- புதிய கல்விக் கொள்கையை ஆழ்ந்த விமர்சனத்தோடு அணுகும் பார்வையைத் தமிழ்நாடு வெளிப்படுத்திவருகிறது. விளைவாக, ‘ஏனைய மாநிலங்களில் இவ்வளவு சத்தம் இல்லை’ என்ற பேச்சு ஆளும் பாஜக ஆதரவுக் கல்வியாளர்கள் மத்தியிலிருந்து தமிழ்நாட்டில் வெளிப்படுவதையும் பார்க்க முடிகிறது.
- ஏனைய மாநிலங்களிலும் விமர்சனங்கள் வெளிப்படுகின்றன என்றாலும், தமிழ்நாட்டில் கூடுதலான விமர்சனங்கள் வெளிப்படுவதில் நியாயம் உண்டு.
- ஏனென்றால், வரலாற்று ரீதியாகவே இந்தியாவிலேயே ஒரு மாற்றுக் கல்விப் போக்கை முன்னெடுத்துவரும் மாநிலம் இது என்பதோடு, அதில் வெற்றி கண்டிருக்கும் மாநிலமும் இது என்கிற வகையில்தான் இந்த எதிர்ப்பு வெளிப்படுகிறது.
முன்னணியில் தமிழகம்
- சந்தேகத்துக்கு இடமின்றி, தமிழ்நாடே கல்வித் துறையில் இந்தியாவின் மிக உச்சமான இடத்தை எட்டியுள்ளது. பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் பாகுபாடுகளைக் களை வதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தின் வெற்றி இது.
- இதற்கு முக்கியமான காரணம் கல்வியைச் சமூக நீதிக்கான ஒரு வழிமுறையாகத் தமிழ்நாடு கடந்த காலங்களில் கருதிவந்திருப்பதும், கல்வி வாய்ப்புகளில் கூடுமானவரை சமத்துவம் நிலவுவதற்கான சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதும் ஆகும்.
- தமிழ்நாடே இந்தியாவில் மதிய உணவுடன் பள்ளிக் கல்வி தந்த முதல் மாநிலம். இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பாகவே அரசு நிதியில் ஒரு கிமீக்கு ஒரு தொடக்கப் பள்ளி, மூன்று கிமீக்கு ஒரு நடுநிலைப் பள்ளி திறந்த மாநிலம் தமிழ்நாடு. அதையும் கடந்து, ஐந்து கிமீக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, ஏழு கிமீக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி அமைத்துள்ளோம்.
- மாநில அரசு உருவாக்கி நடத்தும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழ்நாட்டில் அதிகம்.
- தமிழ்வழியில் பயில்வோர் அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் உட்பட எந்தக் கட்டணமும் இல்லாமல் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணவருக்குப் பல ஆண்டுகளாகக் கல்வி வழங்கிவருவதாலும், சமூக மற்றும் கல்விப் பின்தங்கலின் அடிப்படையில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாலுமே தமிழ்நாட்டில் இந்த அளவு கல்வி வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கிறது.
- ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில் பெண் குழந்தைகளைப் பள்ளியில் தக்கவைக்க மிகப் பெரிய சவாலைச் சந்திக்க வேண்டியிருந்ததால், பெண் கல்வியை ஊக்குவிப்பதற்குச் சமூக நலத் துறையின் கீழ் அவர்கள் திருமண வயதில் பணம் வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
- அதன் மூலமாக இன்று பெண்கள் ஆண்களைவிட அதிக தேர்ச்சியை மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் அடைந்து, கல்லூரி செல்லும் வாய்ப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் பார்வை
- ஆக, தமிழ்நாட்டின் விமர்சனத்தைக் கல்விக் கொள்கையை ‘மாநிலங்களின் பார்வை’யிலிருந்து அணுகும் பார்வையாகக் கொள்ளுதல் வேண்டும்.
