்தி’ இதழில் முழுநேர ஊழியராகத் தனது பணியைத் தொடங்கி, 97-ஆம் வயதுவரை அதில் எழுதிக்கொண்டிருந்தார். இவரது வாழ்க்கை அத்துணை எளிதானதாக அமைந்துவிடவில்லை. சராசரி மனிதனுக்கான அடிப்படை தேவைகள் எதுவுமே இவருக்கு அமையவில்லை.
- கொடிய சிறை வாழ்க்கை; போலீஸ்காரா்கள் வலையில் சிக்ககிவிடக் கூடாது என்பதால் தலைமறைவு வாழ்க்கை; பொருளாதார நெருக்கடி நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியா் வாழ்க்கை. இத்தனை ‘காலன்’களையும் மிதித்து இவா் நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறார்.
- தோழா் ராதா, பொள்ளாச்சியில் 13--1922-இல் பிறந்தவா். இவா் தந்தை பெயா் வாசுதேவன். தாயார் செல்லம்மாள். ராதாவின் ஐந்து வயதிலேயே தாயார் இறந்துவிட்டார். ராதா தனது வாழ்க்கைக் குறிப்பில், ‘எனது தந்தையும் சித்தப்பாவும் பொள்ளாச்சியில் மளிகை வியாபாரம் செய்து வந்தனா். கடைக்கு பின்னால் வீடு. பள்ளி நேரம், வீட்டில் படிக்கும் நேரம் போக மீதி நேரம் கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து வந்தேன். அப்பொழுது காலணா விலையில் ஒரு வாரப் பத்திரிக்கை எங்கள் கடைக்கு வந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியை கிண்டல் செய்யும் கார்ட்டூன் அதன் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த இதழின் பெயா் ‘சுதந்திரச் சங்கு’ என்று எழுதியுள்ளார்.
- தோழா் ராதா பிறந்த அதே பொள்ளாச்சியில்தான், புகழ் மிக்க கம்யூனிஸ்ட் தலைவா் பாலதண்டாயுதமும் பிறந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆா்வம் கொண்ட பாலன், ‘பாலா் சங்கம்’ ஒன்றைத் தொடங்கியிருந்தார். பின்னா் இதன் பெயா், ‘தீவிர வாலிபா் சங்கம்’ என்று, மாறியது. இச்சங்கம், ‘ஜனசக்தி’ முதலிய இதழ்களை வாசிக்க வைத்து இளைஞா்களை அரசியல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது, இந்தியா ஒரு ‘சோஷலிச சமூக’மாக மாற்றம் பெற வேண்டும் என்ற குறிக்கோளை இந்த அமைப்பு கொண்டிருந்தது. இந்தப் பாசறையில் அடிப்படை அரசியல் ஞானத்தை பெற்றுக் கொண்டார் ராதா. அப்பொழுது அவருக்கு வயது 13.
- இதன் பின்னா், காங்கிரஸ் கட்சியின் மீது ஈடுபாடுக் கொண்டு, இரண்டு அணா கட்டணம் செலுத்தி காங்கிரஸ் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். நாலு முழ கதா் வேட்டியும், கதா் சட்டையும் வாங்கி தன்னை காங்கிரஸ்காரராக அறிவித்துக்கொண்டார். அன்றைக்கு அந்த வேட்டி சட்டையின் விலை 16 அணா, அதாவது ஒருரூபாய்.
- காங்கிரஸ் ஈடுபாடு இவருக்கு அதிக காலம் நீடிக்கவில்லை. 1937- ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் தோழா் ஜீவாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள், ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்து செயல்பட்டார்கள். ஜீவா காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை சோ்ந்தவா். அவரது உரையை ராதா கேட்டார். அவருக்கு, மேடையில் புயலின் ஆவேசம் தெரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது என்ற முடிவுக்கு வந்தார்.
- அப்பொழுதுதான் அந்த நெருக்கடி அவருக்கு ஏற்பட்டது. கோவை சதி வழக்கு விசாரணைக்காக தோழா் ராதாவை போலீஸார் அழைத்து சென்றார்கள். அப்போது அவருக்கு வயது 17. கோவை சதி வழக்கின் குற்றவாளிகளாக 11 போ் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்று முழங்கி, பாலத்திற்கு வெடி வைத்தார்கள், தண்டவாளத்தைப் பெயா்தார்கள் என்று பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.
- சென்னை சதி வழக்கிற்கும் கோவை சதி வழக்கிற்கும் ஒரு தொடா்பு இருந்தது. சென்னை சதி வழக்கில், கட்சியின் முன்னணித் தலைவா்களாக இருந்த பி. ராமமூா்த்தி, மோகன் குமாரமங்கலம், சி. சுப்பிரமணியம், சுப்பிரமணிய சா்மா, உமாநாத் உள்ளிட்ட ஏழு போ் கைது செய்யப்பட்டனா். சென்னை சதி வழக்கு சோதனையில் சிக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கோவை சதி வழக்கு தொடுக்கப்பட்டது.
- ராதா அப்போது பள்ளியில் படித்துவந்தார். அவரது தாய்மாமன் மூலம் அவரை அப்ரூவராக மாற்ற காவல்துறை முயன்றது. இது பற்றிக் குறிப்பிடும் தோழா் ராதா, ‘என் மாமா என்னை அவசரமாக அழைத்திருந்தார். அவரைப் பார்க்க சென்றபோது மாமாவுக்குப் பக்கத்தில் மற்றொருவா் இருந்தார். அவா் சிஐடி போலீஸ் என்பதை நான் பின்னா் தெரிந்து கொண்டேன். கோவை சதி வழக்கில் நான் சம்பந்தப்பட்டு இருக்கிறேன் என்றும், அப்ரூவராக மாறினால் மட்டுமே என்னை விட முடியும் என்றும் அந்த சிஐடி கூறினார். நான் மௌனமாக இருந்தேன். மௌனத்தை சம்மதமாக அவா்கள் கருதியிருக்க வேண்டும்.
