TNPSC Thervupettagam

பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு

October 8 , 2019 1921 days 935 0
  • எங்கும் பிளாஸ்டிக் ராஜ்ஜியம். தலை சீவும் சீப்பில் தொடங்கி காலில் அணியும் செருப்பு வரை பிளாஸ்டிக். ஒரு மனிதரின் ஆதாரத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மூன்றிலுமே பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்திருக்கிறது.
  • தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற வசனம் நம் யுகத்தில் பிளாஸ்டிக்குக்குத்தான் பொருந்தும்.
  • ஒருகாலத்தில், செய்தித்தாள்களில் மடித்துக் கொடுக்கப்பட்ட பொருட்கள் ஏன் இன்று பிளாஸ்டிக் பைக்கு மாறின?
  • மரத்தாலான மேசை, நாற்காலிகள், கண்ணாடிகளையும், அலுமினியம், பித்தளை, செம்பினாலான பாத்திரங்களையும், மண், செங்கற்களைக் குழைத்துக் கட்டப்பட்ட கட்டுமானங்களையும் இன்று பிளாஸ்டிக் தனதாக்கிக்கொண்டது எப்படி?
  • தூக்குச்சட்டிகள், பாத்திரங்கள், இலைகள், மஞ்சப்பை, கோணிப்பை என்று புழங்கிய நம்மை எது பிளாஸ்டிக் நோக்கி இழுத்தது?
  • இதற்கு நாம் பிளாஸ்டிக்கின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதன் சாதக பாதகங்களை அலசி, பிளாஸ்டிக் பயன்பாட்டை மறுவரையறுத்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியம்.
பிளாஸ்டிக்கின் ஆதிகாலம்
  • ஆரம்ப காலத்தில் இயற்கையான பொருட்களே பிளாஸ்டிக்காகப் பயன்படுத்தப்பட்டன; சூயிங்கம், பிசின் இதில் முக்கியப் பங்குவகித்தன. அடுத்ததாக, இயற்கைப் பொருட்களை வேதியியல் வினைகளுக்கு உட்படுத்தி பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டது.
  • மனித உடலில் உள்ள கொலாஜன் புரதம், ரப்பர் இதில் பயன்படுத்தப்பட்டன. இறுதியில், முழுமையாக செயற்கை மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கப்பட்டன; இதில் பேக்கலைட்டும் பாலிவினைல் குளோரைடும் முக்கியப் பங்குவகித்தன.
  • மனிதரால் உருவாக்கப்பட்ட முதல் பிளாஸ்டிக்காக பார்க்கசின் (நைட்ரோ செல்லுலோஸ்) கருதப்படுகிறது. இதை 1856-ல் அலெக்ஸாண்டர் பார்க்ஸ் உருவாக்கினார்.
  • 6 ஆண்டுகள் கழித்து, 1862-ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் இது உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தாவரங்களின் செல்லுலோஸ் மற்றும் கரைப்பானான நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி நைட்ரோ செல்லுலோஸ் அல்லது செல்லுலோஸ் நைட்ரேட்டைத் தயாரித்தார் பார்க்ஸ். இதை ஆல்கஹாலுடன் கரைக்கும்போது இறுகி, எலாஸ்டிக்காக மாறியது. இதைச் சூடாக்கி நினைத்த வடிவத்துக்கு உருமாற்றினார் பார்க்ஸ்.
நவீன பிளாஸ்டிக்; விரிந்த சந்தை
  • நவீன பிளாஸ்டிக் தொழிலுக்கு வித்திட்டவர் லியோ பேக்கலேண்ட். இவர்தான் பிளாஸ்டிக் தொழில்துறையின் தந்தை என்றழைக்கப்படுகிறார். பெல்ஜியத்தைச் சேர்ந்த வேதியியல் நிபுணரான இவர், 1907-ல் நியூயார்க்கில் பேக்கலைட் எனும் உலகின் முதல் நவீன, முழுமையாகவே செயற்கையான பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தார்.
  • ஃபினால், ஃபார்மால்டிஹைடைப் பயன்படுத்தி பேக்கலைட் உருவாக்கப்பட்டது. பேக்கலைட் என்பது தீப்பிடிக்காத, விலை மலிவான, மின்சாரத்தைக் கடத்தாத, சூட்டைத் தாங்கக்கூடிய பண்புகளைக் கொண்ட பிளாஸ்டிக். பேக்கலைட் கண்டுபிடிப்பால் பிளாஸ்டிக் சந்தை உருவெடுக்கத் தொடங்கியது.
  • இதன் பிறகு டெலிபோன், ரேடியோ, சுவிட்ச் போர்டு, நகை, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மை என ஏராளமான பொருட்கள் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டன.
  • முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்றம் கண்ட வேதியியல் துறையால், புதிய வடிவிலான பிளாஸ்டிக்குகள் தோன்ற ஆரம்பித்தன. இரண்டாம் உலகப் போரின்போது பிளாஸ்டிக்கின் வீச்சும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. தனியார் நிறுவனங்கள் பாலிஸ்டிரைன், பாலிவினைல் குளோரைடு ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கின.
  • இதன் மூலம் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிளாஸ்டிக் தொழில் அசுர வளர்ச்சியடைந்தது. மிக ஆழமாக பிளாஸ்டிக் வேரூன்றிய பிறகுதான் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து குற்றச்சாட்டுகள் எழத் தொடங்குகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (08-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்