TNPSC Thervupettagam

புதினங்களும் திரைப்படங்களும்

March 6 , 2023 517 days 334 0
  • இலக்கியம் என்பது, பேச்சு, பாடல், உரைநடை, புதினம் என்று வளர்ச்சியடைந்து திரைப்படம் என்ற வடிவம் பெறப் பன்னெடுங்காலம் ஆனது. இந்தப் பரிணாம வளர்ச்சியில் புதினங்கள் முதலிலும் அதற்குப் பின்னர்த் திரைப்படங்களும் தோன்றின. ஏற்கெனவே எழுதப்பட்ட புதினங்களுக்குத் திரைவடிவம் கொடுத்து மெருகூட்டி வெளியிடுவது எளிதாக இருந்தது. அப்படி வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பும் பெற்றன.
  • அன்றிலிருந்து இன்று வரை தமிழ்த் திரை உலகத்துக்குப் புதினங்களின் மீது ஒரு தீராத மோகம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம்!
  • புதினங்களுக்கு திரை வடிவம் கொடுப்பதில் சில செüகரியங்கள் இருந்தன. தனியே வசனங்கள் எழுத வேண்டி இருக்கவில்லை. புதினங்களில் கையாளப்பட்டிருந்த உரையாடல்களையே  தேவைக்குத் தக்கவாறு சிறிது மாற்றித் திரையில் வசனமாகக் கொடுத்துவிட முடிந்தது. கதையை எப்படி முடிப்பது என்று யோசிக்க வேண்டியிருக்கவில்லை. புதினத்தில் உள்ள முடிவை அப்படியே  படத்திலும் வைத்தார்கள்.
  • இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களும், புராணக் கதைகளும் உரைநடை வடிவிலிருந்து திரைவடிவத்துக்கு மாறியபோது பாமர மக்களிடம் எளிதில் சென்றடைந்தன.
  • பிறகு சரித்திரப் படங்கள் வரத்தொடங்கின. தேசிங்கு ராஜா, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்று வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிநடை போட்டன.
  • தமிழில் வரலாற்றுப் புதினங்கள் அப்போது எழுதப்படவில்லை. அதனால் பிற மொழிகளில் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினங்களைத் திரைப்படங்களாக்கினார்கள். ஆங்கில நாட்டின் வரலாற்றையும் பிரெஞ்சு நாட்டின் வரலாற்றையும் அப்படியே தமிழில் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாட்டுக் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் ஏற்றவாறு மாற்றங்களைச் செய்து வெளியிட்டார்கள்.
  • பக்கம் பக்கமாக வசனங்கள், எண்ணற்ற பாடல்கள் இருந்தாலும், தெளிவான தமிழ் உச்சரிப்பும், திறமையான நடிப்பும் கொண்ட நடிக நடிகையர்களாலும், பாடகர்களாலும் இப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன. "தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்' புதினம், தமிழில் "உத்தமபுத்திரன்' என்று மாறியது. பிரெஞ்சு சரித்திரத்தில் அது உண்மைக் கதை. அலெக்ஸôண்டர் டூமாஸ் ஐந்து பாகங்களாக எழுதிய நெடுங்கதையின் இறுதி பாகம்.
  • உண்மை வரலாற்றை மாற்றி எழுத முடியாது. என்றாலும் வேற்று நாட்டின் வரலாறு இங்கே யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது என்று தைரியமாக மாற்றினார்கள். "தி கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ' "வஞ்சிக்கோட்டை வாலிபன்' என்றும் "தி ப்ரிஸனர் ஆப் ஜெண்டா' "நாடோடி மன்னன்' என்றும் உருமாறி வெற்றி பெற்றன.
  • பிறகு கற்பனை ராஜ்ஜியங்களும் மன்னர்களும் கொண்ட "மனோகரா', "சக்கரவர்த்தித் திருமகள்' போன்ற சரித்திரப் படங்கள் வெளிவந்தன. அதற்கு அடுத்தபடியாக "மலைக்கள்ளன்', "தில்லானா மோகனாம்பாள்' போன்ற சமூக புதினங்களும் திரைவடிவம் பெற்றன. பிற மொழிகளிலிருந்தும் புதினங்களைத் திரை வடிவிற்குக் கொண்டு வந்தார்கள். அப்போது தமிழ் மண்ணிற்கேற்றவாறு பல மாற்றங்களைச் செய்தே வெளியிட்டார்கள்.
