புதிய உயர் கல்வி அமைச்சர் முன்னுள்ள சவால்கள்
- தமிழ்நாடு அரசில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இளம் துணை முதல்வர் பொறுப்புக்கு வந்துள்ளார். மூன்று அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு, நான்கு பேர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, உயர் கல்வித் துறை அமைச்சராக கோவி. செழியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- உயர் கல்வித் துறை என்பதை ஒருவகையில், ‘பெரிய பெரிய விஷயங்களை உள்ளடக்கிய சிறிய துறை’ என வரையறுக்கலாம். அதன் காரணமாகவே இத்துறையைச் சரியாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் இத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில், புதிய உயர் கல்வி அமைச்சரிடம் சில முக்கியத் தீர்வுகள் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன.
பல்கலைக்கழக ஆளுகை:
- துணைவேந்தர் நியமனத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளின் காரணமாகத் தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் நீண்ட காலமாகத் துணைவேந்தர்களை நியமிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாகப் பல்கலைக்கழகங்களின் முக்கியச் செயல்பாடுகள் முடங்கிக்கிடக்கின்றன. புதிய உயர் கல்வி அமைச்சர் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அத்தோடு, பொறுப்பிலிருந்து ஒரு துணைவேந்தர் விடைபெறும்போது அடுத்த துணைவேந்தர் பொறுப்பு எடுத்துக்கொள்ளத்தக்கதாக இதனை மாற்றியமைக்க வேண்டும்.
அரசுக் கல்லூரிகள்:
- உயர் கல்விக்கு, அரசு உதவிபெறும் கல்லூரிகளை மட்டுமே நம்பியிருந்த நிலையை மாற்றி, அரசுக் கல்லூரிகளை வளர்த்தெடுத்ததில் திமுக தலைமையிலான அரசுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக, 1990களின் தொடக்கத்தில் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் அதீத வளர்ச்சியின்போது அரசுக் கல்லூரிகளை ஆரம்பிக்கத் தடை விதிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் வாயிலாக உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
- அவை அரசு நடத்திவரும் சுயநிதிக் கல்லூரிகளாகச் செயல்பட்டன. தனியார் சுயநிதிக் கல்லூரிகளைக் காட்டிலும் இக்கல்லூரிகளில் கட்டணம் சற்றுக் குறைவாக வசூலிக்கப்பட்டது. மற்றபடி எல்லா வகையிலும் அவை சுயநிதிக் கல்லூரிகளாகவே செயல்பட்டுவந்தன. இவற்றை முடிவுக்குக் கொண்டுவந்தது மு.கருணாநிதி அரசின் சாதனைகளில் ஒன்று.
- திமுக ஆட்சிக் காலங்களில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றியதும், புதிது புதிதாக அரசுக் கல்லூரிகளைத் திறந்துகொண்டு இருப்பதும், அவற்றில் பல நவீன பாடங்களைக் கற்பிப்பதும் ஆரோக்கியமான உயர் கல்வி வளர்ச்சிக்கான நடைமுறைகள். இவை ஏழை எளிய மக்களின் உயர் கல்விக் கனவுகள் நிறைவேற அடித்தளமாகத் திகழ்ந்துவருகின்றன.
- அதேவேளையில், அரசுக் கல்லூரிகளில் நீண்ட காலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாதது, பெருவாரியானவர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் என்கிற பெயரில் கௌரவமற்ற ஊதியத்தில் நீடிப்பது போன்ற கொடுமைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒரு பகுதி கௌரவ ஆசிரியர்கள்; மற்றொரு பகுதி பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் என்கிற நிலையே நீடிக்கிறது.
- அதிலும் பாதி ஊதியமே கிடைக்கிறது. நிரந்தர ஆசிரியர்களுக்கும் கௌரவ விரிவுரையாளர்களுக்குமான ஊதிய இடைவெளி மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி. கௌரவ விரிவுரையாளர்களுக்குக் கூடுதல் பணிச் சுமை இன்னொரு கொடுமை. உயர் கல்விக்காக நிறைய கல்லூரிகளைத் திறந்து, ஏராளமான மாணவர்கள் கற்க வழிசெய்துவரும் தமிழ்நாடு அரசின் மைய இலக்குக்கு இத்தகைய பிரச்சினைகள் நேர் எதிராகவே அமையும்.
