TNPSC Thervupettagam

புகையிலையை ஏன் தவிர்க்க வேண்டும்

June 17 , 2023 573 days 391 0
  • அமெரிக்கக் கண்டத்தில் பொ.ஆ. (கி.பி.) 1492இல் கொலம்பஸ் முதன்முதலில் காலடி வைத்தபோது அங்கிருந்த பழங்குடியினர் அவரை வரவேற்றனர். பழங்கள், உணவு, ஈட்டிகள் உள்ளிட்ட பலவற்றை அவருக்குப் பரிசாகக் கொடுத்தனர். அந்தப் பரிசுப் பொருள்களில் புகையிலைச் செடியின் காய்ந்த இலைகளும் இருந்தன. இன்று நாம் மலர்களைத் தூவித் தலைவர்களை வரவேற்பதுபோல், அன்று அவர்கள் புகையிலயைத் தூவி கொலம்பஸை வரவேற்றுள்ளனர்.
  • புகையிலைக்குத் தனித்துவமான ஒரு வாசனை உண்டு என்றாலும் அவை உண்ணக்கூடியவை அல்ல என்பதை அவர்களிடமிருந்து கொலம்பஸ் தெரிந்துகொண்டார். பூர்விக அமெரிக்கர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம், மதவழிபாடுகள் சார்ந்த நோக்கங்களுக்காக அவற்றைப் புகைத்து வந்தனர். விரைவிலேயே கொலம்பஸ் தீவிர புகைபிடிப்பவராக மாறினார். அந்தப் பழக்கத்தை அவர் ஸ்பெயினுக்கும் கொண்டுவந்தார். இன்று புகையிலை உலகெங்கும் பெரும் கேடு விளைவிக்கும் ஒரு சுகாதாரப் பிரச்சினையாகத் திகழ்கிறது.

ஏன் மனம் நாடுகிறது?

  • புகையிலையில் அதிக போதைத் திறன் கொண்ட பொருளான நிகோடின் உள்ளது என்பதால், அது மிகவும் போதைக்குரியது என்று 2014ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் லெ ஃபோல் கூறியுள்ளார். புகையிலையை உட்கொள்ளும்போதோ புகைக்கும் போதோ ரத்த ஓட்டத்தில் நிகோடின் அளவு அதிகரித்து மூளைக்குள் நுழைகிறது.
  • பெருமூளைக்குள் நுழைந்ததும், மகிழ்ச்சியை உண்டாக்கும் டோபமைனை வெளியிடும் ஏற்பிகளுடன் நிகோடின் இணைந்து செயல்படுகிறது. இது புகைபிடிப்பவர்களின் மனநிலையைத் தற்காலிகமாக ஊக்கப்படுத்துகிறது. இதன் விளைவாக, புகைபிடிப்பவர்களின் மூளை நிகோடினுக்கு அடிமையாகத் தொடங்குகிறது. முக்கியமாக, சிகரெட்டுகளுக்கு இடையிலான இடைவெளிகளில் நிகோடின் தேவைக்காக அது ஏங்கவும் செய்கிறது.

புகையற்ற புகையிலை நுகர்வு

  • ஈரமான புகையிலை (SNUFF), குட்கா, உலர் புகையிலைத் தூள் (SNIFF) போன்றவை புகையற்ற புகையிலை நுகர்வில் அடங்கும். சிகரெட்டைப் போன்று இவையும் மனிதர் களை நிகோடின் போதைக்கு அடிமையாக்கும்; புற்றுநோய் உருவாகும் ஆபத்து இதிலும் உண்டு.

புகையிலையைப் புகைத்தல்

  • ரோல்கள், சுருட்டுகள், பீடிகள், சிகரெட்டுகள், ஹூக்கா உள்ளிட்டவை இதில் அடங்கும். வாய், குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இதில் அதிகம் உண்டு.

எவ்வாறு பாதிக்கிறது?

  • புகையிலை நமது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். புகைக்கும் நபரின் வாழ்க்கையை முற்றிலுமாக அழிக்கும் திறன் புகையிலைக்கு உண்டு. புகைபிடிப்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். இந்தப் பின்னணியில் புகையிலை நுகர்வு விகிதம் கவலையளிக்கும் விதமாக உலகெங்கும் அதிகரித்துவருகிறது.

புற்றுநோய்

  • புகைபிடித்தலால் பெரும்பாலும் நுரையீரல் சார்ந்த புற்றுநோய்களே ஏற்படுகின்றன. இருப்பினும் உதடுகள், நாக்கு, வாய், மூக்கு, உணவுக்குழாய், தொண்டை, குரல்வளை, வயிறு, கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுநீர்ப்பை, ரத்தம், கருப்பை வாய், பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு, ஆசனவாய் ஆகிய பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் உண்டு.