- புதிய கல்விக் கொள்கையின் மீதான தலையாய விமர்சனம் இதுதான்: அது கல்வியை முழுக்க மையப்படுத்துகிறது. கூட்டாட்சித்துவத்தையும் அதிகாரப் பரவலாக்கலையும் மறுக்கிறது. முக்கியமாக, மாநிலங்களின் கைகளிலிருந்து கிட்டத்தட்ட கல்வியைப் பறிக்கிறது. ஏற்கெனவே கல்வியை மேலும் உள்ளூர்மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகையில், இப்படி மேலும் மையப்படுத்தும் நோக்கானது, கல்வியை எப்படியெல்லாம் படைப்பூக்கத்தோடு அணுகலாம் எனும் சாத்தியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அதன் எல்லையைச் சுருக்கிவிடுகிறது.
- அந்தந்தப் பிராந்தியங்களின் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சிந்திக்கும் உரிமையை முடக்கிவிடுகிறது.
- தமிழ்நாட்டுக் கல்வியாளர்களை எடுத்துக்கொண்டால், இதுவரை இருந்த சுதந்திரத்தின் வழி தமிழ்நாடு சாதித்த விஷயங்களையும்கூட இனி பறிகொடுத்துவிடுவோம் என்ற கவலையை இந்தப் புதிய கல்விக் கொள்கை உண்டாக்குகிறது. இது மிக நியாயமானது.
- உதாரணமாக, புதிய கல்விக் கொள்கை முன்னெடுக்க ஆசைப்படும் ‘நீட்’ போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எடுத்துக்கொள்வோம். நாட்டிலேயே ‘மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி’ என்ற இலக்குடன் அதிகமான மருத்துவர்களை உருவாக்கிவரும் ஒரு மாநிலம் இந்தப் புதிய தேர்வின் விளைவாகப் பெரும் பின்னடைவைக் கண்டது.
- நுழைவுத் தேர்வு முறையானது தனியார் பயிற்சி மையங்களின் துணையோடு படிக்கும் வசதி கொண்டவர்களுக்கே வசதியாக இருக்கிறது என்பதை இதுவரையிலான அனுபவங்களே ஆதாரபூர்வமாக உணர்த்துகின்றன.
- ஆக, எவ்வளவு உழைத்தாலும் ஏழைக் குழந்தைகளால் எட்ட முடியாத ஒரு உயரத்தைப் பணத்தின் வழி உருவாக்கும் ஒரு முறையைப் புதிய கல்விக் கொள்கை மருத்துவம் மட்டுமின்றி எல்லாப் படிப்புகளுக்கும் கொண்டுவர முற்படுகிறது. இது சமூக விரோதப் பார்வை இல்லையா? இதை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும்?
மொழித் திணிப்பு
- இந்தியாவில் ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டுக் கல்வித் துறை சர்வதேசத் தரத்திலான ஒரு மாற்றுக் கொள்கையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் இருமொழிக் கொள்கையை இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
- தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கல்வியில் படித்த மாணவர்கள் சந்திர மண்டலத்திலும், செவ்வாய் கிரகத்திலும், ஆய்வுகள் மேற்கொள்ளும் இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பு வரைக்கும் உயர்ந்திருக்கிறார்கள்.
- புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையைப் பேசுகிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கையுடன் ஒப்பிட்டுப் பேச முடியும். உலகில் எத்தனை நாடுகளில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது; அது பெற்றிருக்கும் வெற்றி என்ன என்று இந்திய அரசால் விளக்க முடியுமா?
- இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் திணிக்கும் நோக்கம் இந்த அரசுக்கு இருக்கிறது என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டு அல்ல. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், ‘தேசியக் கல்விக் கொள்கை அறிவிக்கப்பட உள்ளது’ என்று குறிப்பிட்டு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்கத் தேவைப்படும் இந்தி ஆசிரியர்களை உருவாக்க என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- தமிழ் உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் நிதி ஒதுக்காமல் இந்திக்கு மட்டும் இப்படி நிதி ஒதுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மேலும், தற்கால அறிவுத் துறையில் சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன? அதை வளர்த்தெடுக்க முற்படும் இந்த அரசின் உள்நோக்கம்தான் என்ன? அனைவருக்கும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தாய்மொழி வழியில் கல்வி வழங்குவதை உத்தரவாதப்படுத்த விரும்பாத இந்தக் கொள்கை கூடுதலாக, மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க மாணவரைக் கட்டாயப்படுத்துகிறது என்பதுதானே உண்மை?
