- உலக அளவில் புகழ்பெற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுவாமி விவேகானந்தர். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல. சிறந்த உளவியல் நிபுணரும் கூட. அவர் சொல்கிறார்: "நாம் இப்போதிருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை முந்தைய செயல்களின் பலன்தான். முன்பு செய்த தவறுகளால் இன்று இந்நிலையில் இருக்கிறோம்.
- அப்படியானால் அதில் ஒரு விதி மறைந்திருக்கிறது. அந்த விதியைப் பணிந்து ஏற்றுக் கொள்ளுங்கள். முந்தைய தவறுகளால் இந்த நிலை நமக்கு வாய்த்திருக்குமானால், இப்போது சரியாக நடந்துகொண்டால் எதிர்காலத்தில் மிகச் சிறந்த நிலை நமக்கு வாய்க்கும் என்பதும் அதே விதி உணர்த்தும் உண்மை தானே? எனவே கலங்கத் தேவையில்லை. எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்துகொண்டால் போதுமானது'.
- விவேகானந்தர் ஒருமுறை பம்பாயில் இருந்து புணேவுக்கு ரயிலில் சென்றார். தற்செயலாக அப்போது அவருடன் பயணம் செய்தவர் பால கங்காதர திலகர்.
- சுவாமிஜியின் கம்பீரத் தோற்றத்தாலும் சிந்தனை தெறிக்கும் உரையாலும் ஈர்க்கப்பட்ட திலகர், அவரைத் தம் இல்லத்தில் தங்குமாறு அன்போடு வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று விவேகானந்தர் பத்து நாட்கள் திலகர் இல்லத்தில் தங்கினார்.
- சுவாமிஜி புணேவில் தங்கிய நாட்களில் அவரது கண்களின் பிரகாசத்திலும் உள்ளத்தை மேன்மைப்படுத்தி எழுச்சியூட்டும் உரைகளிலும் அவரின் வசீகரக் குரலிலும் ஏராளமானோர் கவரப்பட்டனர். அதனால் அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவாமிஜியை தரிசிக்க வரவே சுவாமிஜியின் தனிமைக்கு ஊறு நேர்ந்தது.
- தொடர்ந்து தாம் தியானத்தில் ஈடுபட விரும்புவதாகச் சொல்லி, திலகரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு ஒருநாள் எல்லோரும் உறங்குகிறபோது விவேகானந்தர் புணேவை விட்டுப் புறப்பட்டுவிட்டார்.
- தம் இல்லத்தில் விவேகானந்தர் தங்கியிருந்த அறையைப் புனிதம் மிகுந்த அறையாகக் கருதினார் திலகர். பின்னர், அந்த அறையிலிருந்துதான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் வகையில் விநாயகர் திருவிழாவை அவர் ஆரம்பித்தார். எதிர்கால இந்தியா விவேகானந்தர் காட்டிய வழியில் உருவாக வேண்டும் என்பதே திலகரின் கனவாக இருந்தது.
- விவேகானந்தரின் பேச்சாலும் செயலாலும் வாழ்வாலும் கவரப்பட்டு அவரைத் தம் குருநாதராக ஏற்றுக் கொண்டவர் சகோதரி நிவேதிதை. அவருக்கு ஓர் ஆசை இருந்தது. விவேகானந்தரிடம் காவி ஆடை பெற்றுக் கொண்டு துறவினியாக வாழவேண்டும் என்ற ஆசை.
- ஆசைகளைத் துறப்பதுதான் துறவு. ஆனால் துறவியாக வேண்டும் என்ற ஆசையைத் துறக்க இயலாதல்லவா? நிவேதிதை பொறுமையோடு காத்திருந்தார். ஆனால், விவேகானந்தர் ஏனோ அவருக்குக் காவி ஆடை வழங்கவே இல்லை.
- விவேகானந்தர் ஸித்தி அடைந்த செய்தி வந்ததும் நிவேதிதையின் மனம் சோகத்தில் துடித்தது. விவேகானந்தர் உடல் எரியூட்டப்பட்டபோது துயரமே வடிவாக அருகே நின்றிருந்தார் நிவேதிதை.