சுவாச நோய்கள்

  • நாள்பட்ட சுவாசத்தடை நோய்க்கு (சிஓபிடி) புகைபிடித்தல் முக்கியக் காரணமாகும். இது நுரையீரலில் காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் ஒரு தீவிரமான நிலை. இளம்பருவத்தினருக்கும் பெரியவர்களுக்கும் ஆஸ்துமா ஏற்படும் ஆபத்தைப் புகைபிடித்தல் அதிகரிக்கிறது. ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை புகை பிடித்தல் மேலும் மோசமாக்கும்.

மற்ற பிரச்சினைகள்

  • இதய நோய்கள், பக்கவாதம், ரத்தவோட்டப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குப் புகைபிடித்தலே முக்கியக் காரணம். புகைபிடித்தல் ரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது; அது இதயம், மூளை அல்லது கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும்; மாரடைப்பு ஏற்படும் சாத்தியமும் அதிகரிக்கும்.
  • நீரிழிவு நோய்: புகைபிடிக்காதவர்களைவிட, புகைபிடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து 30 - 40 சதவீதம் அதிகம். டைப் 1 நீரிழிவு தொடர்பான பாதிப்புகளைப் புகைபிடித்தல் மோசமாக்கும்.
  • நோய்த்தொற்றுகள்: நமது நோயெதிர்ப்பு ஆற்றலை புகைபிடித்தல் பலவீனப்படுத்துவதால் பாக்டீரியா, வைரஸ் தொற்றுநோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.
  • பல் பிரச்சினைகள்: ஈறு நோய்கள், பல் இழப்பு, பல் கூச்சம் ஆகியவற்றின் அபாயத்தை புகைபிடித்தல் அதிகரிக்கிறது. ஈறு சேதம் ஏற்பட்ட நபரின் ஈறுகள் குணமடைவதைப் புகைபிடித்தல் கடினமாக்கும்.

கருவுறுதல் பிரச்சினைகள்

  • புகைபிடித்தல் கர்ப்பம் தரிப்பதைக் கடினமாக்குகிறது; விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கிறது. இது குறைபிரசவம், குறைந்த பிறப்பு எடை, திடீர் குழந்தை இறப்பை ஏற்படுத்தும் சிட்ஸ் அல்லது தொட்டில் மரணம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக, புகைபிடித்தல் பிறவிக் குறைபாடு களையும் கருச்சிதைவுக்கான அபாயங்களையும் அதிகரிக்கிறது.
  • ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புப் புரை நோய்க்குப் புகைபிடித்தலும் ஓரு முதன்மைக் காரணி. புகைபிடிக் காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைபிடிக்கும் பெண் களுக்கு மாதவிடாய் நிறுத்தம் முன்னரே ஏற்படும் சாத்தியம் அதிகம்.

நிகோடின் மாற்றுச் சிகிச்சைகள் (என்ஆர்டி)

  • நிகோடினைக் கொண்டிருக்கும் பாதுகாப்பான தயாரிப்புகளால் (என்.ஆர்.டி,கள்) அளிக்கப்படும் சிகிச்சை இது. இந்தச் சிகிச்சையில், சிகரெட் புகையில் காணப்படும் நச்சு வேதிப்பொருள்கள்போல் அல்லாமல், மூளைக்குச் சிறிய அளவு நிகோடின் வழங்கப்படுகிறது. பெரியவர்கள் புகைபிடிப்பதைக் கைவிட உதவும் வகையில் இம்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • என்.ஆர்.டி.களை அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகரித்துள்ளது. மாத்திரை, மிட்டாய் போன்ற வகைகளில் இருக்கும் என்.ஆர்.டி.கள் பசியைப் போக்குவதன் மூலமும், நிகோடின் மீண்டும் தேவைப்படுவதற்கான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலமும் புகைபழக்கத்திலிருந்து விடுபட ஆரம்பக் கட்டத்தில் உதவும். சரியாகப் பயன்படுத்தும்போது, என்.ஆர்.டி.கள் புகைபிடிப்பதைக் கைவிட உதவும் பாதுகாப்பான, பயனுள்ள வழியாக இருக்கும்.

புகையிலை எதிர்ப்பு முன்னெடுப்புகள்

  • இந்தியாவில் பல்வேறு அரசு அமைப்புகளும், அரசு சாரா அமைப்புகளும் புகையிலைப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர பிரச்சாரம் செய்கின்றன. சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகம் போன்ற அரசு அமைப்புகள் விளம்பரப் பிரச்சாரங்கள், பரப்புரை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ‘உணவே நமக்குத் தேவை; புகையிலை அல்ல’ என்பதே சமீபத்தில் உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட உலகப் புகையிலை எதிர்ப்பு நாளின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள். இதை நாமும் புகைபிடிப்பவர்களும் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். புகையிலை பயன்பாட்டிலிருந்து விடுபடுவது, நம் ஆரோக்கியத்தைக் காப்பது மட்டுமல்லாமல் நல்வாழ் வையும் பரிசளிக்கும்.

நன்றி: தி இந்து (17 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்