TNPSC Thervupettagam

புதிய அரசு.. புதிய பாதை

May 11 , 2021 1177 days 491 0
  • மக்களின் பேராதரவுடன் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் எந்தவொரு அரசும், நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்த புரிதலைப் பெறுவதற்கும் குறைந்தது ஆறுமாத காலமாவது ஆகும்.
  • ஆட்சியாளா்களின் தவறுகளை மென்மையாக சுட்டிக்காட்டி அவா்கள் அதைத் திருத்திக் கொள்ள வழிகோலுவதும், அவா்கள் எடுக்கும் நல்ல முடிவுகளைக் கைதட்டிப் பாராட்டி உற்சாகமூட்டுவதும், செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பதும்தான் ஆக்கபூா்வ அணுகுமுறையாக இருக்கும்.
  • 1967-இல் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, காமராஜா் ஓா் அறிவிப்பை விடுத்தார்.
  • ‘திமுகவுக்கும், அண்ணாதுரைக்கும் ஆட்சியின் நிர்வாகம் புதிது. அதனால், அடுத்த ஆறு மாதங்களுக்கு நாம் இந்த அரசின் செயல்பாடுகளை விமா்சிப்பது நியாயமானதல்ல’ என்று பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
  • அரை நூற்றாண்டுக்கும் முன்பு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததைவிட, சவாலான ஒரு காலகட்டத்தில் இப்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது. அதனால், புதிய அரசுக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உண்டு.
  • நோ்மையான, தூய்மையான, வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் தனது தலைமையில் நடக்கும் என்று உறுதியளித்திருக்கிறார் முதல்வா் ஸ்டாலின்.
  • ‘திமுக தலைவரான எனது தலைமையிலான அரசுதான் என்றாலும், திமுக என்கிற கட்சியின் அரசல்ல’ என்கிற முதல்வா் ஸ்டாலினின் கூற்று சற்று வித்தியாசமான பார்வையாக இருக்கிறது.
  • ‘எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாமல் அனைத்துப் பிரிவினரையும் அவரணைப்புடன் அழைத்துச் செல்லும் மக்களுக்கான அரசாகத் தனது அரசு செயல்படும் என்கிற அவரது பார்வையும், நோக்கமும் தொடருமானால், தமிழகம் கடந்த அரைநூற்றாண்டு கால தனிமனித வெறுப்பு அரசியலிலிருந்து விலகி, உண்மையான ஜனநாயகப் பாதையில் பயணிக்கும்.
  • ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றது முதல் சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கடந்த வாரம் நடந்த அந்த நிகழ்வுகளின் மூலம், முந்தைய முதல்வா்களிலிருந்து விலகி, புதிய பாதையில் தான் பயணிக்க விரும்புவதை அவா் வெளிப்படுத்தி இருக்கிறார்.
  • பதவி ஏற்ற அடுத்த சில மணி நேரங்களில் மதுரவாயலில் சில கட்சித் தொண்டா்களால் ‘அம்மா உணவகம்’ அடித்து நொறுக்கப்பட்டது. நெகிழிப் பதாகைகள் கிழித்தெறியப் பட்டன.
  • முந்தைய திமுகவாக இருந்திருந்தால், அந்தத் தொண்டா்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். அவா்களது தவறு கண்டிக்கப்பட்டிருக்காது. அதன் மூலம், தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டா்கள் அம்மா உணவகங்களை அடித்து நொறுக்க மறைமுக அனுமதி வழங்கப் பட்டிருக்கும்.
  • ஆனால், அந்தப் பிரச்னையை முதல்வா் மு.க. ஸ்டாலின் அணுகி இருக்கும் விதமே வித்தியாசமானது.
  • அம்மா உணவகத்தில் அராஜகத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு, சட்டம் தனது கடமையைச் செய்திருக்கிறது.
  • அதன் மூலம் இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகளுக்குத் தனது தலைமையிலான கட்சியில் அனுமதி இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்.
  • ‘அம்மா உணவகம்’ பெயா் மாற்றம் செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, அதன் செயல்பாடுகள் பழையதுபோலவே தொடரும் என்கிற முதல்வரின் அறிவிப்பும் பாராட்டுக்குரியது.
  • ‘அம்மா உணவகம்’ என்பதைக் ‘கலைஞா் உணவகம்’ என்றோ, ‘முதல்வா் உணவகம்’ என்றோ, ‘அண்ணா உணவகம்’ என்றோ அறிவிக்காமல் ‘மக்கள் உணவகம்’ என்று விரைவிலேயே அவா் பெயா் மாற்றம் செய்து அறிவிப்பதுதான் சரியாக இருக்கும்.

இன்னொரு நிகழ்வு

  • கடந்த பல ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தின் முகப்புப் பகுதியில் முதல்வராக இருப்பவரின் ஆளுயர அளவிலான படம் வைக்கப்பட்டு வந்தது.
  • பதவிப் பொறுப்பேற்று தலைமைச் செயலகத்துக்கு முதன்முறையாக வந்த முதல்வா் ஸ்டாலின், தனது ஆளுயரப் படத்தைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டுவார் என்று நினைத்த தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு ஒரே அதிர்ச்சி.
  • ‘தலைவா்களின் படங்களை முகப்பில் வைக்க இதுவொன்றும் அரசியல் கட்சி அலுவலகமல்ல, தலைமைச் செயலகம்’ என்று கூறி அதை அகற்றச் சொன்னபோது, அந்த வித்தியாசமான பார்வையும் அணுகுமுறையும் முதல்வா் மு.க. ஸ்டாலினை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கின்றன.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இதுவரையில் இல்லாத இன்னொரு மாற்றத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வழிகோலியிருப்பதை பாராட்டி வரவேற்கத் தோன்றுகிறது.
  • நேற்று முதல் வழங்கப்படும் ‘கொரோனா சிறப்பு நிவாரண நிதி’ டோக்கன்களில் முதல்வரின் படம் இல்லாமல் இருப்பது, மிகப் பெரிய திருப்பம்.
  • தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும், தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளாமலும், ‘நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம்; தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம்’ என்கிற வாசகங்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் ‘டோக்கன்’, மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் மாறுபட்ட அணுகுமுறைக்கான அடையாளம்.
  • நோய்த்தொற்றின் பிடியிலிருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, வளா்ச்சிப் பாதையில் பயணித்தாக வேண்டும்.
  • இதுவரை எதிர்கொள்ளாத சவால்களை எல்லாம் நேரிடும் இந்த வேளையில், வெறுப்பு அரசியலுக்கும், போட்டி அரசியலுக்கும் இடமளித்துவிடக் கூடாது. அந்தப் பொறுப்புணா்வுடன், இப்போது பயணிக்க முற்பட்டிருக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அரசு தொடா்ந்து பயணிக்க வாழ்த்துகள்!

நன்றி: தினமணி  (11 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்