- உயர் கல்வி வாய்ப்புகள் முக்கியம். அந்த வாய்ப்புகளைத் தமிழ்நாட்டு மாணவர்கள் செம்மையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனில் அதற்குப் போதுமான, தரமான ஆசிரியர் நியமனம் மிகவும் அவசியம். பணிநிரந்தரம் குறித்த கவலையோடு பணியாற்றிவரும் கௌரவ விரிவுரையாளர்களின் கண்ணீர் புதிய அமைச்சரால் துடைக்கப்பட வேண்டும். பாடங்களை முழுமையாகக் கற்பதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைய இது வழிசெய்யும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகள்:
- அரசு உதவிபெறும் கல்லூரிகள் ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்டவை. ஆரம்பத்தில் மத நிறுவனங்கள், கொடையாளர்களால் இக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பிற்காலத்தில் சாதிச் சங்கங்கள், நீண்ட கால லாப நோக்கம் கொண்ட தனிமனிதர்கள், வர்த்தகர்கள் போன்றோர் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தொடங்கினர். ஆசிரியர் நியமனங்களில் தரம், சாதி, மதம் என்ற சார்புநிலைகள் இருந்தன.
- மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை என்று தொடங்கிய நிறுவனங்கள், ஒருகட்டத்தில் ஆசிரியர் நியமனத்துக்கும் பணம் என்ற நிலையை நோக்கி நகர்ந்தன. அவை முந்தைய நடைமுறைகளான சாதி, மதம் ஆகியவற்றோடு இணைந்து இருந்தன. ஒருவகையில், பணம் பெறுவதும் ஓரளவு கட்டுக்குள் இருந்தது.
- ஒருகட்டத்தில், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடம் என்கிற நிலை உருவானது. சிறந்த கல்வித் தகுதி பெற்றவர்கள் உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனத்தில் வாய்ப்புகளைப் பெற முடியாத அவலநிலையும் தொடங்கியது. ஆரம்பத்தில் ஓரளவு குறைவான தொகையே பணிநியமனத்துக்காகப் பெறப்பட்டது. அடுத்த கட்டத்தில், இந்த நன்கொடை என்னும் தொகை மளமளவென உயர்ந்து உச்சம் தொட்டது.
- ஓரளவு வசதியானவர்கள்கூடக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைக் கைப்பற்ற முடியாது என்கிற நிலை உருவானது. நல்ல வசதி கொண்டவர்கள் அல்லது பெரிய அளவில் கடன்பெறும் ஆற்றல் மிக்கவர்கள் மட்டுமே அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணி நியமனம் பெற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. பணத்தை நேரடியாகப் பெறும் கல்லூரி நிர்வாகங்கள், அரசு இயந்திரத்தைக் கைகாட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்கின்றன.
- கல்லூரி ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கான எல்லாத் தகுதிகளும் இருந்தாலும், பணம் இல்லாததால் பணியில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மனம் தளர்ந்துபோய்விட்டார்கள். பல ஏழை, நடுத்தர வர்க்க மாணாக்கர்கள் - கல்லூரி ஆசிரியர்களாக வர ஆசை இருந்தாலும் - ‘இன்றைய சூழலில் நமக்கு இது சாத்தியமாகாது’ என முடிவுசெய்து, கல்லூரி ஆசிரியர் பணி சார்ந்த படிப்புகளைத் தவிர்த்துவருகின்றனர். சர்வதேசத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் படித்து முனைவர் பட்டம் வரை முடித்தவர்கள்கூடப் பணம் இல்லாததால் உதவிபெறும் கல்லூரிகளில் உள்ளே நுழைய முடியவில்லை.
- சிறிய துறை என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் துயரம் பரவலாக வெளியில் தெரிவதில்லை. காலிப் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளும் விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு சில உதவிபெறும் கல்லூரிகளுக்கு உடனுக்குடன் அரசின் அனுமதி கிடைப்பதாகவும், சில கல்லூரிகளுக்கு ஆண்டுக்கணக்கில் அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார்கள் உண்டு.
- அதிலும் குறிப்பாகச் சில கல்லூரிகளுக்கு, பணியிடங்கள் காலியாக ஆறு மாதங்கள் இருக்கும் முன்பே அனுமதி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள், உயர் கல்வித் துறையில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், யாரும் எங்கும் எதையும் வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.
- ஓர் அரசில், ஒரு துறை சிறப்பாகச் செயல்படுவதற்கு, தனிப்பட்ட அமைச்சரின் செயல்திறன், அரசுத் தலைமையின் வழிகாட்டல், கண்காணிப்பு எனப் பல கூட்டுப்பொறுப்புகள் அவசியம். மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றுக்குத் தீர்வுகாண புதிய அமைச்சர் முன்வந்தால், தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர்ந்து நிற்கும் என்பது உறுதி!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 10 – 2024)