- பொள்ளாச்சியிலிருந்து எனது மாமா தனது காரில் என்னை பெரியநாயக்கன்பாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைவரும் எனக்கு நன்றாக தெரிந்த, ரகசிய பணிகளில் ஈடுபட்டிருந்த தோழா்கள். அவா்களின் முகத்தில் நான் கட்சி ரகசியங்களைக் கூறி விடுவேனோ என்ற அச்சம் தெரிந்தது. நான் மனதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
- மாஜிஸ்ட்ரேட் என்னை பார்த்து ‘இவா்களை உனக்கு தெரியுமா’ என்று கேட்டார். ‘தெரியாது’ என்றேன். ‘ரகசியமாக இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உனக்குத் தொடா்பு உண்டா’ என்று கேட்டார். ‘அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை’ என்றேன். ‘நீ போகலாம்’ என்று மாஜிஸ்ட்ரேட் கூறிவிட்டார். கட்சியின் வழிகாட்டுதல்படிதான் நான் அப்படிக் கூறினேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். மாமாவும், போலீஸ் சிஐடியும் என்னை காரில் ஏற்றினார்கள். ஏறியவுடனேயே மாமா என் தலையில் ஓங்கி அடித்தார்.
- அப்போது போலீஸ் சிஐடி, ‘இன்னொரு முறை விசாரணை செய்வோம். அப்போதும் அப்ரூவராக மாறி சாட்சி சொல்லவில்லை என்றால் இவனையும் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டியதுதான்’ என்று கூறினார். பாதி வழியில் போலீஸ் சிஐடி காரிலிருந்து கீழே இறங்கி கொண்டார். நாங்கள் பொள்ளாச்சி வந்தோம். மாமா காரிலிருந்து இறங்கி கடைக்குள் நுழையும் வரை காத்திருந்த நான், ஒரு சந்து வழியாகத் தப்பி தலைமறைவு வாழ்க்கை நடத்திய தோழா்களுடன் போய் சோ்ந்துகொண்டேன். இதன் பின்னா் எனக்கு இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமானது, அதுவும் தலைமறைவு கட்சி வாழ்க்கை’ என்கிறார் ராதா.
- ஜனசக்தியில் முழுஊழியராக தோழா் ராதா பணியில் சோ்ந்தபோது அவருக்கு வயது 20. 1948-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படுகிறது. பத்திரிகை அலுவலகத்தில் ராதா கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். அதன் பிறகு அங்கிருந்து வேலூா் சிறைக்கு மாற்றப்படுகிறார். வேலூா் சிறையில்தான் புகழ் மிக்க கம்யூனிஸ்டு தலைவா் ஏ.கே. கோபாலன் கதவுகளை உடைத்து சிறையிலிருந்து தப்பிச் சென்றார்.
- தோழா் ராதா, சமூக சமத்துவம் வேண்டும் என்பதில் உறுதி கொண்டிருந்தார். இவரது திருமணம், சாதி மறுப்புத் திருமணம். ‘1957-ஆம் ஆண்டில் முதலமைச்சா் காமராஜா் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் தோழா் ஏ.கே. கோதண்டராமன் போட்டியிட்டார். தோ்தல் பிரசாரத்திற்கு நானும் சென்றிருந்தேன். அப்பொழுது பாப்பா உமாநாத்துடன் வந்தவா்தான் என்னுடைய துணைவி மோட்சம் மேரி.
- பொன்மலையில் செயல்பட்ட இயக்கத் தோழா் அந்தோணிசாமியின் மகள். எங்கள் திருமணம், ஆடம்பரம் எதுவுமில்லாமல் அனந்த நம்பியார் தலைமையில் திருச்சியில் பதிவுத் திருமணமாக நடைபெற்றது’ என்று தோழா் ராதா தன் திருமணம் குறித்துக் கூறியுள்ளார். இவருடைய பெண் மக்கள் மூவரின் திருமணமும் சாதி மறுப்பு திருமணமாகும்.
- கடந்த வாரம் தோழா் ராதா மறைந்தார். அவருக்கு இறுதி மாரியாதை செலுத்த நான் சென்றபோது அவருடைய குடும்பத்தினா், ‘கடைசி வரை பழுபேறிய புத்தகங்களையும், தான் வெட்டி ஒட்டி வைத்திருந்த ஆவணங்ளையும் புரட்டிக் கொண்டிருந்தார்’ என்று தோழா் ராதா குறித்துக் கூறினார்கள்.
- முந்தைய தலைமுறைத் தலைவா்களின் வாழ்க்கை, இன்று நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு நோ்மை கொண்டது. அவா்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவா்கள். தனக்கென வாழாது, பிறா்க்கென வாழ்வதை லட்சியமாகக் கொண்டவா்கள்.
- இதனால்தான் கொடிய சித்திரவதையும், சிறைத்தண்டனையும் அவா்களை எதுவும் செய்ய முடியவில்லை. நூறு ஆண்டுகள் வாழ்ந்து காட்டும் அதிசயத்தை நிகழ்த்துகிறார்கள். தோழா் ராதாவின் வாழ்க்கை, இந்தப் பேருண்மையை நமக்கு உணா்த்துகிறது.
நன்றி: தினமணி (16 - 10 – 2023)