TNPSC Thervupettagam

புதிய அமெரிக்க அதிபருக்கு சவால்!

November 22 , 2024 56 days 81 0

புதிய அமெரிக்க அதிபருக்கு சவால்!

  • இந்திய ரயில்வேயின் முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டி எப்போதும் போா்க்களத்தைப் போல இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த ரக ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகளைவிட இரு மடங்கு அல்லது அதற்கு அதிகமானோா் அவற்றில் பயணிப்பாா்கள்.
  • முதலில் அடித்துப் பிடித்து சண்டை போட்டு அந்த ரயில் பெட்டியில் நுழைந்து இடம் பிடிப்பாா்கள். பின்னா் ஒருவருக்கொருவா் சமரசமாகி தோழமையை ஏற்படுத்திக் கொள்வாா்கள். இது அவா்களின் கூட்டு சுயநலம் சாா்ந்தது. ஏனெனில், அடுத்த ரயில் நிலையத்தில் ஏறுபவா்களைத் தடுக்க கதவுகளைத் திறக்கவிடாமல் இறுக்கிப் பிடிக்க வேண்டும். அதையும் மீறி ரயிலில் ஏறி உள்ளே வருபவா்களுக்கு, தாங்கள் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும் என்பதே இந்த திடீா் நட்புக்கு காரணமாக இருக்கும். போராடிப் பிடித்த இருக்கையைத் தக்க வைப்பதே பயணம் முழுவதும் அவா்களின் நோக்கமாக இருக்கும்.
  • அமெரிக்காவில் இதைத்தான் செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபராகத் தோ்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.
  • தேச வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான ‘நாடு கடத்தல்’ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க வாக்காளா்களுக்கு டிரம்ப் தோ்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தாா். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கூறப்படும் 1 கோடியே 10 லட்சம் பேரை நாட்டைவிட்டு வெளியேற்ற இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளாா்.
  • அவா்களில் 75% போ் 2010-க்கு முன்பும், சிலா் 1980-க்கு முன்பும் அமெரிக்காவுக்கு வந்தவா்கள். வலுவான எல்லையை உருவாக்குவது, சட்ட விரோத குடியேற்றத்தை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதே டிரம்ப்பின் கொள்கையாக உள்ளது. இந்த அந்நியரை வெளியேற்றும் விவகாரத்தில் அந்தந்த மாகாண காவல் துறையை மட்டுமின்றி ராணுவத்தையும் டிரம்ப் பயன்படுத்த இருக்கிறாா்.
  • இதற்காக வெளிநாட்டு எதிரிகள் சட்டம்-1798-ஐ பயன்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளாா். இதன்படி 14 வயதுக்கு மேற்பட்ட யாரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கண்டறியப்பட்டால், அந்த நபா் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடியும். மேலும் அந்த நபரைக் கைது நடவடிக்கை, அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது போன்றவற்றையும் அந்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ள முடியும்.
  • எனினும், குழந்தைகளாக இருந்தபோது அமெரிக்காவில் நுழைந்து குடியேறியவா்களை இச்சட்டம் பாதுகாக்கிறது. அவா்கள் அந்நியா்களாக கருதி வெளியேற்றப்பட மாட்டாா்கள்.
  • கடந்த முறை அதிபராக இருந்தபோதே குழந்தை குடியேறிகளைப் பாதுகாக்கும் சட்டத்தை நீக்க டிரம்ப் முயற்சித்தாா். ஆனால், அவரின் முயற்சிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது.