தொழிற்கல்வியின் நோக்கம்?
- குலக்கல்வித் திட்டம் என்பது இந்தக் கல்விக் கொள்கையின் மீது நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. மூன்று மொழிகளோடு கூடுதலாக ஒரு தொழிலையும் 13 வயது நிரம்பாத குழந்தை கற்று, அத்தொழில் மீது ஆர்வம் கொள்ள வேண்டும் என்பது பெரிய வன்முறை இல்லையா? மண்பாண்ட வேலை, மின்சார வேலை உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களில் குழந்தை விரும்பும் தொழிலைக் கற்க வேண்டும்.
- அது மட்டுமல்லாமல், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அவர்கள் விரும்பும் தொழிலை அனுபவரீதியாகக் கற்றுணரப் பத்து நாட்கள் தொழில் நடக்கும் இடத்துக்கே சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டுமாம்.
- குழந்தைப் பருவத்தில் ஒரு தொழில் மீது ஆர்வத்தை உருவாக்கிய பிறகு, குழந்தைகளால் படிப்பின் மீது ஆர்வம் செலுத்த இயலுமா?
- இன்னமும்கூட குழந்தைத் தொழிலாளர் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நாடு என்பதை வசதியாக மறந்துவிட்டால் இதுபோன்ற கூத்துகளை எல்லாம் விமர்சனங்கள் இன்றி கடக்கலாம்.
காலாவதிச் சிந்தனைகள்
- முதல் தலைமுறை மாணவர்கள் பள்ளிக் கல்வியில் சுலபமாக முன்னேறிச் செல்லும் ஏணியாக உள்ள 10 2 அமைப்பைச் சிதைத்து, சிக்கலான 5 3 3 4 என்ற அமைப்பை எந்த ஆய்வும் இல்லாமல் தேசியக் கல்விக் கொள்கை-2020 முன்வைக்கிறது.
- அத்துடன், 1966-லேயே நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று நிராகரிக்கப்பட்ட ‘பள்ளி வளாக’ அமைப்பையும் இது பரிந்துரைக்கிறது. தனியார் பள்ளிக்கு உபரி வருமானம் இருந்தால், கல்விக் கட்டணத்தைக் குறைக்கச் சொல்வதற்குப் பதிலாக உபரியைக் கல்வித் துறையில் முதலீடுசெய்யலாம் என்பது மாணவர் நலன் சார்ந்ததா? பள்ளி நிர்வாகத்தின் வணிக நலன் சார்ந்ததா? தற்போது மறைமுகமாக நடக்கும் தனியார் பள்ளிகளின் வணிக நோக்கச் செயல்பாட்டுக்குச் சட்ட அங்கீகாரம் தரவே வழிசெய்கிறது இந்தக் கல்விக் கொள்கை.
- 14 வயதில் 9-ம் வகுப்பில் உயர்நிலைத் தாள் எடுக்காத மாணவர், அந்தப் பாடத்தில் உயர்கல்வி பெற இயலாது. 15 வருடப் பள்ளிப் படிப்பு முடித்த பிறகு, இந்தப் படிப்பை உயர்கல்வி செல்லத் தகுதியில்லை என்று சொல்கிறது புதிய கல்விக் கொள்கை.
- அதிலும், அகில இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் பெறும் மதிப்பெண்ணை வைத்தே கல்லூரிக் கல்வி. ஆக, 15 வருடப் பள்ளிப் படிப்பு கல்லூரி செல்லப் பயன்படாது. இது அனைவரையும் உயர்கல்வி கொண்டு சேர்க்கவா? அல்லது கல்வி முறையை விட்டு வெளியேற்றி, நீங்கள் விரும்பும்படி கூலித் தொழிலாளிகளை உருவாக்கவா?
நன்றி: தி இந்து (13-08-2020)