  • அம்மாற்றங்களை நியாயப்படுத்த, "இப்படம் இக்கதையைத் தழுவி எடுக்கப்பட்டது' என்று அறிவிப்பு போட்டார்கள். தாகூரின் "தி ரெக்' என்ற வங்கப் புதினம் "பாக்யலக்ஷ்மி' என்று வெளிவந்தது. மூலக்கதை காணாமல் போனாலும், நடிகர்களின் அருமையான நடிப்பாலும் இனிமையான பாடல்களாலும் வெற்றி பெற்றது. மூலக்கதையைப் படித்தவர்களுக்கு "கதையே மாறிவிட்டதே' என்ற ஏமாற்றம் ஏற்படலாம்; ஆனால், கதையைப் படிக்காதவர்களுக்கு எந்தவித ஏமாற்றமும் இருக்கப் போவதில்லையே! 
  • பின்பு தமிழில் வரலாற்றுப் புதினங்கள் வெளிவரத் தொடங்கின. தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் சரவணமுத்துப் பிள்ளை எழுதிய "மோகனாங்கி'. கபிலன் எழுதிய "சேரமாதேவி', ஏ.பி. நாகராஜன் எழுதிய "கலையரசி' போன்ற வரலாற்றுப் புனைவுகள் அதிகம் பேசப்படவில்லை. கல்கி எனப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தியே தமிழில் "வரலாற்றுப் புதினம்' என்னும் வடிவத்தை பிரபலமடையச் செய்தார். 
  • அவரது வரலாற்றுப் புதினங்களான "சிவகாமியின் சபதம்', "பொன்னியின் செல்வன்', "பார்த்திபன் கனவு' ஆகியவையே தமிழில் வரலாற்றுப் புனைவுகளுக்கு அடித்தளமிட்டன.  சரித்திர வல்லுநர் நீலகண்ட சாஸ்திரி , "இந்தியாவின் வரலாற்றை ஆவணப்படுத்திய பலர் தென்னிந்தியாவை மொத்தமாகப் புறக்கணிக்க முக்கியக் காரணம், தென்னிந்திய வரலாற்றுப் பதிவுகள் அதிகம் கிடைக்காததே' என்று கூறியிருக்கிறார். 
  • தமிழில் வரலாற்றுப் புதினம் எழுதுவதற்குத் தேவையான  வழிமுறைகள் கிடைக்காததால், கல்கி தனக்கு முன்மாதிரியாக "வால்ட்டர் ஸ்காட்', "அலெக்ஸôண்டர் டூமாஸ்'  போன்ற பிறநாட்டுக் கதாசிரியர்களை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மிகுந்த ஆராய்ச்சியும் தேடலும் செய்து,  கிடைத்த சரித்திர ஆவணங்களைக் கொண்டு, சரித்திரப் புகழ் பெற்ற நாயக, நாயகியருக்கு உயிர் கொடுத்து, கற்பனை பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் இடையிடையே கோத்து, தமிழுக்கு முதல் சரித்திரப் புதினத்தைத் தந்த பெருமை கல்கியையே சாரும்!   
  • அவருக்குப் பிறகு சாண்டில்யன், கோவி. மணிசேகரன்  போன்ற எத்தனையோ கதாசிரியர்கள் வரலாற்றுப் புதினங்களை எழுதினார்கள். சிவசங்கரி, இந்துமதி, ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் சமூகப் புதினங்களையே எழுதினார்கள். "முள்ளும் மலரும்', "சிறை' போன்ற சில சமூகப் புதினங்கள் மட்டுமே தமிழில் திரைப்படங்களாக வந்தன.
  • சுஜாதாவின் "ப்ரியா' திரைப்படமாக வந்தபோது மூலக்கதை காணாமலே போய், கேலிக் கூத்தாகியது. "முள்ளும் மலரும்', "சிறை' போன்றவை வெற்றிப் படங்களாக அமைந்தன. புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் எழுதிய "சென்ஸ் அன்ட் சென்சிபிலிட்டி' என்ற மிக அற்புதமான சமூகப் புதினம், மூலக்கதை கெடாமல், தமிழ்ச் சூழலுக்கேற்ப, "கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்' என்ற படமாக வெளிவந்து வெற்றிப் படமாக அமைந்தது.
  • இந்த இடத்தில், புதினங்களிலிருந்து திரைக்கு வந்த ஆங்கிலத் திரைப்படங்களுக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒரு சிறு ஒப்பீடு செய்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
  • ஜேன் ஆஸ்டின் எழுதிய ஆறு புதினங்களும் பி.பி.சி. நிறுவனத்தால் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சிப் படங்களாகவும் எடுக்கப்பட்டன. வசனங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருந்தன. அக்காலகட்டத்தின் வீடுகள், தெருக்கள், கடைகள், மக்களின் உடைகள் எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தின் உதவியோடு  கொண்டுவர முடிந்தது.