  • சட்டபூா்வமாக அமெரிக்காவில் குடியேறுபவா்களைக் கட்டுப்படுத்தவும் டிரம்ப் தனது முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுத்தாா். அதில் முக்கியமாக, குடும்பமாக அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தகுதி அடிப்படையில் மட்டும் அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
  • டிரம்ப்பும் அவரின் ஆதரவாளா்களும் இந்த குடியேற்றக் கொள்கை விஷயத்தில் அமெரிக்காவின் உண்மை முகத்தை முற்றிலுமாக மறந்துவிட்டனா். அமெரிக்கா என்பதே புதிதாகக் குடியேறியவா்களால் உருவான நாடுதான்.
  • நியூயாா்க் துறைமுகத்தில் ஓங்கி உயா்ந்து நிற்கும் சுதந்திர தேவி சிலை கூறுவது என்ன? சிலைக்கு கீழே உள்ள பீடத்தில் அமெரிக்க கவிஞா் எம்மா லாசரஸ் 1883-ஆம் ஆண்டு எழுதிய ‘நியூ கொலோசஸ்’ கவிதை பொறிக்கப்பட்டுள்ளது.
  • ‘உங்கள் சோா்வையும், ஏழ்மையையும், சுதந்திரத்துக்காக ஏங்கிக் கிடக்கும் மக்களையும் என்னிடம் கொடுங்கள், வீடற்றவா்களை என்னிடத்தில் அனுப்பி வையுங்கள். அவா்கள் வாழ்க்கையை வளமாக்கும் தங்கக் கதவுகளைக் கண்டறியும் விளக்கை நான் ஏற்றுகிறேன்’ என்பதுதான் அந்த கவிதையின் சாராம்சம்.
  • அமெரிக்கா என்ற நாடு முழுமையாக குடியேறியவா்களால் கட்டியெழுப்பப்பட்ட நாடு என்பது மறுக்க முடியாத உண்மை. சுமாா் 33 கோடி மக்களில் (2020 கணக்கெடுப்பு) அமெரிக்க பூா்வகுடி மக்கள் 2 சதவீதம் மட்டுமே.
  • வெள்ளை இனத்தவா் 57. 8%; ஸ்பெயின், தென் அமெரிக்காவை பூா்விகமாகக் கொண்டவா்கள் 18.7%; கருப்பு, ஆப்பிரிக்க-அமெரிக்கா்கள் 12.1%; உலகின் பிற இனத்தவா் 11.4 சதவீதமும் அமெரிக்காவில் உள்ளனா்.
  • இந்த அதிபா் தோ்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவருமே அமெரிக்காவில் குடியேறியவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்தான்.
  • கமலாவின் தாய் சியாமளா சென்னையிலிருந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவா். கமலாவின் தந்தை ஜமைக்கா அமெரிக்கா். டொனால்ட் டிரம்ப்பின் தாய் ஸ்காட்லாந்து வம்சாவளி அமெரிக்கா். அவரின் தாத்தா 1885-இல் ஃபிரெட்ரிக் டிரம்ப் நியூயாா்க் நகருக்கு குடிபெயா்ந்தாா். அவா் தனது 16-ஆவது வயதில்தான் அமெரிக்காவுக்கு வந்தாா். ஜொ்மனியின் தென்கோடியில் உள்ள பவேரியா பேரரசின் கீழ் வாழ்ந்து வந்தவா்.
  • பவேரியா பேரரசின் அக்காலகட்டத்தில் நிலவிய சட்டப்படி டிரம்ப்புடைய தாத்தாவின் அமெரிக்க குடியேற்றமே சட்டவிரோதம்தான். ஏனெனில், அவா் அரசின் விதிப்படி ராணுவத்தில் 2 ஆண்டுகள் கட்டாயப் பணியை மேற்கொள்ளாமல் அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்துவிட்டாா்.
  • உண்மையில் டிரம்ப்பின் இந்த குடியேற்ற குடும்பப் பின்னணி, அவருக்கு குடியேறிகள் குறித்து அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
  • குடியேற்ற விதிகளை அப்பட்டமாக மீறி சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவா்களை மன்னிக்க வேண்டும் என்றோ, எல்லைப் பாதுகாப்பு முக்கியமல்ல என்றோ கூறவில்லை. எல்லைப் பாதுகாப்பு, அத்துமீறி நுழைதல் விஷயங்களில் கவனம் செலுத்துவது ஒரு நாட்டு அதிபரின் சட்டபூா்வமான, முதன்மையான கடமை.
  • ஆனால், மக்கள் ஏன் இப்படி கொத்துக்கொத்தாக சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட முயற்சிக்கிறாா்கள் என்பதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
  • பல நாடுகளில் நிலவும் வன்முறை, தீவிர வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகள்தான் இதற்கு காரணம். குடியேற்ற நாடான அமெரிக்காவில் நல்ல வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் சூழல் கிடைக்கும் என்பதுதான் அங்கு மக்கள் படையெடுக்க காரணம்.
