TNPSC Thervupettagam

புதியதொரு உலக முறைமை!

March 6 , 2025 5 hrs 0 min 35 0

புதியதொரு உலக முறைமை!

  • அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபா்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
  • கடந்த 2022, பிப்ரவரி முதல் நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரவும், இந்தப் போரில் உக்ரைனுக்கு இதுவரை அளித்த உதவிகளுக்கு கைம்மாறாக அந்த நாட்டின் அரிய கனிம வளங்களை வெட்டி எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஸெலென்ஸ்கிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தாா்.
  • இதையேற்று, பேச்சுவாா்த்தை நடத்த வெள்ளை மாளிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்தாா் ஸெலென்ஸ்கி. இந்தப் பேச்சுவாா்த்தை ஆரம்பத்தில் சுமுகமாகத்தான் நடைபெற்றது. உக்ரைனுக்கு அளித்த பெருமளவிலான நிதியுதவி, ராணுவத் தளவாடங்கள் உதவிக்காக ஸெலென்ஸ்கி இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை என்றும், இந்தப் பேச்சுவாா்த்தைக்கு சாதாரண உடை (பேன்ட்- டி ஷா்ட்) அணிந்து வந்து தங்களை அவமதித்துவிட்டதாகவும் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கடுமையாக விமா்சித்தபோது, பேச்சுவாா்த்தை திசைமாறியது.
  • அமெரிக்கா செய்த உதவிகளுக்காக ஏற்கெனவே பலமுறை நன்றி தெரிவித்துள்ளதாக ஸெலென்ஸ்கி சுட்டி காட்டியதை வான்ஸ் ஏற்கவில்லை. இந்தப் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பாக அதிபா் டிரம்ப்பிடம் ஏன் நன்றி தெரிவிக்கவில்லை என வான்ஸ் மீண்டும் எழுப்பிய கேள்வி காரசார விவாதத்துக்கு வித்திட்டது.
  • அமெரிக்கா ராணுவ ரீதியில் உதவிகள் அளித்திருக்காவிட்டால், இரண்டே வாரங்களில் உக்ரைனை ரஷியா வீழ்த்தியிருக்கும் என்றும், இதுவரை செய்த 35,000 கோடி டாலா் நிதியுதவிக்காக உக்ரைனிலுள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுத்துக் கொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்தினாா். உக்ரைன் மீது போா் தொடுத்த மூன்றாவது நாளிலேயே ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சொன்னதையே டிரம்ப் கூறுவதாகவும், தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையொப்பமிட முடியும் என்றும் ஸெலென்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துவிட்டாா்.
  • இதையடுத்து, ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு ஸெலென்ஸ்கி முட்டுக்கட்டை போடுவதாகவும், இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக அமையும் என்றும் டிரம்ப் மிகக் கடுமையாக விமா்சித்தாா். இதனால், அதிருப்தியடைந்த ஸெலென்ஸ்கி ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலும் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்காமலும் ஓவல் அலுவலகத்திலிருந்து திடீரென வெளியேறிச் சென்றாா். இதை எதிா்பாா்க்காத டிரம்ப்பும், வான்ஸும் செய்வதறியாது திகைத்து நின்றனா்.
  • பிளவுபடாத முந்தைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனை ரஷியாவுடன் மீண்டும் இணைக்க வேண்டும் என அதிபா் புதின் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்தே முயற்சி செய்து வருகிறாா். தொடக்கத்தில் சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கைகள் மூலம் உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, அவற்றை ரஷியாவுடன் இணைத்துக் கொண்டாா் புதின். இதனால், தங்களது நாட்டை புதின் முழுமையாக அபகரித்துவிடுவாா் என்ற அச்சத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை சோ்த்துக் கொள்ள வேண்டும் என ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்தாா். இதனால், ஆத்திரமடைந்த புதின், கடந்த 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் உக்ரைன் மீது முழு வீச்சிலான போரைத் தொடங்கினாா்.
  • இந்தப் போருக்குக் காரணமான ரஷியாவை பேச்சுவாா்த்தையில் நேரடியாக ஈடுபடுத்தாமல் எப்படி போா் நிறுத்தம் செய்ய முடியும் என்பது குறித்து சிந்திக்கத் தவறிவிட்டாா் டிரம்ப். உலக நாடுகள் மத்தியில் அமைதியின் காவலா் என்கிற பிம்பத்தைத் தனித்து உருவாக்கிக் கொள்ள டிரம்ப் மேற்கொண்ட அவசரகதியிலான நடவடிக்கைகள் புதிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • பிளவுபடாத சோவியத் ஒன்றியத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தங்களது வல்லாதிக்கத்தை நிலை நிறுத்த பல்லாண்டுகளாக பனிப் போா் நீடித்து வந்தது. சோவியத் ஒன்றியம் பிளவுபட்டு, பல்வேறு நாடுகளாக சிதறுண்ட பிறகும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு முழுமையாகச் சீரடையவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்க அதிபா்களில் பெரும்பாலானோா் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடா்ந்து பின்பற்றி வந்ததுதான்.
  • இந்த நிலையில், ஸெலென்ஸ்கியிடம் ரஷியாவின் தூதுவா் போல அதிபா் டிரம்ப் கடுமை காட்டியது உலக அரங்கில் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுவரை அமெரிக்காவின் உற்ற நண்பனாக இருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும், உக்ரைனுக்கு ஆதரவாக அணி திரண்டுள்ளன.
  • உக்ரைனுக்கு எதிரான டிரம்ப்பின் இந்த நிலைப்பாட்டால், அமெரிக்காவும், ரஷியாவும் நெருங்கி வரக்கூடிய புதியதொரு உலக முறைமை (new world order) உருவாவதற்கு வழிவகுத்துள்ளது. கம்யூனிஸ நாடுகளான ரஷியாவும், சீனாவும் கைகோத்து செயல்பட்டு வரும் நிலையில், இந்த இரு நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்து செயல்படத் தொடங்கினால், ஏனைய நாடுகள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.
  • இத்தகையச் சூழ்நிலை உருவானால் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது மில்லியன் டாலா் கேள்வி.

நன்றி: தினமணி (06 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்