  • அவற்றில் நடித்தவர்கள் அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள். பேச்சு, வசன உச்சரிப்பு, முகபாவம், உடல்மொழி, பாடல்கள் எல்லாமே புதினங்களை ஒட்டியே இருந்ததால், இன்றும் கூட அத்திரைப்படங்களைப் பார்க்கும்போது மனதில் இன்பம் பொங்குகிறது. தாமஸ் ஹார்டி, சார்ல்ஸ் டிக்கன்ஸ் போன்ற பழம்பெரும் ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய "கிளாசிக்ஸ்' எனப்படும் பல புதினங்கள் மூலக்கதை சிதையாமல் அப்படியே திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன.
  • ஜே.கே. ரெüலிங் எழுதிய "ஹாரி பாட்டர்' புதினம் மிகவும் சிக்கலான கதை. ஏழு புத்தகங்களாக இருக்கும் இக்கதையை எட்டு படங்களாக எடுத்தார்கள். கதை சிறிதும் மாறாமல் இருப்பதாலும், உரையாடல்களை அப்படியே பயன்படுத்தியிருப்பதாலும் திரைபடத்தைப் பார்க்கும் போது புத்தகத்தைப் படிக்கும் உணர்வே ஏற்படுகிறது. தொழில்நுட்பமும், பிரம்மாண்டமும், கிராபிக்ஸýம் கதையைக் கொன்று விடவில்லை. படத்தின் இயக்குனர் எங்கும் தெரியவில்லை. அதுவே அப்படத்தின் வெற்றிக்குக் காரணம்!
  • தமிழில் புதினம் திரைப்படமான சமீபத்திய நிகழ்வு, "பொன்னியின் செல்வன்'. மிகச் சிக்கலான இக்கதையைக் கல்கி எளிய நடையில் எழுதியிருப்பார். ஆனால், திரைப்படத்திலோ கதையையே காணோம். எல்லா கதாபாத்திரங்களும் எப்போதும் கோபமாகவே பேசுகிறார்கள். ஏதோ முதுகுத் தண்டுவட பாதிப்பினால் அவஸ்தைப்படுபவர்கள் போல் தலையைத் திருப்பாமல் கையை ஆட்டாமல் ஒரே தொனியில் வசனம் பேசுகிறார்கள். ஆண் கதாபாத்திரங்கள் எல்லோரும் மொகலாய அரசர்கள் போல் தாடியுடனே இருக்கிறார்கள். 
  • "வானதி கொடும்பாளூரின் இளவரசி. பின்னாளில் ராஜராஜனை மணந்து திரிபுவனமாதேவி என்ற பெயர்கொண்டு ராஜேந்திர சோழனைப் பெற்றெடுக்கிறாள்' என்று  சரித்திர ஆராய்ச்சியாளர் சதாசிவ பண்டாரத்தார், " பிற்காலச் சோழர் சரித்திரம் " என்ற நூலில் குறிப்பிடுகிறார். கல்கியால் பயங்கொள்ளியாகவும் சங்கோஜியாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் வானதியை, ஒரு அரசிளங்குமரியை, அதிலும் குந்தவையின் உயிருக்குயிரான தோழியை, "ராட்சஸ மாமனே...' என்று கூத்தாடிகளுடன் ஆடவிட்டிருப்பதை என்னவென்று சொல்வது?
  • வரலாற்றுப் பதிவுகளின்படியும் கதையின்படியும் ஆதித்த கரிகாலன் பெரும் வீரன். அப்படிப் பட்டவனை, அதிலும் பட்டத்து இளவரசனை, படைவீரர்களோடு குடித்துவிட்டுக் கூத்தாடுவதாகக் காட்டியிருக்க வேண்டாம். பாடல்களும் ஆடல்களும் வரலாற்றுப் படத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை.
  • அரசிகளின் ஆடைகளும் ஆபரணங்கள் கூடத் தமிழ் கலாசாரத்தோடு பொருந்தவில்லை. ராஜபுத்திர ராணிகளின் அலங்காரம் போலவே உள்ளன. படம் நெடுகிலும் இயக்குனர் தெரிகிறார். கல்கியும் கதையும்தான் காணமல் போய்விட்டார்கள்!

நன்றி: தினமணி (06 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்