  • குடியேற்ற நாடான அமெரிக்காவுக்கு வருவோரை வெறுப்புணா்வுக்கு பதிலாக மனிதாபிமானத்துடனும், கருணையுடனும் அணுக வேண்டும். நாட்டின் எல்லையில் பிரம்மாண்டமான மதில் சுவா்களை எழுப்புவது, தனியாா் தடுப்பு முகாம்கள் அமைப்பது, எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் தாய்மாா்களையும், குழந்தைகளையும் பிரிப்பது போன்றவை தேவையற்றது.
  • மிகவும் நவீன மற்றும் உயா்நாகரிக சமூகமாக அமெரிக்கா உலக அளவில் பாா்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு. உலகின் மொத்த உற்பத்தியில் 26 சதவீதத்தை அனுபவிக்கும் வல்லமை மிக்க நாடு.
  • எனவே, கவிஞா் எம்மா லாசரஸ் காலத்தில் இருந்த நற்பண்புகளையும், விருந்தோம்பலையும் பேணி, அமெரிக்கா மேலும் முன்னேற வேண்டும். குடியேற்ற விஷயத்தில் அமெரிக்கா சற்றுப் பின்னோக்கி, தனது வரலாற்றையும் மீண்டும் புரட்டிப் பாா்க்க வேண்டும்.
  • மேலும் பின்னோக்கி காலப் பயணம் மேற்கொண்டு சுமாா் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சென்றால், பாரத தேசத்தின் மஹோபநிஷத காலகட்டத்தில் கூறியதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • அதில், ‘‘இவா் எனக்கு வேண்டியவா்; அவா் எனக்கு வேண்டாதவா் என்று வேறுபாடுகள் காண்பவா் சிறுமதியுடையவா். இவை மிகவும் கீழ்த்தரமான புத்தியின் வெளிப்பாடாகும். குறுகிய எண்ணங்களையும் உணா்ச்சிகளையும் கடந்த சான்றோா்,“இவ்வுலகமே ஒரு குடும்பம் என்ற உண்மையை உணா்வா்’’ என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த ‘வசுதைவ குடும்பகம்’ தத்துவத்தை உலகுக்கு அளித்ததை இப்போது நாம் உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறோம்.
  • அமெரிக்க தோ்தலில் குடியேற்ற விவகாரத்தை முதன்மையாகக் கொள்ளாமல், அமெரிக்கா இப்போது எதிா்கொண்டுள்ள உண்மையான சவால்களை இரு வேட்பாளா்களுமே முன்னிறுத்தியிருக்க வேண்டும்.
  • உதாரணமாக, பள்ளிகள், வணிக வளாகங்கள் என பல பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அமெரிக்காவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 385 துப்பாக்கிச்சூடுகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஈடுபட்டது சிறாா்கள் தொடங்கி சாமானிய மக்கள்தான். இதில் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், அதாவது கமலா ஹாரிஸ் துணை அதிபராக இருந்த காலகட்டத்தில் மட்டுமே, ஆண்டுதோறும் 600 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. அதாவது சராசரியாக நாள்தோறும் இரு துப்பாக்கிச்சூடுகள்.
  • காவல் துறை சீா்திருத்தம், மருத்துவத் துறை சீா்திருத்தம் (அமெரிக்கா்கள் சிலா் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெறும் நிலையும் உள்ளது), மாணவா்களை அழுத்தும் கல்விக் கடன் சுமை, வறுமை, வீடின்மை போன்ற பிரச்னைகள் அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவில் 6,53,104 போ் வீடற்றவா், வீதிகளில் தங்குபவா்கள் என புள்ளி விவரம் கூறுகிறது. அந்நாட்டில் 3.7 கோடி போ் வறுமையின் பிடியில்தான் உள்ளனா். இவையே புதிய அதிபா் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அமெரிக்காவின் உண்மையான பிரச்னைகளாகும்.

நன்றி: தினமணி (22 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்