- ஆனால் அன்னை சாரதாதேவி தன் அன்பர்களிடம் சொல்லி அனுப்பியிருந்தார். "நிவேதிதையை விவேகானந்தர் உடல் எரியூட்டப்படும் இடத்தில் நெருங்கி இருக்க அனுமதிக்காதீர்கள். அளவற்ற சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அவர் மனம் எப்படி இயங்கும் என்று சொல்ல முடியாது. எனவே நான் சொன்னதாகச் சொல்லிச் சற்றுத் தள்ளி அமரவையுங்கள்' என்று.
- நிவேதிதை சற்றுத் தள்ளி அமர வைக்கப்பட்டார். அவர் மனத்தில் கடும் சோகத்தோடு கூடவே ஒரு நினைவும் ஓடியது. விவேகானந்தர் ஏன் தனக்குக் காவி ஆடை தந்து தன்னைத் துறவினி ஆக்கவில்லை? அதற்குரிய பக்குவம் தனக்கில்லை என்று கருதினாரா? இல்லை காவியாடை தர நினைத்துத் தற்செயலாக அது நிகழாமல் போய்விட்டதா? ஒருவேளை புற அடையாளங்களில் என்ன இருக்கிறது என்று எண்ணினாரா?
- "என் குருநாதரே! நான் உங்களைப் போலவே முழுமையான துறவு மனத்துடன்தான் இருக்கிறேனா? நான் உங்களைப் போல் என்னையும் ஒரு துறவி எனக் கருதிக் கொள்ளலாமா? அப்படிக் கருத என் மனம் விழைகிறது. அதை நீங்கள் ஏற்பீர்களா' என்று உள்ளம் உருக நெஞ்சில் விம்மினார் அவர்.
- அப்போது தற்செயலாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. எரிந்துகொண்டிருந்த விவேகானந்தரின் காவி ஆடையின் ஒரு சிறு துண்டு காற்றில் பறந்துவந்து நிவேதிதையின் மடியில் விழுந்தது. நிவேதிதையின் உள்ளம் சிலிர்த்தது. விவேகானந்தர் தன்னைப் போலவே நிவேதிதையையும் முழுமையான துறவி என்றே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை அடையாளம் காட்டுவதுபோல் அந்நிகழ்ச்சி நடந்ததாக எண்ணியது நிவேதிதையின் ஆழ்மனம்.
- அந்தத் துண்டுத் துணியை ஒரு பொக்கிஷமாகக் கருதிக் கண்ணில் ஒற்றி எடுத்து வைத்துக் கொண்டார் அவர்.
- விவேகானந்தர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ராமகிருஷ்ண மடம் என்ற துறவியர் அமைப்பை நிறுவினார். அவர் நினைத்திருந்தால் தாம் தொடங்கிய நிறுவனத்திற்குத் தம் பெயரையே வைத்துக் கொண்டிருக்கலாம். யாரும் மறுக்கப் போவதில்லை. அதற்குரிய தகுதியும் அவருக்கு இருந்தது. ஆனால் புகழாசையையும் துறந்த மாபெரும் துறவி அல்லவா அவர்? தம் குருநாதர் பெயரிலேயே ராமகிருஷ்ண மடங்களை நிறுவினார்.
- விவேகானந்தரின் அற்புதமான ஆன்மிக சக்தி ராமகிருஷ்ண மடத்தில் எண்ணற்ற துறவிகளை உருவாக்கியது; உருவாக்கி வருகிறது. தன்னலமற்ற துறவியர் திருக்கூட்டத்தினர் தங்களைச் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். தியானத்திலும் தவத்திலும் நாளின் பெரும்பகுதியைச் செலவழிக்கும் அவர்கள், எஞ்சிய நேரத்தில் தங்களை முழுமையாக சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
- மருத்துவப் பணிகள், கல்விப் பணிகள், விவேகானந்த இலக்கியத்தை வெளியிடும் புத்தகப் பதிப்புப் பணிகள், கரோனா போன்ற இடர்ப்பாடான தருணங்களில் செய்யப்படும் விசேஷ சமூக சேவைகள் என ராமகிருஷ்ண மடம் செய்துவரும் தொண்டுகளைப் பட்டியலிட்டால் வளரும்.
- விவேகானந்தரின் பொன்னுடல் மட்டுமே ஸித்தி அடைந்தது. ராமகிருஷ்ண மடத்தின் அனைத்து சேவைகளிலும் ராமகிருஷ்ண மடத்துத் துறவியர் வடிவங்களிலும் விவேகானந்தர் புகழுடலோடு நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
- இன்று (ஜன. 12) சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி.
நன்றி: தினமணி (12 – 01 – 2023)